04.56 - மணஞ்சேரி - கொங்கலர் சூடும்
2014-03-22
மணஞ்சேரி (திருமணஞ்சேரி)
------------------
(சந்தக் கலித்துறை - தானன தான தானன தான தனதான)
(தானன என்ற இடத்தில் தனதன என்றும் வரலாம்)
(சம்பந்தர் தேவாரம் - 1.98.1 - "நன்றுடையானைத் தீயதிலானை")
1)
கொங்கலர் சூடும் குழலியொர் பங்கன் குளிராரும்
திங்களைச் சென்னித் திகழ்ந்திட வைத்த திருவாளன்
மங்கையர் மைந்தர் வந்தடி போற்றும் மணஞ்சேரிச்
சங்கரன் அன்பர் தங்களுக் கின்பம் தருவானே.
கொங்கு அலர் சூடும் குழலி ஒர் பங்கன் - வாசமலர்களை அணிந்த கூந்தலை உடைய உமையை ஒரு பங்கில் உடையவன்; (கொங்கு - வாசனை);
குளிர் ஆரும் திங்களைச் சென்னித் திகழ்ந்திட வைத்த திருவாளன் - குளிர்ந்த சந்திரனைத் தன் தலைமேல் திகழவைத்த செல்வன்;
மங்கையர் மைந்தர் வந்து அடி போற்றும் மணஞ்சேரிச் சங்கரன் - இளம்பெண்களும் அவர்கள் கணவர்களும் வந்து வழிபாடு செய்கின்ற திருமணஞ்சேரியில் உறைகின்ற சங்கரன்; (மைந்தன் - இளைஞன்); (சங்கரன் - சிவன் திருநாமம் - சுகத்தைச் செய்பவன்);
அன்பர் தங்களுக்கு இன்பம் தருவானே - தன் பக்தர்களுக்கு இன்பம் அளிப்பவன் / அளிப்பான்;
(அப்பர் தேவாரம் - 4.32.3 - "ஓதுவார்கள் தங்களுக் கருளும் எங்கள் தத்துவன்");
2)
யாதொரு நேரும் அற்றவன் அங்கை அழலேந்தி
போதொடு வாசப் புகையொடு கண்ணிற் பொழிவோடு
மாதர்க ளோடு மைந்தர்கள் போற்றும் மணஞ்சேரிக்
காதொரு தோடன் கழல்தொழு வார்கள் கவலாரே.
யாதொரு நேரும் அற்றவன் - எவ்வித ஒப்பும் இல்லாதவன்; (நேர் - ஒப்பு);
அங்கை அழல் ஏந்தி - கையில் தீயை ஏந்துபவன்;
போதொடு வாசப்-புகையொடு கண்ணில் பொழிவோடு மாதர்களோடு மைந்தர்கள் போற்றும் - பெண்களும் ஆண்களும் கண்கள் கசியப், பூக்கள் தூபம் இவற்றால் வழிபாடு செய்கின்ற; (போது - பூ); (வாசப்-புகை - தூபம்);
மணஞ்சேரிக் காது ஒரு தோடன் கழல் தொழுவார்கள் கவலாரே - திருமணஞ்சேரியில் உறைகின்றவனும் ஒரு காதில் தோடு அணிந்தவனுமான சிவபெருமானது திருவடியைத் தொழும் பக்தர்களது கவலைகள் தீரும்; (கவலார் - வருத்தம் அடையமாட்டார்);
3)
தேரினில் ஏறித் திரிபுரம் செற்ற சிலைவில்லான்
ஆரியன் அன்பர் கோரிய வெல்லாம் அருளின்ப
வாரியன் நீல மணிதிகழ் கண்டன் மணஞ்சேரி
நாரியொர் பாலன் பேர்சொலக் காலன் நணுகானே.
சிலைவில்லான் - மேருமலையை வில்லாக ஏந்தியவன்; (சிலை - மலை);
ஆரியன் - பெரியோன்; ஆசிரியன்; (திருவாசகம் - சிவபுராணம் - அடி-64 - "பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே");
அன்பர் கோரிய எல்லாம் அருள் இன்ப வாரியன் - பக்தர்கள் வேண்டிய எல்லா வரங்களையும் அருள்கின்ற இன்பக்கடல் ஆனவன்; (கோருதல் - விரும்புதல்; வேண்டிக்கொள்ளுதல்); (வாரி - கடல்); (திருவாசகம் - 8.8.2 - "பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய்");
நாரி ஒர் பாலன் - பெண்ணை ஒரு பக்கத்தில் உடையவன்; (அப்பர் தேவாரம் - 5.98.5 - "உமைபாகம் ஓர் பாலராய்"); (அப்பர் தேவாரம் - 4.88.1 - "மலைமகள் தன்னுடைய பாலனை");
நணுகான் - நெருங்கமாட்டான்;
4)
பையர வோடு பான்மதி வைத்துப் பகைதீர்த்துத்
தையலொர் பாகம் தாங்கிய கோனைச் சடையானை
மையணி கண்ணர் மாலைகள் பாடு மணஞ்சேரிச்
செய்யனை நாடும் சிந்தையி னார்க்குத் தெளிவாமே.
பையரவோடு பால்மதி வைத்துப் பகைதீர்த்துத் - படத்தை உடைய நாகப்பாம்போடு பால் போன்ற வெண்திங்களைப் பகையின்றி ஒன்றாக வாழவைத்து;
தையல் ஒர் பாகம் தாங்கிய கோனை - உமையை ஒரு பாகமாக உடைய தலைவனை;
மை அணி கண்ணர் மாலைகள் பாடு - மை தீட்டப்பெற்ற கண்களையுடைய பெண்கள் பாமாலைகள் பாடித் துதிக்கின்ற; (பாடுதல் - துதித்தல்); (மாலை - சொல்மாலை; பாமாலை);
மணஞ்சேரிச் செய்யனை - திருமணஞ்சேரியில் உறைகின்ற செம்மேனிப் பெருமானை;
நாடும் சிந்தையினார்க்குத் தெளிவாமே - விரும்பி வழிபடும் பக்தர்களுக்குத் தெளிவு உண்டாகும் (= அறியாமை தீரும்);
5)
இண்டைகள் கட்டி இணையடி போற்றும் இணையில்மார்க்
கண்டரைக் காத்துக் காலனைச் செற்ற கரிகாடன்
வண்டமிழ் வாயர் மகிழ்வொடு போற்றும் மணஞ்சேரிக்
கொண்டலங் கண்டன் குரைகழல் போற்றக் குறைபோமே.
இண்டை - ஒருவித மாலை;
இணை இல் மார்க்கண்டர் - ஒப்பற்ற மார்க்கண்டேயர்;
காலனைச் செற்ற - இயமனை உதைத்து அழித்த;
கரிகாடன் - சுடுகாட்டில் இருப்பவன்;
வண்டமிழ் வாயர் - வண்தமிழ் வாயர் - தேவாரம் திருவாசகம் முதலியன பாடுபவர்கள்;
கொண்டலங் கண்டன் - மேகம் போல் அழகிய கண்டத்தை உடையவன்; (அம் - அழகு);
குரைகழல் போற்றக் குறை போமே - அப்பெருமானுடைய (ஒலிக்கின்ற கழலை அணிந்த) திருவடியை வழிபட்டால் குறைகள் தீரும்;
6)
சிர(ம்)மலி மாலை திகழ்முடி மீது திரையாறு
விரவிடு கின்ற வேணியி னானை விடையானை
மர(ம்)மலி சோலை வயல்புடை சூழ்ந்த மணஞ்சேரி
வரதனை வாழ்த்த மங்கல(ம்) மல்கு(ம்) மகிழ்வாமே.
சிரம் மலி மாலை திகழ் முடிமீது திரை-ஆறு விரவிடுகின்ற வேணியினானை - தலைமாலை அணிந்த திருமுடியின்மேல் அலைமோதும் கங்கை பொருந்துகின்ற சடையானை;
விடையானை - இடப-வாகனனை;
மரம் மலி சோலை வயல் புடை சூழ்ந்த மணஞ்சேரி வரதனை - மரங்கள் நிறைந்த சோலையும் வயலும் சூழ்ந்த திருமணஞ்சேரியில் உறைகின்ற வரதனை; (வரதன் - வரம் அருள்பவன்)
வாழ்த்த மங்கலம் மல்கும் மகிழ்வு ஆமே - போற்றி வழிபட்டால், திரு மிகும், இன்புற்று வாழலாம்;
7)
தளைகளி லாத தன்மையன் எந்தை தனிநாதன்
வளையொரு கையன் வல்விடம் உண்ட மணிகண்டன்
வள(ம்)மலி கின்ற வயல்புடை சூழ்ந்த மணஞ்சேரி
இளமதி சூடி இணையடி ஏத்த இடர்போமே.
தளைகள் இலாத தன்மையன் - மும்மலக்கட்டு அற்றவன்; (சுதந்திரன்);
எந்தை தனி நாதன் - எம் தந்தை, ஒப்பற்ற தலைவன்; (தனி - ஒப்பில்லாத);
வளை ஒரு கையன் - ஒரு கையில் வளையல் அணிந்தவன் - உமைபங்கன்;
வல்விடம் உண்ட மணிகண்டன் - கொடிய நஞ்சை உண்ட நீலகண்டன்;
வளம் மலிகின்ற வயல் புடை சூழ்ந்த மணஞ்சேரி - வளம் மிக்க வயல் சூழ்ந்த திருமணஞ்சேரியில் உறைகின்ற;
இளமதி சூடி இணையடி ஏத்த இடர் போமே - இளம்பிறையை அணிந்த பெருமானது இரு-திருவடிகளைத் துதித்தால் துன்பம் நீங்கும்;
8)
அருவரை பேர்த்தான் ஐயிரு வாய்கள் அழுதேத்தத்
திருவிரல் ஒன்றைச் சிறிதள வூன்று சிவனெம்மான்
வருமடி யார்கள் மனமகிழ் வெய்து மணஞ்சேரி
எருதமர் ஈசன் இணையடி ஏத்த இடர்போமே.
அரு-வரை பேர்த்தான் ஐயிரு-வாய்கள் அழுது ஏத்தத் - கயிலைமலையை பெயர்த்தவனான இராவணனது பத்துவாய்களும் அழுது துதிபாடும்படி; (வரை - மலை);
திருவிரல் ஒன்றைச் சிறிது அளவு ஊன்று சிவன் எம்மான் - திருப்பாத விரல் ஒன்றைச் சிறிதளவே ஊன்றிய சிவன், எம் தலைவன்;
வரும் அடியார்கள் மனமகிழ்வு எய்து மணஞ்சேரி - வந்து வழிபடும் பக்தர்கள் மனத்தில் இன்பம் அடைகின்ற திருமணஞ்சேரியில் உறைகின்ற;
எருது அமர் ஈசன் இணையடி ஏத்த இடர் போமே - இடபத்தை ஊர்தியாக விரும்பும் ஈசனது இரு-திருவடிகளைப் போற்றினால் துன்பம் தீரும்;
9)
வேணுவை ஏந்தி மேய்த்தவன் வேதன் மிகநேடி
நாணுற ஓங்கு நம்பனை நட்டம் நவில்வானை
வாணுதல் மாதர் மலர்கொடு போற்று மணஞ்சேரித்
தாணுவை நெஞ்சில் தரித்தவர்க் கில்லை தடுமாற்றே.
வேணுவை ஏந்தி மேய்த்தவன் - வேணுகோபாலன் - திருமால்; (வேணு - புல்லாங்குழல்);
வேதன் - பிரமன்;
மிக நேடி நாணுற ஓங்கு நம்பனை - அவ்விருவரும் அடிமுடி மிகவும் தேடி நாணும்படி எல்லையின்றி ஓங்கிய சிவனை; (நேடுதல் - தேடுதல்); (நம்பன் - சிவன் திருநாமம் - விரும்பத்தக்கவன்);
நட்டம் நவில்வானை - திருநடம் செய்பவனை;
வாணுதல் மாதர் மலர்கொடு போற்று மணஞ்சேரித் தாணுவை - ஒளியுடைய நெற்றியுடைய பெண்கள் பூவால் வழிபாடு செய்யும் திருமணஞ்சேரித் தாணுவை; (வாணுதல் - வாள் நுதல் - ஒளிபொருந்திய நெற்றி); (தாணு - ஸ்தாணு - சிவன் திருநாமங்களுள் ஒன்று);
தடுமாற்று - தடுமாற்றம் - மனக்கலக்கம்;
10)
வீண்மொழி பேசும் மிண்டர்கள் என்றும் விரவாதான்
நாண்மலர்ப் பாதன் நங்கையொர் பங்கன் நலம்நாடி
வாண்முக மாதர் வந்தடி போற்று மணஞ்சேரி
நீண்மதி சூடி நினைபவர் நெஞ்சில் நிறைவானே.
மிண்டர் - கல்நெஞ்சர்;
விரவாதான் - விரவாதவன்; சேராதவன்; (விரவுதல் - அடைதல்; கலத்தல்); (அப்பர் தேவாரம் - 6.46.8 - "மெய்யானைப் பொய்யரொடு விரவாதானை");
நாண்மலர்ப் பாதன் - புதிதாகப் பூத்த மலர் போன்ற பாதத்தை உடையவன்;
நங்கை ஒர் பங்கன் - உமைபங்கன்;
வாண்முக மாதர் - வாள்-முக-மாதர் - ஒளி பொருந்திய முகத்தை உடைய பெண்கள்;
நீண்மதி சூடி - நீள்மதி சூடி - திங்களை அணிந்தவன்;
11)
வெண்டிரை ஆரும் வேலையு மிழ்ந்த விடமுண்ட
கண்டனை நெற்றிக் கண்ணனை வீரக் கழலானை
வண்டறை கின்ற வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரி
அண்டனை அண்டும் அன்பரை அல்லல் அடையாவே.
வெண் திரை ஆரும் வேலை உமிழ்ந்த விடம் உண்ட கண்டனை - வெண்ணிற அலைகள் பொருந்திய கடலான பாற்கடல் உமிழ்ந்த ஆலகால விடத்தை உண்ட நீலகண்டனை;
வீரக் கழலானை - வீரக்கழலை அணிந்த திருப்பாதனை;
வண்டு அறைகின்ற வண்-பொழில் சூழ்ந்த மணஞ்சேரி - வண்டுகள் ஒலிக்கின்ற வளம் மிக்க சோலைகளால் சூழப்பெற்ற திருமணஞ்சேரியில் உறைகின்ற;
அண்டனை அண்டும் அன்பரை அல்லல் அடையாவே - சிவபெருமானைச் சரண்புகுந்த பக்தர்களைத் துன்பங்கள் நெருங்கா; (அண்டன் - சிவன்); (அண்டுதல் - சரண்புகுதல்);
வி. சுப்பிரமணியன்
-------------- --------------
No comments:
Post a Comment