Saturday, September 3, 2016

03.03-21 – அடியும் முடியும் - (பொது)

03.03 – அடியும் முடியும் - (பொது)



2009-01-01 - 2009-07-02
அடியும் முடியும்
--------------------------------------
(108 குறள்வெண்பாக்கள்)
21) வலி
------------
வலியைக் கருதி மலையெடுக்க வந்தான்
ஒலித்தழப் பெற்றான் வலி.



பதம் பிரித்து:
வலியைக் கருதி மலை எடுக்க வந்தான்
ஒலித்து அழப் பெற்றான் வலி.


வலி - 1) வன்மை (strength, power); 2) நோவு;
* இராவணன் கயிலையைத் தூக்கமுயன்று நசுக்கப்பட்டதைச் சுட்டியது



22) வரை
------------
வரையில்லா வன்மையேன் என்றிருந்தான் பத்துச்
சிரத்தான் கயிலை வரை!



வரை - 1) அளவு; எல்லை; 2) வரைக்கும் (பரியந்தம் - as far as, up to, till);
வன்மை - வலிமை (strength, power);


"அளவில்லாத வலிமை பெற்றவன் நான்" என்று செருக்கோடு இருந்தான் இராவணன், கயிலையை அடைந்து அதனைப் பெயர்க்க முயல்வதற்கு முன்;



23) நச்சு
-------------
நச்சரவை நல்ல அரைநாணாக் கட்டிய
பிச்சனை நெஞ்சேநீ நச்சு.



பதம் பிரித்து:
நச்சுஅரவை நல்ல அரைநாணாக் கட்டிய
பிச்சனை நெஞ்சே நீ நச்சு.


நச்சு அரவு - விஷப் பாம்பு;
அரைநாணா - அரைநாணாக;
பிச்சன் - பித்தன்; சிவன்;
நச்சுதல் - விரும்புதல்;



24) சரம்
-------------
சரமாகப் பாம்பணிந்தான் தன்புன் சிரிப்பே
புரமெரிக் கின்ற சரம்.



சரம் - 1) மாலை; 2) அம்பு;



25)
மதிசூடும் ஈசன் மலர்த்தாளை வாழ்த்தித்
துதியார் இலரே மதி.



மதி - 1) சந்திரன்; 2) அறிவு;
துதியார் - துதியாதவர்கள் - போற்றாதவர்கள்;



26) விரை
------------
விரையார்தாள் போற்றி வினைகெடக், காலன்
வரவிற்கு முன்னே விரை.



விரை ஆர் தாள் - வாசனை மிக்க திருவடி;
விரைதல் - வேகமாதல்;
வரவு - வருகை (Coming, advent);



27) கூடு
------------
கூடுவிட்டுப் போம்முன்னே கூன்பிறையைச் சூடிநடம்
ஆடும் இறைவனைக் கூடு.



கூடு - உடம்பு;
கூடுதல் - அடைதல்; சேர்தல்;
கூன் - வளைந்த;



28) ஆறு
--------------
ஆறு பொறியால் அறுமுகனைத் தந்தவன்ஏ
றேறும் சிவன்முடிமேல் ஆறு.



ஆறு - 1) ஆறு என்ற எண்; 2) நதி;
ஏறு ஏறும் சிவன் - இடபவாகனம் உடைய சிவபெருமான்;



29) அணி
-------------
அணிஆரூர் வீதிகளில் ஆதிரை நாளில்
மணிகண்டன் அன்பர் அணி.



அணி - 1) அழகு; 2) கூட்டம்;
மணிகண்டன் - நீலகண்டத்தை உடையவன் - சிவன்;



30) இறை
---------------
இறையும் நினையா இராவணன்ஓ என்ன
இறைவிரல்வைத் தான்எம் இறை.



இறை - 1) சிறிது; 2) இறைவன்;
ஓ என்ன - ஓ என்று அலறும்படி;



அன்போடு,

வி. சுப்பிரமணியன்

No comments:

Post a Comment