Sunday, December 6, 2015

02.45 – அறம் வளர்த்த நாயகி - ஐயாறு - (திருவையாறு)

02.45 – அறம் வளர்த்த நாயகி - ஐயாறு - (திருவையாறு)



2012-04-07
ஐயாறு - (திருவையாறு)
"அருளாய் அறம் வளர்த்த நாயகியே" (தர்மசம்வர்த்தனி)
------------------------------------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(சம்பந்தர் தேவாரம் - 2.47.1 - "மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்")



1)
படியிதனில் பல்லிடர்கள் பட்டுழலும் பிறவிதரும்
கொடியவினை தீர்த்தருளாய் கொல்லேற்றன் கூறமர்ந்தாய்
கடிமலர்கள் தூவியுன்றன் அடிமலரைப் பணிகின்ற
அடியவர்கட் கருந்துணையே அறம்வளர்த்த நாயகியே.



படி - பூமி;
கொல் ஏறு - வலிய எருது;
கூறு - பங்கு;
அமர்தல் - விரும்புதல்;
கடி - வாசனை;
அறம் வளர்த்த நாயகி - தர்மசம்வர்த்தனி;


இவ்வுலகத்தில் பல துன்பங்கள் அடைந்து உழல்கின்ற பிறவியைக் கொடுக்கும் கொடிய வினைகளைத் தீர்த்துக் காத்தருள்வாய்; வலிய இடபத்தை வானமாகக் கொண்ட சிவபெருமான் ஓர் பங்கு விரும்பியவளே! வாசமலர்களைத் தூவி உன் மலர்போன்ற திருவடிகளை வணங்கும் அடியவர்களுக்கு நல்ல துணையாக இருப்பவளே! திருவையாற்றில் உறையும் அறம்வளர்த்த நாயகியே!



2)
பொய்யான பொருள்நாடும் புன்மையைத்தீர்த் தெனையாள்வாய்
கையானை உரிபோர்த்த கறைக்கண்டன் வாமத்தாய்
மெய்யாறாய் நிற்பவளே விரைபொன்னிக் கரைதன்னில்
ஐயாறு மகிழ்ந்துறையும் அறம்வளர்த்த நாயகியே.



புன்மை - இழிவு;
கையானை - துதிக்கையை உடைய யானை; (அப்பர் தேவாரம் - 6.56.9 - "கையானை மெய்த்தோல் உரித்தாய் போற்றி");
உரி - தோல்;
கறைக்கண்டன் - நீலகண்டன்;
வாமம் - இடப்பக்கம்;
ஆறு - நெறி; மார்க்கம்;


நிலையற்ற பொருளை நாடுகின் இழிவைத் தீர்த்து என்னை ஆட்கொள்வாயாக! துதிக்கை உடைய யானையின் தோலைப் போர்க்கும் நீலகண்டன் இடப்பக்கத்தில் இருப்பவளே! மெய்ந்நெறியாகத் திகழ்பவளே! விரையும் காவிரியின் கரையில் திருவையாற்றில் விரும்பி உறையும் அறம்வளர்த்த நாயகியே!



3)
தேகத்தை வளர்ப்பதற்கே தினமோடும் என்மனத்தின்
வேகத்தைத் தடுத்துன்றன் மென்மலர்த்தாள் பாடவைப்பாய்
நாகத்தைப் பூணாக நயக்கின்ற நம்பனவன்
ஆகத்தைப் பிரியாத அறம்வளர்த்த நாயகியே.



நயத்தல் - விரும்புதல்;
நம்பன் - விரும்புபவன்/விரும்பப்படுபவன் - சிவன்;
ஆகம் - உடல்; திருமேனி;


இவ்வுடலை வளர்க்கவே எப்போதும் எண்ணும் என் மனத்தின் வேகத்தைத் தடுத்து, என்னை உன் மென்மையான மலர்போன்ற திருவடியைப் பாடச்செய்வாய்! பாம்பை விரும்பி அணியாகப் பூணும் சிவபெருமான் திருமேனியைப் பிரியாத அறம்வளர்த்த நாயகியே!



4)
மருளுமனம் உடையேற்கு வலியவினைக் கட்டறுக்கும்
தெருளருளிச் சேவடியே சிந்திக்க வைப்பாயே
இருளிலகும் கண்டத்தன் இடப்பாகம் இருப்பவளே
அருளமுதை அளிக்கின்ற அறம்வளர்த்த நாயகியே.



மருளுதல் - மயங்குதல்; அஞ்சுதல்;
தெருள் - தெளிவு; ஞானம்;
இருள் - கறுப்பு;
இலகுதல் - விளங்குதல்;


மயங்கி அஞ்சுகின் மனத்தை உடைய எனக்கு, வலிய பழவினைப் பந்தத்தைப் போக்கும் ஞானத்தை அருளி, உன் சேவடியையே சிந்திக்கச் செய்வாய்! கருமை திகழும் கண்டத்தை உடைய ஈசனின் இடப்பாகத்தில் இருப்பவளே! அருள் என்ற அமுதை வழங்கும் அறம்வளர்த்த நாயகியே!



5)
வஞ்சவினைக் கட்டறுத்து மலர்த்தாளைப் பாடுவிப்பாய்
அஞ்சியுனைச் சரணடைந்தார்க் கபயமளி கரத்தினளே
நஞ்சுதனை அமுதுசெய்த நாதனொரு பங்குடையாய்
அஞ்சனவேல் விழியுடையாய் அறம்வளர்த்த நாயகியே.



அஞ்சனம் - மை;


வஞ்ச வினைகளின் கட்டினை அறுத்து என்னை உன் மலர்ப்பாதத்தைப் பாடச்செய்வாய்! அஞ்சி உன்னைச் சரண்புகுந்தவர்களுக்கு அபயம் அளிக்கும் கரத்தை உடையவளே! விடத்தை உண்ட ஈசன் ஒரு பங்காக உடையவளே! மை அணிந்த, வேல் போன்ற விழி உடையவளே! அறம்வளர்த்த நாயகியே!



6)
மாரணந்தான் தருகின்ற வல்வினையைத் தீர்த்தருளாய்
பூரணஞ்சேர் மோதகக்கைப் புத்திரனைப் பெற்றவளே
மாரனங்கே பொடிபடக்கண் சிவந்தவனோர் பங்குடையாய்
ஆரணங்கே அடிபணிந்தேன் அறம்வளர்த்த நாயகியே.



மா ரணம் - பெரும் புண்;
மாரன் - காமன்; மன்மதன்;
பொடிபடுதல் - சாம்பல் ஆதல்;
கண் சிவத்தல் - கோபித்தல்;
ஆரணங்கு - அரிய தெய்வமாகிய உமையம்மை;


பூரணம் உள்ளிருக்கும் கொழுக்கட்டையைக் கையில் வைத்துள்ள பிள்ளையாரைப் பெற்றவளே! அம்பு எய்த காமன் அங்கே சாம்பலாகும்படி நெற்றிக்கண் சிவந்த ஈசன் ஒரு பங்காக உடையவளே! அரிய தெய்வமே! அறம்வளர்த்த நாயகியே! என்னை மிகவும் புண்படச்செய்யும் வலிய வினைகளைத் தீர்த்து அருள்வாய்! உன் திருவடியைப் பணிந்தேன்.



7)
ஓதியுனை உள்ளிருத்தும் உத்தமருக் குறுதுணையாய்க்
காதிலங்கு தோடெறிந்து கடவூரிற் காப்பவளே
பாதியுருப் பரனாகும் பைந்தொடியே பார்க்கெல்லாம்
ஆதியுனை அடிபணிந்தேன் அறம்வளர்த்த நாயகியே.



ஓதுதல் - பாடுதல்;
உள் - உள்ளே; மனம்;
இருத்துதல் - நிலைபெறச்செய்தல்;
பைந்தொடி - பொன் வளையல் - ஆகுபெயராகப் பெண்ணைக் குறித்தது;


திருக்கடவூரில் உன்னைப் பாடிப் பரவி உள்ளத்தில் நிலைபெறச்செய்த அபிராமி பட்டருக்கு உற்ற துணை ஆகி, உன் காதில் திகழும் தோட்டை வானில் எறிந்து அமாவாசையன்று பூரண நிலவைக் காட்டிக் காத்தவளே! பாதி திருமேனி ஈசனாகும் உமையம்மையே! உலகுகளுக்கெல்லாம் ஆதியே! அறம்வளர்த்த நாயகியே! உன்னை அடிபணிந்தேன்.



8)
காலமெலாம் அடிபோற்றும் கருத்தளித்துக் காத்தருளாய்
மாலதனால் மலையசைத்த வல்லரக்கன் வாயதனால்
ஓலமிட மலர்போல ஒருவிரலை ஊன்றியருள்
ஆலமுண்டான் பங்கிலுறை அறம்வளர்த்த நாயகியே.



மால் - அறியாமை; ஆணவம்;
ஓலமிடுதல் - அபயமிடுதல் (cry for protection, appeal);


அறியாமையால் கயிலைமலையைப் பெயர்க்க முயன்ற வலிய இராவணன் தன் வாயால் ஓலமிடும்படி அம்மலைமேல் ஒரு மலர்போன்ற விரலைச் சிறிது ஊன்றி அவனை நசுக்கியவன், விஷத்தை உண்ட சிவபெருமான் திருமேனியில் ஒரு பாகமாக உறையும் அறம்வளர்த்த நாயகியே! என் வாழ்நாள் முழுதும் உன் திருவடியைப் போற்றும் எண்ணத்தைத் தந்து என்னைக் காத்தருள்வாய்!



9)
இங்கடையும் இருவினையால் இடர்ப்பட்டு வாடுமென்றன்
சங்கைதனைத் தீர்த்தருளாய் சங்கையணி கையாளே
பங்கயன்மால் அறியாத பரஞ்சுடரோர் பங்குடையாய்
அங்கயல்போற் கண்ணுடையாய் அறம்வளர்த்த நாயகியே.



சங்கை - அச்சம்;
சங்கு - வளையல்;
பங்கயன் - தாமரையில் உறையும் பிரமன்;
அம் கயல் - அழகிய கயல்மீன்;


வளையல் அணிந்த திருக்கரம் உடையவளே! பிரமனும் திருமாலும் அறியாத மேலான சோதியான ஈசன் ஓர் பங்கு உடையவளே! அழகிய கயல்மீன் போன்ற கண் உடையவளே! அறம்வளர்த்த நாயகியே! இப்பிறப்பில் என்னை வந்தடையும் பழவினைப்பயனால் துன்பப்பட்டு வாடுகிற என் அச்சத்தைத் தீர்த்து அருள்வாய்!



10)
உய்யாத நெறிதன்னை ஊரெங்கும் ஓலமிடும்
பொய்யாரும் புல்லருக்குப் புரியாத பொற்கொடியே
கையாலுன் அடிதொழுதேன் கண்ணுதலோர் கூறுடையாய்
ஐயாறோ டொன்றொடொன்றாம் அறம்வளர்த்த நாயகியே.



பதம் பிரித்து:
உய்யாத நெறிதன்னை ஊர் எங்கும் ஓலமிடும்
பொய் ஆரும் புல்லருக்குப் புரியாத பொற்கொடியே;
கையால் உன் அடி தொழுதேன்; கண்ணுதல் ஓர் கூறு உடையாய்;
ஐ ஆறோடு ஒன்றொடு ஒன்று ஆம் அறம்வளர்த்த நாயகியே.


உய்யாத - உய்யச்செய்யாத; (உய்த்தல் - உய்யச்செய்தல் - To ensure salvation);
இலக்கணக் குறிப்பு: உய்தல், உய்த்தல் - இரண்டும் எதிர்மறையில் 'உய்யாத' என்று வரும்.
ஓலமிடுதல் - சத்தமிடுதல் (To make a noise); (ஓலம் - சத்தம் - Sound, noise, roar);
ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்;
புரிதல் - விளங்குதல்; / கொடுத்தல்;
ஐ ஆறோடு ஒன்றொடு ஒன்று = (5x6) + 1 + 1 = 32 = முப்பத்திரண்டு;
ஐ ஆறோடு ஒன்றொடு ஒன்று ஆம் அறம் - முப்பத்திரண்டு அறங்கள்;


உய்தி தாராத மார்க்கத்தை ஊர் எங்கணும் சத்தமிட்டுக்கொண்டிருக்கும் பொய்ம்மை மிகுந்த ஈனர்களுக்கு அறிய ஒண்ணாதவளே! அத்தகையோர்க்கு அருள்செய்யாதவளே! பொற்கொடியே! நெற்றிக்கண்ணைக் காட்டும் ஈசன் ஓர் பங்கு உடையவளே! முப்பத்திரண்டு அறங்களை வளர்க்கும் (அறம்வளர்த்த) நாயகியே! என்னைக் காத்தருள்வாய்!


குறிப்பு : இந்த 32 அறங்கள் தொகுப்பைத் தருமபுர ஆதீன உரைநூலில், பெரியபுராணத்தில் திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணத்தில் 71-ஆம் பாடலான "எண்ண ரும்பெரு வரங்கள் .... காமக்கோட் டத்துப் பொலிய முப்பதோ டிரண்டறம் புரக்கும்" என்ற பாடலின் குறிப்புரையில் காண்க.



11)
கன்னலன தமிழ்பாடக் கழுமலத்தில் கவுணியர்க்கு
முன்னமிரு முலைப்பாலைக் கறந்தளித்தாய் வாகீசர்க்கு
அன்னமலி ஐயாற்றில் அரன்பிரியாப் பிடியானாய்
அன்னையுனை அடிபணிந்தேன் அறம்வளர்த்த நாயகியே.



கன்னல் - கரும்பு;
அன - அன்ன – போன்ற;
கழுமலம் - சீகாழி;
கவுணியர் - கவுணிய கோத்திரத்தில் உதித்த திருஞான சம்பந்தர்;
வாகீசர் - திருநாவுக்கரசர்;
அன்னம் - அன்னப் பறவை; சோறு;
மலிதல் - மிகுதல்;
பிடி - பெண் யானை;


சீகாழியில் அழுத திருஞான சம்பந்தர்க்குத் திருமுலைப்பாலைக் கறந்து கிண்ணத்தில் அளித்து அவர் இனி தேவாரம் பாட அருள்புரிந்தவளே. அன்னம் மிகுந்த திருவையாற்றில் திருநாவுக்கரசர் கண்களில் ஆண்யானையாகச் சிவபெருமான் தோன்ற அவனைப் பிரியாத பெண்யானையாக வந்தவளே! அன்னையே! அறம்வளர்த்த நாயகியே! உன்னை அடிபணிந்தேன்.


(சம்பந்தர் தேவாரம் - 1.130.1 - "அன்னமலி பொழில்புடைசூழ் ஐயாற்றெம் பெருமானை... ");
(அப்பர் தேவாரம் - 4.3.1 -
மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதல் மடப்பிடி யோடும் களிறு வருவன கண்டேன்
.. கண்டேன் அவர்திருப் பாதம் கண்டறி யாதன கண்டேன்.


..... கயிலை மலையிலிருந்து காற்சுவடு படாமல் திருவையாற்றை அடைகின்ற பொழுதில், விருப்பத்திற்கு உரிய இளைய பெண்யானையோடு ஆண்யானை சேர்ந்து இரண்டுமாக வருவனவற்றைக் கண்டு, அவற்றை அடியேன் சத்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம், சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதனவற்றைக் கண்டவனாயினேன் ....)


(பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 67/68
ஆரணமும் உலகேழும் ஈன்றருளி அனைத்தினுக்கும்
காரணமாய் வளம்பெருகு கருணைதிரு வடிவான
சீரணங்கு சிவபெருமான் அருளுதலும் சென்றணைந்து
வாரிணங்கு திருமுலைப்பால் வள்ளத்துக் கறந்தருளி.


எண்ணரிய சிவஞானத் தின்னமுதம் குழைத்தருளி
உண்ணடிசில் எனவூட்ட உமையம்மை எதிர்நோக்கும்
கண்மலர்நீர் துடைத்தருளிக் கையிற்பொற் கிண்ணமளித்
தண்ணலைஅங் கழுகைதீர்த் தங்கணனார் அருள்புரிந்தார்.)



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக் குறிப்பு:
நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா.
பெரும்பாலும் காய்ச்சீர்கள். விளச்சீர்கள் வரலாம். ஒரோவழி மாச்சீரும் வரலாம். அப்படி மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்.
2) சம்பந்தர் தேவாரம் - 2.47.1
மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
கட்டிட்டம் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்கு
அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.
3) திருவையாறு - கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=677
4) திருவையாறு - கோயில் தகவல்கள் - தேவாரம்.ஆர்க் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=49

----------------- ----------------

No comments:

Post a Comment