04.57 – முதுகுன்றம் (விருத்தாசலம்)
2014-03-29
முதுகுன்றம் (திருமுதுகுன்றம் - விருத்தாசலம்)
----------------------------------
(12 பாடல்கள்)
(சந்தக் கலிவிருத்தம் - "தானன தானன தானன தானா" என்ற சந்தம்).
(லிங்காஷ்டகம் - "ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்")
1)
சந்திர னேறிய தாழ்சடை அண்ணல்
வந்தனை செய்தடை வானவ ருக்கா
முந்தடை யார்புர மூன்றையு மெய்த
மைந்தன வன்பதி மாமுது குன்றே.
பதம்
பிரித்து:
சந்திரன்
ஏறிய தாழ்சடை அண்ணல்;
வந்தனை
செய்து அடை வானவருக்கா,
முந்து
அடையார் புரம் மூன்றையும்
எய்த
மைந்தன்
அவன் பதி மா முதுகுன்றே.
வானவருக்கா
-
வானவர்களுக்காக;
(கடைக்குறை
விகாரம்);
முந்து
-
முற்காலத்தில்; அடையார்
-
பகைவர்; மைந்தன்
-
வீரன்;
பதி
-
தலம்; மா
-
அழகிய; முதுகுன்று
-
திருமுதுகுன்றம்
-
விருத்தாசலம்;
2)
தேன்மல ரால்தொழு சீலர கத்தன்
கூன்மதி கூவிள மாறணி கூத்தன்
ஆன்மிசை யான்அர வார்த்தவ னங்கை
மான்மறி யன்பதி மாமுது குன்றே.
சீலர்
அகத்தன் -
சீலர்கள்
உள்ளத்தில் உறைபவன்;
கூன்
மதி -
வளைந்த
பிறைச்சந்திரன்;
கூவிளம்
-
வில்வம்;
ஆறு
-
கங்கை;
ஆன்
மிசையான் -
இடபத்தின்மேல்
ஏறுபவன்;
(ஆன்
-
பசு;
இடபம்);
(சம்பந்தர்
தேவாரம் -
1.77.5 - "...அண்ணலானூர்தி
யேறுமெம்மடிகள்...");
(சம்பந்தர்
தேவாரம் -
2.80.5 - "வெள்ளையெருத்தின்
மிசையார்");
அரவு
ஆர்த்தவன் -
பாம்பைக்
கட்டியவன்;
(ஆர்த்தல்
-
கட்டுதல்;
பிணித்தல்);
அங்கை
மான்மறியன் -
கையில்
மான்கன்றை ஏந்தியவன்;
3)
ஊன்படை வேடன தோர்கணு கந்தான்
மான்பர சார்கர னூலணி மார்பன்
கூன்பிறை கோளர வம்புனை கூத்தன்
வான்பணி கோன்பதி மாமுது குன்றே.
பதம்
பிரித்து:
ஊன்
படை வேடனது ஓர் கண் உகந்தான்;
மான்
பரசு ஆர் கரன்;
நூல்
அணி மார்பன்;
கூன்பிறை,
கோள்
அரவம் புனை கூத்தன்;
வான்
பணி கோன் பதி மா முதுகுன்றே.
ஊன்
படை வேடனது ஓர் கண் உகந்தான்
-
கண்ணப்பருக்கு
அருள்புரிந்ததைச் சுட்டியது;
மான்
பரசு ஆர் கரன் -
மானையும்
மழுவையும் கையில் ஏந்தியவன்;
("மான்
-
பெரியோன்"
என்று
கொண்டும் பொருள் கொள்ளல்
ஆம்);
பரசு
-
மழு);
(ஆர்தல்
-
பொருந்துதல்);
(சம்பந்தர்
தேவாரம் -
1.127.1 - "பிரம
புரத்துறை பெம்மா னெம்மான்");
(சுந்தரர்
தேவாரம் -
7.25.8 - "பரசா
ருங்கரவா பதி னெண்கண முஞ்சூழ")
நூல்
-
முப்புரி
நூல் -
பூணூல்;
கூன்
பிறை,
கோள்
அரவம் புனை கூத்தன் -
வளைந்த
பிறைச்சந்திரனையும் கொடிய
பாம்பையும் அணிந்த கூத்தன்;
வான்
பணி கோன் -
தேவர்கள்
போற்றும் தலைவன்;
4)
மும்மத வெங்கரி முன்னுரி செய்தான்
அம்மதி சூடிய செஞ்சடை அண்ணல்
விம்மிய வானவ ருய்ந்திட நஞ்சுண்
மைம்மிட றன்பதி மாமுது குன்றே.
மும்மத
வெம் கரி முன் உரி செய்தான்
-
மும்மதங்களையுடைய
கொடிய யானையின் தோலை முன்னம்
உரித்தவன்;
அம்மதி
-
அம்
மதி -
அழகிய
திங்கள்;
விம்முதல்
-
தேம்பி
அழுதல்;
வருந்துதல்;
நஞ்சு
உண் மைம் மிடறன் -
விடத்தை
உண்ட நீலகண்டன்;
5)
பன்னிய வன்மறை பால்மதி பாம்பு
துன்னிய சென்னிய னீறணி தூயன்
உன்னிய வர்க்கரு ளுத்தம னென்றும்
மன்னிய வன்பதி மாமுது குன்றே.
பன்னியவன்
மறை -
வேதங்களைப்
பாடியவன்;
(பன்னுதல்
-
பாடுதல்);
பால்மதி
பாம்பு துன்னிய சென்னியன்
-
பால்
போன்ற வெண்ணிறப் பிறைச்சந்திரனும்
பாம்பும் நெருங்கித் திகழ்கின்ற
முடி உடையவன்;
(துன்னுதல்
-
பொருந்துதல்;
செறிதல்);
நீறு
அணி தூயன் -
திருநீற்றைப்
பூசிய பரிசுத்தன்;
உன்னியவர்க்கு
அருள் உத்தமன் -
தன்னை
எண்ணிப் போற்றும் அன்பர்களுக்கு
அருள்புரியும் உத்தமன்;
(உன்னுதல்
-
நினைதல்;
எண்ணுதல்;);
என்றும்
மன்னியவன் -
என்றும்
நிலைத்து இருப்பவன்;
6)
செஞ்சுட ரார்திரு மேனிய னஞ்சொல்
வஞ்சியை அன்பொடு வாமம கிழ்ந்தான்
அஞ்சல ளித்திடு மஞ்சன கண்டன்
வஞ்சமி லான்பதி மாமுது குன்றே.
செஞ்சுடர்
ஆர் திரு மேனியன் -
இளஞாயிறுபோல்
திகழும் திருமேனி உடையவன்;
அஞ்சொல்
வஞ்சியை அன்பொடு வாமம்
மகிழ்ந்தான் -
அழகிய
மொழி பேசும்,
கொடிபோன்ற
உமையம்மையை இடப்பக்கம்
விரும்பியவன்;
அஞ்சல்
அளித்திடும் மஞ்சு அன கண்டன்
-
அபயம்
அளிக்கின்ற,
மேகம்
போல் திகழும் நீலகண்டன்;
வஞ்சம்
இலான் -
ஒளித்தல்
இல்லாதவன்;
- வரங்களை
வாரி வழங்குபவன்;
7)
கோல்வளை யாள்கொழு நன்மணி மார்பின்
மேல்விட நாகமு மேவிடு மீசன்
கால்வெளி மண்ணெரி நீரென ஆனான்
மால்விடை யான்பதி மாமுது குன்றே.
கோல்வளையாள்
கொழுநன் -
திரண்ட
வளையல்களை அணிந்த உமைக்குக்
கணவன்;
(கோல்
-
திரட்சி);
(கொழுநன்
-
கணவன்);
(திருவாசகம்
-
திருத்தெள்ளேணம்
-
8.11.20 - "குலம்பாடிக்
கொக்கிற கும்பாடிக் கோல்வளையாள்
நலம்பாடி...");
மணி
மார்பின்மேல் விட நாகமும்
மேவிடும் ஈசன் -
அழகிய
மார்பின்மேல் நச்சுப்பாம்புகளும்
திகழும் இறைவன்;
(மேவுதல்
-
பொருந்துதல்;
விரும்புதல்);
கால்
வெளி மண் எரி நீர் என ஆனான்
-
காற்று,
ஆகாயம்,
நிலம்,
நெருப்பு,
நீர்
என்று ஐம்பூதங்களாக ஆனவன்;
(பிருதிவி,
அப்பு,
தேயு,
வாயு,
ஆகாசம்
என்ற பஞ்சபூதங்களின் முறை
யாப்பு நோக்கி மாறிவந்தது);
மால்
விடையான் -
பெரிய
இடபத்தை வாகனமாக உடையவன்;
8)
கார்நிற வாளவு ணன்முடி பத்தை
ஓர்விர லூன்றிநெ ரித்திசை கேட்டுப்
பேர்தரு பிஞ்ஞக னுண்பலி தேரும்
வார்சடை யான்பதி மாமுது குன்றே.
கார்
நிற வாள் அவுணன் முடி பத்தை
ஓர் விரல் ஊன்றி நெரித்து
-
கரிய
நிறம் உடைய கொடிய அரக்கனுடைய
தலைகள் பத்தையும் ஒரு விரலை
ஊன்றி நசுக்கி;
இசை
கேட்டுப் பேர் தரு பிஞ்ஞகன்
-
பின்,
அவன்
இசைபாடிப் போற்றியதைக் கேட்டு
இரங்கி,
அவனுக்கு
இராவணன் ('அழுதவன்')
என்ற
பேரைத் தந்து அருள்புரிந்தவன்,
தலைக்கோலம்
உடையவன்;
(சம்பந்தர்
தேவாரம் -
1.11.8 - "முன்னிற்பவ
ரில்லாமுர ணரக்கன் ...
பின்னைப்பணிந்
தேத்தப்பெரு வாள்பேரொடுங்
கொடுத்த ...."
- பேர்
-
மலைக்கீழகப்பட்டு
அழுதமையால் உண்டான இராவணன்
என்னும் பெயர்;
கீர்த்தியுமாம்.
)
உண்பலி
தேரும் -
பிச்சை
ஏற்கும்;
(திருவாசகம்
-
திருக்கோத்தும்பி
-
8.10.2 - "... ஊனா
ருடைதலையில் உண்பலிதேர்
அம்பலவன்");
வார்
சடையான் -
நீள்சடையை
உடையவன்;
9)
ஆழ்கட லானல ரானறி யாத
கேழ்கிள ருந்தழ லானவ னன்பர்
ஊழ்வினை தீர்த்தரு ளுத்தம னிந்து
வாழ்சடை யான்பதி மாமுது குன்றே.
ஆழ்கடலான்
அலரான் அறியாத -
ஆழமான
கடல்மேல் இருக்கும் திருமாலும்
மலர்மேல் இருக்கும் பிரமனும்
அறியாத;
(அப்பர்
தேவாரம் -
6.21.10 - "திரையானுஞ்
செந்தா மரைமே லானுந் தேர்ந்தவர்கள்
தாந்தேடிக் காணார்"
- திரையான்
-
நீரிடைக்
கிடப்பான் ;
திருமால்);
கேழ்
கிளரும் தழல் ஆனவன் -
ஒளி
மிக்க சோதி ஆனவன்;
(கேழ்
-
ஒளி;
கிளர்தல்
-
மேலெழுதல்;
வளர்தல்;
மிகுதல்);
அன்பர்
ஊழ்வினை தீர்த்தருள் உத்தமன்
-
பக்தர்களின்
பழவினைகளைத் தீர்த்து அருள்கின்ற
உத்தமன்;
இந்து
வாழ் சடையான் -
திங்கள்
தங்குகின்ற சடையை உடையவன்;
(இந்து
-
சந்திரன்);
10)
புந்தியி லார்பல பொய்யுரை சொல்லி
நிந்தனை செய்தலை நீசரை நீங்கும்
வந்தனை செய்தடை மாணிபி ழைக்க
வந்தப ரன்பதி மாமுது குன்றே.
