04.54 - ஆக்கூர் - கண்ணில் தீயாரும்
2014-03-08
ஆக்கூர்
(இத்தலம் திருக்கடவூர் அருகே உள்ளது)
----------------------------------
(வஞ்சித்துறை - மா மாங்காய் - வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.91.1 - "சித்தம் தெளிவீர்காள்")
1)
கண்ணில் தீயாரும்
அண்ணல் ஆக்கூரை
நண்ணி அடிபோற்றில்
விண்ணும் எளிதாமே.
கண்ணில் தீ ஆரும் அண்ணல் - கண்ணில் நெருப்பை உடைய கடவுள் - நெற்றிக்கண்ணன்; (ஆர்தல் - பொருந்துதல்);
ஆக்கூரை நண்ணி அடிபோற்றில் விண்ணும் எளிதாமே - அப்பெருமான் உறைகின்ற ஆக்கூரை அடைந்து வழிபாடு செய்தால் சிவலோக வாழ்வும் எளிதில் கிட்டும்; (நண்ணுதல் - அடைதல்);
2)
செய்யன் சேவேறும்
ஐயன் ஆக்கூரை
மெய்யன் பாலேத்த
வெய்ய வினைவீடே.
செய்யன் சே ஏறும் ஐயன் ஆக்கூரை - செம்மேனியனும் இடபவாகனத்தை உடைய தலைவனுமான சிவபெருமான் உறைகின்ற ஆக்கூரை;
மெய்-அன்பால் ஏத்த - உண்மையான பக்தியோடு போற்றினால்;
வெய்ய-வினை வீடே - கொடிய வினைகள் நீங்கும்;
3)
பணிநீர் வெண்திங்கள்
அணிவான் ஆக்கூரைப்
பணியும் பத்தர்க்குப்
பிணியில் நிலைதானே.
பணி நீர் வெண்-திங்கள் அணிவான் - பாம்பு, கங்கை, வெண்பிறை இவற்றைச் சூடுகின்றவன்;
ஆக்கூரைப் பணியும் பத்தர்க்குப் பிணி இல் நிலைதானே - அப்பெருமான் உறையும் ஆக்கூரை அடைந்து வழிபடும் பக்தர்களுக்குப் பிணிகள் (/பந்தங்கள்) இல்லாத நிலை வரும்;
4)
உழையன் ஓர்காதில்
குழையன் கூத்தாடும்
அழகன் ஆக்கூரைத்
தொழநம் துயர்போமே.
உழையன் ஓர் காதில் குழையன் - மானை ஏந்தியவன், ஒரு செவியில் குழையை அணிந்தவன்; (உழை - மான்); (அப்பர் தேவாரம் - 5.38.1 - "குழைகொள் காதினர் கோவண ஆடையர் உழையர்");
கூத்தாடும் அழகன் ஆக்கூரைத் தொழ - கூத்தாடும் சுந்தரன் உறைகின்ற ஆக்கூரைத் தொழுதால்;
நம் துயர் போம் - நம் துன்பம் தீரும்; (போதல் - ஒழிதல்; நீங்குதல்);
5)
பொடிகொள் செம்மேனி
அடிகள் ஆக்கூரைக்
கடிகொள் மலர்தூவச்
செடிகொள் வினைதீர்வே.
பொடிகொள் செம்மேனி அடிகள் ஆக்கூரைக் - திருநீற்றைப் பூசிய செம்மேனியனான சிவபெருமான் உறைகின்ற ஆக்கூரை;
கடிகொள் மலர் தூவ - வாசமலர்களைத் தூவி வழிபட்டால்;
செடிகொள் வினை தீர்வே - துன்பம் தரும் வினைகள் நீங்கும்; (தீர்வு - நீங்குதல்);
6)
இரவில் நடமாடி
கரவில் கரத்தீசன்
அரவன் ஆக்கூரைப்
பரவப் பழிபோமே.
இரவில் நடம் ஆடி - நள்ளிருளில் கூத்தாடுபவன்;
கரவு இல் கரத்து ஈசன் - வஞ்சனையின்றி வழங்கும் திருக்கரம் உடைய ஈசன் - வரதஹஸ்தன்;
அரவன் - பாம்புகளை அணிந்த சிவபெருமான்;
பரவுதல் - துதித்தல்;
7)
திரைநீர் ஏற்றானே
அரனே ஆக்கூரில்
பரனே என்பாரை
விரவா வினைநோயே.
திரை-நீர் ஏற்றானே - அலைகளையுடைய கங்கையை ஏற்றவனே;
விரவா - நெருங்கா; (விரவுதல் - அடைதல்);
8)
பொருப்பை இடந்தானை
வருத்த விரல்வைத்த
அருத்தர் ஆக்கூர்நெஞ்(சு)
இருத்த இலைதுன்பே.
பொருப்பை இடந்தானை - கயிலைமலையைப் பெயர்த்த இராவணனை;
வருத்த விரல் வைத்த அருத்தர் - வருத்துவதற்கு அம்மலைமேல் விரலை ஊன்றிய செல்வர்; வேதப்பொருளாய் விளங்குபவர்; (அருத்தம் - அர்த்தம் - பொருள்; செல்வம்; பாதி;); (சம்பந்தர் தேவாரம் - 1.111.1 - "அருத்தனை அறவனை"); (அப்பர் தேவாரம் - 5.1.7 - "அருத்தனார் அடியாரை அறிவரே");
ஆக்கூர் நெஞ்சு இருத்த இலை துன்பே - அப்பெருமானார் உறைகின்ற திருஆக்கூரை மனத்தில் வைத்தால் துன்பம் இல்லை;
9)
அரிநான் முகனாருக்(கு)
அரியான் ஆக்கூரில்
பெரியான் அடியாரைப்
பிரியாத் துணைதானே.
அரி நான்முகனாருக்கு அரியான் - திருமால் பிரமன் இவர்களால் அடைவதற்கு அரியவன்;
ஆக்கூரில் பெரியான் - திருஆக்கூரில் உறைகின்ற மகாதேவன்;
அடியாரைப் பிரியாத் துணைதானே - அப்பெருமான் அடியாரை என்றும் நீங்காத துணை;
10)
நீற்றைப் பூசாதார்
கூற்றைக் கொள்ளேன்மின்
ஆற்றன் ஆக்கூரில்
ஏற்றன் எம்காப்பே.
நீற்றைப் பூசாதார் கூற்றைக் கொள்ளேன்மின் - திருநீறு பூசாதவர்கள் சொல்லும் பேச்சை நீங்கள் மதிக்கவேண்டா;
ஆற்றன், ஆக்கூரில் ஏற்றன், எம் காப்பே - கங்காதரன், இடப-வாகனன், ஆக்கூரில் எழுந்தருளியிருக்கும் அப்பெருமான் நம் துணை; (காப்பு - பாதுகாவல்);
11)
மணியார் கண்டத்தன்
பணிசேர் அகலத்தான்
அணியார் ஆக்கூரைப்
பணிவார் கவலாரே.
மணி ஆர் கண்டத்தன் - நீலமணி போல் கண்டம் உடையவன்;
பணி சேர் அகலத்தான் - பாம்பை மார்பில் அணிந்தவன்; (பணி - நாகப்பாம்பு); (அகலம் - மார்பு); (சம்பந்தர் தேவாரம் - 2.40.9 - "அரவஞ்சேர் அகலத்தான்");
அணி ஆர் ஆக்கூரைப் பணிவார் கவலாரே - அழகிய ஆக்கூரைப் பணியும் பக்தர்கள் மனம் வருந்தார்; (கவல்தல் - மனம்வருந்துதல்);
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment