Tuesday, June 30, 2020

03.05.073 – கடவூர் - கொடிய வினை மிக - (வண்ணம்)

03.05.073 – கடவூர் - கொடிய வினை மிக - (வண்ணம்)

2009-01-14

3.5.73) கொடிய வினை மிக - கடவூர் - (திருக்கடவூர்)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதனன தனன தந்தத் .. தனதான )

(இயலிசையி லுசித வஞ்சிக் கயர்வாகி - திருப்புகழ் - திருச்செந்தூர்)


கொடியவினை மிகம யங்கிக் .. குயில்போலும்

.. குரலியர்கள் தமைவி ரும்பிப் .. புவிமீது

மிடியிலுழல் எனது துன்பத் .. தொடர்மாய

.. விடையமரும் உனைவ ணங்கித் .. தொழுவேனோ

அடிதொழுத சிறுவன் அஞ்சப் .. பகடேறி

.. அருகடையு(ம்) நமனை அங்குச் .. செறுகாலா

முடியின்மிசை மதியி லங்கக் .. கடவூரில்

.. முனிவர்தொழ உறைபு யங்கப் .. பெருமானே.


பதம் பிரித்து:

கொடிய வினை மிக, மயங்கிக் குயில்போலும்

.. குரலியர்கள்தமை விரும்பிப் புவிமீது

மிடியில் உழல் எனது துன்பத்தொடர் மாய,

.. விடை அமரும் உனை வணங்கித் தொழுவேனோ;

அடி தொழுத சிறுவன் அஞ்சப் பகடு ஏறி

.. அருகு அடையும் நமனை அங்குச் செறு காலா;

முடியின்மிசை மதி இலங்கக், கடவூரில்

.. முனிவர் தொழ உறை புயங்கப் பெருமானே.


கொடிய வினை மிக - தீவினை மிகும்படி / தீவினை மிகுந்ததனால்;

மிக மயங்கிக் குயில்போலும் குரலியர்கள்தமை விரும்பிப் - மிகவும் மதி மயங்கிக், குயில்போல் இனியமொழி பேசும் பெண்கள்மேல் ஆசையுற்று; ("மிக" என்ற சொல்லை இடைநிலைத் தீவகமாக இப்படி இருபக்கமும் இயைத்தும் பொருள்கொள்ளல் ஆம்);

புவிமீது மிடியில் உல் எனது துன்பத்தொடர் மாய - இவ்வுலகில் வாடும் என் துன்பத்தொடர் அழியுமாறு; (மிடி - வறுமை; துன்பம்);

விடைமரும் உனை வணங்கித் தொழுவேனோ - இடபவாகனனான உன்னை வணங்கிக் கைகூப்பி வழிபடுமாறு அருள்வாயாக; (அமர்தல் - விரும்புதல்); (சுந்தரர் தேவாரம் - 7.9.5 - "வணங்கித்தொழு வாரவர் மால்பிரமன்")

அடி தொழுத சிறுவன் அஞ்சப் பகடு ஏறி அருகு அடையும் மனை அங்குச் செறு காலா - உன் திருவடியைத் தொழுத மார்க்கண்டேயர் அஞ்சும்படி அவரைக் கொல்ல எண்ணி எருமைக்கடாவின்மேல் ஏறி அவரை நெருங்கிய கூற்றுவனை அப்பொழுது உதைத்து அழித்த காலகாலனே; (பகடு - எருமைக்கடா); (செறுதல் - அழித்தல்);

முடியின்மிசை மதிலங்கக் - திருமுடிமேல் பிறைச்சந்திரன் ஒளிவீச அணிந்து; (இலங்குதல் - விளங்குதல்);

கடவூரில் முனிவர் தொழ உறை புயங்கப் பெருமானே - முனிவர்கள் தொழுது போற்றத் திருக்கடவூரில் உறைகின்ற புயங்கப் பெருமானே; (புயங்கம் - புஜங்கம் - பாம்பு); (திருவாசகம் - யாத்திரைப் பத்து - 8.45.1 - "பூவார் சென்னி மன்னனெம் புயங்கப் பெருமான்" - பாம்பணிந்த எங்கள் பெருமான்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Sunday, June 28, 2020

03.05.072 – பொது - பாடுவதோ அறியேன் - (வண்ணம்)

03.05.072 – பொது - பாடுவதோ அறியேன் - (வண்ணம்)

2009-01-13

3.5.72) பாடுவதோ அறியேன் - (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானன தானன தானன தானன

.. தானன தானன .. தனதான )

(ஏவினை நேர்விழி மாதரை - திருப்புகழ் - திருச்செந்தூர்)


பாடுவ தோவறி யேனுன சீரிரு

..... பாதமி ராவொடு .. பகலாகப்

.. பாடிடு வாரொடு சேரகி லேனிழி

..... பாதையி லேகுழி .. விழுமாறே

ஓடுகி றேனத னாலிட ரானவை

..... ஓய்வில தாய்வர .. உழல்வேனும்

.. ஊனமெ லாமற நாவொடு நாமம

..... தோதிடு மாறருள் .. புரியாயே

நீடுயர் தீயென ஆகிய நாளினில்

..... நேடிய மாலயன் .. அறியாத

.. நீர்மைய னேநதி யோடுநி லாமதி

..... நீள்சடை மேலுற .. வருவோனே

ஆடும ராவரை நாணென வாகிட

..... ஆலமர் மாமிட .. றுடையோனே

.. ஆயிழை கூறுடை யாய்விடை யேறிய

..... ஆரழ காசிவ .. பெருமானே.


பதம் பிரித்து:

பாடுவதோ அறியேன் உன சீர் இரு

..... பாதம்; இராவொடு .. பகலாகப்

.. பாடிடுவாரொடு சேரகிலேன்; இழி

..... பாதையிலே குழி விழுமாறே

ஓடுகிறேன்; அதனால் இடர் ஆனவை

..... ஓய்வு இலதாய் வர .. உழல்வேனும்,

.. ஊனம் எலாம் அற, நாவொடு நாமமது

..... ஓதிடுமாறு அருள் புரியாயே;

நீடு உயர் தீ என ஆகிய நாளினில்

..... நேடிய மால் அயன் அறியாத

.. நீர்மையனே; நதியோடு நிலாமதி

..... நீள்சடைமேல் உற .. வருவோனே;

ஆடும் அரா அரைநாண் என ஆகிட,

..... ஆல் அமர் மா மிடறு .. உடையோனே;

.. ஆயிழை கூறுடையாய்; விடை ஏறிய

..... ஆரழகா; சிவ பெருமானே.


பாடுவதோ அறியேன் உன சீர் இரு பாதம் - உனது புகழையும் சிறந்த இரு திருவடிகளையும் பாட அறியேன்; (- ஆறாம் வேற்றுமை உருபு; உன் + - உன – உன்னுடைய); (சீர் இரு பாதம் - சீர் மிக்க இரு திருவடிகள்; "சீரும் இரு திருவடிகளும்" என்று உம்மைத்தொகையாகவும் கொள்ளல் ஆம்):

இராவொடு பகலாகப் பாடிடுவாரொடு சேரகிலேன் - உன் இரு திருவடிகளைப் புகழ்ந்து இராப்பகலாகப் பாடும் அடியாரோடு சேரவும் மாட்டேன்;

இழி பாதையிலே குழி விழுமாறே ஓடுகிறேன் - இழிந்த வழியிலே அழிவைத் தேடி விரைகின்றேன்; (குழிவிழுதல் - தீநெறிப்படுதல்);

அதனால் இடர் ஆனவை ஓய்வு இலதாய் வர உழல்வேனும் - அதனால் துன்பங்களே இடைவிடாது வர உழல்கின்றேன்; அப்படிப்பட்ட அடியேனும்; (ஓய்வு - ஒழிவு; முடிவு); (உழலுதல் - நிலைகெடுதல்; அலைதல்);

ஊனம் எலாம் அற, நாவொடு நாமமது ஓதிடுமாறு அருள் புரியாயே - என் குற்றங்கள் எல்லாம் நீங்கும்படி, என் நாவினால் உன் திருப்பெயரை ஓதும்படி அருள்புரிவாயாக; (ஊனம் - குற்றம்; குறைவு; பழி);

நீடு உயர் தீ என ஆகிய நாளினில் நேடிய மால் அயன் அறியாத நீர்மையனே - அளவின்றி நீண்டு உயர்கின்ற சோதியாக எழுந்த அன்று, தேடிய திருமாலாலும் பிரமனாலும் அறியப்படாத தன்மையை உடையவனே; (நீடுதல் - நீளுதல்); (நேடுதல் - தேடுதல்); (நீர்மை - தன்மை);

நதியோடு நிலாமதி நீள்சடை மேலுற வருவோனே - கங்கையையும் நிலா வீசும் பிறைச்சந்திரனையும் நீண்ட சடை மேல் பொருந்தும்படி வருபவனே; (நிலாமதி - நிலாவையுடைய மதி; நிலா - சந்திரிகை - Moonlight); (உறுதல் - இருத்தல்; பொருந்துதல்; அடைதல்); (அப்பர் தேவாரம் - 5.12.9 - "நீண்ட சூழ்சடை மேலொர் நிலாமதி")

ஆடும் அரா அரைநாண் என ஆகிட, ஆல் அமர் மா மிடறு உடையோனே - அசைந்தாடும் பாம்பை அரைஞாணாகக் கட்டியவனே, விடம் தங்கிய அழகிய கண்டத்தை உடையவனே; (ஆல் - நஞ்சு); (அமர்தல் - இருத்தல்; படிதல்; விரும்புதல்); (மா - அழகிய); (மிடறு - கழுத்து); (திருவாசகம் - திருப்பொன்னூசல் - 8.16.4 - "நஞ்சமர் கண்டத்தன்");

ஆயிழை கூறு உடையாய் - உமையை ஒரு பாகமாக உடையவனே; (ஆயிழை - பெண் - உமை); (கூறு - பாகம்);

விடை ஏறிய ஆரழகா; சிவ பெருமானே - இடபத்தின் மேல் ஏறிவரும் பேரழகனே; சிவபெருமானே; (ஆரழகன் - ஆர் அழகன் - பேரழகன்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.05.071 – பொது - வாழத் தெரியாமல் - (வண்ணம்)

03.05.071 – பொது - வாழத் தெரியாமல் - (வண்ணம்)

2009-01-13

3.5.71) வாழத் தெரியாமல் - (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானத் .. தனதான )

(நீதத் துவமாகி - திருப்புகழ் - மதுரை)


வாழத் .. தெரியாமல்

.. வாடித் .. தவியாதே

வேழத் .. துரியானை

.. மேவித் .. தொழுநீயே

ஆழக் .. கடல்நாவாய்

.. ஆகித் .. துணையாவான்

வீழப் .. பதுசூடும்

.. வேணிப் .. பெருமானே.


பதம் பிரித்து:

வாழத் தெரியாமல்

.. வாடித் தவியாதே;

வேழத்து உரியானை

.. மேவித் தொழு நீயே;

ஆழக் கடல் நாவாய்

.. ஆகித் துணை ஆவான்;

வீழ் அப்பு அது சூடும்

.. வேணிப் பெருமானே.


* மனமே என்ற விளி தொக்கு நின்றது;


வாழத் தெரியாமல் வாடித் தவியாதே - மனமே! நன்னெறியில் வாழ அறியாமல் வாடி வருந்தாதே; ("மனமே" என்ற விளியை வருவித்துப் பொருள்கொள்க);

வேழத்துரியானை மேவித் தொழு நீயே - யானைத்தோலைப் போர்த்த சிவபெருமானை நீ விரும்பித் தொழுவாயாக; (வேழம் - யானை); (உரி - தோல்); (மேவுதல் - அடைதல்; விரும்புதல்);

ஆழக் கடல் நாவாய் ஆகித் துணைவான் - ஆழம் மிக்க வினைக்கடலில் ( / பிறவிக்கடலில்) படகாகி அவன் நம்மைக் காப்பான்; (நாவாய் - படகு; கப்பல்);

வீழ் அப்பு அது சூடும் வேணிப் பெருமானே - வானிலிருந்து விழுந்த கங்கையைச் சடையில் அணிந்த பெருமான்; (அப்பு - நீர்); (வேணி - சடை);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.05.070 – பொது - பாசத் தொடராலே - (வண்ணம்)

03.05.070 – பொது - பாசத் தொடராலே - (வண்ணம்)

2009-01-12

3.5.70) பாசத் தொடராலே - (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானத் .. தனதான )

(நீதத் துவமாகி - திருப்புகழ் - மதுரை)


பாசத் .. தொடராலே

.. பாரிற் .. படுவேனும்

பேசற் .. கரியாய்நின்

.. பேரைப் .. புகல்வேனோ

தாசர்க் .. கினியானே

.. சாலப் .. பழையானே

வாசக் .. குழலாள்சேர்

.. வாமப் .. பெருமானே.


பதம் பிரித்து:

பாசத் தொடராலே

.. பாரில் படுவேனும்

பேசற்கு அரியாய் நின்

.. பேரைப் புகல்வேனோ;

தாசர்க்கு இனியானே;

.. சாலப் பழையானே;

வாசக் குழலாள் சேர்

.. வாமப் பெருமானே.


பாசத் தொடராலே பாரில் படுவேனும் - பந்தத்தொடரால் இவ்வுலகில் துன்பமுறுகின்ற அடியேனும்; (படுதல் - துன்பமடைதல்);

பேசற்கு அரியாய் நின் பேரைப் புகல்வேனோ - சொல்லில் அடங்காதவனான உன் திருநாமத்தைச் சொல்லி உய்யுமாறு அருள்வாயாக; (அரியாய் - அரியவனே);

தாசர்க்கு இனியானே - அன்பருக்கு அன்பனே; அடியவர்களுக்கு இனிமை பயப்பவனே; (தாசன் - அடிமை; பக்தன்);

சாலப் பழையானே - மிகவும் தொன்மையானவனே;

வாசக் குழலாள் சேர் வாமப் பெருமானே - மணம் கமழும் கூந்தலை உடைய உமை ஒரு பாகமாகச் சேரும் இடப்பக்கத்தை உடைய அழகிய பெருமானே. (வாமம் - அழகு; இடப்பக்கம்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.05.069 – பொது - சேரற்கறியாது - (வண்ணம்)

03.05.069 – பொது - சேரற்கறியாது - (வண்ணம்)

2009-01-12

3.5.69) சேரற்கறியாது - (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானத் .. தனதான )

(நீதத் துவமாகி - திருப்புகழ் - மதுரை)


சேரற் .. கறியாது

.. தீதிற் .. சுழலாதுன்

சீரைச் .. சொலிவானம்

.. சேரப் .. பெறுவேனோ

நீரைப் .. புனைவானே

.. நேயர்க் .. கினியானே

வாரக் .. கொடிமாது

.. வாமப் .. பெருமானே.


பதம் பிரித்து:

சேரற்கு அறியாது

.. தீதிற் சுழலாது, உன்

சீரைச் சொலி வானம்

.. சேரப் பெறுவேனோ;

நீரைப் புனைவானே;

.. நேயர்க்கு இனியானே;

வாரக் கொடி-மாது

.. வாமப் பெருமானே.


சேரற்கு அறியாது தீதிற் சுழலாது - (சேரத் தக்கவர்களை அடையாமல்) கண்டவர்களோடு சேர்ந்து கேட்டில் சுழலாமல்; (சேரல் - சேர்தல் - சென்றடைதல்); (சுழல்தல் - சுற்றுதல்; சஞ்சலப்படுதல்);

ன் சீரைச் சொலி வானம் சேரப் பெறுவேனோ - உன் திருப்புகழைச் சொல்லிச் சிவலோகம் அடையை அருள்வாயாக; (சொலி - சொல்லி - இடைக்குறை); (வான் - பேரின்பம்; வீடு); (சம்பந்தர் தேவாரம் - 2.7.11 - "ஞானசம்பந்தன செந்தமிழ் ஒன்றும் உள்ளமுடையார் அடைவார் உயர் வானமே");

நீரைப் புனைவானே - கங்கையை அணிந்தவனே;

நேயர்க்கு இனியானே - அன்பருக்கு இனிமை பயப்பவனே;

வாரக் கொடி-மாது வாப் பெருமானே - அன்புடைய கொடி போன்ற உமையை இடப்பக்கத்தில் பாகமாக உடைய பெருமானே; (வாரம் - அன்பு); (வாமம் - இடப்பக்கம்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Saturday, June 27, 2020

03.05.068 – ஏடகம் (திருவேடகம்) - கைப்பதே நாடியிப் - (வண்ணம்)

03.05.068 – ஏடகம் (திருவேடகம்) - கைப்பதே நாடியிப் - (வண்ணம்)

2009-01-12

3.5.68) கைப்பதே நாடியிப் - ஏடகம் (திருவேடகம்)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தத்தனா தானனத் .. தனதான )

(பத்தியால் யானுனைப் பலகாலும் - திருப்புகழ் - இரத்தினகிரி)


கைப்பதே நாடியிப் .. புவிமீது

.. கட்டமே நாளுமுற் .. றழியாமல்

எய்ப்பிலா வாழ்வினைப் .. பெறுமாறே

.. இட்டமாய் யானுனைப் .. பணிவேனே

துப்பனே ஓர்பவர்க் .. கணியானே

.. சொக்கனே மாலயற் .. கரியானே

அப்பனே ஆரணப் .. பொருளானே

.. அக்கரா ஏடகப் .. பெருமானே.


பதம் பிரித்து:

கைப்பதே நாடி, இப் புவிமீது

.. கட்டமே நாளும் உற்று அழியாமல்,

எய்ப்பு இலா வாழ்வினைப் பெறுமாறே,

.. இட்டமாய் யான் உனைப் பணிவேனே;

துப்பனே; ஓர்பவர்க்கு அணியானே;

.. சொக்கனே; மால் அயற்கு அரியானே;

அப்பனே; ஆரணப் பொருளானே;

.. அக்கரா; ஏடகப் பெருமானே.


கைப்பதே நாடி இப் புவிமீது கட்டமே நாளும் உற்று ழியாமல் - இவ்வுலக வாழ்வில் கசக்கும் விஷயங்களையே (இனியவை என்று எண்ணி) விரும்பி அதனால் எந்நாளும் துன்பமே அடைந்து வருந்தாமல்; (கைத்தல் - கசத்தல்); (கட்டம் - கஷ்டம்); (அழிதல் - நாசமாதல்; வருந்துதல்);

எய்ப்பு இலா வாழ்வினைப் பெறுமாறே - இளைத்தல் இல்லாத இன்ப வாழ்வைப் பெறும்படி; (எய்ப்பு - சோர்தல்; இளைத்தல்);

இட்டமாய் யான் உனைப் பணிவேனே - விருப்பத்தோடு நான் உன்னைத் தொழுவேன்; (இட்டம் - இஷ்டம்);

துப்பனே - பற்றுக்கோடாக இருப்பவனே; பவளம் போன்ற செம்மேனியனே; (துப்பு - பவளம்; சிவப்பு; தூய்மை; பற்றுக்கோடு; துணை); (திருவாசகம் - அருட்பத்து - 8.29.6 - "துப்பனே தூயாய்");

ஓர்பவர்க்கு அணியானே - (உன்னைச்) சிந்திப்பவர்களுக்கு அண்மையில் (பக்கத்தில்) இருப்பவனே; (ஓர்தல் - எண்ணுதல்; தியானித்தல்); (அணியன் - அண்மையில் (அருகில்) உள்ளவன்);

சொக்கனே - அழகனே;

மால் அயற்கு அரியானே - (அடிமுடி தேடியபொழுது) திருமாலுக்கும் பிரமனுக்கும் அடைய இயலாதவனாக இருப்பவனே;

அப்பனே - தந்தையே;

ஆரணப் பொருளானே - வேதப்பொருளாக இருப்பவனே; (ஆரணம் - வேதம்);

அக்கரா - அழிவின்றி இருப்பவனே; (அக்கரன் - அக்ஷரன் - அழிவற்றவன்);

ஏடகப் பெருமானே - திருவேடகத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.05.067 – பொது - மணம் ஏறுகின்ற தமிழ் - (வண்ணம்)

03.05.067 – பொது - மணம் ஏறுகின்ற தமிழ் - (வண்ணம்)

2009-01-12

3.5.67) மணம் ஏறுகின்ற தமிழ் - (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதான தந்த .. தனதான )

(தனனா தனந்த .. தனதான - என்றும் கருதலாமோ)

(வரியார் கருங்கண் மடமாதர் - திருப்புகழ் - திருச்செந்தூர்)


மணமேறு கின்ற .. தமிழ்பாடி

.. மணிநீல கண்டம் .. நினைவேனோ

குணசீலர் உண்ப .. தரிதாகிக்

.. குடமாடும் உன்றன் .. முடிவீழ

உணர்வேதும் இன்றி .. நிலம்வீழ

.. உலவாத அன்பர் .. பசிதீரும்

வணநாளும் அன்று .. படியீவாய்

.. மதிசூடு கின்ற .. பெருமானே.


பதம் பிரித்து:

மணம் ஏறுகின்ற தமிழ் பாடி

.. மணிநீல கண்டம் நினைவேனோ;

குணசீலர் உண்பது அரிது ஆகிக்,

.. குடம் ஆடும் உன்றன் முடி வீழ,

உணர்வு ஏதும் இன்றி நிலம் வீழ,

.. உலவாத அன்பர் பசி தீரும்

வணம் நாளும் அன்று படி ஈவாய்;

.. மதி சூடுகின்ற பெருமானே.


* புகழ்த்துணை நாயனார் வரலாற்றைச் சுட்டியது;


மணம் ஏறுகின்ற தமிழ் பாடி - மணம் மிக்க தமிழ்ப் பாமாலைகளைப் பாடி;

மணிநீல கண்டம் நினைவேனோ - நீலமணி திகழும் கண்டத்தை நினைக்க அருள்வாயாக;

குணசீலர் உண்பது அரிது ஆகிக் - நற்குணம் மிக்க புகழ்த்துணை நாயனார் (பஞ்சகாலத்தினால்) உணவு இன்மையால் உண்ணாதவராகி;

குடம் ஆடும் உன்றன் முடி வீழ - (உன்னை வழிபடும்போது உடல் தளர்ந்து) நீர்க்குடம் அபிஷேகம் செய்யப்பெறும் கூத்தனான உன் திருமுடிமேல் விழ; (ஆடுதல் - நீராடுதல்; கூத்தாடுதல்);

உணர்வு ஏதும் இன்றி நிலம் வீழ - அவர் உணர்வழிந்து மயங்கிக் கீழே விழ;

உலவாத அன்பர் பசி தீரும் வணம் நாளும் அன்று படிவாய் - அவருக்கு இரங்கி, அழியாத அன்பை உடைய அவரது பசி தீரும்படி அந்தப் பஞ்சகாலத்தில் தினந்தோறும் அவருக்குப் படிக்காசு தந்தவனே; (உலத்தல் - குறைதல்; அழிதல்); (படி - படிக்காசு);

மதி சூடுகின்ற பெருமானே - பிறைச்சந்திரனைச் சூடிய பெருமானே;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.05.066 – ஏடகம் (திருவேடகம்) - மேலான நூலுரைத்த - (வண்ணம்)


03.05.066 – ஏடகம் (திருவேடகம்) - மேலான நூலுரைத்த - (வண்ணம்)

2009-01-11

3.5.66) மேலான நூலுரைத்த - ஏடகம் (திருவேடகம்)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானான தான தத்த .. தானான தான தத்த

தானான தான தத்த .. தனதான )

(நாவேறு பாம ணத்த - திருப்புகழ் - திருவேரகம்)


மேலான நூலு ரைத்த .. சீரான பாதை விட்டு

.... மேனாளி லேயி ழைத்த .. வினையாலே

.. வீணாக நானி லத்தில் .. ஆறாத ஆசை யுற்று

.... வீடாத நோவு பெற்று .. மிகவாடிக்

கோலான தேபி டிக்கு(ம்) .. மூதாகி ஆவி அற்ற

.... கூடாகி ஏகு தற்கு .. முனமேயெம்

.. கோவேகு ராவெ ருக்கு .. வானாறு சூடு சத்தி

.... கூறாவெ னாவ ழுத்து .. மனமீயாய்

மாலாகி வாது புக்க .. தீயோர்கள் நாண அற்றை

.... வாடாத மாலை உற்ற .. திருவேடு

.. மாவேக ஆறெ திர்த்து .. மேலோடி நீரில் நிற்கு(ம்)

.... மாணேறும் ஏட கத்தில் .. உறைவோனே

பாலான வாரி கக்கும் ஆலாலம் ஓரி னித்த

.... பாகாக வேம டுத்த .. மிடறானே

.. பாய்கால னாரி ரத்தம் ஆறாக ஓட வைத்த

.... பாதாஅ ராவ சைத்த .. பெருமானே.


பதம் பிரித்து:

மேல் ஆன நூல் உரைத்த சீரான பாதை விட்டு,

.... மேனாளிலே இழைத்த வினையாலே,

.. வீணாக நானிலத்தில் ஆறாத ஆசை உற்று,

.... வீடாத நோவு பெற்று மிக வாடிக்,

கோல் ஆனதே பிடிக்கும் மூது ஆகி, ஆவி அற்ற

.... கூடு ஆகி, ஏகுதற்கு முனமே, "எம்

.. கோவே; குரா எருக்கு .. வானாறு சூடு சத்தி

.... கூறா" எனா வழுத்து .. மனம் ஈயாய்;

மாலாகி வாது புக்க .. தீயோர்கள் நாண அற்றை

.... வாடாத மாலை உற்ற .. திரு-ஏடு

.. மா-வேக ஆறு எதிர்த்து .. மேல்-ஓடி நீரில் நிற்கு(ம்)

.... மாண் ஏறும் ஏடகத்தில் .. உறைவோனே;

பாலான வாரி கக்கும் ஆலாலம் ஓர் இனித்த

.... பாகாகவே மடுத்த .. மிடறானே;

.. பாய்-காலனார் இரத்தம் ஆறாக ஓட வைத்த

.... பாதா; அரா அசைத்த .. பெருமானே.


மேல் ஆன நூல் உரைத்த சீரான பாதை விட்டு, - சிறந்த நூல்களில் சொல்லப்படும் நல்ல வழியில் செல்லாமல்; (மேல் - மேன்மை); (சீர் - நன்மை; சிறப்பு);

மேனாளிலே இழைத்த வினையாலே - முன்பு செய்த தீவினையின் பயனால்; (மேனாள் - மேல் நாள் - முன்னாள்; முற்காலம்);

வீணாக நானிலத்தில் ஆறாத ஆசை உற்று - இப்பூமியில் பயனின்றித் தணியாத ஆசை மனத்தில் கொண்டு; (நானிலம் - பூமி); (ஆறுதல் - தணிதல்; அடங்குதல்);

வீடாத நோவு பெற்று மிக வாடி - என்றும் ஒழியாத துன்பம் பெற்று, மிகவும் சோர்ந்து; (வீடுதல் - விடுதல்; ஒழிதல்);

கோல் ஆனதே பிடிக்கும் மூது ஆகி - கைக்கோல் ஊன்றும் கிழட்டுப்பருவம் அடைந்து; (மூது - முதுமை);

ஆவி அற்ற கூடு ஆகி ஏகுதற்கு முனமே - உயிரற்ற உடல் ஆகிச், செல்வதற்கு முன்பே; (கூடு - உடம்பு); (ஏகுதல் - போதல்);

"எம் கோவே - "எம் அரசே;

குரா ருக்கு வானாறு சூடு சத்தி கூறா" - குராமலர், எருக்கமலர், கங்கை இவற்றையெல்லாம் சூடிய, உமைபங்கனே; (வானாறு - கங்கை); (சத்தி - சக்தி; உமை); (திருஈங்கோய்மலை எழுபது - 11.10.65 - "ஈங்கோயே செஞ்சடைமேல் வானாறு வைத்தான் மலை");

னா வழுத்து மனம் ஈயாய் - என்று துதிக்கும் மனத்தை எனக்கு அருள்வாயாக; (எனா - என்னா - என்று; - செய்து என்ற பொருளில் வரும் செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்);

மாலாகி வாது புக்க தீயோர்கள் நாண – அறியாமையாலும் ஆணவத்தாலும் (சம்பந்தரோடு) வாது செய்த தீய சமணர்கள் நாணும்படி; (மால் - மயக்கம்); (புக்க - புகுந்த; புகுதல் - செய்யப்புகுதல்; தொடங்குதல்);

அற்றை வாடாத மாலை உற்ற திரு-டு மா-வேக ஆறு எதிர்த்து மேல்-டி நீரில் நிற்கும் - அன்று வாடாத தமிழ்ப்பாமாலை எழுதப்பெற்ற தேவார ஏடு மிகுந்த வேகமுடைய வைகையாற்றை எதிர்த்து மேலேறிச் சென்று நீரில் நின்ற; (அற்றை - அன்று; அத்தினத்தில்)

மாண் ஏறும் ஏடகத்தில் றைவோனே - மாட்சிமை மிகுந்த திருவேடகத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே; (மாண் - மாட்சிமை); (ஏறுதல் - உயர்தல்; மிகுதல்);

பாலான வாரி கக்கும் லாலம் ஓர் இனித்த பாகாகவே மடுத்த மிடறானே - பாற்கடல் கக்கிய ஆலகால விஷத்தை இனிக்கும் வெல்லப்பாகு போல உண்டருளிய நீலகண்டனே; (வாரி - கடல்); (பாகு - வெல்லப்பாகு); (மடுத்தல் - உண்ணுதல்); (மிடறு - கழுத்து);

பாய்-காலனார் இரத்தம் ஆறாக ஓட வைத்த பாதா - (மார்க்கண்டேயர்மேல்) பாய்ந்த காலனது இரத்தம் ஆறாக ஒடுமாறு செய்த ( = காலனை மார்பில் உதைத்த) திருப்பாதனே;

அரா சைத்த பெருமானே - பாம்பை அரைநாணாகக் கட்டிய பெருமானே; (அரா - பாம்பு); (அசைத்தல் - கட்டுதல்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------