Sunday, July 31, 2022

06.02.152 – கச்சி ஏகம்பம் - மிகுத்துப்புரி தீவினை - (வண்ணம்)

06.02.152 – கச்சி ஏகம்பம் - மிகுத்துப்புரி தீவினை - (வண்ணம்)

2011-08-06

06.02.152 - மிகுத்துப்புரி தீவினை - (கச்சி ஏகம்பம்)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனத்தத்தன தானன தானன

தனத்தத்தன தானன தானன

தனத்தத்தன தானன தானன .. தந்த தான )

(மதப்பட்டவி சாலக போலமு - திருப்புகழ் - திருப்புக்கொளியூர் அவிநாசி)


மிகுத்துப்புரி தீவினை யாயின

.. வெருட்டிப்பல பேரிடர் நாடொறும்

.. விளைத்துத்தொடர் வாழ்விது போயிரு .. கண்க ளால்நீர்

உகுத்துத்தமிழ் மாலைகள் நாவினொ

.. டுரைத்துத்திகழ் சேவடி யேதொழும்

.. உளத்தைத்தமி யேனுற ஆரருள் .. தந்து காவாய்

தொகுத்துப்புனை பூவொடு நீரொடு

.. துதித்துப்பணி மாணியை நாடிய

.. சுருக்கைப்பிடி காலனை வார்கழல் .. ஒன்றை வீசிச்

செகுத்துப்பரி வோடருள் நாயக

.. திரைத்துப்புனல் பாய்சடை யாயணி

.. திருக்கச்சியை யேயிட மாவுடை .. எம்பி ரானே.


பதம் பிரித்து:

மிகுத்துப் புரி தீவினை ஆயின

.. வெருட்டிப் பல பேர்-இடர் நாள்தொறும்

.. விளைத்துத் தொடர் வாழ்வு இது போய், இரு கண்களால் நீர்

உகுத்துத், தமிழ் மாலைகள் நாவினொடு

.. உரைத்துத், திகழ் சேவடியே தொழும்

.. உளத்தைத் தமியேன் உற ஆரருள் தந்து காவாய்;

தொகுத்துப் புனை பூவொடு நீரொடு

.. துதித்துப் பணி மாணியை நாடிய,

.. சுருக்கைப் பிடி காலனை வார்-கழல் ஒன்றை வீசிச்

செகுத்துப், பரிவோடு அருள் நாயக;

.. திரைத்துப் புனல் பாய் சடையாய்; அணி

.. திருக்கச்சியையே இடமா உடை எம்பிரானே.


* 3ம் அடி - மார்க்கண்டேயர்க்கு அருள்செய்ததைச் சுட்டியது.


மிகுத்துப் புரி தீவினை ஆயின வெருட்டிப் பல பேர்-இடர் நாள்தொறும் விளைத்துத் தொடர் வாழ்வு இது போய் - ஆணவத்தால் செய்த/செய்கின்ற தீவினையெல்லாம் என்னை அச்சுறுத்திப் பல பெரும் துன்பங்களைத் தினமும் உண்டாக்கித் தொடர்கின்ற இந்த வாழ்க்கை நீங்கி; (மிகுத்தல் - செருக்குதல்; பெருக்குதல்); (வெருட்டுதல் - அச்சுறுத்துதல்); (பேர் இடர் - பெரும் துன்பம்);

இரு கண்களால் நீர் உகுத்துத், தமிழ் மாலைகள் நாவினொடு உரைத்துத் - இரு கண்களால் கண்ணீர் சொரிந்து, தேவாரம் திருவாசகம் முதலிய தமிழ்ப் பாமாலைகளைப் பாடி; (உகுத்தல் - சிந்துதல்; சொரிதல்);

திகழ் சேவடியே தொழும் உளத்தைத் மியேன் உற ஆரருள் தந்து காவாய் - விளங்கும் உன் சிவந்த திருவடியையே வழிபடும் உள்ளத்தைக் கதியற்ற அடியேன் பெறுமாறு அரிய அருள் புரிந்து என்னைக் காத்தருள்க;


தொகுத்துப் புனை பூவொடு நீரொடு துதித்துப் பணி மாணியை நாடிய - பல பூக்களைச் சேகரித்து மாலை கட்டிச் சூட்டி, நீரால் அபிஷேகம் செய்து போற்றிப் பணிந்த மார்க்கண்டேயரைக் கொல்ல நெருங்கிய; (தொகுத்தல் - திரட்டுதல்); (புனைதல் - அலங்கரித்தல்; கட்டுதல்); (மாணி - இங்கே, மார்க்கண்டேயர்);

சுருக்கைப் பிடி காலனை வார்-கழல் ஒன்றை வீசிச் செகுத்துப், பரிவோடு அருள் நாயக - கையில் சுருக்கினைப் பிடித்த காலனை நீண்ட கழல் அணிந்த திருவடி ஒன்றை விசி உதைத்து அழித்து, மார்க்கண்டேயருக்கு இரங்கிய அருளிய தலைவனே; (சுருக்கு - Noose;) (வார் கழல் - நீண்ட கழலை அணிந்த திருவடி); (செகுத்தல் - அழித்தல்);


திரைத்துப் புனல் பாய் சடையாய் - அலைமோதிக் கங்கை பாயும் சடையினனே; (திரைத்தல் - அலையெழுதல்);

அணி திருக்கச்சியையே இடமா உடை எம்பிரானே - அழகிய திருக்கச்சி ஏகம்பத்தையே இடமாக உடைய எம்பெருமானே; (அணி - அழகிய); (கச்சி - கச்சி ஏகம்பம்); (இடமா - இடமாக);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment