Sunday, December 6, 2015

02.49 – கருகாவூர் (திருக்கருகாவூர்)

02.49 – கருகாவூர் (திருக்கருகாவூர்)



2012-05-16
திருக்கருகாவூர்
--------------------
(கலிவிருத்தம் - 'தேமா தேமா புளிமா புளிமாங்காய்' - வாய்பாடு.
ஒரோவிடத்தில் மா வருமிடத்தில் வேறு மாச்சீர் வரலாம்;
ஒரோவிடத்தில், புளிமாங்காய் வருமிடத்தில் விளச்சீரோ வேறு காய்ச்சீரோ வரலாம்).
(சம்பந்தர் தேவாரம் - 1.27.1 - "முந்தி நின்ற வினைக ளவைபோகச்")



1)
பண்ணார் பாடல் மகிழ்ந்து பரிசீவான்
பெண்ணார் மேனிப் பெருமான் பிறைசூடி
கண்ணார் நெற்றிக் கடவுள் கருகாவூர்
எண்ணாய் நெஞ்சே இலையோர் இடர்தானே.



பண் - இசை;
ஆர்தல் - பொருந்துதல்;
பரிசு - பரிசில்;
பண்ர் பாடல் மகிழ்ந்து பரிசு ஈவான் - இசை பொருந்திய பாடல்கள் பாடுவோர்க்குப் பேரருள் செய்பவன்;
(திருவாசகம் - திருவம்மானை - 8.8.8 -
பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான் ...... )
கண்ர் நெற்றிக் கடவுள் - நெற்றிக்கண் உடைய கடவுள் - சிவபெருமான்;
எண்ணாய் நெஞ்சே = மனமே, நீ எண்ணுவாயாக;
இலைர் இடர்தானே - (அப்படி நீ எண்ணினால் நமக்கு) ஒரு துன்பமும் இல்லை;



2)
நீர்கொள் கற்றைச் சடையன் நிலன்வானும்
பேர்கள் சொல்லிப் பரவும் பெருமானார்
கார்கொள் கண்டன் உறையும் கருகாவூர்
சேர்க நெஞ்சே சிதையும் வினைதானே.



நீர்கொள் கற்றைச் சடையன் - கங்கையை அடைத்த சடைக்கற்றை உடையவன்;
பரவுதல் - துதித்தல்;
நிலன் வானும் பேர்கள் சொல்லிப் பரவும் பெருமானார் - பூலோக மக்களும் தேவர்களும் பல திருநாமங்களையும் சொல்லித் துதிக்கின்ற பெருமான்;
கார்கொள் கண்டன் - கரிய கண்டன்;
சிதையும் - அழியும்;



3)
தாதார் கொன்றை சடையிற் புனைதந்தை
மீதூர் நாகம் சரமாய் மிளிர்ஈசன்
காதோர் தோட்டன் கருதும் கருகாவூர்
நீதீ தோட நினையாய் மடநெஞ்சே.



தாது ஆர் கொன்றை - மகரந்தம் பொருந்திய கொன்றைப்பூ;
மீதூர்தல் - மீது ஊர்தல் - மேனிமேல் நகர்தல்; மிகுதல்;
சரம் - மாலை;
காது ஓர் தோட்டன் - காதில் ஒரு தோடு அணிந்தவன் - அர்த்தநாரீஸ்வரன்;
கருதும் கருகாவூர் - விரும்பி உறையும் திருக்கருகாவூர்;
கருகாவூர் நீ தீது ஓட நினையாய் மடநெஞ்சே - பேதைமனமே! தீயவை நீங்குவதற்காக, நீ சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கருகாவூரை நினைவாயாக;


குறிப்பு: தோடு அணிந்தவன் என்ற பொருளில் தோட்டன், தோடன் என்ற இரு சொற்களும் பாடல்களில் வரக்கூடும்; உதாரணம்:
(அப்பர் தேவாரம் - 5.23.2 - "வீதி வேல்நெடுங் .... வெண் தோட்டராய்க் காதில் வெண்குழை வைத்தவெங் கள்வரே." -- வெண் தோட்டராய் - வெண்மையான ஒளி செய்கின்ற தோடணிந்தவராய்);


(சம்பந்தர் தேவாரம் - 3.78.4 -
"காடர்கரி காலர்கனல் கையரனல் மெய்யருடல் செய்யர்செவியில் தோடர்தெரி கீளர் ....." -- செவியில் தோடர் - காதில் தோட்டையணிந்தவர்);



4)
பித்தன் வானோர் அமுது பெறஅன்று
கைத்த நஞ்சுண் மிடறன் கருகாவூர்
அத்தன் பாதம் பணியும் அடியார்கட்கு
எய்த்தல் இல்லா இனிய நிலைதானே.



கைத்த நஞ்சு உண் மிடறன் - கசப்பான விஷத்தை உண்ட கண்டத்தை உடையவன்;
அத்தன் - தந்தை;
எய்த்தல் - வருந்துதல்;



5)
செங்கண் ஏற்றன் வடியார் திரிசூலன்
மங்கை பாகன் அரவம் மதியோடு
கங்கை தங்கு சடையன் கருகாவூர்
அங்கை கூப்பிப் பணிவார் அடியாரே.



செங்கண் ஏற்றன் - சினத்தால் கண் சிவந்த இடபத்தின்மேல் ஏறுபவன்;
வடி ஆர் திரிசூலன் - கூர்மையான திரிசூலத்தை ஏந்துபவன்;
அங்கை கூப்பி - கைகளைக் குவித்து;



6)
இட்ட மாக இடுகா னிடையாடும்
நட்டன் நாணா அரையில் ஒருநாகம்
கட்டும் ஈசன் கவினார் கருகாவூர்ச்
சிட்டன் தாள்சேர் மனமே திருவாமே.



இட்டமாக இடுகானிடை ஆடும் - விரும்பிச் சுடுகாட்டில் ஆடுகின்ற;
நட்டன் - திருநடம் செய்பவன்; கூத்தன்;
நாணா - நாணாக;
கவின் ஆர் கருகாவூர்ச் சிட்டன் - அழகிய திருக்கருகாவூரில் எழுந்தருளியிருக்கும் சிஷ்டன்;
திரு ஆம் - நன்மை உண்டாகும்;



7)
காட்டில் வேடர் விழியைக் கவர்வேடன்
ஓட்டை ஏந்தி உழலும் ஒருவன்கண்
காட்டும் நெற்றிக் கடவுள் கருகாவூர்
நாட்ட மாகித் தொழுதால் நலமாமே.



வேடர் - கண்ணப்பர்;
வேடன் - வேஷதாரி; (தன் கண்ணில் இரத்தம் கசிவதுபோல் நடித்தவன்);
ஓட்டை ஏந்தி உழலும் ஒருவன் - பிரமனது மண்டையோட்டை ஏந்திப் பிச்சைக்குத் திரியும் ஒப்பற்றவன்;
கண் காட்டும் நெற்றிக் கடவுள் - நெற்றிக்கண்ணை உடைய கடவுள்;
நாட்டம் - விருப்பம்; நோக்கம்;



8)
மால தாகி மலையை எடுத்தான்தான்
சால நையத் தனிமெல் விரலூன்றும்
கால காலன் கவினார் கருகாவூர்ச்
சூலன் பாதம் தொழுவார் துயர்போமே.



மால் - அறியாமை; ஆணவம்;
மால் அது ஆகி மலையை எடுத்தான்தான் - அறியாமையும் செருக்கும் மிகுந்து கயிலையைப் பெயர்க்க முயன்ற இராவணன்;
சால நைய - மிகவும் வருந்த;
தனி மெல் விரல் - ஒரே ஒரு மென்மையான விரலை;
கால காலன் -காலனுக்குக் காலனாய் அவனை அழித்தருளியவன்;
கவினார் கருகாவூர்ச் சூலன் - அழகிய திருக்கருகாவூரில் உறையும் சூலபாணி;



9)
மானே என்னா மலரோன் அரிகாணார்
ஆனூர் அண்ணல் அவன்பொன் னடிபோற்றக்
கானார் சோலைக் கவினார் கருகாவூர்
போனாற் பொல்லா வினைகள் பொடியாமே.



மான் - பெரியோன் (Great person or being);
மலரோன் - பிரமன்;
அரி - திருமால்;
மானே என்னா மலரோன் அரி காணார் - பெருமானே என்று போற்றாத பிரமனும் விஷ்ணுவும் (அடியும் முடியும்) காணமாட்டார்;
ஆன் ஊர் அண்ணல் - இடப வாகனன்;
அவன் பொன்னடி போற்றக் கான் ஆர் சோலை கவின் ஆர் கருகாவூர் போனால் - அப்பெருமானின் பொன்னடியை வழிபட, மணம் கமழும் சோலைகள் திகழும் அழகிய திருக்கருகாவூருக்குச் சென்றால்;
பொல்லா வினைகள் பொடி ஆம் - தீவினகள் எல்லாம் சாம்பலாகும்;



10)
ஆய்தல் செய்ய அறியாச் சமயத்தார்
வாய்சொல் பொய்கள் தமைநீர் மதியேன்மின்
காய்கண் காட்டும் நுதலான் கருகாவூர்
போய்முன் வீழிற் பொல்லா வினைபோமே.



ஆய்தல் - ஆராய்தல்; (சம்பந்தர் தேவாரம் - 1.11.5 - "ஆயாதன சமயம்பல அறியாதவன்");
வாய் சொல் பொய்கள்தமை நீர் மதியேன்மின் - அவர்களின் வாய்கள் சொல்லும் பொய்களை நீங்கள் மதியாதீர்;
காய் கண் காட்டும் நுதலான் - எரிக்கும் நெற்றிக்கண் உடையவன்;
வீழில் - விழுந்து தொழுதால்;


11)
தீக்கண் ஒன்று திகழும் சிவனெம்மான்
தாக்கும் ஆனை உரிவை தரியீசன்
காக்கும் கடவுள் கருதும் கருகாவூர்
தீர்க்கும் அன்பர் திருவில் வினைதானே.



எம் மான் - எம்பெருமான்;
தாக்கும் ஆனை உரிவை தரி ஈசன் - போர் செய்த யானையின் தோலைப் போர்த்த ஈசன்;
காக்கும் கடவுள் கருதும் கருகாவூர் - மூவுலகங்களையும் இரட்சிக்கும் சிவபெருமான் விரும்பி உறையும் தலமான திருக்காவூர்;
தீர்க்கும் அன்பர் திரு இல் வினைதானே - வந்து வழிபடும் பக்தர்களுடைய பாவங்களைத் தீர்க்கும்; (திரு இல் வினை - நன்மை இல்லாத வினைகள் - பாவங்கள்);
(அப்பர் தேவாரம் - 6.95.5 -
"திருக்கோயி லில்லாத திருவி லூரும்
.. திருவெண்ணீ றணியாத திருவி லூரும்
....." ---- திரு இல் ஊர் - நன்மை இல்லாத ஊர்);
(சம்பந்தர் தேவாரம் - 1.116.8 -
"கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே
உருகி மலர்கொடு வந்துமை யேத்துதும் நாமடியோம்
செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள் செய்தவரே
திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்."
---- திருவிலித்தீவினை - திரு இல் இத் தீவினை;)



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக்குறிப்பு:
  • கலிவிருத்தம் - 'தேமா தேமா புளிமா புளிமாங்காய்' - என்ற வாய்பாடு
  • சம்பந்தரின் 1.27 பதிகத்தில் பொதுவாக 'மா தேமா புளிமா புளிமாங்காய்' என்ற அமைப்பு.
  • ஒரோவிடத்தில் மா வருமிடத்தில் வேறு மாச்சீர் வரலாம்; ஒரோவிடத்தில், புளிமாங்காய் வருமிடத்தில் விளச்சீரோ வேறு காய்ச்சீரோ வரலாம்.
2) சம்பந்தர் தேவாரம் - 1.27.11 -
"மாட மல்கு மதில்சூழ் காழிமன்
சேடர் செல்வ ருறையுந் திருப்புன்கூர்
நாட வல்ல ஞான சம்பந்தன்
பாடல் பத்தும் பரவி வாழ்மினே.")
3) திருக்கருகாவூர் - முல்லைவனநாதர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=672திருக்கருகாவூர் - தேவாரம் ஆர்க் தளத்தில் : http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=72

-------------- --------------

No comments:

Post a Comment