Sunday, December 6, 2015

02.48 – ஆவூர்ப் பசுபதீச்சரம் - (ஆவூர்)

02.48 – ஆவூர்ப் பசுபதீச்சரம் - (ஆவூர்)



2012-05-13
திரு ஆவூர்ப் பசுபதீச்சரம் - (ஆவூர் பசுபதீஸ்வரர் கோயில்)
-------------------------------
(அறுசீர் விருத்தம் - 'மா மா காய்' - அரையடி வாய்பாடு)
(சுந்தரர் தேவாரம் - 7.52.1 - "முத்தா முத்தி தரவல்ல")
(அப்பர் தேவாரம் - 4.15.1 - "பற்றற் றார்சேர் பழம்பதியைப் பாசூர் நிலாய பவளத்தைச்")



1)
அஞ்செ ழுத்தைத் தினமோதும்
.. அன்பர் தங்கட் கன்பாகி
நெஞ்சிற் குடிகொண் டருள்புரியும்
.. நெற்றிக் கண்ணன் விடமுண்டு
மஞ்சு போலத் திகழ்கண்டன்
.. மங்கை பங்கன் மகிழ்கோயில்
அஞ்சொற் கிளிகள் மலிகின்ற
.. ஆவூர்ப் பசுப தீச்சரமே.



மஞ்சு - மேகம்;
அஞ்சொற் கிளிகள் - அம் சொல் கிளிகள் - இனிய மொழி பயிலும் கிளிகள் ;
மலிகின்ற - மிகுந்து இருக்கும் ;
ஆவூர் - ஊர்ப்பெயர். பசுபதீச்சரம் - கோயில் பெயர்.



2)
எளியன் அரியன் நிலன்நீராய்
.. எரியும் காற்றும் வெளியாவான்
நெளியும் அரவும் வானதியும்
.. நிலவும் முடிமேல் சூடுபவன்
அளியும் மனத்தார்க் கருளுமரன்
.. அரிவை பங்கன் அமர்கோயில்
அளிகள் அறையும் பொழில்சூழும்
.. ஆவூர்ப் பசுப தீச்சரமே.



எளியன் அரியன் - அடியவர்களால் எளிதில் அடையப்படுபவன்; பிறர்க்கு அரியவன்;
நிலன் நீர் ஆய் எரியும் காற்றும் வெளி ஆவான் - மண், நீர், தீ, வாயு, ஆகாயம் என்று ஐம்பூதங்கள் ஆனவன்;
வானதி - வான் நதி - கங்கை;
அளியும் மனத்தார்க்கு - குழையும் மனம் உடையவர்களுக்கு;
அரிவை பங்கன் - பெண் ஓர் பங்கு உடையவன்;
அமர் கோயில் - விரும்பும் கோயில்;
அளிகள் அறையும் பொழில் சூழும் - வண்டுகள் ஒலிக்கும் சோலைகள் சூழ்ந்த;



3)
ஆர்க்கும் வினைகள் அடியாரை
.. அடையா வண்ணம் அவற்றையெலாம்
தீர்க்கும் எந்தை சிவபெருமான்
.. தெரிவை பங்கன் களிற்றுரிவை
போர்க்கும் ஈசன் உறைகோயில்
.. பூக்கள் சொரியும் மதுமாந்தி
ஆர்க்கும் வண்டார் பொழில்சூழும்
.. ஆவூர்ப் பசுப தீச்சரமே.



ஆர்த்தல் - பிணித்தல் (கட்டுதல்); ஒலித்தல்;
ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்;
ஆர்க்கும் வினைகள் - நம்மைப் பிணிக்கும் வினைகள்;
தெரிவை - பெண்;
களிற்று உரிவை - யானைத்தோல்;
மது மாந்தி ஆர்க்கும் வண்டு ஆர் பொழில் சூழும் - தேனை உண்டு ஒலிக்கின்ற வண்டுகள் நிறையும் சோலை சூழ்ந்த;



4)
முன்பும் பின்பும் எனவாகி
.. முடிவில் லாத மூர்த்தியவன்
என்பும் பூணும் எம்பெருமான்
.. இமையோர் தலைவன் உறைகோயில்
துன்பம் நல்கு தொல்வினைகள்
.. தொலைய வேண்டித் தமிழ்பாடி
அன்பர் பலரும் வந்தேத்தும்
.. ஆவூர்ப் பசுப தீச்சரமே.



