Saturday, July 9, 2022

06.02.143 – நின்றவூர் (திருநின்றவூர்) - மற்றெவர் எனக்கிணை - (வண்ணம்)

06.02.143 – நின்றவூர் (திருநின்றவூர்) - மற்றெவர் எனக்கிணை - (வண்ணம்)


2011-02-25

06.02.143 - மற்றெவர் எனக்கிணை - (நின்றவூர் (திருநின்றவூர்))

-------------------------

(வண்ணவிருத்தம்;

தத்ததன தத்ததன தத்ததன

தத்ததன தத்ததன தத்ததன

தத்ததன தத்ததன தத்ததன .. தந்த தான )


(Not same syllabic pattern but very similar - சுத்தியந ரப்புடனெ லுப்புறுத சைக்குடலொ - திருப்புகழ் - சுவாமிமலை)


மற்றெவரெ னக்கிணையெ னப்புகலும்

.. அச்சுதன்ம லர்த்தவிசு டைப்பிரமன்

.. மத்தியில வர்க்குமிக அச்சமெழ .. நின்ற சோதி

வெற்றிமிகு பெற்றமிவர் பெற்றியினன்

.. அத்தியுரி பட்டெனவு கக்குமரன்

.. வெப்பமொடு தட்பமென நிற்குமிறை .. மங்கை பாகன்

துற்றவிடம் நிற்கமுகில் ஒத்தகறை

.. பெற்றகளன் அக்கரன்அ லைக்குநதி

.. சுற்றிவரு பொற்சடையன் நெக்குருகி .. அன்பி னோடு

சொற்றமிழி சைத்துவழி பட்டவரின்

.. நற்றுணைவன் முப்புரமெ ரித்தகணை

.. தொட்டவனி ருப்பதுதி ருப்பொலியும் .. நின்ற வூரே.


பதம் பிரித்து:

"மற்று எவர் எனக்கு இணை" எனப் புகலும்

.. அச்சுதன் மலர்த்-தவிசுடைப் பிரமன்

.. மத்தியில் அவர்க்கு மிக அச்சம் எழ நின்ற சோதி;

வெற்றிமிகு பெற்றம் இவர் பெற்றியினன்;

.. அத்தி உரி பட்டு என உகக்கும் அரன்;

.. வெப்பமொடு தட்பம் என நிற்கும் இறை; மங்கை பாகன்;

துற்ற விடம் நிற்க, முகில் ஒத்த கறை

.. பெற்ற களன்; அக்கரன்; அலைக்கும் நதி

.. சுற்றிவரு பொற்சடையன்; நெக்குருகி அன்பினோடு

சொற்றமிழ் இசைத்து வழிபட்டவரின்

.. நற்றுணைவன்; முப்புரம் எரித்த கணை

.. தொட்டவன் இருப்பது திருப் பொலியும் நின்றவூரே.


"மற்று எவர் எனக்கு இணை" எனப் புகலும் அச்சுதன் மலர்த்-தவிசுடைப் பிரமன் மத்தியில் அவர்க்கு மிக அச்சம் எழ நின்ற சோதி - தானே பரம் என்று வாது செய்த திருமால், மலர்மேல் இருக்கும் பிரமன் இவர்கள் நடுவே அவர்கள் அஞ்சும்படி உயர்ந்த சோதி சிவபெருமான்; (மத்தி - நடு); (அச்சுதன் - திருமால்); (தவிசு - ஆசனம்);

வெற்றிமிகு பெற்றம் இவர் பெற்றியினன் - வெற்றியை உடைய இடபத்தை வாகனமாக உடைய பெருமையினன்; (பெற்றம் - எருது); (இவர்தல் - ஏறுதல்; விரும்புதல்); (பெற்றி - பெருமை);

அத்தி உரி பட்டு என உகக்கும் அரன் - யானைத்தோலைப் பட்டாடையைப் போல் விரும்பும் ஹரன்; (அத்தி - யானை); (உரி - தோல்);

வெப்பமொடு தட்பம் என நிற்கும் இறை - வெம்மையானவன்; குளிர்ச்சியானவன்; இறைவன்; (அண்டிய காமனை எரித்தான்; அண்டும் பத்தரின் வினைச்சூட்டைத் தணிப்பான்); (நிற்றல் - இருத்தல்); (திருவாசகம் - சிவபுராணம் - 8.1 - "வெய்யாய் தணியாய்");

மங்கை பாகன் - அர்த்தநாரீஸ்வரன்;

துற்ற விடம் நிற்க, முகில் ஒத்த கறை பெற்ற களன் - உண்ட விடம் தங்க, அதனால் மேகம் போன்ற கறையை அடைந்த கண்டத்தை உடையவன்; (துறுதல் - உண்ணுதல்); (களன் - கண்டன்; களம் - கண்டம்); (சம்பந்தர் தேவாரம் - 3.113.9 - "கடல்விடம் உண்ட கருங்களனே" - கடல் விடமுண்ட கரிய கழுத்தை உடையவன்); (நிற்றல் - தங்குதல்);

அக்கரன் - அழிவற்றவன்;

அலைக்கும் நதி சுற்றிவரு பொற்சடையன் - அலைமோதுகின்ற கங்கை சுற்றித் திரிகின்ற பொற்சடையை உடையவன்; (அலைத்தல் - அலைமோதுதல்);

நெக்குருகி அன்பினோடு சொற்றமிழ் இசைத்து வழிபட்டவரின் நற்றுணைவன் - உள்ளம் உருகிப் பக்தியோடு தமிழ்ப்பாமாலைகளைப் பாடி வணங்குபவர்களுக்கு நல்ல துணைவன்; (சொற்றமிழ் - புகழ் தமிழ்; சொல்லுதல் - புகழ்தல்); (பெரிய புராணம் - "மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடு கென்றார் தூமறை பாடும் வாயார்); (துணைவன் - தோழன்; உதவுபவன்); (அப்பர் தேவாரம் - 4.11.1 - "நற்றுணையாவது நமச்சிவாயவே");

முப்புரம் எரித்த கணை தொட்டவன் இருப்பது திருப் பொலியும் நின்றவூரே - முப்புரங்களையும் எரித்த அம்பைச் செலுத்திய சிவபெருமான் உறையும் இடம் திரு விளங்குகின்ற திருநின்றவூர் ஆகும். (தொடுதல் - செலுத்துதல்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment