06.02.152 - கச்சி ஏகம்பம் - மிகுத்துப்புரி தீவினை - (வண்ணம்)
2011-08-06
06.02.152 - மிகுத்துப்புரி தீவினை - (கச்சி ஏகம்பம்)
--------------------------------------------------
(வண்ணவிருத்தம்;
தனத்தத்தன தானன தானன
தனத்தத்தன தானன தானன
தனத்தத்தன தானன தானன .. தந்ததான )
(மதப்பட்டவி சாலக போலமு - திருப்புகழ் - திருப்புக்கொளியூர் அவிநாசி)
மிகுத்துப்புரி தீவினை யாயின
.. .. .. வெருட்டிப்பல பேரிடர் நாடொறும்
.. .. விளைத்துத்தொடர் வாழ்விது போயிரு .. கண்களால்நீர்
.. உகுத்துத்தமிழ் மாலைகள் நாவினொ
.. .. .. டுரைத்துத்திகழ் சேவடி யேதொழும்
.. .. உளத்தைத்தமி யேனுற ஆரருள் .. தந்துகாவாய்
சகத்தைப்படை பூமிசை யான்முகில்
.. .. .. நிறத்துத்திரு மாலிவர் தாள்முடி
.. .. தனைச்சற்றறி யாவண(ம்) நீடிவி ளங்குசோதீ
.. அகத்திற்பல நாளொரு கோயிலை
.. .. .. அமைத்துத்தொழு பூசலின் ஓர்தளி
.. .. அதிற்புக்கருள் நேய-அ ராவல்குல் .. மங்கைபாகா
நகைத்துத்திரு மாமலை வீசிய
.. .. .. செருக்குத்தலை ஆறொடு நாலனை
.. .. நசுக்கிப்பிற கேழிசை பாடவ .. ரங்களீவாய்
.. பகைத்துத்திரி தானவர் மூவெயில்
.. .. .. எரிக்கத்தழல் ஆர்கணை ஏவிய
.. .. பருப்பொற்சிலை ஓர்கரம் ஏறிய .. வென்றிவீரா
தொகுத்துப்புனை பூவொடு நீரொடு
.. .. .. துதித்துப்பணி மாணியை நாடிய
.. .. சுருக்கைப்பிடி காலனை வார்கழல் .. ஒன்றைவீசிச்
.. செகுத்துப்பரி வோடருள் நாயக
.. .. .. திரைத்துப்புனல் பாய்சடை யாயணி
.. .. திருக்கச்சியை யேயிட மாவுடை .. எம்பிரானே.
பதம் பிரித்து:
மிகுத்துப் புரி தீவினை ஆயின
.. .. .. வெருட்டிப் பல பேர்-இடர் நாள்தொறும்
.. .. விளைத்துத் தொடர் வாழ்வு இது போய், இரு கண்களால் நீர்
.. உகுத்துத், தமிழ் மாலைகள் நாவினொடு
.. .. .. உரைத்துத், திகழ் சேவடியே தொழும்
.. .. உளத்தைத் தமியேன் உற ஆரருள் தந்து காவாய்;
சகத்தைப் படை- பூமிசையான், முகில்
.. .. .. நிறத்துத் திருமால் இவர் தாள்-முடி
.. .. தனைச் சற்று அறியாவண(ம்) நீடி விளங்கு-சோதீ;
.. அகத்திற் பல நாள் ஒரு கோயிலை
.. .. .. அமைத்துத் தொழு பூசலின் ஓர் தளி-
.. .. அதிற்-புக்கருள் நேய; அரா-அல்குல் மங்கைபாகா;
நகைத்துத் திரு-மா-மலை வீசிய
.. .. .. செருக்குத்-தலை ஆறொடு நாலனை
.. .. நசுக்கிப், பிறகு ஏழிசை பாட வரங்கள் ஈவாய்;
.. பகைத்துத் திரி தானவர் மூவெயில்
.. .. .. எரிக்கத் தழல் ஆர் கணை ஏவிய
.. .. பருப்-பொற்சிலை ஓர் கரம் ஏறிய வென்றி-வீரா;
தொகுத்துப் புனை பூவொடு நீரொடு
.. .. .. துதித்துப் பணி மாணியை நாடிய,
.. .. சுருக்கைப் பிடி காலனை வார்-கழல் ஒன்றை வீசிச்
.. செகுத்துப், பரிவோடு அருள் நாயக;
.. .. .. திரைத்துப் புனல் பாய் சடையாய்; அணி
.. .. திருக்கச்சியையே இடமா உடை எம்பிரானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;
* குறிப்பு - அரையடிதோறும் முதலில் மோனை வரும் இடத்தில் எதுகை அமைந்த பாடல்;
மிகுத்துப் புரி தீவினை ஆயின வெருட்டிப் பல பேர்-இடர் நாள்தொறும் விளைத்துத் தொடர் வாழ்வு இது போய் - ஆணவத்தால் செய்த/செய்கின்ற தீவினையெல்லாம் என்னை அச்சுறுத்திப் பல பெரும் துன்பங்களைத் தினமும் உண்டாக்கித் தொடர்கின்ற இந்த வாழ்க்கை நீங்கி; (மிகுத்தல் - செருக்குதல்; பெருக்குதல்); (வெருட்டுதல் - அச்சுறுத்துதல்); (பேர் இடர் - பெரும் துன்பம்);
இரு கண்களால் நீர் உகுத்துத், தமிழ் மாலைகள் நாவினொடு உரைத்துத் - இரு கண்களால் கண்ணீர் சொரிந்து, தேவாரம் திருவாசகம் முதலிய தமிழ்ப் பாமாலைகளைப் பாடி; (உகுத்தல் - சிந்துதல்; சொரிதல்);
திகழ் சேவடியே தொழும் உளத்தைத் தமியேன் உற ஆரருள் தந்து காவாய் - விளங்கும் உன் சிவந்த திருவடியையே வழிபடும் உள்ளத்தைக் கதியற்ற அடியேன் பெறுமாறு அரிய அருள் புரிந்து என்னைக் காத்தருள்க;
சகத்தைப் படை- பூமிசையான், முகில் நிறத்துத் திருமால் இவர் தாள்-முடிதனைச் சற்று அறியாவண(ம்) நீடி விளங்கு-சோதீ - உலகத்தைப் படைக்கும் தொழிலுடையவனான தாமரைமேல் இருக்கும் பிரமன், மேகம் போன்ற நிறமுடைய திருமால் என்ற இவ்விருவராலும் அடிமுடியைச் சிறிதும் அறியமுடியாதபடி நீண்டு திகழ்ந்த ஜோதியே; (சகம் - ஜகம் - உலகம்); (பூமிசையான் - பூவின்மேல் இருப்பவன் - பிரமன்); (சற்று - கொஞ்சமும்; உம்மை தொக்கது); (நீடுதல் - நீள்தல்);
அகத்தில் பல நாள் ஒரு கோயிலை அமைத்துத் தொழு பூசலின் ஓர் தளி-அதில் புக்கருள் நேய - மனத்தில் பல நாள்களாக ஒரு கோயிலைக் கட்டி வணங்கிய பூசலார் நாயனாரின் ஒப்பற்ற கோயிலில் எழுந்தருளிய அன்பனே; (அகம் - மனம்); (ஓர் - ஒப்பற்ற); (தளி - கோயில்); (பூசல் - பூசலார் நாயனார்); (நேயன் - அன்பன்); (சுந்தரர் தேவாரம் - 7.39.11 - "நின்றவூர்ப் பூசல் வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்"); (பெரியபுராணம் - பூசலார் புராணம் - 12.65.10 - "நின்றவூர்ப் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த நன்று நீடாலயத்து நாளைநாம் புகுவோம்");
அரா-அல்குல் மங்கைபாகா - பாம்பின் படம் போன்ற இடுப்பை உடைய உமையை ஒரு பாகமாக உடையவனே; (அரா - பாம்பு); (அல்குல் - இடுப்பு); (சம்பந்தர் தேவாரம் - 1.40.9 - "வரியரவல்குல் மடந்தையொர் பாகம் ஆயவன்");
நகைத்துத் திரு-மா-மலை வீசிய செருக்குத்-தலை ஆறொடு நாலனை நசுக்கிப், பிறகு ஏழிசை பாட வரங்கள் ஈவாய் - (இகழ்ந்து) சிரித்துக் கயிலைமலையைப் பெயர்த்து எறிய முயன்ற ஆணவம் நிறைந்த பத்துத்தலை உடைய இராவணனை நசுக்கிப், பின்னர் அவன் (அழுது) இசைபாடி இறைஞ்ச, அவனுக்கு இரங்கி வரங்கள் ஈந்தவனே; (நகைத்தல் - சிரித்தல்; அவமதிப்பைக் காட்டிச் சிரித்தல்); (செருக்கு - ஆணவம்);
பகைத்துத் திரி தானவர் மூவெயில் எரிக்கத் தழல் ஆர் கணை ஏவிய பருப்-பொற்சிலை ஓர் கரம் ஏறிய வென்றி-வீரா - (தேவர்களைப்) பகைத்து எங்கும் திரிந்த அசுரர்களது முப்புரங்களை எரிக்கத் தீப் பொருந்திய கணையை எய்த பெரிய பொன்மலையால் (மேருமலையால்) ஆன வில்லை ஒரு கையில் ஏந்திய வெற்றிமிக்க வீரனே; (தானவர் - அசுரர்); (எயில் - மதில்); (ஆர்தல் - பொருந்துதல்); (சிலை - மலை; வில்); (வென்றி - வெற்றி);
தொகுத்துப் புனை பூவொடு நீரொடு துதித்துப் பணி மாணியை நாடிய - பல பூக்களைச் சேகரித்து மாலை கட்டிச் சூட்டி, நீரால் அபிஷேகம் செய்து போற்றிப் பணிந்த மார்க்கண்டேயரைக் கொல்ல நெருங்கிய; (தொகுத்தல் - திரட்டுதல்); (புனைதல் - அலங்கரித்தல்; கட்டுதல்); (மாணி - இங்கே, மார்க்கண்டேயர்);
சுருக்கைப் பிடி காலனை வார்-கழல் ஒன்றை வீசிச் செகுத்துப், பரிவோடு அருள் நாயக - கையில் சுருக்கினைப் பிடித்த காலனை நீண்ட கழல் அணிந்த திருவடி ஒன்றை விசி உதைத்து அழித்து, மார்க்கண்டேயருக்கு இரங்கிய அருளிய தலைவனே; (சுருக்கு - Noose;) (வார் கழல் - நீண்ட கழலை அணிந்த திருவடி); (செகுத்தல் - அழித்தல்);
திரைத்துப் புனல் பாய் சடையாய் - அலைமோதிக் கங்கை பாயும் சடையினனே; (திரைத்தல் - அலையெழுதல்);
அணி திருக்கச்சியையே இடமா உடை எம்பிரானே - அழகிய திருக்கச்சி ஏகம்பத்தையே இடமாக உடைய எம்பெருமானே; (அணி - அழகிய); (கச்சி - கச்சி ஏகம்பம்); (இடமா - இடமாக);
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------