Wednesday, December 28, 2022

07.02 – மீயச்சூர்

07.02 – மீயச்சூர்

2015-09-05

மீயச்சூர்

--------------------------------

(கலிவிருத்தம் - விளம் விளம் மா கூவிளம் - "தானன தானன தான தானன" என்ற சந்தம்)

(சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்")

(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன் சோதி வானவன்")


1)

எரியன நிறமுடை எந்தை வெங்கரி

உரிதனைப் போர்த்தவன் உரகத் தாரினன்

விரிபொழில் சூழ்தரு மீயச் சூரரன்

பரிவினர் தம்வினை பாற்றும் ஈசனே.


எரி அன நிறமுடை எந்தை - தீப்போன்ற செம்மேனியுடைய எம் தந்தை;

வெங்கரி உரிதனைப் போர்த்தவன் - கொடிய யானையின் தோலைப் போர்த்தவன்;

உரகத் தாரினன் - பாம்பை மாலையாக அணிந்தவன்; (உரகம் - பாம்பு); (தார் - மாலை);

விரிபொழில் சூழ்தரு மீயச்சூர் அரன் - விரிந்த சோலைகள் சூழ்ந்த மீயச்சூரில் உறையும் ஹரன்; (தருதல் - ஒரு துணைவினை);

பரிவினர் தம்வினை பாற்றும் ஈசனே - பக்தர்களுடைய வினைகளை நீக்கும் ஈசன்; (பரிவு - அன்பு; பக்தி); (பாற்றுதல் - நீக்குதல்; அழித்தல்);


2)

அரையினிற் கச்சென அரவம் ஆர்த்தவன்

வரையினை வில்லென வளைக்க வல்லவன்

விரைகமழ் பொழிலணி மீயச் சூரரன்

கரைமனத் தன்பரைக் காக்கும் ஈசனே.


அரையினில் கச்சு என அரவம் ஆர்த்தவன் - பாம்பை அரைநாணாகக் கட்டியவன்; ((ஆர்த்தல் - கட்டுதல்);

வரையினை வில் என வளைக்க வல்லவன் - மேருமலையை வில்லாக வளைத்தவன்; (வரை - மலை)

விரை கமழ் பொழில் அணி மீயச்சூர் அரன் - மணம் கமழும் சோலைகள் சூழ்ந்த மீயச்சூரில் உறையும் ஹரன்; (விரை - வாசனை);

கரை-மனத்து அன்பரைக் காக்கும் ஈசனே - உருகும் மனம் உடைய பக்தர்களைக் காக்கும் ஈசன்;


3)

தண்ணில வைச்சடைத் தாங்கு சங்கரன்

பெண்ணொரு பங்கினன் பெற்றம் ஊர்ந்தவன்

விண்ணுயர் பொழிலணி மீயச் சூரரன்

நண்ணிய வர்க்கருள் நல்கும் ஈசனே.


தண்-நிலவைச் சடைத் தாங்கு சங்கரன் - குளிர்ந்த சந்திரனைச் சடையில் தாங்கிய சங்கரன்;

பெண்ரு பங்கினன் - உமைபங்கன்;

பெற்றம் ஊர்ந்தவன் - இடப வாகனன்; (பெற்றம் - இடபம்);

விண்யர் பொழில் அணி மீயச்சூர் அரன் - வானோங்கு சோலை சூழ்ந்த மீயச்சூரில் உறையும் ஹரன்;

நண்ணியவர்க்கு அருள் நல்கும் ஈசனே - அடைந்தவர்க்கு அருள்புரியும் ஈசன்;


4)

கடலுமிழ் நஞ்சினைக் கண்டம் இட்டவன்

உடலினில் ஒருபுறம் உமைக்குத் தந்தவன்

விடைதிகழ் கொடியினன் மீயச் சூரரன்

தொடைபுனை வார்வினை துடைக்கும் ஈசனே.


தொடை புனைவார் வினை துடைக்கும் ஈசன் - பாமாலைகள் / பூமாலைகள் புனையும் பக்தர்களுடைய வினைகளை நீக்கும் ஈசன்; (தொடை - பூமாலை; பாட்டு); (துடைத்தல் - நீக்குதல்; அழித்தல்);


5)

மாதவர் வைகலும் வாழ்த்தும் வானவன்

போதர வம்புனை பொற்ச டைப்பரன்

வேதம தோதிய மீயச் சூரரன்

பாதம டைந்தவர் பாவம் தீர்ப்பனே.


மாதவர் வைகலும் வாழ்த்தும் வானவன் - பெரும் தவசிகள் தினந்தோறும் போற்றி வணங்கும் இறைவன்; (வைகலும் - நாள்தோறும்); (வானவன் - அழியாத வீட்டுலகினன்). (அப்பர் தேவாரம் - 4.11.1 - “சொற்றுணை வேதியன் சோதி வானவன்”);

போது அரவம் புனை பொற்சடைப் பரன் - பூக்களையும் பாம்பையும் பொன்போன்ற சடையில் அணியும் பரமன்;

வேதமது ஓதிய மீயச்சூர் அரன் - வேதத்தைப் பாடியருளிய மீயச்சூர் ஹரன்; (வேதமது - "அது" பகுதிப்பொருள்விகுதி);

பாதம் அடைந்தவர் பாவம் தீர்ப்பனே - தன் திருவடியைச் சரண்டைந்தவர்களது பாவத்தைத் தீர்ப்பான்;


6)

மேகமு லாம்பொழில் மீயச் சூரரன்

பாகன மொழியுமை பங்கன் சந்திர

சேகரன் சேவடி சிந்தை செய்தவர்

சோகம கற்றிடும் துணைவ னல்லனே.


மேகம் உலாம் பொழில் மீயச்சூர் அரன் - மேகம் உலவும் சோலை சூழ்ந்த திருமீயச்சூரில் உறையும் ஹரன்; (சம்பந்தர் தேவாரம் - 2.91.11 - "மையு லாம்பொழில் சூழ்ந்த மாமறைக் காடமர்ந் தாரைக்");

பாகு அன மொழி உமை பங்கன் - பாகு போன்ற இனிய மொழி பேசும் உமையை ஒரு பங்கு உடையவன்;

சந்திரசேகரன் - பிறைசூடி;

சேவடி சிந்தை செய்தவர் சோகம் அகற்றிடும் துணைவன் நல்லனே - சிவந்த திருவடியைத் தியானிக்கும் பக்தர்களுடைய சோகத்தை நீக்கும் துணைவன், நல்லவன்; (துணைவனல்லனே = துணைவன் நல்லனே / துணைவன் அல்லனே); (அல்லனே - அல்லனோ);


7)

வெள்ளெரு தேறிறை மீயச் சூரரன்

வெள்ளம ராப்புனை மின்னற் சடையினன்

நள்ளிருள் ஆடிடும் நாதன் சேவடி

உள்ளிடு வார்வினை ஒழியும் ஒல்லையே.


வெள்ளெருது ஏறு இறை - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடைய இறைவன்;

வெள்ளம் அராப் புனை மின்னற் சடையினன் - கங்கையையும் பாம்பையும் அணிந்த, மின்னல் போன்ற சடையை உடையவன்;

நள்ளிருள் ஆடிடும் நாதன் - ஊழிக்காலத்தில் ஆடுகின்ற கூத்தன்;

சேவடி உள்ளிடுவார் வினை ஒழியும் ஒல்லையே - அவன் திருவடியைத் தியானிக்கும் பக்தர்களுடைய வினையெல்லாம் விரைவில் ஒழியும்; (உள்ளுதல் - எண்ணுதல்); (உள் இடுதல் - மனத்தில் வைத்தல்); (ஒல்லை - சீக்கிரம்; விரைவில்); (அப்பர் தேவாரம் - 5.1.9 - “கைதொழுவார் வினை ஒல்லை வட்டங் கடந்தோடுதல் உண்மையே”);


8)

மாலியல் மனத்தொடு மலையைப் பேர்த்தவன்

ஓலிட ஊன்றிய ஒருவன் மூவிலை

வேலினன் விரிபொழில் மீயச் சூரரன்

பாலன நீற்றினன் பத்தர்க் கன்பனே


மால் இயல் மனத்தொடு மலையைப் பேர்த்தவன் - அறியாமை தங்கிய மனத்தோடு கயிலைமலையை பெயர்த்த இராவணன்; (மால் - அறியாமை; மயக்கம்); (இயல்தல் - தங்குதல்; பொருந்துதல்);

ஓலிட ஊன்றிய ஒருவன் - கத்தி அழும்படி பாதவிரலை ஊன்றி அவனை நசுக்கிய பெருமான்; (ஓலிடுதல் - சத்தமிடுதல்);

மூவிலை வேலினன் - திரிசூலத்தை ஏந்தியவன்;

விரிபொழில் மீயச்சூர் அரன் - பரந்த சோலைகள் சூழ்ந்த திருமீயச்சூரில் உறைகின்ற ஹரன்;

பால் அன நீற்றினன் - பால் போன்ற வெண்ணீறு பூசியவன்;

பத்தர்க்கு அன்பனே - பக்தர்களுக்கு அன்பு உடையவன்; (- ஈற்றசை);


9)

மாணியின் உருவினில் மண்ணி ரந்தவன்

வாணியின் நாயகன் வணங்கும் சோதியன்

வேணியன் விரிபொழில் மீயச் சூரரன்

பேணிய வர்க்கொரு தோணி ஆவனே.


மாணியின் உருவினில் மண் இரந்தவன் வாணியின் நாயகன் வணங்கும் சோதியன் - வாமனன் வடிவில் வந்து மாபலியிடம் மூவடி நிலம் யாசித்த திருமால், சரசுவதியின் கணவனான பிரமன் இவர்கள் இருவரும் வணங்கும்படி நின்ற ஒளிவடிவினவன்;

வேணியன் - சடையினன்;

மீயச்சூர் அரன் பேணியவர்க்கு ஒரு தோணி ஆவனே - திருமீயச்சூரில் உறையும் பெருமான், தன்னைப் போற்றும் அடியவர்களுக்குப் பிறவிக்கடலைக் கடப்பிக்கும் ஒப்பற்ற படகு ஆவான்; (தோணி - ஓடம்; கப்பல்);


10)

நித்தலும் பொய்யுரை நீசர் புன்னெறி

கத்திடு வார்அவை கருதி டேன்மினீர்

வித்தகன் விரிபொழில் மீயச் சூரரன்

நித்தியன் தாள்தொழும் நேயர்க் கின்பமே.


நித்தலும் பொய்ரை நீசர் புன்னெறி கத்திடுவார் - ஓயாமல் பொய்களே சொல்லும் கீழோர்கள் சிறுநெறிகளைக் கத்துவார்கள்; (நித்தலும் - தினமும்); (நீசர் - கீழோர்); (புன்னெறி - சிறுநெறிகள்; இழிந்த மார்க்கங்கள்);

அவை கருதிடேன்மின் நீர் - அவற்றை நீங்கள் கருதவேண்டா; (கருதிடேன்மினீர் - கருதிடேல்+மின்+நீர்); (ஏல் - எதிர்மறை ஏவல் ஒருமை விகுதி); (மின் - முன்னிலை ஏவல் பன்மை விகுதி);

வித்தகன் - பேரறிவாளன்; வல்லவன்;

விரி-பொழில் மீயச்சூர் அரன் - பரந்த சோலைகள் சூழ்ந்த திருமீயச்சூரில் உறைகின்ற ஹரன்;

நித்தியன் தாள் தொழும் நேயர்க்கு இன்பமே - அழிவற்ற அப்பெருமானது திருவடியை வணங்கும் அன்பர்களுக்கு என்றும் இன்பமே; (நித்தியன் - அழிவற்றவன்); (நேயர் - அன்பர்; பக்தர்);


11)

படமணி பாம்புகள் படரும் மேனியில்

இடமணி மலைமகள் இருக்கும் எம்பிரான்

விடமணி மிடறினன் மீயச் சூரரன்

வடமணி மார்பனை வாழ்த்தி வாழ்மினே.


படம் அணி பாம்புகள் படரும் மேனியில் - படத்தை உடைய நாகப்பாம்புகள் படர்கின்ற திருமேனியில்;

இடம் அணி மலைமகள் இருக்கும் எம்பிரான் - இடப்பக்கம் ஒரு பாகமாக அழகிய உமை இருக்கும் எம்பெருமான்;

விட மணி மிடறினன் - கண்டத்தில் ஆலகால விஷத்தை நீலமணியாக உடையவன்; ("விடம் அணி மிடறினன்" என்றும் பிரித்துப் பொருள்கொள்ளலாம்);

மீயச்சூர் அரன் - திருமீயச்சூரில் உறைகின்ற ஹரன்;

வடம் அணி மார்பனை வாழ்த்தி வாழ்மினே - மாலை அணிந்த மார்பு உடையவனை வாழ்த்தி இன்பவாழ்வு வாழுங்கள்; (வடம் - மாலை; சரம்); (சம்பந்தர் தேவாரம் - 3.121.5 - "பொன்னினார் கொன்றை இருவடம் கிடந்து பொறிகிளர் பூணநூல் புரள");


பிற்குறிப்பு :

1) யாப்புக் குறிப்பு:

  • கலிவிருத்தம் - விளம் விளம் மா கூவிளம் - "தானன தானன தான தானன" என்ற சந்தம்;

  • முதல் இரு சீர்களில் தானன என்பது தனதன என்றும் வரலாம்;

  • மூன்றாம் சீரில் தான என்பது தனன என்றும் வரலாம்.

  • மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வாரா;

  • (சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்")

  • (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.11.1 -

சொற்றுணை வேதியன் சோதி வானவன்

பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்

கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்

நற்றுணை யாவது நமச்சி வாயவே.)


வி. சுப்பிரமணியன்

-------------- --------------


No comments:

Post a Comment