Tuesday, October 23, 2018

04.57 - முதுகுன்றம் (விருத்தாசலம்) - சந்திரன் ஏறிய

04.57 - முதுகுன்றம் (விருத்தாசலம்) - சந்திரன் ஏறிய

2014-03-29

முதுகுன்றம் (திருமுதுகுன்றம் - விருத்தாசலம்)

----------------------------------

(12 பாடல்கள்)

(சந்தக் கலிவிருத்தம் - தானன தானன தானன தானா)

(லிங்காஷ்டகம் - "ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்")


முற்குறிப்பு - படிப்போர் வசதி கருதிச் சில இடங்களில் புணர்ச்சி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது.

1)

சந்திர னேறிய தாழ்சடை அண்ணல்

வந்தனை செய்தடை வானவ ருக்கா

முந்தடை யார்புர மூன்றையு மெய்த

மைந்தன வன்பதி மாமுது குன்றே.


சந்திரன் ஏறிய தாழ்சடை அண்ணல் - தாழும் சடையில் சந்திரனைச் சூடிய பெருமான்;

வந்தனை செய்து அடை வானவருக்கா - வணங்கிச் சரண்புகுந்த தேவர்களுக்காக; (வானவருக்கா - வானவர்களுக்காக; கடைக்குறை விகாரம்);

முந்து அடையார் புரம் மூன்றையும் எய்த - முன்பு பகைவர்களான அசுரர்களது முப்புரங்கள் எய்து அழித்த; (அடையார் - பகைவர்);

மைந்தன் அவன் பதி மா முதுகுன்றே - வீரன் அவன் உறையும் தலம் அழகிய திருமுதுகுன்றம்; (மைந்தன் - வீரன்); (பதி - தலம்);


2)

தேன்மல ரால்தொழு சீலர கத்தன்

கூன்மதி கூவிளம் ஆறணி கூத்தன்

ஆன்மிசை யான்அர வார்த்தவன் அங்கை

மான்மறி யன்பதி மாமுது குன்றே.


தேன்மலரால் தொழு சீலர் அகத்தன் - தேன்மலர்களால் வழிபாடு செய்யும் சீலர்கள் உள்ளத்தில் உறைபவன்;

கூன்-மதி, கூவிளம், று அணி கூத்தன் - வளைந்த திங்கள், வில்வம், கங்கை இவற்றை அணிந்த கூத்தன்;

ஆன்மிசையான் அரவு ஆர்த்தவன் - இடபவாகனன், பாம்பை அரைநாணாகக் கட்டியவன்; (சம்பந்தர் தேவாரம் - 2.80.5 - "வெள்ளையெருத்தின் மிசையார்"); (ஆர்த்தல் - கட்டுதல்; பிணித்தல்);

அங்கை மான்மறியன் பதி மா முதுகுன்றே - கையில் மான்கன்றை ஏந்தியவன் உறையும் தலம் அழகிய திருமுதுகுன்றம்;


3)

ஊன்படை வேடன தோர்கணு கந்தான்

மான்பர சார்கர னூலணி மார்பன்

கூன்பிறை கோளர வம்புனை கூத்தன்

வான்பணி கோன்பதி மாமுது குன்றே.


பதம் பிரித்து:

ஊன் படை வேடனது ஓர் கண் உகந்தான்;

மான் பரசு ஆர் கரன்; நூல் அணி மார்பன்;

கூன்-பிறை, கோள்-அரவம் புனை கூத்தன்;

வான் பணி கோன் பதி மா முதுகுன்றே.


ஊன் படை வேடனது ஓர் கண் உகந்தான் - கண்ணப்பருக்கு அருள்புரிந்ததைச் சுட்டியது;

மான் பரசு ஆர் கரன் - மானையும் மழுவையும் கையில் ஏந்தியவன்; ("மான் - பெரியோன்" என்று கொண்டும் பொருள் கொள்ளல் ஆம்); (பரசு - மழு); (ஆர்தல் - பொருந்துதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.127.1 - "பிரம புரத்துறை பெம்மா னெம்மான்"); (சுந்தரர் தேவாரம் - 7.25.8 - "பரசாருங் கரவா பதினெண் கணமுஞ்சூழ")

கூன் பிறை, கோள் அரவம் புனை கூத்தன் - வளைந்த பிறையையும் கொடிய பாம்பையும் அணிந்த கூத்தன்;

வான் பணி கோன் - தேவர்கள் போற்றும் தலைவன்;


4)

மும்மத வெங்கரி முன்னுரி செய்தான்

அம்மதி சூடிய செஞ்சடை அண்ணல்

விம்மிய வானவர் உய்ந்திட நஞ்சுண்

மைம்மிட றன்பதி மாமுது குன்றே.


மும்மத வெங்கரி முன் உரி செய்தான் - மும்மதங்களையுடைய கொடிய யானையின் தோலை முன்பு உரித்தவன்;

அம்மதி - அம் மதி - அழகிய திங்கள்;

விம்முதல் - தேம்பி அழுதல்; வருந்துதல்;

நஞ்சு உண் மைம் மிடறன் - விடத்தை உண்ட நீலகண்டன்;


5)

பன்னிய வன்மறை பால்மதி பாம்பு

துன்னிய சென்னியன் நீறணி தூயன்

உன்னிய வர்க்கருள் உத்தமன் என்றும்

மன்னிய வன்பதி மாமுது குன்றே.


பன்னியவன் மறை - வேதங்களைப் பாடியவன்; (பன்னுதல் - பாடுதல்);

பால்மதி பாம்பு துன்னிய சென்னியன் - பால் போன்ற வெண்திங்களும் பாம்பும் நெருங்கித் திகழ்கின்ற முடி உடையவன்; (துன்னுதல் - பொருந்துதல்; செறிதல்);

நீறு அணி தூயன் - திருநீற்றைப் பூசிய பரிசுத்தன்;

உன்னியவர்க்கு அருள் உத்தமன் - தன்னை எண்ணிப் போற்றும் அன்பர்களுக்கு அருள்புரியும் உத்தமன்; (உன்னுதல் - நினைதல்; எண்ணுதல்;);

என்றும் மன்னியவன் - என்றும் நிலைத்து இருப்பவன்;


6)

செஞ்சுட ரார்திரு மேனியன் அஞ்சொல்

வஞ்சியை அன்பொடு வாம(ம்)ம கிழ்ந்தான்

அஞ்சல ளித்திடு(ம்) மஞ்சன கண்டன்

வஞ்சமி லான்பதி மாமுது குன்றே.


செஞ்சுடர் ஆர் திரு மேனியன் - இளஞாயிறுபோல் திகழும் திருமேனி உடையவன்;

அஞ்சொல் வஞ்சியை அன்பொடு வாமம் மகிழ்ந்தான் - அழகிய மொழி பேசும், கொடி போன்ற உமையை இடப்பாகமாக விரும்பியவன்;

அஞ்சல் அளித்திடும், மஞ்சு அன கண்டன் - அபயம் அளிக்கின்ற, மேகம் போல் திகழும் நீலகண்டன்;

வஞ்சம் இலான் - ஒளித்தல் இல்லாதவன்; - வரங்களை வாரி வழங்குபவன்;


7)

கோல்வளை யாள்கொழு நன்மணி மார்பின்

மேல்விட நாகமு(ம்) மேவிடும் ஈசன்

கால்வெளி மண்ணெரி நீரென ஆனான்

மால்விடை யான்பதி மாமுது குன்றே.


கோல்வளையாள் கொழுநன் - திரண்ட வளையல்களை அணிந்த உமைக்குக் கணவன்; (கோல் - திரட்சி); (கொழுநன் - கணவன்); (திருவாசகம் - திருத்தெள்ளேணம் - 8.11.20 - "கோல்வளையாள் நலம்பாடி");

மணி மார்பின்மேல் விட-நாகமும் மேவிடும் ஈசன் - பவளம் போன்ற அழகிய மார்பின்மேல் விஷப்பாம்பும் திகழும் இறைவன்; (மணி - பவளம்; அழகு); (மேவுதல் - பொருந்துதல்; விரும்புதல்); (உம் - எச்சவும்மை; அசை என்றும் கொள்ளல் ஆம்);

கால் வெளி மண் எரி நீர் என ஆனான் - காற்று, ஆகாயம், நிலம், நெருப்பு, நீர் என்று ஐம்பூதங்களாக ஆனவன்; (பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்ற பஞ்சபூதங்களின் முறை யாப்பு நோக்கி மாறிவந்தது);

மால் விடையான் - பெரிய இடபத்தை வாகனமாக உடையவன்;


8)

தேர்விட வெற்பையெ டுத்தவன் அஞ்ச

ஓர்விர லூன்றிநெ ரித்திசை கேட்டுப்

பேர்தரு பிஞ்ஞகன் உண்பலி தேரும்

வார்சடை யான்பதி மாமுது குன்றே.


தேர் விட வெற்பைடுத்தவன் அஞ்ச ஓர் விரல் ஊன்றி நெரித்து - (கீழே இறங்கிய தன்) தேரை மீண்டும் வானில் பறக்கச்செய்யும் பொருட்டுக் கயிலைமலையைப் பெயர்த்த தசமுகன் அஞ்சும்படி ஒரு விரலை ஊன்றி அவனை நசுக்கி;

இசை கேட்டுப் பேர் தரு பிஞ்ஞகன் - பின், அவன் இசைபாடிப் போற்றியதைக் கேட்டு இரங்கி, அவனுக்கு இராவணன் (அழுதவன்) என்ற பெயரைத் தந்து அருள்புரிந்தவன், தலைக்கோலம் உடையவன்; (சம்பந்தர் தேவாரம் - 1.11.8 - "பின்னைப் பணிந்தேத்தப் பெருவாள் பேரொடுங் கொடுத்த");

உண்பலி தேரும் வார் சடையான் - பிச்சை ஏற்கின்ற, நீள்சடை உடையவன்; (திருவாசகம் - திருக்கோத்தும்பி - 8.10.2 - "உண்பலிதேர் அம்பலவன்");


9)

ஆழ்கட லான்அல ரான்அறி யாத

கேழ்கிள ருந்தழல் ஆனவன் அன்பர்

ஊழ்வினை தீர்த்தருள் உத்தமன் இந்து

வாழ்சடை யான்பதி மாமுது குன்றே.


ஆழ்கடலான் அலரான் அறியாத - ஆழமான கடல்மேல் இருக்கும் திருமாலும் மலர்மேல் இருக்கும் பிரமனும் அறியாத;

கேழ் கிளரும் தழல் ஆனவன் - ஒளி மிக்க ஜோதி ஆனவன்; (கேழ் - ஒளி); (கிளர்தல் - வளர்தல்; மிகுதல்);

அன்பர் ஊழ்வினை தீர்த்தருள் உத்தமன் - பக்தர்களது பழவினையைத் தீர்த்து அருள்கின்ற உத்தமன்;

இந்து வாழ் சடையான் - திங்கள் தங்குகின்ற சடையை உடையவன்; (இந்து - சந்திரன்);


10)

புந்தியி லார்பல பொய்யுரை சொல்லி

நிந்தனை செய்தலை நீசரை நீங்கும்

வந்தனை செய்தடை மாணிபி ழைக்க

வந்தப ரன்பதி மாமுது குன்றே.


புந்தி இலார், பல பொய்யுரை சொல்லி நிந்தனை செய்து அலை நீசரை நீங்கும் - அறிவற்றவர்களும் பல பொய்களைச் சொல்லி இகழ்ந்து திரிகின்றவர்களுமான கீழோர்களை விட்டு அகலுங்கள்; (புந்தி - அறிவு);

வந்தனை செய்து அடை மாணி பிழைக்க வந்த பரன் - வழிபாடு செய்து அடைக்கலம் புகுந்த மார்க்கண்டேயர் உயிர் பிழைக்கும்படி வந்து (காலனை உதைத்து) அருளிய பரமன்;


11)

கள்ளலர் ஏவிய காமன தாகம்

வெள்ளிய நீறது வாகவி ழித்தான்

உள்ளிடு பத்தரை உம்பரில் ஏற்றும்

வள்ளல வன்பதி மாமுது குன்றே.


கள்-லர் ஏவிய காமனது ஆகம் வெள்ளிய நீறுஅது ஆக விழித்தான் - தேன்மலர்களைக் கணையாக எய்த மன்மதனது உடலைச் சாம்பலாகும்படி நெற்றிக்கண்ணால் பார்த்தவன்;

உள்ளிடு பத்தரை உம்பரில் ஏற்றும் வள்ளல் அவன் - தன்னை மனத்தில் இருத்தித் தியானிக்கும் அன்பர்களை வானுலகில் ஏற்றுகின்ற வள்ளல்; (உள்ளுதல் - நினைத்தல்; உள் - மனம்; இடுதல் - வைத்தல்; ஒரு துணைவினை);


12)

மான்றிக ழுங்கர வாமழு வாளா

ஈன்றவ னேஉல கங்களை என்னை

ஏன்றுகொ ளாயென ஏத்திடு வார்க்கு

வான்றரு வான்பதி மாமுது குன்றே.


மான் திகழும் கரவா - மானைக் கையில் ஏந்தியவனே;

மழுவாளா - மாழுவாள் உடையவனே;

ஈன்றவனே உலகங்களை என்னை - எல்லா உலகங்களையும் படைத்தவனே; என் தந்தையே; (குறிப்பு: "ஈன்றவனே உலகங்களை, ஈன்றவனே என்னை" என்று இயைக்க);

"என்னை ஏன்றுகொளாய்" என ஏத்திடுவார்க்கு வான் தருவான் - "என்னை ஏற்றுக்கொள்வாயாக" என்று போற்றும் பக்தர்களுக்கு வானுலகம் தருபவன்; ("என்னை" என்ற சொல்லை இடைநிலைத்தீவகமாக இருபுறமும் இயைத்துப் பொருள்கொள்க);

பதி மாமுது குன்றே - அப்பெருமான் உறையும் தலம் திருமுதுகுன்றம்.


பிற்குறிப்பு : யாப்புக் குறிப்பு:

சந்தக் கலிவிருத்தம் - தானன தானன தானன தானா - என்ற சந்தம்.

வடமொழியில் இச்சந்தத்தை - தோதகம் - दोधकम् - என்ற பெயரால் சுட்டுகின்றனர்.

குரு - நெடில் / நெடில்+ஒற்று / குறில்+ஒற்று.

லகு - குறில் (ஒற்றுத் தொடராதபோது).

அடி ஈற்றில் வரும் லகுவும் குருவாகக் கருதப்படும்.

வடமொழியில் ஐகாரம் நெடில் (குரு) என்று கருதப்படினும், தமிழ்ப் பாடலில் அலகிடும்போது ஐகாரக் குறுக்கம் வரும் இடங்களில் அது குறில் (லகு) என்று கொள்ளப்படும்.)


உதாரணம்: - லிங்காஷ்டகம் - "ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்"


வி. சுப்பிரமணியன்

----------- --------------

No comments:

Post a Comment