Thursday, December 22, 2022

06.04.032 – திருஞான சம்பந்தர் துதி - நலமில்லாப் பரசமய

06.04.032 – திருஞான சம்பந்தர் துதி - நலமில்லாப் பரசமய

2015-05-15

06.04.032 - திருஞான சம்பந்தர் துதி - சம்பந்தர் குருபூஜை - வைகாசி மூலம் - 2015

----------------------------------

(3 பாடல்கள்)


1) ------ நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா -----

நலமில்லாப் பரசமய நாணிலிகள் அகன்றொழிய

அலகில்லா ஆடலுடை அப்பனவன் அருளாலே

மலைமங்கை தருமுலைப்பால் மகிழ்ந்துண்டு தமிழ்பாட

உலகுய்யத் தாமழுதார் உபயமலர்த் தாள்போற்றி.


நலம் இல்லாப் பரசமய நாணிலிகள் அகன்றொழிய - நன்மையில்லாத வேற்றுச்சமய நாணம் அற்றவர்கள் நீங்கும்படி;

அலகு இல்லா ஆடலுடை அப்பனவன் அருளாலே - அளவு கடந்த திருநடம் உடைய அப்பனான சிவன் அருளால்; (அலகு - அளவு);

மலைமங்கை தரு முலைப்பால் மகிழ்ந்துண்டு தமிழ் பாட உலகுய்யத் தாம் அழுதார் உபய-மலர்த்தாள் போற்றி - உமை தந்த திருமுலைப்பாலை இன்புற்று உண்டு தமிழ்ப் பாமாலைகளைப் பாடவும், உலகம் உய்யவும், அழுதவரான திருஞானசம்பந்தரது இரு மலர்ப்பாதங்களுக்கு வணக்கம்; (உபயம் - இரண்டு);


2) ------ அறுசீர் விருத்தம் - "மா மா காய்" - அரையடி வாய்பாடு -----

மலரும் நிலவும் செஞ்சடைமேல் .. மகிழ்ந்த ஈசன் தளிநோக்கிப்

புலரும் பொழுதில் மருகலிலே .. புலம்பி நின்றாள் தனக்கிரங்கித்

தலைவ தகுமோ இவ்வடியாள் .. தன்னுள் வருத்தம் எனப்பாடிக்

கலியைத் தீர்த்து வாழ்வித்த .. காழி யூரர் கழல்போற்றி.


* திருமருகலில் விடியற்காலையில் வணிகன் மகள் ஒருத்தி, தன்னை மணக்க இருந்தவன் இரவில் மடத்தில் துயிலும்போது பாம்பு கடித்து இறக்க, ஈசனை விளித்துக் கோயிலைப் பார்த்து அழுது புலம்பிக்கொண்டிருந்தாள். அப்போது அவ்வழியே கோயிலுக்குச் சென்ற புகலிவேந்தர் அவள் வரலாறு உணர்ந்து, அவன் விடம் தீர்ந்து எழுந்து நிற்கச்செய்தற்பொருட்டு அருளியது "சடையாய் எனுமால்" என்ற திருப்பதிகம்.


தளி - கோயில்;

"தலைவ தகுமோ இவ்வடியாள்தன் உள் வருத்தம்" எனப் பாடி - "தலைவனே, இந்த அடியவளுடைய மனவருத்தம் உனக்குத் தகுமோ" என்று பதிகம் பாடி;

கலியைத் தீர்த்து வாழ்வித்த - அவளது துன்பத்தைத் தீர்த்து அவளுக்கு வாழ்வு அளித்த; (வாழ்வித்தல் - வாழச்செய்தல்);

காழியூரர் கழல் போற்றி - சீகாழியில் அவதரித்த திருஞான சம்பந்தரது திருவடிகளுக்கு வணக்கம்;

(சம்பந்தர் தேவாரம் - 2.18.1

சடையா யெனுமால் சரண்நீ யெனுமால்

விடையா யெனுமால்வெருவா விழுமால்

மடையார் குவளை மலரும் மருகல்

உடையாய் தகுமோ இவள்உண் மெலிவே.)


3) --- திருவிருக்குக்குறள் அமைப்பு --- (வஞ்சித்துறை) ---

ஊனம் தீர்த்தின்ப

வானம் தான்நல்கும்

ஞான சம்பந்தன்

மானத் தாள்போற்றி.


ஊனம் - குறைவு; குற்றம்;

மானத்தாள் - பெருமை பொருந்திய திருவடி; (மானம் - பெருமை - eminence);

(கம்பராமாயணம் - "பொன்மா மௌலி புனைந்து, பொய்யிலான்தன் மானக்கழல் தாழும் வேலையில்" -- சுக்கிரீவன் பொன்னாலான சிறந்த மணிமுடியைத் தரித்துக்கொண்டு, பொய்ம்மொழி பேசாதவனான இராமனின் பெருமை பொருந்திய திருவடிகளில் வீழ்ந்து வணங்கிய பொழுது);


11.34.42 - ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி

பெறுவது நிச்சயம், அஞ்சல்நெஞ் சே,பிர மாபுரத்து

மறுவறு பொற்கழல் ஞானசம் பந்தனை வாழ்த்துதலால்,

வெறியுறு கொன்றை மறியுறு செங்கை விடையெடுத்த

பொறியுறு பொற்கொடி யெம்பெரு மானவர் பொன்னுலகே.

('ஞான சம்பந்தரை வாழ்த்தினாலே சிவலோகத்தை அடைதல் நிச்சயம்' என்பது கருத்து)


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment