Saturday, July 16, 2022

06.02.148 – காழி - இக்குச் சாறென - (வண்ணம்)

06.02.148 – காழி - இக்குச் சாறென - (வண்ணம்)

2011-05-29

06.02.148 - இக்குச் சாறென - (காழி)

-------------------------

(வண்ணவிருத்தம்;

தத்தத் தானன தானன தானன

தத்தத் தானன தானன தானன

தத்தத் தானன தானன தானன .. தனதான )


(அக்குப் பீளைமு ளாவிளை - திருப்புகழ் - சிதம்பரம்)


இக்குச் சாறென ஆரமு தேயென

.. இட்டத் தோடுச தாமனை வாழ்வெனும்

.. எட்டிச் சாறதில் வீழ்மட மேமலி .. அடியேனும்

இக்குப் பாயம்வி ழாமுன மோவென

.. இச்சித் தார்கள ழாமுன மாசுணம்

.. எற்புத் தாரணி வாயுனை நாடிட .. அருளாயே

பக்கத் தாயிழை சேர்திரு மேனிய

.. பற்றற் றார்பணி பூதிய சேவடி

.. பற்றித் தேவர்கள் காவென மூவெயில் .. எரியீசா

நக்கித் தேனுண மாமல ரார்பொழில்

.. நச்சிச் சேரளி பாடிடு காழியில்

.. நற்பொற் றாளடி யார்தொழ மேவிய .. பெருமானே


பதம் பிரித்து:

இக்குச்-சாறு என, ஆரமுதே என,

.. இட்டத்தோடு சதா மனை-வாழ்வு எனும்

.. எட்டிச்-சாறு-அதில் வீழ் மடமே மலி அடியேனும்,

இக்-குப்பாயம் விழாமுனம், ""வென

.. இச்சித்தார்கள் அழாமுனம், மாசுணம்

.. எற்புத்-தார் அணிவாய், உனை நாடிட அருளாயே;

பக்கத்து ஆயிழை சேர் திருமேனிய;

.. பற்றற்றார் பணி பூதிய; சேவடி

.. பற்றித் தேவர்கள் "கா"வென மூவெயில் எரி-ஈசா;

நக்கித் தேன் உண மாமலர் ஆர் பொழில்

.. நச்சிச் சேர் அளி பாடிடு காழியில்,

.. நற்பொற்றாள் அடியார் தொழ மேவிய பெருமானே.


இக்குச்-சாறு என, ஆரமுதே என, - இனிக்கும் கருப்பஞ்சாறு என்றும், அரிய அமுதம் என்றும் எண்ணி; (இக்கு - கரும்பு);

இட்டத்தோடு சதா மனை-வாழ்வு எனும் எட்டிச்-சாறு-அதில் வீழ் மடமே மலி அடியேனும் - விருப்பத்தோடு எப்பொழுதும் மனைவாழ்க்கை என்ற (கசக்கின்ற) எட்டிச்சாற்றில் போய் விழுகின்ற அறியாமையே மிகும் நானும்; (எட்டி - எட்டிக்காய்); (மடம் - அறியாமை); (மலிதல் - மிகுதல்);

இக்-குப்பாயம் விழாமுனம், ""வென இச்சித்தார்கள் அழாமுனம் - சட்டை போன்ற இவ்வுடல் விழுந்துவிடுவதன்முன்னே, குடும்பத்தினர் எல்லாம் "" என்று அழுவதன்முன்னே; (குப்பாயம் - சட்டை; உடல்); (திருவாசகம் - ஆசைப்பத்து - 8.25.2 - "தோல்போர்த்த குப்பாயம் புக் கிருக்ககில்லேன்"); (இச்சித்தார்கள் - விரும்பியவர்கள்);

மாசுணம் எற்புத்-தார் அணிவாய், உனை நாடிட அருளாயே - பாம்பையும் எலும்பு மாலையையும் அணிபவனே, உன்னை விரும்பி அடைய அருள்புரிவாயாக; (மாசுணம் - பாம்பு); (எற்புத்தார் - என்பு+தார் - எலும்புமாலை);

பக்கத்து ஆயிழை சேர் திருமேனிய - ஒரு பக்கத்தில் பார்வதி கூறாகச் சேர்கின்ற திருமேனியை உடையவனே; (ஆயிழை - பெண்);

பற்றற்றார் பணி பூதிய - பற்றற்றவர்கள் வணங்கும் திருநீறு பூசிய பெருமானே; (பூதிய - பூதியனே என்ற விளி); (பூதி - சாம்பல்; திருநீறு; செல்வம்);

சேவடி பற்றித் தேவர்கள் "கா"வென மூவெயில் எரி-ஈசா - உன் சிவந்த திருவடியைப் பிடித்துக்கொண்டு "காத்தருள்" என்று தேவர்கள் வேண்டவும், முப்புரங்களை எரித்த ஈசனே;

நக்கித் தேன் உண மாமலர் ஆர் பொழில் நச்சிச் சேர் அளி பாடிடு காழியில் - நக்கித் தேன் உண்பதற்காக வண்டுகள் அழகிய மலர்கள் நிறைந்த சோலைகளை விரும்பிச் சேர்ந்து ரீங்காரம் செய்து பாடுகின்ற சீகாழிப்பதியில்; (ஆர்தல் - நிறைதல்); (நச்சுதல் - விரும்புதல்); (அளி - வண்டு);

நற்பொற்றாள் அடியார் தொழ மேவிய பெருமானே - நல்ல பொன்னடியை அடியார்கள் தொழ எழுந்தருளிய சிவபெருமானே;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment