Friday, July 8, 2022

06.02.141 – நின்றவூர் (திருநின்றவூர்) - ஒற்றையென நிற்குமிறை - (வண்ணம்)

06.02.141 – நின்றவூர் (திருநின்றவூர்) - ஒற்றையென நிற்குமிறை - (வண்ணம்)


2011-02-24

06.02.141 - ஒற்றையென நிற்குமிறை - (நின்றவூர் (திருநின்றவூர்))

-------------------------

(வண்ணவிருத்தம்;

தத்ததன தத்ததன தத்ததன

தத்ததன தத்ததன தத்ததன

தத்ததன தத்ததன தத்ததன .. தந்த தான )


(Not same syllabic pattern but very similar - சுத்தியந ரப்புடனெ லுப்புறுத சைக்குடலொ - திருப்புகழ் - சுவாமிமலை)


(* திருநின்றவூர் - பூசலார் நாயனார் வாழ்ந்த தலம்)


ஒற்றையென நிற்குமிறை அற்றவரின்

.. உற்றதுணை பொற்கொடியை ஒத்தவுமை

.. ஒட்டியுறை கட்டழகன் நெற்றிவிழி .. கொண்ட நாதன்

சுற்றுமெரி மிக்கெழநி ருத்தமிடு

.. சொக்கனிடு பிச்சைமகிழ் பிச்சனொரு

.. துக்கமிலன் நச்சரவன் நற்பெயரை .. என்றும் ஓதும்

நற்றவர கத்தளித னைக்கருதி

.. நச்சியவர் உச்சியுறை அத்தன்முனம்

.. நக்குமதில் அட்டவன திச்சடையன் .. அண்ட வாணன்

சிற்றிடையர் மட்டலர்தொ டுத்துநிறை

.. சித்தமொடு சுற்றிவர இட்டமருள்

.. சிற்பரனி ருப்பதுதி ருப்பொலியும் .. நின்ற வூரே.


பதம் பிரித்து:

ஒற்றை என நிற்கும் இறை; அற்றவரின்

.. உற்ற துணை; பொற்கொடியை ஒத்த உமை

.. ஒட்டி உறை கட்டழகன்; நெற்றிவிழி கொண்ட நாதன்;

சுற்றும் எரி மிக்கு எழ நிருத்தம் இடு

.. சொக்கன்; இடு பிச்சை மகிழ் பிச்சன்; ஒரு

.. துக்கம் இலன்; நச்சரவன்; நற்பெயரை என்றும் ஓதும்

நற்றவர் அகத்-தளிதனைக் கருதி;

.. நச்சியவர் உச்சி உறை அத்தன்; முனம்

.. நக்கு மதில் அட்டவன்; நதிச்-சடையன்; அண்ட வாணன்;

சிற்றிடையர் மட்டு-அலர் தொடுத்து, நிறை

.. சித்தமொடு சுற்றிவர, இட்டம் அருள்

.. சிற்பரன், இருப்பது திருப்-பொலியும் நின்றவூரே.


ஒற்றை என நிற்கும் இறை - தனியன் ஆனவன்; ஒப்பற்றவன்; ஏகன்; இறைவன்; (ஒற்றை - ஒன்று; தனிமை; ஒப்பின்மை);

அற்றவரின் உற்ற துணை - அன்பர்க்கு அன்பன்; வேறு பற்றின்றித் தன்னை அடைந்தவர்களைக் காப்பவன்;

பொற்கொடியை ஒத்த உமை ஒட்டி உறை கட்டழகன் - அழகிய கொடி போன்ற உமை திருமேனியில் சேர்ந்து இருக்கின்ற பேரழகன்;

நெற்றிவிழி கொண்ட நாதன் - நெற்றிக்கண் உடைய தலைவன்;

சுற்றும் எரி மிக்கு எழ நிருத்தம் இடு சொக்கன் - சுற்றிலும் தீ மிகுந்து எழும் சுடுகாட்டில் கூத்து ஆடுகின்ற சொக்கன்; (சுற்றும் - சூழ); (சொக்கன் - சொக்கம் என்ற தாண்டவம் ஆடுபவன்; அழகன்/சிவன்);

இடு பிச்சை மகிழ் பிச்சன் - பிச்சையை விரும்பும் பேரருளாளன்; (பிச்சன் - பித்தன்); (பித்தன் - பேரருளாளன் என்ற பொருள்);

ஒரு துக்கம் இலன் - இன்பவடிவினன்;

நச்சரவன் - விஷப்பாம்பை அணிந்தவன்;

நற்பெயரை என்றும் ஓதும் நற்றவர் அகத்-தளிதனைக் கருதி - நல்ல திருநாமத்தை எப்பொழுதும் ஓதிய நல்ல தவம் உடையவரான பூசலார் நாயனாரது மனக்கோயிலை விரும்பியவன்; (அகத் தளி - மனக்கோயில்); (கருதுதல் - விரும்புதல்; மதித்தல்); (கருதி - கருதியவன்; ஏறி, சூடி, முதலான பெயர்ச்சொற்கள் ஒத்த அமைப்பு);

நச்சியவர் உச்சி உறை அத்தன் - தன்னை விரும்பியவர்களது உச்சிமேல் உறையும் தந்தை; (நச்சுதல் - விரும்புதல்); (அத்தன் - தந்தை);

முனம் நக்கு மதில் அட்டவன் - முன்பு சிரித்தே முப்புரங்கள் அழித்தவன்; (நகுதல் - சிரித்தல்); (அடுதல் - அழித்தல்);

நதிச்-சடையன் - சடையில் கங்கையை அணிந்தவன்;

அண்ட வாணன் - எங்கும் நிறைந்தவன்; சர்வவியாபி; (அண்டவாணன் - அண்டம் முழுதும் வாழ்நன். வாணன் மரூஉமொழி);

சிற்றிடையர் மட்டு-அலர் தொடுத்து, நிறை சித்தமொடு சுற்றிவர, இட்டம் அருள் சிற்பரன் - சிறிய இடையை உடைய பெண்கள் வாசமலர்களைத் தொடுத்து, அன்பு நிறைந்த மனத்தோடு வலம் செய்து வழிபட, அவர்களுக்கு இரங்கி அவர்களது விருப்பங்களை (விரும்பிய வரங்களை) அருள்கின்றவன், அறிவுக்கு எட்டாதவன்; (மட்டு - தேன்; வாசனை); (நிறை சித்தம் - அன்பு நிறைந்த மனம்); (இட்டம் - இஷ்டம் - விருப்பம்); (சிற்பரன் - சித் பரன் - அறிவிற்கு எட்டாதவன்; ஞானத்தால் மேலானவன்);

இருப்பது திருப்-பொலியும் நின்றவூரே - அப்பெருமான் உறையும் தலம் திரு விளங்குகின்ற திருநின்றவூர்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment