04.53 - புறம்பயம் (திருப்புறம்பியம்) - கருப்புவிற் கரத்தனை
2014-03-02
புறம்பயம் (திருப்புறம்பியம்)
----------------------
(சந்தக் கலிவிருத்தம் - தனாதனா தனாதனா தனாதனா தனாதனா)
(தனாதனான தானனா தனாதனான தானனா - என்றும் நோக்கலாம்)
(கணேச பஞ்சரத்ன ஸ்தோத்திரம் - "முதாகராத்த மோதகம்")
(சம்பந்தர் தேவாரம் - 2.98.1 - "வரைத்தலைப் பசும்பொனோடு")
1)
கருப்புவிற் கரத்தனைக் கனற்கணால் எரித்தவன்
பருப்பதன் மகட்கிடம் விருப்பினாற் கொடுத்தவன்
வருத்தமுற் றவானவர்க் கிரங்கிமுப் புரஞ்சுடப்
பொருப்புவில் வளைத்தவன் புறம்பயத் தொருத்தனே.
கருப்புவில் கரத்தனைக் கனற்கணால் எரித்தவன் - கரும்பை வில்லாகக் கையில் ஏந்தும் மன்மதனைக் கனலை உடைய நெற்றிக்கண்ணால் எரித்தவன்;
பருப்பதன் மகட்கு இடம் விருப்பினால் கொடுத்தவன் - மலையான் மகளுக்கு இடப்பாகத்தை விரும்பிக் கொடுத்தவன்;
வருத்தமுற்ற வானவர்க்கு இரங்கி முப்புரம் சுடப் - வருந்திய தேவர்களுக்கு இரங்கி முப்புரங்களை எரிக்க;
பொருப்பு-வில் வளைத்தவன் - மேருமலையை வில்லாக வளைத்தவன்;
புறம்பயத்து ஒருத்தனே - திருப்புறம்பயத்தில் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்றவன்; (ஒருத்தன் - ஒப்பற்றவன்; ஒருவன்); (அப்பர் தேவாரம் - 5.1.7 - "ஒருத்தனார் உலகங்கட்கு ஒருசுடர்");
2)
இகழ்ச்சியால் பதந்தொழார்க் கிலாதவன் தினந்தொறும்
நெகிழ்ச்சியால் வணங்குவார் அகத்துளே நிலைத்தவன்
மகிழ்ச்சியோ டிருப்பவன் மனைக்கிடம் கொடுத்தவன்
புகழ்ச்சியைக் கடந்தவன் புறம்பயத் தொருத்தனே.
இகழ்ச்சியால் பதம் தொழார்க்கு இலாதவன் - திருவடியை வழிபடாமல் இகழ்வார்களுக்கு அருள் இல்லாதவன்;
தினந்தொறும் நெகிழ்ச்சியால் வணங்குவார் அகத்துளே நிலைத்தவன் - தினமும் உருகி வணங்கும் பக்தர்கள் நெஞ்சை நீங்காதவன்;
மகிழ்ச்சியோடு இருப்பவன் - என்றும் இன்பநிலையில் இருப்பவன்;
மனைக்கு இடம் கொடுத்தவன் - மனைவிக்கு (உமைக்கு) இடப்பக்கத்தைக் கொடுத்தவன்;
புகழ்ச்சியைக் கடந்தவன் - எல்லையற்ற புகழ் உடையவன்;
புறம்பயத்து ஒருத்தனே - திருப்புறம்பயத்தில் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்றவன்;
3)
பரந்தநஞ் சினால்மிகப் பயந்தவர்க் கிரங்கினான்
சிரந்தனால் தினந்தொழும் குணத்தினார் விரும்பிடும்
வரந்தரும் கரப்பிலாக் கரத்தினான் முராரிவான்
புரந்தரன் வணங்கிடும் புறம்பயத் தொருத்தனே.
பரந்த நஞ்சினால் மிகப் பயந்தவர்க்கு இரங்கினான் - எங்கும் பரவிய ஆலகால விஷத்தைக் கண்டு மிகவும் அஞ்சிய தேவர்களுக்கு இரங்கியவன்;
சிரந்தனால் தினம் தொழும் குணத்தினார் விரும்பிடும் வரம் தரும் கரப்பு இலாக் கரத்தினான் - நாள்தோறும் தலையால் வணங்கி வழிபடும் அன்பர்கள் விரும்பிய வரமெல்லாம் வஞ்சமின்றி அருளும் வரதஹஸ்தன்;
முராரி வான் புரந்தரன் வணங்கிடும் புறம்பயத்து ஒருத்தனே - திருமால், தேவர்கள், இந்திரன் எல்லாரும் வணங்குகின்ற பெருமான், திருப்புறம்பயத்தில் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்றவன்; (முராரி - முரனென்ற அசுரனைக் கொன்றவன் - திருமால்); (வான் - தேவர்கள்); (புரந்தரன் - இந்திரன்);
4)
பழித்தவன் சிரத்தினைப் பறித்தவன் புரங்களை
அழித்தவன் மலர்ச்சரத் தனங்கனைச் சினந்துகண்
விழித்தவன் விடைச்சினம் பொறித்தவெல் கொடிச்சிவன்
பொழிற்குயில் சுரம்பயில் புறம்பயத் தொருத்தனே.
பழித்தவன் சிரத்தினைப் பறித்தவன் - இகழ்ந்த பிரமன் தலையைக் கிள்ளியவன்; ("பழித்தவன் - தக்கன்"; என்றுகொண்டும் பொருள்கொள்ளக் கூடும்);
புரங்களை அழித்தவன் - முப்புரங்களை எரித்தவன்;
மலர்ச்சரத்து அனங்கனைச் சினந்து கண் விழித்தவன் - மலர்க்கணையை எய்த மன்மதனைக் கோபித்து நெற்றிக்கண்ணால் பார்த்தவன்; (அனங்கன் - மன்மதன்); (சம்பந்தர் தேவாரம் - 2.98.8 - "சுடப்பொடிந்து உடம்பிழந்து அநங்கனாய மன்மதன்");
விடைச்சினம் பொறித்த வெல்கொடிச் சிவன் - இடபச்-சின்னம் பொறித்த வெற்றிக்கொடியை உடைய சிவன்; (சினம் - சின்னம்; இடைக்குறை விகாரம்); (திருவாசகம் - போற்றித் திருவகவல் - அடி-95: "சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி");
பொழிற்குயில் சுரம் பயில் - பொழிலில் இருக்கும் குயில்கள் ஏழுசுரங்களை ஒலிக்கின்ற (= இசை பாடுகின்ற);
புறம்பயத்து ஒருத்தனே - திருப்புறம்பயத்தில் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்றவன்;
5)
இலங்குவெண் பிறைச்சடைக் குராவராப் புனைந்தவன்
அலங்கலால் திருந்துதாள் அலங்கரித் தவர்க்குயர்
நலன்களைக் கொடுப்பவன் நகைத்தெயில் கொளுத்தினான்
புலன்களுக் கரும்பரன் புறம்பயத் தொருத்தனே.
இலங்கு வெண்பிறைச்சடைக் குரா அராப் புனைந்தவன் - திகழும் வெண்பிறைச்சந்திரன் இருக்கும் சடையில் குராமலரையும் பாம்பையும் அணிந்தவன்;
அலங்கலால் திருந்து-தாள் அலங்கரித்தவர்க்கு உயர் நலன்களைக் கொடுப்பவன் - பூமாலைகளால் தன் அழகிய திருவடியை அலங்கரித்து வழிபடும் அடியவர்களுக்கு உயர்ந்த நன்மையை அளிப்பவன்; (அலங்கல் - பூமாலை); (திருந்துதல் - செவ்விதாதல்; மேன்மையாதல்); (திருநாவுக்கரசர் தேவாரம் - 5.5.5 - "தேடிச் சென்று திருந்தடி ஏத்துமின்");
நகைத்து எயில் கொளுத்தினான் - சிரித்து முரங்களை எரித்தவன்; (நகைத்தல் - நகுதல்; சிரித்தல்); (கொடுப்பவன் னகைத்தெயில் - னகர ஒற்று விரித்தல் விகாரம் - கொடுப்பவன் நகைத்து எயில்);
புலன்களுக்கு அரும் பரன் - ஐம்புலன்களால் அறிதற்கு அரிய பரமன்; (திருநாவுக்கரசர் தேவாரம் - 6.97.10 - "அவனருளே கண்ணாகக் காணின் அல்லால் இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவனிறைவன் என்றெழுதிக் காட்டொணாதே");
புறம்பயத்து ஒருத்தனே - திருப்புறம்பயத்தில் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்ற பெருமான்.
6)
இரிந்தவான் வணங்கியோ எனப்புலம் பிடுந்தினம்
பரிந்தவன் கறைக்களன் குவிந்தவன் படைப்பினில்
விரிந்தவன் மறைப்பொருள் விரித்தவன் மதிக்கருள்
புரிந்தவன் பொழில்திகழ் புறம்பயத் தொருத்தனே.
இரிந்த வான் வணங்கி "ஓ" எனப் புலம்பிடும் தினம் பரிந்தவன்- அஞ்சிய தேவர்கள் "ஓலம்" என்று கதறித் திருவடியை வழிபட்டபோது அவர்களுக்கு இரங்கியவன்;
கறைக்களன் - கறைக்கண்டன் - நீலகண்டன்;
குவிந்தவன் படைப்பினில் விரிந்தவன் - சம்ஹார-காலத்தில் குவிந்தவன், படைப்புக்-காலத்தில் விரிந்தவன்; (அப்பர் தேவாரம் - 6.86.6 - "விரிந்தானைக் குவிந்தானை வேதவித்தை");
மறைப்பொருள் விரித்தவன் - கல்லால-மரத்தின்கீழ் வேதப்பொருளை உபதேசித்த தட்சிணாமூர்த்தி;
மதிக்கு அருள் புரிந்தவன் - சந்திரனுக்கு அருளியவன்;
பொழில் திகழ் புறம்பயத்து ஒருத்தனே - சோலை சூழ்ந்த திருப்புறம்பயத்தில் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்ற பெருமான்.
7)
அறத்தினன் முனர்த்தவர்க் கறங்களால் அமர்ந்துரை
திறத்தினன் திருச்சடைத் திரைத்தெழும் பெரும்புனல்
மறைத்தவன் மழுப்படைக் கரத்தினன் மடந்தையோர்
புறத்தினன் பொழில்திகழ் புறம்பயத் தொருத்தனே.
அறத்தினன் - தர்மத்தின் வடிவு ஆனவன்;
முனர்த் தவர்க்கு அறங்கள் ஆல் அமர்ந்து உரை திறத்தினன் - முன்னர்ச் சனகாதியருக்குக் கல்லால-மரத்தின்கீழ் அறம் உபதேசித்தவன்;
திருச்சடைத் திரைத்து எழும் பெரும்புனல் மறைத்தவன் - திருச்சடையினுள் அலைத்து எழும் பெரிய கங்கையை ஒளித்தவன்;
மழுப்படைக் கரத்தினன் - கையில் மழுவை ஏந்தியவன்;
மடந்தை ஓர் புறத்தினன் - உமையை ஒரு பக்கத்தில் உடையவன்;
பொழில் திகழ் புறம்பயத்து ஒருத்தனே - சோலை சூழ்ந்த திருப்புறம்பயத்தில் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்ற பெருமான்.
8)
இராவணன் செருக்கழித் திசைத்துதிக் கிரங்கினான்
அராநிலா அணிந்தவன் மனங்கசிந் தடித்தலம்
பராவுவார் தமக்கரும் பதந்தரும் பரம்பரன்
புராதனன் பொழில்திகழ் புறம்பயத் தொருத்தனே.
இராவணன் செருக்கு அழித்து இசைத்-துதிக்கு இரங்கினான் - இராவணனின் ஆணவத்தை அழித்துப், பின் அவன் இசையோடு துதிக்க அதனைக் கேட்டு இரங்கியவன்;
அரா நிலா அணிந்தவன் - பாம்பையும் சந்திரனையும் சூடியவன்;
மனம் கசிந்து அடித்தலம் பராவுவார் தமக்கு அரும்-பதம் தரும் பரம்பரன் - உள்ளம் உருகித் திருவடியைப் போற்றும் அன்பர்களுக்குச் சிவலோக வாழ்வைத் தந்தருளும் பரமன்; (பராவுதல் - பரவுதல் - போற்றுதல்);
புராதனன் - தொன்மையானவன்;
பொழில் திகழ் புறம்பயத்து ஒருத்தனே - சோலை சூழ்ந்த திருப்புறம்பயத்தில் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்ற பெருமான்.
9)
மயங்கயன் பறந்துமால் அகழ்ந்திளைத் திறைஞ்சிய
தயங்கெரிப் பிழம்பினன் தமர்க்கிரங் கருட்கரன்
கயங்குராப் புனைந்தவன் கறுத்தநஞ் சருந்தினான்
புயங்களெட் டுடைச்சிவன் புறம்பயத் தொருத்தனே.
மயங்கு அயன் பறந்து, மால் அகழ்ந்து, இளைத்து இறைஞ்சிய - அறிவுமயங்கி அயன் (அன்னமாய்ப்) பறந்தும், திருமால் (பன்றியாய் நிலத்தை) அகழ்ந்தும் (அடிமுடி தேடிக் காணாமல்) வருந்தி வழிபட்ட;
தயங்கு எரிப் பிழம்பினன் - பிரகாசித்த ஒளித்தூண் ஆனவன்; (தயங்குதல் - ஒளிவிடுதல்);
தமர்க்கு இரங்கு அருட்கரன் - அடியவர்களுக்கு இரங்குகின்ற, அருள் நிறைந்த திருக்கரம் உடையவன்;
கயம் குராப் புனைந்தவன் - கங்கையையும் குராமலரையும் சடையினன்; (கயம் - நீர்நிலை);
கறுத்த நஞ்சு அருந்தினான் - கரிய விடத்தை உண்டவன்;
புயங்கள் எட்டுடைச் சிவன் - எண்தோள்கள் உடையவன்; (புயங்கள் - புஜங்கள்);
புறம்பயத்து ஒருத்தனே - திருப்புறம்பயத்தில் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்ற பெருமான்.
10)
தினந்தினம் புரட்டையே செபித்திடும் பிரட்டரின்
இனந்தவிர்ந் தருத்தியால் இருங்கழல் வழுத்துவீர்
சினந்துகூற் றுதைத்தவன் சிறந்ததார் எனப்பணம்
புனைந்தவன் பொழில்திகழ் புறம்பயத் தொருத்தனே.
தினந்தினம் புரட்டையே செபித்திடும் பிரட்டரின் இனம் தவிர்ந்து - நாள்தோறும் பொய்யையே ஜெபம் செய்யும் கீழோரின் கூட்டத்தை நீங்கி; (புரட்டு - பொய்); (பிரட்டர் - ப்ரஷ்டர் - நெறியினின்று வழுவினவர்); (இனம் - கூட்டம்); (தவிர்தல் - நீங்குதல்); (திருக்குறள் அதிகாரம் 46 - "சிற்றினம் சேராமை");
அருத்தியால் இருங்-கழல் வழுத்துவீர் - பெருமை மிக்க திருவடியை அன்பால் வணங்குங்கள்; (அருத்தி - அன்பு); (இருங்கழல் - பெருமைமிக்க திருவடி); (இருமை - பெருமை); (திருவாசகம் - போற்றித் திருவகவல் - அடி 129-130: "என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல் சென்னியில் வைத்த சேவக போற்றி");
சினந்து கூற்று உதைத்தவன் - காலணைக் கோபித்து உதைத்தவன்;
சிறந்த தார் எனப் பணம் புனைந்தவன் - சிறந்த மாலை என்று நாகத்தை அணிந்தவன்; (தார் - மலர்மாலை); (பணம் - பாம்பின் படம்; பாம்பு);
பொழில் திகழ் புறம்பயத்து ஒருத்தனே - சோலை சூழ்ந்த திருப்புறம்பயத்தில் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்ற பெருமான்.
11)
துடிக்கரன் பதந்தொழும் தொழும்பரின் விருப்பெலாம்
முடிப்பவன் முழாவெலாம் முழங்கநள் ளிராவினில்
நடிப்பவன் நகைத்துவான் புரங்களைக் கணத்தினில்
பொடித்தவன் பொழில்திகழ் புறம்பயத் தொருத்தனே.
துடிக்கரன் - உடுக்கைக் கையில் ஏந்தியவன்; (துடி - உடுக்கு);
பதம் தொழும் தொழும்பரின் விருப்பு-எலாம் முடிப்பவன் - திருவடியை வழிபடும் அடியார்களது விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றுபவன்; (தொழும்பர் - அடியவர்); (முடித்தல் - நிறைவேற்றுதல்);
முழாவெலாம் முழங்க நள்-இராவினில் நடிப்பவன் - பல முழவுகள் முழங்க நள்ளிருளில் கூத்தாடுபவன்;
நகைத்து வான்-புரங்களைக் கணத்தினில் பொடித்தவன் - சிரித்து முப்புரங்களை ஒரு நொடியளவில் சாம்பலாக்கியவன்; (கணம் - க்ஷணம்);
பொழில் திகழ் புறம்பயத்து ஒருத்தனே - சோலை சூழ்ந்த திருப்புறம்பயத்தில் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்ற பெருமான்.
பிற்குறிப்பு: யாப்புக் குறிப்பு:
சந்தக் கலிவிருத்தம் - தனாதனா தனாதனா தனாதனா தனாதனா.
இச்சந்தத்தைத் - தனாதனான தானனா தனாதனான தானனா - என்றும் நோக்கலாம்.
"லகு-குரு" என்ற அமைப்பு அடிகள்தோறும் 8 முறை வரும்.
குரு = நெடில் / நெடில்+ஒற்று / குறில்+ஒற்று.
லகு = குறில் (ஒற்றுத் தொடராதபோது).
அடி ஈற்றில் வரும் லகுவும் குருவாகக் கருதப்படும்.
இச்சந்தத்தை வடமொழியில் "பஞ்சசாமரம்" (pañcacāmaram - पञ्चचामरम्) என்பர்;
உதாரணம் - கணேச பஞ்சரத்ன ஸ்தோத்திரம் - "முதாகராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்";
சம்பந்தர் தேவாரம் - 2.98.1 - "வரைத்தலைப் பசும்பொனோ டருங்கலன் களுந்திவந்(து)"
(தேவாரத்தில் 4 விளச்சீர்கள் வரும் வேறு பதிகங்களும் உள்ளன. ஆனால் அவை இச்சந்தத்தினின்று சற்றே வேறுபடுவன. உதாரணம்: சம்பந்தர் தேவாரம் - 3.25.1 - "மருந்துவேண் டில்இவை மந்திரங் கள்இவை")
வி. சுப்பிரமணியன்
------------ ------------------
No comments:
Post a Comment