Saturday, December 19, 2015

02.51 – பாம்பணி (பாமணி) - திருப்பாதாளீச்சரம்

02.51பாம்பணி (பாமணி) - திருப்பாதாளீச்சரம்



2012-06-10
"பாம்பணி எம்பெருமான் "
(பாம்பணி - திருப்பாதாளீச்சரம்) (இக்கால வழக்கில் "பாமணி". இத்தலம் மன்னார்குடிக்கு அருகே உள்ளது)
----------------
(தானன தானன தானன தான -- தானன தானன தான தான - அடி 1 & 3;
தானன தானன தான -- தானன தானன தான - அடி 2 & 4; )
(ஆசிரிய இணைக்குறட்டுறை)
(சம்பந்தர் தேவாரம் - 1.39.1 – திருவேட்களம் - "அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் ஆரழல் அங்கை அமர்ந்தி லங்க");



1)
ஊரிடு பிச்சையை ஏற்றுழல் ஐயன் .. ஒண்பிறை சூடிய மைந்தன் எந்தை
தாரொடு முப்புரி நூலும் .. தாங்கிய நீறணி மார்பன்
நீரொடு பூவொடு நற்றமிழ் பாடி .. நின்மல னேயருள் என்று வந்து
பாரொடு விண்பணிந் தேத்தும் .. பாம்பணி எம்பெரு மானே.



ஊர் இடு பிச்சையை ஏற்று உழல் ஐயன் - ஊரார் இடும் பிச்சையை ஏற்றுத் திரியும் தலைவன்;
ஒண்பிறை சூடிய மைந்தன் எந்தை - ஒள்ளிய பிறைச்சந்திரனைச் சூடும் அழகன்; எம் தந்தை;
தாரொடு முப்புரி நூலும் தாங்கிய, நீறு அணி மார்பன் - மாலையும் பூணூலும் வெண்ணீறும் அணிந்த மார்பினன்;
நீரொடு பூவொடு நற்றமிழ் பாடி நின்மலனே அருள் என்று உவந்து - நீராலும் பூவாலும் வழிபட்டுத், தமிழ்ப்பதிகங்களும் பாடி, 'நின்மலனே! அருள்வாயாக" என்று மகிழ்ந்து;
பாரொடு விண் பணிந்து ஏத்தும் பாம்பணி எம்பெருமானே - உலகோரும் வானவரும் வணங்கிப் போற்றும், 'பாம்பணி' என்ற நகரில் எழுந்தருளியிருக்கும், 'பாம்பை அணியும்' எம் பெருமான்.


குறிப்பு : பாம்பணி - பாம்பணி என்ற ஊர். (அவ்வூரில் உள்ள கோயிலின் பெயர் திருப்பாதாளீச்சரம்). 'பாம்பை அணியும்' என்றும் பொருள்கொள்ளலாம்.


(பெரியபுராணம்: 37 கழறிற்றறிவார் நாயனார் புராணம் - பாடல் 119 & 120
திருப்புனவா யிற்பதியில் அமர்ந்தசிவ னார்மகிழும்
விருப்புடைய கோயில்பல பணிந்தருளால் மேவினார்
பொருப்பினொடு கான்அகன்று புனற்பொன்னி நாடணைந்து
பருப்பதவார் சிலையார்தம் பாம்பணிமா நகர்தன்னில்.


பாதாளீச் சரமிறைஞ்சி அதன்மருங்கு பலபதியும்
வேதாதி நாதர்கழல் வணங்கிமிகு விரைவினுடன்
சூதாருந் துணைமுலையார் மணிவாய்க்குத் தோற்றிரவு
சேதாம்பல் வாய்திறக்குந் திருவாரூர் சென்றணைந்தார்.)



2)
கண்ணொரு மூன்றினன் அம்பினை ஏவு .. காமனை நீறது செய்த பெம்மான்
பெண்ணொரு கூறமர் பித்தன் .. பேணி அடிதொழும் அன்பர்
பண்ணிய பாவம் அறுத்தருள் ஈசன் .. பாய்விடை யான்பதி வண்டி னங்கள்
பண்ணிசை ஆர்பொழில் சூழும் .. பாம்பணி நன்னகர் தானே.



வண்டு இனங்கள் பண் இசை ஆர் பொழில் சூழும் பாம்பணி நன்னகர் - வண்டுகள் பண் பொருந்திய இசையை ஒலிக்கும் சோலை சூழ்ந்த பாம்பணி என்ற ஊர்;



3)
வேலன கண்ணுடை மாதொரு கூறு .. மேனியிற் கொண்டவன் வான்க டைந்த
வேலை விடந்தனை உண்டு .. நீலம் அடைந்தொளிர் கின்ற
கோல மிடற்றினன் இன்தமிழ் பாடிக் .. கும்பிடு வார்களுக் கென்றும் அன்பன்
பாலன நீறுமெய் பூசும் .. பாம்பணி எம்பெரு மானே.



வேல் அன கண்ணுடை மாது ஒரு கூறு மேனியிற் கொண்டவன் - வேல் போன்ற கண்கள் உடைய உமையைத் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டவன்;
வான் கடைந்த வேலை விடந்தனை உண்டு நீலம் அடைந்து ஒளிர்கின்ற கோல மிடற்றினன் - வானோர் கடைந்த கடலில் எழுந்த நஞ்சை உண்டு, அதனால் கருமை அடைந்து திகழ்கின் அழகிய கண்டத்தை உடையவன்;
இன் தமிழ் பாடிக் கும்பிடுவார்களுக்கு என்றும் அன்பன் - தேவாரம் திருவாசகம் பாடி வழிபடுபவர்களுக்கு என்றும் அன்பு உடையவன்;
பால் அன நீறு மெய் பூசும், பாம்பணி எம்பெருமானே - பால் போன்ற வெண் திருநீற்றைப் பூசும், 'பாம்பணி' என்ற நகரில் எழுந்தருளியிருக்கும், 'பாம்பை அணியும்' எம் பெருமான்.



4)
வம்பு மலர்க்குழல் மாதொரு பாகம் .. மகிழ்பவன் வார்சடை மீது கொன்றை
அம்புலி சூடிய அண்ணல் .. அன்பொடு போற்றிசெய் வார்க்கு
வெம்பவ நோயற இன்னருள் செய்யும் .. விண்ணவர் கோன்பதி வண்டு பண்செய்
பைம்பொழில் சூழ்ந்தழ காரும் .. பாம்பணி நன்னகர் தானே.



வம்பு மலர்க்குழல் மாது ஒரு பாகம் மகிழ்பவன் - வாசமலர் அணிந்த குழல் உடைய உமையை ஒரு பாகமாக விரும்பியவன்; (வம்பு - வாசனை);
வெம் பவநோய் அற இன் அருள் செய்யும் - கொடிய பிறவிப்பிணி தீர இனிது அருள் செய்பவன்;



5)
கச்சமர் மாமுலை யாளொரு பங்கன் .. காலனை மார்பில் உதைத்த மைந்தன்
பிச்சையை ஓர்சிரந் தன்னில் .. பெற்று மகிழ்ந்திடும் ஐயன்
கொச்சை வயத்தலை வன்தமிழ் கூறி .. நச்சி வணங்கிடும் அன்ப ருக்குப்
பச்ச முடைப்பரன் எந்தை .. பாம்பணி எம்பெரு மானே.



கச்சு - முலைக்கச்சு;
மைந்தன் - வீரன்;
கொச்சைவயத் தலைவன் தமிழ் - கொச்சைவயம் என்னும் சீகாழிப்பதிக்குத் தலைவராகிய திருஞானசம்பந்தர் பாடியருளிய தேவாரம்;
நச்சுதல் - விரும்புதல்;
பச்சம் - பட்சம் - அன்பு (Kindness, affection, friendship);
(சம்பந்தர் தேவாரம் - 1.18..2 - 'அச்சம்மிலர் .... பச்சம்முடை யடிகள் ....' - பச்சம் உடை அடிகள் - பட்சமுடைய பெருமான். பச்சம், பக்ஷம் என்பது எதுகை நோக்கித் திரிந்து நின்றது.);
பரன் - மேலானவன்;



6)
தயிர்நறு நெய்யொடு பால்மகிழ்ந் தாடி .. சண்பையர் கோன்தமிழ் கேட்டி ரங்கி
மயிலையில் என்பையும் மங்கை .. வடிவுயிர் கொண்டெழச் செய்த
கயிலையன் மூவிலை வேலொரு கையன் .. கண்பொலி நெற்றியன் ஊர தென்பர்
பயிர்வளர் செய்புடை சூழும் .. பாம்பணி நன்னகர் தானே.



ஆடி - ஆடுபவன்; (ஆடுதல் - அபிஷேகம் செய்யப்பெறுதல்);
சண்பையர் கோன் - திருஞானசம்பந்தர்; (சண்பை - சீகாழியின் 12 பெயர்களுள் ஒன்று);
மயிலையில் என்பையும் மங்கை வடிவு உயிர் கொண்டு எழச் செய்த - மயிலாப்பூரில் பூம்பாவையின் அஸ்தியை அழகிய பெண்ணாக உடலும் உயிரும் கொண்டு எழுமாறு செய்த;
செய் - வயல்;
புடை - பக்கம்;



7)
கான்மலர் ஐங்கணைக் காமனை அன்று .. காய்ந்தவன் மையணி கண்ணி பங்கன்
நான்மறை பாடிய நாவன் .. நற்றவர் தாம்தொழு தேவன்
மான்மறி மூவிலை வேல்மழு ஏந்தி .. மார்பினில் வெண்பொடி பூசி கங்கை
பான்மதி ஆர்சடை மீது .. பாம்பணி எம்பெரு மானே.



கான் மலர் ஐங்கணைக் காமனை - வாச மலர்க்கணைகள் ஐந்தினை ஏந்தும் மன்மதனை;
காய்தல் - எரித்தல்;
மை அணி கண்ணி - மை தீட்டப்பெற்ற கண்களை உடைய உமையம்மை; (7.32.5 - "மையார்தடங் கண்ணிபங்கா...")
மான்மறி மூவிலைவேல் மழு ஏந்தி - மான் கன்றையும் திரிசூலத்தையும் மழுவையும் ஏந்தியவன்;
வெண்பொடி பூசி - வெண்மையான திருநீற்றைப் பூசியவன்;
பான்மதி - பால் மதி - வெண் திங்கள்;
சடை மீது பாம்பணி எம்பெருமானே - சடைமேல் பாம்பை அணியும், 'பாம்பணி' என்ற நகரில் எழுந்தருளியிருக்கும், எம் பெருமான்.



8)
ஓடி விலங்கல் அசைத்தவன் தன்னை .. ஓர்விரல் ஊன்றி அடர்த்த ருள்வான்
காடிட மாநடம் செய்யும் .. கண்ணொரு மூன்றுடை அண்ணல்
வாடிய வானவர் வந்தடி போற்ற .. வல்விடம் உண்டவன் ஊர தென்பர்
பாடிவண் டார்பொழில் சூழும் .. பாம்பணி நன்னகர் தானே



பதம் பிரித்து:
ஓடி விலங்கல் அசைத்தவன் தன்னை .. ஓர் விரல் ஊன்றி அடர்த்து அருள்வான்
காடு இடமா நடம் செய்யும், கண் ஒரு மூன்று உடை அண்ணல்;
வாடிய வானவர் வந்து அடி போற்ற, வல்விடம் உண்டவன் ஊரது என்பர்,
பாடி வண்டு ஆர்பொழில் சூழும் பாம்பணி நன்னகர்தானே.


விலங்கல் - மலை; இங்கே கயிலைமலை;
காடு இடமா நடம் செய்யும் - சுடுகாடே நடம் செய்யும் இடமாக விரும்பி ஆடுகின்ற;
பாடி வண்டு ஆர் பொழில் சூழும் - வண்டுகள் பாடி ஒலிசெய்யும் / நிறையும் சோலை சூழ்ந்த; (ஆர்தல் - நிறைல்; பொருந்துதல்; / ஆர்த்தல் - ஒலித்தல்);



9)
பங்கயன் அச்சுதன் அன்றுயர் அன்னம் .. பாரகழ் பன்றியு மாய்மு யன்ற
பொங்கழல் ஆகிய ஐயன் .. போற்றிடும் அன்பரின் நெஞ்சம்
தங்கிடு நற்றளி யாமகிழ் தந்தை .. தாழ்சடை மேல்மதி யம்பு னைந்து
பங்கொரு மாதமர் கின்ற .. பாம்பணி எம்பெரு மானே.



பங்கயன் அச்சுதன் - பிரமனும் திருமாலும்;
அன்று உயர் அன்னம் பார் அகழ் பன்றியுமாய் முயன்ற - முற்காலத்தில் மேலே உயர்ந்த அன்னமும் நிலத்தை அகழ்ந்த பன்றியும் ஆகித் தேடிய;
பொங்கு அழல் - ஓங்கிய தீ;
நற்றளியா - நல் தளியா - நல்ல கோயிலாக; (தளி - கோயில்);



10)
ஆய்மதி ஒன்றிலர் வாய்மொழி கின்ற .. அச்சிறு சொற்களில் உண்மை இல்லை
சேய்மதி சூடிய தேவன் .. சேவடி போற்றடி யார்தம்
நோய்வினை தீர்ப்பவன் நாமமொர் பத்து .. நூறுடை யான்பதி சேல்ம கிழ்ந்து
பாய்புனல் சேர்வயல் சூழும் .. பாம்பணி நன்னகர் தானே.



ஆய்மதி ஒன்று இலர் - ஆராயும் அறிவு அற்றவர்கள்;
சேய் மதி - இள நிலா - பிறைச்சந்திரன்; (சேய் - இளமை (Juvenility, youth));
நோய் வினை - நோயையும் வினையையும்;
ஒர் - ஓர் என்பதன் குறுக்கல் விகாரம்;
நாமம் ஒர் பத்து நூறு உடையான் பதி - ஆயிரம் திருப்பெயர் உடையவன், தலைவன், உறையும் தலம்; (பதி - தலைவன்; உறைவிடம்);



11)
ஆண்டவ னேயருள் என்றடி போற்றில் .. அள்ளி வரங்கள் அளிக்கும் வள்ளல்
தாண்டவன் தண்மதி தன்னைச் .. சடைமிசைத் தாங்கி மகிழ்ந்தான்
மாண்டவர் என்பினைப் பூண்கிற வேடன் .. மாதொடு சென்றொரு கேழல் எய்து
பாண்டவற் கோர்படை தந்த .. பாம்பணி எம்பெரு மானே.



தாண்டவன் - தாண்டவம் என்று கூத்து ஆடுபவன்;
மாண்டவர் என்பு - இறந்தவர் எலும்பு;
வேடன் - கோலத்தை உடையவன்; (சிவபெருமான் திருவந்தாதி - 11.23.21 - "கங்காள வேடன்");
(வேடன் என்பதை 'மாதொடு சென்றொரு கேழல் எய்து' என்ற தொடரோடும் இயைத்துக், 'காட்டில் வேட்டுவனாகி' என்றும் பொருள்கொள்ளலாம்);
கேழல் எய்து - பன்றிமேல் அம்பை ஏவி;
பாண்டவற்கு ஓர் படை தந்த - அருச்சுனனுக்குப் பாசுபதாஸ்திரத்தைத் தந்த; (பாண்டவன் + கு = பாண்டவற்கு = பாண்டவனுக்கு);



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக்குறிப்பு :
தானன தானன தானன தான -- தானன தானன தான தான - அடி 1 & 3;
தானன தானன தான -- தானன தானன தான - அடி 2 & 4;



"ஆசிரிய இணைக்குறட்டுறை". என்று கருதலாம்.



சம்பந்தர் தேவாரம் - 1.39.1திருவேட்களம் -
அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் ஆரழல் அங்கை அமர்ந்தி லங்க"
மந்த முழவம் இயம்ப மலைமகள் காணநின் றாடிச்
சந்தமி லங்கு நகுதலை கங்கை தண்மதி யம்மய லேத தும்ப
வெந்தவெண் ணீறுமெய் பூசும் வேட்கள நன்னக ராரே.



பாடல் அமைப்பு : சம்பந்தர் தேவாரம் - 1.39 பதிகம் :
A) வெள்ளைவாரணனார் கருத்து :
"தானன தானன தானன தான .. தானன தானன தானதந்த" (முதல் அடியும் மூன்றாம் அடியும்)
"தானன தானன தான .. தானன தானன தான" (இரண்டாம் அடியும் நான்காம் அடியும்)



B) தி.வே.கோபாலையர் கருத்து :
ஆசிரிய இணைக்குறட்டுறை.
முதலடி, மூன்றாம் அடிகள் எழுசீர். ஏனையிரண்டடியும் அறுசீர் என வந்தவாறு. எழுசீரடியுள், ஏழாஞ்சீர் கூவிளங்காய்; நாலாஞ்சீர் ஒருதலையாகத் தேமா; பிறவெல்லாம் மாச்சீரும் விளச்சீரும். அறுசீரடியுள் எல்லாம் மூன்றாஞ்சீரும் ஆறாஞ்சீரும் மாச்சீர்; பிறவெல்லாம் மாச்சீர் விளச்சீர்கள்; சிறுபான்மை முதற்சீர் காய்ச்சீராக வருதலும் (பாசுரம் 4) கொள்க.



C) என் கருத்து :
தானன தானன தானன தான -- தானன தானன தான தான (அடி 1 & 3)
தானன தானன தான -- தானன தானன தான (அடி 2 & 4)



'தானன' வருமிடத்தில் மற்ற கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுத் 'தான' / 'தனன' / 'தனதன' வரலாம்.



அடி-1 & 3 - விளம் கூவிளம் கூவிளம் தேமா / கூவிளம் கூவிளம் தேமா தேமா
முன் அரையடி-1a/3a: 4 சீர்கள் - வெண்டளை விரவும். நேரசையில் தொடங்கினால் 11 எழுத்துகள் (நிரையசையில் தொடங்கினால் = 12 எழுத்துகள்)
பின் அரையடி-1b/3b: 4 சீர்கள் - அவற்றுள் முதல் 3 சீர்களிடை வெண்டளை விரவும். நேரசையில் தொடங்கினால் 10 எழுத்துகள் (நிரையசையில் தொடங்கினால் = 11 எழுத்துகள்)
(இவ்வரையடியில் - 1b/3b-இல் - 3ம் சீர் குறிலில் முடியும். 4ம் சீர் குறிலில் தொடங்கும். 3+4 சீர்கள் = கூவிளங்காய் ஆகும்.)



அடி - 2 & 4 - விளம் கூவிளம் தேமா / விளம் கூவிளம் தேமா
முன் அரையடி-2a/4a: 3 சீர்கள் - வெண்டளை விரவும். நேரசையில் தொடங்கினால் 8 எழுத்துகள் (நிரையசை எனில் = 9)
பின் அரையடி-2b/4b: 3 சீர்கள் - வெண்டளை விரவும். நேரசையில் தொடங்கினால் 8 எழுத்துகள் (நிரையசை எனில் = 9)



அரையடிக்குள் விளம் வரும் இடத்தில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும். வெண்டளை பயிலும். கட்டளையும் அமையும். இதனால் சில சமயம் கூவிளம் வரும் இடம் தேமா / புளிமா / கருவிளம் என்ற அமைப்பாக மாறி அமையக்கூடும்).
----------------



பாம்பணி (பாமணி) - திருப்பாதாளீச்சரம் - நாகநாதர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=330

----------- --------------

No comments:

Post a Comment