புந்தி
இலார்,
பல
பொய்யுரை சொல்லி நிந்தனை
செய்து அலை நீசரை நீங்கும்
-
அறிவற்றவர்களும்
பல பொய்களைச் சொல்லி இகழ்ந்து
திரிகின்றவர்களுமான கீழோர்களை
விட்டு அகலுங்கள்;
வந்தனை
செய்து அடை மாணி பிழைக்க வந்த
பரன் -
வழிபாடு
செய்து அடைக்கலம் புகுந்த
மார்க்கண்டேயர் உயிர்பிழைக்கும்படி
வந்து அருளிய பரமன்;
11)
கள்ளல ரேவிய காமன தாகம்
வெள்ளிய நீறது வாகவி ழித்தான்
உள்ளிடு பத்தரை உம்பரி லேற்றும்
வள்ளல வன்பதி மாமுது குன்றே.
கள்ளலர்
ஏவிய -
கள்
அலர் ஏவிய -
தேன்மலர்களைக்
கணையாக எய்த;;
காமனது
ஆகம் வெள்ளிய நீறுஅது ஆக
விழித்தான் -
மன்மதனின்
உடலைச் சாம்பலாகும்படி
நெற்றிக்கண்ணால் பார்த்தவன்;
உள்ளிடு
பத்தரை உம்பரில் ஏற்றும்
வள்ளல் -
தன்னை
மனத்தில் இருத்தித் தியானிக்கும்
அன்பர்களை வானுலகில் ஏற்றுகின்ற
வள்ளல்;
(உள்ளுதல்
-
நினைத்தல்;
உள்
-
மனம்;
இடுதல்
-
வைத்தல்;
ஒரு
துணைவினை;)
12)
மான்றிக ழுங்கர வாமழு வாளா
ஈன்றவ னேஉல கங்களை என்னை
ஏன்றுகொ ளாயென ஏத்திடு வார்க்கு
வான்றரு வான்பதி மாமுது குன்றே.
மான்
திகழும் கரவா -
மானை
ஏந்திய கரத்தை உடையவனே;
மழுவாளா
-
மாழுவாள்
உடையவனே;
ஈன்றவனே
உலகங்களை என்னை -
எல்லா
உலகங்களையும் படைத்தவனே;
என்
தந்தையே;
(குறிப்பு:
"ஈன்றவனே
உலகங்களை,
ஈன்றவனே
என்னை"
என்று
இயைத்துப் பொருள்கொள்க);
"என்னை
ஏன்றுகொளாய்"
என
ஏத்திடுவார்க்கு வான் தருவான்
-
"என்னை
ஏற்றுக்கொள்வாயாக"
என்று
போற்றும் பக்தர்களுக்கு
வானுலகம் தருபவன்;
(குறிப்பு
:
"என்னை"
என்ற
சொல்லை இடைநிலைத்தீவகமாக
இருபுறமும் இயைத்துப்
பொருள்கொள்க);
பதி
மாமுது குன்றே -
அப்பெருமான்
உறையும் தலம் திருமுதுகுன்றம்.
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு :
1) யாப்புக் குறிப்பு:
சந்தக் கலிவிருத்தம் - "தானன தானன தானன தானா" என்ற சந்தம்.
வடமொழியில் இச்சந்தத்தை - தோதகம் - दोधकम् - என்ற பெயரால் சுட்டுகின்றனர்.
குரு - நெடில் / நெடில்+ஒற்று / குறில்+ஒற்று.
லகு - குறில் (ஒற்றுத் தொடராதபோது).
அடி ஈற்றில் வரும் லகுவும் குருவாகக் கருதப்படும்.
வடமொழியில் ஐகாரம் நெடில் (குரு) என்று கருதப்படினும், தமிழ்ப் பாடலில் அலகிடும்போது ஐகாரக் குறுக்கம் வரும் இடங்களில் அது குறில் (லகு) என்று கொள்ளப்படும்.)
2) உதாரணம்: - லிங்காஷ்டகம் -
"ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஸித ஶோபித லிங்கம்
ஜன்மஜ து:க விநாஶக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஶிவலிங்கம்"
3) முதுகுன்றம் (விருத்தாசலம்) - விருத்தகிரீஸ்வரர் கோயில் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=493
முதுகுன்றம் (விருத்தாசலம்) - தேவாரம் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=236
----------- --------------