முன்பும் பின்பும் என ஆகி முடிவு இல்லாத மூர்த்தி அவன் - எல்லாவற்றிற்கும் முற்பட்டும், அனைத்து ஒடுங்கிய பின்னும் இருக்கின்ற, அழிவற்ற கடவுள்;
என்பு - எலும்பு;
இமையோர் - தேவர்கள்;
தொல்வினைகள் - பழவினைகள்;



5)
வீடும் மாடும் விழையாமல்
.. விரையார் கழலே பணிவார்க்கு
வீடும் அருளும் விடையேறி
.. வெண்ணி லாவை முடிமீது
சூடும் பெருமான் உறைகோயில்
.. சுகந்தம் கமழும் தென்றலிலே
ஆடும் பயிரார் வயல்சூழும்
.. ஆவூர்ப் பசுப தீச்சரமே.



வீடும் மாடும் விழையாமல் - வீட்டையும் செல்வத்தையும் விரும்பி உழலாமல்;
விரை ஆர் கழலே - மணம் பொருந்திய (வாசமலர் போன்ற), கழல் அணிந்த திருவடிகளையே;
வீடும் அருளும் விடையேறி - வீடுபேறும் அருள்கின்ற ரிஷபவாகனன்;
சுகந்தம் கமழும் தென்றலிலே ஆடும் பயிர் ஆர் வயல் சூழும் - மணம் கமழும் தென்றலில் அசைகின்ற பயிர்கள் நிறைந்த வயல் சூழ்ந்த;



6)
இசையும் பொருளும் இனிதாக
.. இயையும் நல்ல தமிழ்பாடி
நசைகொண் டேத்தும் அடியார்கள்
.. நலியா வண்ணம் காக்குமரன்
திசைகள் ஆனான் திகழ்கோயில்
.. தென்றல் வந்து வருடிவிட
அசையும் பயிரார் வயல்சூழும்
.. ஆவூர்ப் பசுப தீச்சரமே.



இயைதல் - இணங்குதல் (To agree, harmonise);
இசையும் பொருளும் இனிதாக இயையும் நல்ல தமிழ் பாடி - தேவாரம் பாடி;
நசை - அன்பு;
நசைகொண்டு ஏத்தும் அடியார்கள் நலியா வண்ணம் காக்கும் அரன் - அன்போடு போறும் அடியவர்கள் வருத்தமுறாதபடி அவர்களைக் காக்கின்ற ஹரன்;
திசைகள் ஆனான் - (திருவாசகம் - திருக்கோத்தும்பி - 15 - "நானும்என் ..... வானுந் திசைகளும் மாகடலும் ஆயபிரான்")



7)
வெந்த நீறு மெய்பூசி
.. விமலன் பாதம் மறவாத
சிந்தை யார்கட் கணியாகித்
.. தீய வினைகள் தீர்த்தருள்வான்
தந்தை யாகித் தாயாவான்
.. தன்னேர் இல்லான் உறைகோயில்
அந்தண் சோலை புடைசூழும்
.. ஆவூர்ப் பசுப தீச்சரமே.



வெந்த நீறு மெய்பூசி - திருநீற்றைத் திருமேனியிற் பூசியவன் - சிவபெருமான்;
விமலன் - மலமற்றவன் - தூயவன் - சிவபெருமான்;
பாதம் மறவாத சிந்தையார்கட்கு அணியாகி - மறவாமல் திருவடியை எப்போதும் எண்ணும் மனத்தினருக்கு மிக அருகில் இருந்து;
("வெந்த நீறு மெய்பூசி, விமலன் பாதம் மறவாத" - 'தங்கள் மேனிமேல் திருநீற்றைப் பூசித், தூயவன் திருவடியை மறவாத" என்று அடியவர்களுக்கு அடையாகவும் இச்சொற்றொடர்களைப் பொருள்கொள்ளல் ஆம்);
தீய வினைகள் தீர்த்தருள்வான் - தீவினைகளைத் தீர்ப்பவன்;
தன் நேர் இல்லான் - தனக்கு ஓர் ஒப்பும் இல்லாதவன்;
அம் தண் சோலை புடை சூழும் - அழகிய குளிர்ந்த சோலைகள் எல்லாப் பக்கங்களிலும் சூழ்ந்திருக்கும்;


** இலக்கணக் குறிப்பு : திருமுறைகளில் பல இடங்களில் "மெய்பூசி" என்று 'ப்' மிகாமலும், சில இடங்களில் "மெய்ப்பூசி" என்று 'ப்' மிகுந்தும் வரக்காண்கிறேன். இரண்டுமே சரியோ?



8)
மடமை யாலே மலையசைத்த
.. வல்ல ரக்கன் எலும்பெல்லாம்
உடையு மாறு விரலொன்றை
.. ஊன்றிப் பின்னர் இசைகேட்டுப்
படையும் அருள்வார் உறைகோயில்
.. பரந்த கடலில் எழுமுகில்கள்
அடையும் சோலை புடைசூழும்
.. ஆவூர்ப் பசுப தீச்சரமே.



மடமையாலே மலை அசைத்த வல்லரக்கன் - அறிவின்றிக் கயிலைமலையைப் பெயர்க்க முயன்ற இராவணன்;
படை - ஆயுதம்; (இங்கே 'சந்திஹாஸம்' என்ற வாள்);



9)
கடிமா மலரில் திகழ்அயனும்
.. கடலில் துயிலும் திருமாலும்
முடியோ டடியை மிகநேட
.. முடிவில் எரியாய் உயரீசன்
துடிபோல் இடையாள் உமைமங்கை
.. துணைவன் பிரியா துறைகோயில்
அடியார் பலரும் வந்தேத்தும்
.. ஆவூர்ப் பசுப தீச்சரமே.



கடி மா மலரில் திகழ் அயனும் - வாசம் மிக்க தாமரைப்பூவில் இருக்கும் பிரமனும்;
முடியோடு அடியை மிக நேட - முடியையும் அடியையும் மிகவும் தேட; (நேடுதல் - தேடுதல்);
முடிவு இல் எரியாய் உயர் ஈசன் - எல்லை இல்லாத சோதியாகி நீண்ட சிவபெருமான்;
துடிபோல் இடையாள் உமைமங்கை துணைவன் - உடுக்குப் போல் சிற்றிடை உடைய உமாதேவிக்குக் கணவன்; (துடி - உடுக்கை);



10)
பணியார் சிவனைச் சிலமூடர்
.. பாழுக் கேநீர் இறைப்பாரே
பிணிதீ வினைகள் நீங்ககிலாப்
.. பேதை மார்சொல் பேணேன்மின்
மணிபோல் நஞ்சு திகழ்கண்டன்
.. மலையான் மகளோ டுறைகோயில்
அணியார் சோலை புடைசூழும்
.. ஆவூர்ப் பசுப தீச்சரமே.



பாழுக்கே நீர் இறைத்தல் - பாழ் நிலத்துக்கு நீர் இறைப்பாரைப் போலக் காலத்தையும் அறிவு ஆற்றல்களையும் வீணாக்குதல்;
பிணிதீவினைகள் நீங்ககிலாப் பேதைமார் சொல் - பிணித்துள்ள பாவங்களைப் போக்க இயலாத அப்பேதைகள் சொல்லும் பேச்சை;
பேணேன்மின் - பேணேல்மின் - மதியாதீர்கள்;
மணிபோல் நஞ்சு திகழ் கண்டன் - நீலமணி போல விஷம் ஒளிர்கின்ற கண்டத்தை உடையவன்;
மலையான்மகள் - பார்வதி;
அணி ஆர் சோலை - அழகிய சோலைகள்;


(அப்பர் தேவாரம் - 4.31.8 -
"பற்றிலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீரி றைத்தேன்
உற்றலாற் கயவர் தேறார் என்னுங்கட் டுரையோ டொத்தேன்....")



11)
குறையொன் றில்லான் கூன்மதியன்
.. கூரார் மழுவன் திரிசூலன்
மறைகள் மொழியும் மாதேவன்
.. வானோர் உய்ய நஞ்சுண்டு
கறைகொண் டிலங்கு கண்டத்தன்
.. கங்கைச் சடையன் உறைகோயில்
அறைவண் டினங்கள் மகிழ்சோலை
.. ஆவூர்ப் பசுப தீச்சரமே.



கூன்மதி - வளைந்த பிறை;
கூரார் மழுவன் - கூர்மையான மழுவை உடையவன்;
அறை வண்டினங்கள் - ஒலிக்கும் வண்டுகள்;



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) ஆவூர்ப் பசுபதீச்சரம் - ஆவூர் பசுபதீஸ்வரர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=1027



2) --------------------- Some Q&A ---------------
இப்பதிகத்தில் பாடல் 10-இல் உள்ள ஒரு பிரயோகத்தைக் குறித்த ஓர் உரையாடல்:
தடை - Question : "பேதை மார்சொல் பேணேன்மின்" - செய்யும் என்னும் வினைச்சொல் முன்னிலை எதிர்மறையில், செய்யீர்கள், செய்யீர்மின் என்றாகும். அதுபோல, இங்குப் பேணீர்மின் என்று ஆகுமன்றோ?"
விடை - Answer: பேணேன்மின் என்ற பிரயோகம் சரியே. தேடியதில் கண்ட சில உதாரணங்கள்:
பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 423
இம்மாயப் பவத்தொடக்காம் இருவினைகள் தமைநோக்கி
உம்மால்இங் கென்னகுறை உடையேன்யான் திருவாரூர்
அம்மானுக் காளானேன் அலையேன்மின் நீர்என்று
பொய்ம்மாயப் பெருங்கடலுள் எனுந்திருத்தாண் டகம்புகன்றார்.



சம்பந்தர் தேவாரம் 1.15.10
மத்தம்மலி சித்தத்திறை மதியில்லவர் சமணர்
புத்தரவர் சொன்னம்மொழி பொருளாநினை யேன்மின்
நித்தம்பயில் நிமலன்னுறை நெய்த்தானம தேத்தும்
சித்தம்முடை யடியாருடல் செறுநோயடை யாவே.
----- பொருளா நினையேன்மின் - ஒரு பொருளாக நினையாதீர்.



அப்பர் தேவாரம் 6.27.1
பொய்ம்மாயப் பெருங்கடலிற் புலம்பா நின்ற
.. புண்ணியங்காள் தீவினைகாள் திருவே நீங்கள்
இம்மாயப் பெருங்கடலை யரித்துத் தின்பீர்க்
.. கில்லையே கிடந்ததுதான் யானேல் வானோர்
தம்மானைத் தலைமகனைத் தண்ண லாரூர்த்
.. தடங்கடலைத் தொடர்ந்தோரை யடங்கச் செய்யும்
எம்மான்ற னடித்தொடர்வா னுழிதர் கின்றேன்
.. இடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே.


திருநாவுக்கரசரின் இப்பதிகத்தில் (6.27) பல பாடல்களில் இத்தகைய பிரயோகம் உள்ளது.
-----------

-------------- --------------

No comments:

Post a Comment