Thursday, December 22, 2022

05.32 – புறம்பயம் (திருப்புறம்பயம்) - (வண்ணவிருத்தம்)

05.32 – புறம்பயம் (திருப்புறம்பயம்) - (வண்ணவிருத்தம்)


2015-05-23

புறம்பயம் (திருப்புறம்பயம் - இக்காலத்தில் "திருப்புறம்பியம்")

(கும்பகோணம் அருகே உள்ள தலம்)

------------------

(வண்ண விருத்தம் - "தனந்தனத் தனத்தனந் தனந்தனத் தனத்தன" என்ற சந்தக்குழிப்பு)

(சந்தவிருந்தங்களில் - "தனாதனா தனாதனா தனாதனா தனாதனா" என்ற சந்தத்தில் பாடல்கள் உள்ளன. சம்பந்தர் தேவாரம் - 2.98.1 - "வரைத்தலைப் பசும்பொனோ டருங்கலன் களுந்திவந்"; -- கணேச பஞ்சரத்னம் ஸ்தோத்திரம் - "முதாகராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்")


1)

கரங்களைக் குவித்திடும் கணம்தனக் குகப்பொடு

வரங்களைக் கொடுப்பவன் சலஞ்சடைக் கரப்பவன்

சிரங்களைத் தரித்தவன் சிலம்புபொற் கழற்சிவன்

புரங்களைக் கொளுத்தினன் புறம்பயத் தொருத்தனே.


கரங்களைக் குவித்திடும் கணம் தனக்கு உகப்பொடு வரங்களைக் கொடுப்பவன் - கைகூப்பி வணங்கும் பத்தர் கணத்திற்கு (அடியார் கூட்டத்திற்கு) மகிழ்ந்து வரங்களை அருள்பவன்; (கணம் - கூட்டம்);

சலம் சடைக் கரப்பவன் - கங்கையைச் சடையில் ஒளித்தவன்; (இலக்கணக் குறிப்பு: ஏழாம் வேற்றுமைத்தொகையில் வலி மிகும்); (அப்பர் தேவாரம் - 6.95.10 - "கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்");

சிரங்களைத் தரித்தவன் - மண்டையோட்டு மாலையை அணிந்தவன்;

சிலம்பு பொற்கழற் சிவன் - ஒலிக்கின்ற பொற்கழலை அணிந்த திருவடியை உடைய சிவன்; (சிலம்புதல் - ஒலித்தல்);

புரங்களைக் கொளுத்தினன் - முப்புரங்களை எரித்தவன்;

புறம்பயத்து ஒருத்தனே - திருப்புறம்பயத்தில் உறைகின்ற ஒப்பற்றவன்;


2)

கருங்களத் தனைக்கயம் புகுஞ்சடைக் கருத்தனைத்

தருங்கரத் தனைச்சரண் புகும்துயர்க் கடற்புணை

சுருங்கிடைச் சிவைக்கிடந் தருஞ்சிறப் புடைச்சிவன்

பொருங்களிற் றுரிப்பரன் புறம்பயத் தொருத்தனே.


கரும் களத்தனைக் - நீலகண்டனை; (கரும் களம் - கரிய கண்டம்);

கயம் புகும் சடைக் கருத்தனைத் - கங்கையைச் சடையில் தரித்த தலைவனை; (கயம் - நீர்; நீர்நிலை); (கருத்தன் - கர்த்தா - எல்லாவற்றையும் படைத்தவன்; தலைவன்);

தரும் கரத்தனைச் - வரம் கொடுக்கும் கரத்தை உடையவனை;

சரண் புகும் - சரண் புகுங்கள் - சரணடையுங்கள்;

துயர்க்கடற்புணை - நமது துன்பக்கடலைக் கடப்பிக்கும் படகு போன்றவன்; (புணை - மரக்கலம்; தெப்பம்);

சுருங்கு இடைச் சிவைக்கு இடம் தருஞ் சிறப்புடைச் சிவன் - சிற்றிடையை உடைய உமைக்கு இடப்பாகத்தைத் தரும் சிறப்பினை உடைய சிவன்; (சிவை - பார்வதி);

பொரும் களிற்று உரிப் பரன் - போர் செய்யும் யானையின் தோலைப் போர்த்திய பரமன்; (பொருதல் - போர்செய்தல்);

புறம்பயத்து ஒருத்தனே - திருப்புறம்பயத்தில் உறைகின்ற ஒப்பற்றவன்;


3)

அலந்துடைத் தளித்திடும் சிவன்றனைத் தொழப்புகும்

சலந்தரற் செகுத்தவன் புரஞ்சுடச் சிரித்தவன்

மெலிந்தஅப் பிறைக்கரும் பதந்தரத் தரித்தவன்

பொலிந்தபொற் சடைப்பரன் புறம்பயத் தொருத்தனே.


அலம் துடைத்து அளித்திடும் சிவன்றனைத் தொழப் புகும் - துன்பத்தைத் தீர்த்துக் காக்கும் சிவனைத் தொழச் செல்லுங்கள்; (அலம் - துன்பம்); (உம் - ஏவல் பன்மை விகுதி);

சலந்தரற் செகுத்தவன் - சலந்தரனை அழித்தவன்; (செகுத்தல் - கொல்லுதல்); (இரண்டாம் வேற்றுமைத்தொகையில், உயர்திணையில் முதற்சொல்லின் ஈற்று னகர ஒற்று றகர ஒற்றாகத் திரியும்);

புரம் சுடச் சிரித்தவன் - முப்புரங்களை எரிக்கச் சிரித்தவன்;

மெலிந்த அப்பிறைக்கு அரும் பதம் தரத் தரித்தவன் - தேய்ந்து வாடிய அந்தப் பிறைச்சந்திரனுக்கு உயர்ந்த நிலையை அளிக்க அதனைத் திருமுடிமேல் சூடியவன்;

பொலிந்த பொற்சடைப் பரன் - விளங்குகின்ற பொன் போன்ற சடையை உடைய பரமன்;

புறம்பயத்து ஒருத்தனே - திருப்புறம்பயத்தில் எழுந்தருளிய ஒப்பற்றவன்;


4)

நகுந்தலைக் கலத்தயம் கொளுந்திருக் கரத்தினன்

மிகுந்திரைப் புனற்கிடம் தரும்புகர்ச் சடைப்பரன்

சகந்தனிற் றனைத்தினந் தொறும்துதித் தடைக்கலம்

புகுந்தவர்க் களிப்பவன் புறம்பயத் தொருத்தனே.


நகும் தலைக் கலத்து அயம் கொளும் திருக்கரத்தினன் - நகுகின்ற மண்டையோடு என்ற பாத்திரத்தில் பிச்சைகொள்ளும் கையை உடையவன்; (அயம் - ஐயம் - பிச்சை); (ஐயம் என்பது அயம் என்று போலியாக வந்தது); (இலக்கணப்போலி - இலக்கணம் உடையதுபோல் தொன்றுதொட்டு வழங்குஞ் சொல்); (திருத்தொண்டர் திருவந்தாதி - 11.33.86 - "கபாலங்கைக்கொண் டயந்தான் புகுமர னாரூர்ப் புனிதன்" - ஐயம், 'அயம்' எனப் போலியாயிற்று. ஐயம் - பிச்சை.);

மிகும் திரைப்-புனற்கு இடம் தரும் புகர்ச்-சடைப் பரன் - மிகுந்த அலைகளையுடைய கங்கைக்கு இடம் தருகின்ற செஞ்சடையை உடைய பரமன்; (திரை - அலை); (புகர் - Tawny colour, brown; cloud colour; கபிலநிறம்; சிவந்த நிறம்; (कपिल kapila - a. 1 Tawny, reddish));

சகந்தனில் - உலகில்;

அளித்தல் - அருள்செய்தல்; கொடுத்தல்;


5)

இகன்றவர்ச் செகுத்திடும் குகன்றனைக் கொடுத்தவன்

பகன்கணைப் பறித்தவன் புரங்களைத் தகித்தவன்

அகந்தனிற் கழற்பதம் பொருந்திடத் திருப்பெயர்

புகன்றவர்க் களிப்பவன் புறம்பயத் தொருத்தனே.


இகன்றவர்ச் செகுத்திடும் குகன்தனைக் கொடுத்தவன் - பகைவர்களை (அசுரர்களை) அழித்திடும் மகனான முருகனைக் கொடுத்தவன்; (இகன்றவர் - பகைவர்); (செகுத்தல் - அழித்தல்);

பகன் கணைப் பறித்தவன் - தக்கன் வேள்வியைத் தகர்த்தபொழுது பகன் என்ற சூரியனின் கண்ணைப் பறித்தவன்; (பகன் - பன்னிரு சூரியர்களுள் ஒருவன்); (திருவாசகம் - திருவுந்தியார் - 12

"உண்ணப் புகுந்த பகனொளித் தோடாமே கண்ணைப் பறித்தவா றுந்தீபற");

புரங்களைத் தகித்தவன் - முப்புரங்களை எரித்தவன்;

அகந்தனிற் கழற்பதம் பொருந்திடத் திருப்பெயர் புகன்றவர்க்கு அளிப்பவன் - மனத்தில் கழல் அணிந்த திருவடி பொருந்தத் திருநாமத்தை சொல்லும் அன்பர்களுக்கு அருள்பவன்;

புறம்பயத்து ஒருத்தனே - புறம்பயத்தில் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்றவன்;


6)

அரந்தையைத் துடைப்பவன் கரந்தனைக் குவித்திடின்

கரந்தையைத் தரிப்பவன் கவின்பொருப் பிருப்பவன்

இரந்திடத் தலைக்கலன் கரந்தனிற் பிடித்தவன்

புரிந்தபொற் சடைப்பரன் புறம்பயத் தொருத்தனே.


அரந்தையைத் துடைப்பவன் கரந்தனைக் குவித்திடின் - கைகளைக் குவித்து வணங்கினால் துன்பத்தை நீக்குபவன்; (அரந்தை - துன்பம்); (துடைத்தல் - அழித்தல்; நீக்குதல்);

கரந்தையைத் தரிப்பவன் - கரந்தைமலரை அணிபவன்;

கவின் பொருப்பு இருப்பவன் - அழகிய கயிலைமலையை இடமாக உடையவன்;

இரந்திடத் தலைக்கலன் கரந்தனிற் பிடித்தவன் - பிச்சையெடுக்கப் பிரமனது மண்டையோட்டைக் கையில் தாங்கியவன்;

புரிந்த பொற்சடைப் பரன் - முறுக்கிய பொற்சடையை உடைய பரமன்; (புரிதல் - To be twisted; to curl; முறுக்குக்கொள்ளுதல்);

புறம்பயத்து ஒருத்தனே - புறம்பயத்தில் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்றவன்;


7)

சினந்தனைத் தவிர்த்துளங் கனிந்தடித் தலத்தினை

நினைந்துநற் றமிழ்ச்சரம் பகர்ந்தவர்க் கிகத்தினில்

தனந்தனைக் கொடுப்பவன் குனிந்தஅப் பிறைக்கணி

புனைந்தபொற் சடைப்பரன் புறம்பயத் தொருத்தனே.


சினந்தனைத் தவிர்த்து உளம் கனிந்து அடித்தலத்தினை நினைந்து - கோபத்தை விலக்கி, மனம் கனிந்து திருவடியை எண்ணி; (சம்பந்தர் தேவாரம் - 3.78.10 - "அஞ்சுபுலன் வென்றறு வகைப்பொருள் தெரிந்தெழு விசைக்கிளவியால் வெஞ்சினம் ஒழித்தவர்கள் மேவிநிகழ் கின்றதிரு வேதிகுடியே");

நற்றமிழ்ச்சரம் பகர்ந்தவர்க்கு இகத்தினில் தனந்தனைக் கொடுப்பவன் - நல்ல தமிழ்ப்பாமாலைகளைப் பாடும் பக்தர்களுக்கு இம்மையில் செல்வத்தைக் கொடுத்து அருள்பவன்; (தமிழ்ச்சரம் - தமிழ்ப்பாமாலை); (இகம் - இம்மை); (தனம் - செல்வம்);

குனிந்த அப் பிறைக்கணி புனைந்த பொற்சடைப் பரன் - வளைந்த அந்தப் பிறைக்கண்ணியை அணிந்த செஞ்சடையை உடைய பரமன்; (குனிதல் - வளைதல்); (கணி - கண்ணி - இடைக்குறையாக வந்தது; கண்ணி - தலையில் அணியும் மாலைவகை); (அப்பர் தேவாரம் - 4.3.1 - "மாதர்ப் பிறைக்கண்ணியானை");

புறம்பயத்து ஒருத்தனே - புறம்பயத்தில் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்றவன்;


8)

மயங்கிவெற் பசைத்தவன் சிரங்கள்பத் தடர்த்தவன்

தயங்கிலைப் படைக்கரன் தடம்புனற் சடைச்சிவன்

அயங்கொளத் தலைக்கலன் கரந்தனிற் றரித்தவன்

புயங்களெட் டுடைப்பரன் புறம்பயத் தொருத்தனே.


மயங்கி வெற்பு அசைத்தவன் சிரங்கள் பத்து அடர்த்தவன் - அறியாமையால் (ஆணவத்தால்) கயிலைமலையைப் பெயர்க்க அசைத்தவனான இராவணனது பத்துத்தலைகளையும் நசுக்கியவன்;

தயங்கு இலைப்படைக் கரன் - ஒளிவீசும் மூவிலைச்சூலத்தை ஏந்தியவன்; (தயங்குதல் - ஒளிவிடுதல்);

தடம்-புனற் சடைச் சிவன் - பெரிய கங்கை நதி உலவும் சடையை உடைய சிவன்;

அயம் கொளத் தலைக்கலன் கரம்தனில் தரித்தவன் - பிச்சைகொள்வதற்காக மண்டையோட்டைக் கலனாகக் கையில் ஏந்தியவன்; (அயம் - ஐயம் என்பதன் போலி; ஐயம் - பிச்சை);

புயங்கள் எட்டு உடைப் பரன் - எண்தோள்கள் உடைய பரமன்;

புறம்பயத்து ஒருத்தனே - புறம்பயத்தில் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்றவன்;


9)

அகந்தையுற் றடித்தலம் சிரந்தனைக் கணுற்றிட

அகழ்ந்தவற் கிறக்கைகொண் டுயர்ந்தபுட் கொளித்தவன்

மகிழ்ந்துபொற் றொடிக்கிடம் பகிர்ந்தபொற் புடைத்தவன்

புகழ்ந்தவர்க் குளத்துளன் புறம்பயத் தொருத்தனே.


அகந்தையுற்று அடித்தலம் சிரம்தனைக் கணுற்றிட - ஆணவத்தால் அடியையும் முடியையும் காண முயன்ற; (கணுற்றிட - கண்ணுற்றிட கண்ணுறுதல் - பார்த்தல்; கிட்டுதல்);

அகழ்ந்தவற்கு இறக்கைகொண்டு உயர்ந்த புட்கு ஒளித்தவன் - (நிலத்தை) அகழ்ந்த திருமாலுக்கும் இறக்கைகொண்டு உயரப் பறந்த அன்னமான பிரமனுக்கும் தன் அடிமுடியைக் காண இயலாதவாறு ஒளித்தவன்; (புட்கு - புள்+கு - பறவைக்கு);

மகிழ்ந்து பொற்றொடிக்கு இடம் பகிர்ந்த பொற்புடைத் தவன் - விரும்பி உமைக்கு இடப்பக்கத்தைப் பகிர்ந்துகொண்ட தன்மையுடைய, தவவடிவினன்; (பொற்றொடி - பொன்+தொடி - பொன் தோள்வளை அணிந்தவள் - பெண்); (பொற்பு - தன்மை); (தவன் - தவவடிவினன்); (சுந்தரர் தேவாரம் - 7.48.1 - "நற்றவா உனை நான் மறக்கினுஞ் சொல்லும் நா நமச்சிவாயவே");

புகழ்ந்தவர்க்கு உளத்து உளன் - புகழ்ந்து வணங்கும் பக்தர்களுக்கு எளியவனாய் அவர்கள் உள்ளத்துள் உறைபவன்; (திருநாவுக்கரசர் தேவாரம் - 5.1.10 - "தில்லை அம்பலத்து ஆடி பாதம் என் நெஞ்சுள் இருக்கவே")

புறம்பயத்து ஒருத்தனே - புறம்பயத்தில் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்றவன்;


10)

இழிந்தசொற் களைச்சொலும் பெரும்புரட் டருக்கிலன்

தொழும்பருக் கருத்தியன் சுகங்களைக் கொடுப்பவன்

அழுஞ்சுரர்ப் புரப்பவன் களந்தனிற் கறுத்தவன்

பொழிந்தஅப் படைத்தவன் புறம்பயத் தொருத்தனே.


இழிந்த சொற்களைச் சொலும் பெரும் புரட்டருக்கு இலன் - தகாத வார்த்தைகளைப் பேசுகின்ற பெரிய வஞ்சகர்களுக்கு அருள் இல்லாதவன்; (புரட்டர் - மாறாட்டக்காரன்; புரட்டு - வஞ்சகம்);

தொழும்பருக்கு அருத்தியன் - அடியவர்களுக்கு அன்பு உடையவன்; (தொழும்பர் - அடியவர்கள்); (அருத்தி - அன்பு; விருப்பம்);

சுகங்களைக் கொடுப்பவன் - அடியவர்களுக்கு இன்பத்தை அளிக்கின்றவன் - சங்கரன்; சம்பு;

அழும் சுரர்ப் புரப்பவன் - அழுது தொழுத தேவர்களைக் காத்தவன்; (புரத்தல் - காத்தல்); (சுரர்ப் புரப்பவன் - சுரரைப் புரப்பவன் - இரண்டாம் வேற்றுமைத்தொகையில் உயர்திணையில் வலி மிகும்);

களந்தனிற் கறுத்தவன் - நீலகண்டன்; (களம் - கண்டம்);

பொழிந்த அப்பு அடைத்தவன் - வானிலிருந்து பொழிந்த கங்கையைச் சடையில் அடைத்தவன்; (அப்பு - நீர்);

புறம்பயத்து ஒருத்தனே - புறம்பயத்தில் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்றவன்;


11)

அலங்கலைத் தரித்தவன் சலஞ்சடைத் தடுத்தவன்

மலங்கெடத் துதித்திடும் பெருந்தவத் தினர்க்குளம்

கலங்கிடத் துரத்திடும் சமன்தனைச் செகுத்தவன்

புலன்களைக் கடப்பவன் புறம்பயத் தொருத்தனே.


அலங்கலைத் தரித்தவன் சலம் சடைத் தடுத்தவன் - மலர்மாலைகளை அணிந்தவன், கங்கையைச் சடையினுள் தேக்கியவன்; (அலங்கல் - மாலை); (சலம் - நீர் - கங்கை);

மலம் கெடத் துதித்திடும் பெரும் தவத்தினர்க்கு உளம் கலங்கிடத் துரத்திடும் சமன்தனைச் செகுத்தவன் - மும்மலமும் அறவேண்டி வழிபடும் பெரிய தவத்தினரான மார்க்கண்டேயர்க்கு உள்ளம் கலங்கும்படி அவரைக் கொல்வதற்குத் துரத்திய எமனை உதைத்து அழித்தவன்; (துரத்துதல் - பிடிக்கப் பின்தொடர்தல்); (சமன் - எமன்); (செகுத்தல் - கொல்லுதல்);

புலன்களைக் கடப்பவன் - புலன்களுக்கு அப்பாற்பட்டவன்; புலன்களை வென்றவன் என்றும் பொருள்கொள்ளல் ஆம்; (கடத்தல் - transcend; மேற்படுதல்); (அப்பர் தேவாரம் - 6.95.3 - "காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக்காலே"); (அப்பர் தேவாரம் - 6.50.3 - "நேரிழையைக் கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் வென்றானை");


வி. சுப்பிரமணியன்

-------------- --------------


2 comments:

  1. இனிய, ஆயின் கடினமான வண்ணச் சந்தக் குழிப்பில் பீடு நடையோடு அமைந்த பாடல் மிக நன்று.

    ReplyDelete