Wednesday, December 28, 2022

07.01 – மருகல்

07.01 – மருகல்

2015-09-04

மருகல்

------------------

(வஞ்சித்துறை - "தான தானன" என்ற சந்தம். திருவிருக்குக்குறள் அமைப்பு)

தான என்பது தனன என்றும் வரலாம்.

தானன என்பது தனதன என்றும் வரலாம்).

(சம்பந்தர் தேவாரம் - 1.92.1 - "வாசி தீரவே")


1)

கன்னி ஒருபுடை

மன்னும் வடிவுடை

மன்னன் மருகலை

உன்னி உய்யுமே.


உமை ஒரு பக்கம் திகழும் கோலம் உடைய தலைவன் உறையும் திருமருகலை எண்ணி உய்யுங்கள்; (கன்னி - உமை); (அப்பர் தேவாரம் - 4.42.3 - “கன்னியை யொருபால் வைத்து”); (புடை - பக்கம்; பகுதி); (மன்னுதல் - நிலைத்தல்); (உன்ணுதல் - எண்ணுதல்);


2)

வெள்ளச் சடையினன்

வெள்ளை விடையினன்

வள்ளல் மருகலை

உள்ளல் நன்மையே.


கங்கையைச் சடையில் உடையவன்; வெண்ணிற எருதை வாகனமாக உடையவன்; பக்தர்கள் நினைத்த வரங்களை எல்லாம் கொடுத்து அருள்கின்ற வள்ளலான சிவபெருமான் உறையும் திருமருகலை எண்ணுதல் நன்மையே; (வெள்ளம் - நீர் - கங்கை); (உள்ளல் - உள்ளுதல் - எண்ணுதல்); (அப்பர் தேவாரம் - 5.71.5 - "விசயமங்கைப் பிரான் உள்ளல் நோக்கியென் உள்ளுள் உறையுமே");


3)

சந்த ஞானசம்

பந்தன் பரவிய

மைந்தன் மருகலைச்

சிந்தை செய்ம்மினே.


சந்தத் தமிழ் பாடிய திருஞானசம்பந்தர் போற்றி வணங்கிய ஈசன் உறையும் திருமருகலைத் தியானியுங்கள்; (மைந்தன் - இளைஞன்; வீரன்; வலிமையுடையவன்); (சிந்தை செய்ம்மின் - எண்ணுங்கள்);


4)

புதியன் பொற்சடை

நதியன் நளிர்தரு

மதியன் மருகலைத்

துதிமின் நன்மையே.


புதியன் - நவன்;

பொற்சடை நதியன் - பொன் போன்ற சடையில் கங்கையை உடையவன்;

நளிர்தரு மதியன் - குளிர்ந்த சந்திரனை அணிந்தவன்; (நளிர்தல் - குளிர்தல்); (தருதல் - ஒரு துணைவினை);

மருகலைத் துதிமின் நன்மையே - அப்பெருமான் உறையும் திருமருகலைத் துதியுங்கள்; நன்மை வந்தடையும்; (துதிமின் - துதியுங்கள்; மின் - முன்னிலை ஏவல் பன்மை விகுதி);


5)

அஞ்சி அமரர்கள்

கெஞ்ச நஞ்சையுண்

மஞ்சன் மருகலை

நெஞ்சில் நினைமினே.


அஞ்சி அமரர்கள் கெஞ்ச, நஞ்சை உண் மஞ்சன் - அஞ்சிய தேவர்கள் தங்களைக் காக்கவேண்டி இறைஞ்ச, அவர்களுக்கு இரங்கி ஆலகாலத்தை உண்ட வீரன்; (மஞ்சன் - மைந்தன் என்பதன் போலி); (மைந்தன் - இளைஞன்; வீரன்; வலிமையுடையவன்);

மருகலை நெஞ்சில் நினைமினே - அப்பெருமான் உறையும் திருமருகலை மனத்தில் நினையுங்கள்;


6)

அணியன் முடிமிசைப்

பணியன் மிடறினில்

மணியன் மருகலைப்

பணிய வம்மினே.


அணியன் - அடியார்க்கு அருகில் உள்ளவன்;

முடிமிசைப் பணியன் - திருமுடிமேல் பாம்பை அணிந்தவன்; (பணி - நாகப்பாம்பு);

மிடறினில் மணியன் - கண்டத்தில் நீலமணி உடையவன்;

மருகலைப் பணிய வம்மினே - அப்பெருமான் உறையும் திருமருகலை வணங்க வாருங்கள்; (வம்மின் - வாருங்கள்);


7)

உருவும் அருவுமாம்

ஒருவன் உமையொடு

மருவு மருகலை

உருகிப் பரவுமே.


உருவும் அருவும் ஆம் ஒருவன் - அருவமாகவும் உருவமாகவும் இருக்கும் ஒப்பற்றவன்; (ஒருவன் - ஒப்பற்றவன்);

உமையொடு மருவு மருகலை உருகிப் பரவுமே - அப்பெருமான் உமையோடு எழுந்தருளிய திருமருகலைத் துதியுங்கள்; (பரவுதல் - துதித்தல்; பாடுதல்);


8)

பத்து முடியனைக்

கத்த ஊன்றிய

அத்தன் மருகலைப்

பத்தி செய்ம்மினே


பத்து முடியனைக் கத்த ஊன்றிய - பத்துத்தலை இராவணனைக் கத்தும்படி திருப்பாத விரலை ஊன்றி அவனை நசுக்கிய;

அத்தன் மருகலைப் பத்தி செய்ம்மினே - நம் தந்தை சிவன் உறையும் திருமருகலைப் பக்தி செய்யுங்கள்; (அத்தன் - தந்தை); (பத்தி - பக்தி);


9)

நேடி அயனரி

வாடி வாழ்த்தெரி

ஆடி மருகலை

நாடி வாழ்மினே.


நேடி அயன் அரி வாடி வாழ்த்து எரி - பிரமனும் திருமாலும் அடிமுடி தேடி வாடி வணங்கிய சோதி;

எரி ஆடி - தீயாடி - தீயின்கண் ஆடுபவன் - நெருப்பிடையே கூத்து நிகழ்த்துபவன் - சிவபெருமான்;

மருகலை நாடி வாழ்மினே - அப்பெருமான் உறையும் திருமருகலை விரும்பி அடைந்து வாழுங்கள்; (நாடுதல் - விரும்புதல்; நினைதல்; கிட்டுதல்);

இலக்கணக்குறிப்பு : இப்பாடலில் "எரி" என்ற சொல் இடைநிலைத்தீவகமாக இருபுறமும் பொருந்திப் பொருள்தருமாறு அமைந்தது;


10)

மாசு நெஞ்சுடை

நீசர் சொல்விடும்

ஈசன் மருகலான்

நேசர்க் கின்பமே.


மாசு நெஞ்சு-உடை நீசர் சொல் விடும் - மனத்தில் அழுக்கு (/ குற்றம்) நிரம்பிய கீழோர்கள் சொல்லும் சொற்களை நீங்குங்கள்; அவர்கள் பேச்சை மதியாதீர்கள்; (நீசர் - கீழோர்);

ஈசன் மருகலான் நேசர்க்கு இன்பமே - திருமருகலில் உறையும் ஈசனது பக்தர்களுக்கு என்றும் இன்பமே; (நேசர் - அன்பர்);


11)

சுண்ண நீறணி

அண்ணல் அழலன

வண்ணன் மருகலை

நண்ணி உய்யுமே.


சுண்ண நீறு அணி அண்ணல் - கலவைச் சந்தனம்போலத் திருநீற்றை அணியும் பெருமான்;

அழல் அன வண்ணன் - தீப்போன்ற செம்மேனியன்;

மருகலை நண்ணி உய்யுமே - அப்பெருமான் உறையும் திருமருகலை அடைந்து உய்யுங்கள்;


பிற்குறிப்பு:

யாப்புக் குறிப்பு - வஞ்சித்துறை - "தான தானன" என்ற சந்தம். திருவிருக்குக்குறள் அமைப்பு.

தான என்பது தனன என்றும் வரலாம்.

தானன என்பது தனதன என்றும் வரலாம்.

(சம்பந்தர் தேவாரம் - 1.92.1 - "வாசி தீரவே காசு நல்குவீர் மாசின் மிழலையீர் ஏச லில்லையே")


வி. சுப்பிரமணியன்

-------------- --------------


No comments:

Post a Comment