Sunday, December 6, 2015

02.46 – தென்குடித்திட்டை - (திட்டை)

02.46தென்குடித்திட்டை - (திட்டை)



2012-05-02
தென்குடித்திட்டை (இக்கால வழக்கில் "திட்டை")
----------------------------------
(கலிவிருத்தம் - 'விளம் விளம் விளம் விளம்' என்ற வாய்பாடு)
(பன்னிரண்டு பாடல்கள் - 12 songs in this set)
(சம்பந்தர் தேவாரம் - 3.35.1 - முன்னைநான் மறையவை ..... தென்குடித் திட்டையே.)



1)
ஐயலர் அம்புகள் எய்யவந் தடைந்தவன்
மெய்யினைப் பொடிபட விழித்தவன் அழலன
செய்யவன் உறைதரு தென்குடித் திட்டையைக்
கைதொழ வல்லவர் கடுவினை கழலுமே.



ஐ அலர் அம்புகள் - ஐந்து மலர்க்கணைகள்;
எய்தல் - செலுத்துதல்; தொடுத்தல்;
பொடி - சாம்பல்;
செய்யவன் - செம்மேனியன்;
தா/தருதல் - ஒரு துணைவினை (An auxiliary added to verbs);
கடுவினை - கொடிய வினை;
கழலுதல் - ஓடுதல்; நீங்குதல்;


ஐந்து மலர்க்கணைகள் தொடுக்க வந்த மன்மதன் உடலைச் சாம்பல் ஆக்க நெற்றிக்கண்ணைத் திறந்தவன்; தீப்போல் செம்மேனியன்; அப்பெருமான் உறையும் தென்குடித் திட்டையைக் கைகளால் தொழுதால், கொடிய வினைகள் எல்லாம் நீங்கும்.



2)
போர்விடை ஊர்பவன் புரிசடைப் புண்ணியன்
கார்மிட றுடையவன் கனலினை உமிழ்விழி
சேர்நுத லானுறை தென்குடித் திட்டையைச்
சார்கிற அடியவர் தம்வினை சாயுமே.



ஊர்தல் - ஏறிச் செலுத்துதல்;
புரிசடை - முறுக்குண்ட சடை;
கார் மிடறு - கரிய கண்டம்;
நுதல் - நெற்றி;
சார்தல் - சென்றடைதல்;
சாய்தல் - அழிதல்; தோற்றோடுதல்;



3)
அஞ்சிய வானவர் கெஞ்சவும் அன்றரு
நஞ்சினை உண்டவன் வஞ்சியோர் பங்குடைச்
செஞ்சடை யானுறை தென்குடித் திட்டையை
நெஞ்சினில் நினைந்திடத் துஞ்சிடும் வினைகளே.



அரு நஞ்சு - அரிய விடத்தை;
வஞ்சி - பெண் - உமையம்மை;
துஞ்சுதல் - அழிதல்;



4)
வன்னமன் மார்பினில் முன்னமு தைத்தவன்
துன்னிய மலர்மதி நன்னதி அரவணி
சென்னியன் உறைதரு தென்குடித் திட்டையை
உன்னிடும் அடியவர் உறுவினை ஒல்குமே.



வன் நமன் - கொடிய எமன்;
முன்னம் - முற்காலத்தில்;
துன்னுதல் - நெருங்குதல்; செறிதல் (To be thick, crowded; to press close);
மலர் மதி நன் நதி அரவு அணி சென்னியன் - மலர்களையும் சந்திரனையும் கங்கையையும் பாம்பையும் தலையில் அணிந்தவன்;
உன்னுதல் - எண்ணுதல்; நினைதல்;
ஒல்குதல் - சுருங்குதல் - அழியும்; (ஒல்கும் - வலிமை குறைந்து நீங்கும்);



5)
எரியரி வளியிவர் இணைகணை ஏந்தியும்
முரிவுறு தேர்மிசை முகிழ்நகை ஒன்றினால்
திரியெயில் செற்றவன் தென்குடித் திட்டையைப்
பரிவொடு பணிபவர் பழவினை பறையுமே.



எரி அரி வளி இவர் இணை கணை - அக்கினி, திருமால், வாயு இம்மூவரும் ஒன்றாகச் சேர்ந்த அம்பு ;
முரிவு உறுதல் - முரிதல்; ஒடிதல்;
முகிழ்நகை - புன்சிரிப்பு;
திரி எயில் - திரிந்த புரங்கள்;
செற்றவன் - அழித்தவன்; (செறுதல் - அழித்தல்; வெல்லுதல்);
பரிவு - அன்பு; பக்தி;
பறைதல் - அழிதல்;


(சம்பந்தர் தேவாரம் - 1.124.6 - "....திரிபுர மொருநொடி யினிலெரி சென்று கொள் வகைசிறு முறுவல்கொ டொளிபெற நின்றவன்...." - சிறுமுறுவல் - புன்னகை;)



6)
விண்பணி முக்கணன் வெண்மழு வாளினன்
பண்பயில் மொழியுமை பங்கமர் பாங்கினன்
தெண்புனற் சடையினன் தென்குடித் திட்டையைக்
கண்பனித் தேத்துவார் கடுவினை கழலுமே.



விண் பணி முக்கணன் - தேவர்கள் தொழும் நெற்றிக்கண்ணன்;
பண் பயில் மொழி உமை பங்கு அமர் பாங்கினன் - இனிய மொழி பேசும் உமையம்மையை ஒரு பாகமாக விரும்பும் இயல்பினன்;
தெண்புனற் சடையினன் - தெளிந்த நீர் உடைய கங்கையைச் சடையில் உடையவன்;
கண் பனித்தல் - கண்ணீர் சொரிதல்;



7)
நோயிலன் மூப்பிலன் நுண்ணியன் எழுகிற
ஞாயிறு போல்பவன் நரைவிடை ஏறுவான்
சேயிழை பங்கினன் தென்குடித் திட்டையை
வாயினால் வாழ்த்துவார் வல்வினை மாயுமே.



நோயிலன் மூப்பிலன் - நோயும் முதுமையும் இல்லாதவன்;
நுண்ணியன் - மிகவும் நுண்மையானவன்;
எழுகிற ஞாயிறு போல்பவன் - உதிக்கின்ற சூரியனைப் போல் செம்மேனியன்;
நரை விடை ஏறுவான் - வெள்ளை இடபத்தின்மேல் ஏறுபவன்;
சேயிழை - பெண் - பார்வதி;



8)
இருபது கரமுடை இலங்கையர் மன்னவன்
பெருவலி கொடுவரை பெயர்த்திடு வானழத்
திருவிரல் ஊன்றினார் தென்குடித் திட்டையை
மருவிடும் அடியவர் வல்வினை மாயுமே.



பெரு வலிகொடு வரை பெயர்த்திடுவான் - மிகுந்த வலிமையால் மலையைப் பெயர்த்தவன்;
மருவுதல் - பொருந்துதல்; அடைதல் / கிட்டுதல் (To come near; to approach);



9)
ஏடியல் மலரினன் எழிலுற அரமிசை
ஆடிய அரியிவர் அன்றடி யொடுமுடி
தேடிய சோதியன் தென்குடித் திட்டையை
நாடிய பத்தரை நல்லன நாடுமே.



ஏடு இயல் மலரினன் - இதழ்களை உடைய தாமரை மலர்மேல் உறையும் பிரமன்;
எழிலுற அரமிசை ஆடிய அரி - அழகுறக் காளிங்கன்மேல் ஆடிய திருமால்; (கிருஷ்ணாவதார நிகழ்ச்சி); (அர - அரா - பாம்பு);



10)
புரட்டினிற் புரள்கிற புல்லரோர் மந்தையைத்
திரட்டுவார் செப்பிடு வித்தையை மதித்திடேல்
திரைத்தலைச் சிவனுறை தென்குடித் திட்டையைக்
கரத்தினால் தொழுபவர் கடுவினை கழலுமே.



புரட்டு - வஞ்சகம்; பொய்;
புல்லர் - கீழோர்;
ஓர்தல்/ஓர்த்தல் - எண்ணுதல்; சிந்தித்தல்; ஆராய்தல்;
ஓர் - ஒரு;
செப்புதல் - சொல்லுதல்;
வித்தை - கல்வி; தந்திரம்;
செப்பிடு வித்தை - செப்படி வித்தை - தந்திரம் (Tricks, deceptive arts);
மதித்திடேல் - மதிக்கவேண்டா - மதியாதீர்கள்;
திரைத்தலைச்சிவன் - கங்கையைத் தலையில் உடைய சிவபெருமான்;


சிந்திப்பாய்; பொய்யில் புரளும் கீழோர்; மந்தையைப் பெருக்குவதற்காகத் தந்திரங்கள் செய்வார்; அவற்றைப் பொருளாகக் கொள்ளவேண்டா. கங்கையைத் தலையில் தாங்கும் சிவபெருமான் உறையும் தென்குடித்திட்டையைக் கையால் தொழுபவர்களின் கொடியவினைகள் எல்லாம் நீங்கும்;



11)
மழுவமர் கையினன் மகிழ்பதி கடலிடை
எழுமுகில் தருகொடை எழிலுற எங்கணும்
செழுவயல் சூழ்தரு தென்குடித் திட்டையைத்
தொழுதுளம் நைபவர் தொல்வினை தொலையுமே.



மழுமர் கையினன் - மழுவை ஏந்தியவன்;
மகிழ் பதி - விரும்பி உறையும் தலம்;
கடலிடை எழுமுகில் தருகொடை - நீர்வளம்;
எங்கணும் - எங்கும்;
செழுவயல் சூழ்தரு - செழுமையான வயல்கள் சூழ்ந்த;
உளம் நைதல் - உள்ளம் குழைதல்;
தொலைதல் - அழிதல்;



12)
நீர்விழும் உச்சியன் பார்வதி பங்கினன்
பேர்பல உடையவன் ஓர்சிரந் தனிற்பலி
தேர்பவன் உறைபதி தென்குடித் திட்டையைச்
சேர்பவர் தீவினை தீர்வது திண்ணமே.



நீர் விழும் உச்சியன் - கங்கைச் சடையன்; இத்தலச் சிறப்பையும் சுட்டியது. (இத்தலத்தில் சுவாமிக்கு மேலே 'சந்திரகாந்தக் கல்' பதித்த விமானம் உள்ளது. அதிலிருந்து கிட்டத்தட்ட ஒரு நாழிகைக்கு ஒரு முறை ஒரு சொட்டு நீர் சுவாமிமேல் விழுகின்றது);
ஓர் சிரந்தனிற் பலி தேர்பவன் - ஒரு மண்டையோட்டில் பிச்சை ஏற்பவன்;



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
தென்குடித்திட்டை - (திட்டை) - கோயில் தகவல்கள்: http://temple.dinamalar.com/New.php?id=381 )

------------ ------------------

No comments:

Post a Comment