Saturday, February 17, 2018

04.12 - பாற்றுறை - சுழியினார் கங்கையை

04.12 - பாற்றுறை - சுழியினார் கங்கையை

2013-09-25

பாற்றுறை (கல்லணை அருகே உள்ள பனையபுரம்)

----------------------------------

(கலிவிருத்தம் - விளம் விளம் மா கூவிளம்)

(சம்பந்தர் தேவாரம் - 3.23.1 - "உருவினார் உமையொடும்")

(அப்பர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன்")


1)

சுழியினார் கங்கையைச் சூடும் வேணியார்,

விழியினால் மன்மதன் வேவ நோக்கினார்,

பழியிலார், கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறை

அழிவிலார் அடியடை அன்பர்க் கின்பமே.


சுழியின் ஆர் கங்கையைச் சூடும் வேணியார் - நீர்ச்சுழிகள் மிக்க கங்கையைச் சூடிய சடையர்; (இன் - அசை); (வேணி - சடை);

விழியினால் மன்மதன் வேவ நோக்கினார் - நெற்றிக்கண்ணால் காமனை எரித்தவர்;

பழி இலார் - பழியற்றவர்;

கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறை - கொள்ளிடத்தின் பக்கத்தில் திருப்பாற்றுறையில் உறைகின்ற; (பாங்கர் - பக்கம்);

அழிவு இலார் அடி அடை அன்பர்க்கு இன்பமே - என்றும் இருப்பவரான பெருமானாரது திருவடியைச் சரண்புகுந்த அன்பர்களுக்கு என்றும் இன்பமே;


2)

திங்களைச் சூடிய தேவ தேவனை,

அங்கையில் அழலனை, ஆகத் துமையொரு

பங்கனைக், கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறைத்

தங்கிய சம்புவைச் சார இன்பமே.


அங்கையில் அழலனை - கையில் தீயை ஏந்தியவனை;

ஆகத்துமையொரு பங்கனைக் - திருமேனியில் உமையை ஒரு பாகமாக உடையவனை; (ஆகம் - மேனி);

தங்குதல் - நிலைத்து உறைதல்; சம்பு - சுகத்தைத் தருபவன் - சிவன்; சார்தல் - பொருந்துதல்;

இலக்கணக் குறிப்பு : "பாற்றுறைத் தங்கிய" - (பாற்றுறையின்கண் தங்கிய) - ஏழாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அஃறிணையாக இருந்தால் வலி மிகும்.


3)

விடையனை, நான்மறை விரித்த ஆலனைப்,

புடையினில் பெண்ணனைப், பொலியும் கூர்மழுப்

படையனைக், கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறைச்

சடையனை அடிதொழச் சாரும் இன்பமே.


விரித்தல் - உபதேசித்தல்; விளக்கிச்சொல்லுதல்; ஆலன் - கல்லால மரத்தின்கீழ் இருப்பவன்; (சுந்தரர் தேவாரம் - 7.85.9 - "ஆலன் இவ்வழி போந்த அதிசயம் அறியேனே"); புடை - பக்கம்; படை - ஆயுதம்;


4)

வடியினார் சூலமும் மழுவும் ஏந்தினார்,

கொடியனார் இடுபலி கொண்டு ழன்றிடு

படிறனார், கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறைக்

குடியினார் அடிதொழக் கூடும் இன்பமே.


வடியின் ஆர் சூலமும் மழுவும் ஏந்தினார் - கூர்மை மிக்க சூலத்தையும் மழுவையும் ஏந்தியவர்; (வடி - கூர்மை);

கொடினார் இடு-பலி கொண்டு ழன்றிடு படிறனார் - கொடி போன்ற பெண்கள் இடும் பிச்சையை ஏற்றுத் திரிகின்ற பொய்யர்; (அனார் - அன்னவர்); (பலி - பிச்சை); (சம்பந்தர் தேவாரம் - 1.110.3 - "இடுபலி கொண்டுழல்வான்"); (படிறன் - பொய்யன்; வஞ்சகன்);

குடியினார் - வாழ்விடமாக உடையவர்;


5)

அம்புலி கூவிளம் அரவு சூடியைக்,

கொம்பனை யாளொரு கூறு நாடியைப்,

பைம்புனற் கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறை

நம்பனை அடிதொழ நாளும் இன்பமே.


கூவிளம் - வில்வம்; சூடி - சூடியவன்; கொம்பு அனையாள் - பூங்கொம்பு போன்ற பார்வதி; நாடி - நாடியவன் - விரும்பியவன்; (ஆடுபவன் - ஆடி, சூடுபவன் - சூடி, பாடுபவன் - பாடி, என்பன போல், நாடுபவன் - நாடி); நம்பன் - சிவபெருமான் திருநாமம் - விரும்பத் தக்கவன்;


6)

குரவனார், சடைமிசைக் கோலத் திங்களார்,

அரவனார், ஆதியும் அந்தம் ஆகிய

பரமனார், கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறை

பரவினார் பழவினை பறையும் திண்ணமே.


குரவனார் - குரு / அரசன்; கோலத் திங்களார் - அழகிய பிறைச்சந்திரனை உடையவர்; அரவனார் - பாம்பை அணிந்தவர்; பரவினார் - துதிப்பவர்கள்; (பரவுதல் - புகழ்தல்; துதித்தல்); பறைதல் - அழிதல்;


7)

சூடினார் கொன்றையைச், சுடலை தன்னிலே

ஆடினார், அன்பருக்(கு) அன்பர், நான்மறை

பாடினார், கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறை

நாடினார் பழவினை நலியும் திண்ணமே.


நாடினார் - நாடியவர்கள்; நலிதல் - அழிதல்;


8)

மதியிலாத் தசமுகன் வாட ஊன்றினார்

துதியறா நாவுடைத் தொண்டர் நெஞ்செனும்

பதியினார் கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறை

மதியினார் அடிதொழ மல்கும் இன்பமே.


மதி இலாத் தசமுகன் - அறிவற்ற இராவணன்; துதி அறா நாவுடைத் தொண்டர் நெஞ்சு எனும் பதியினார் - எப்பொழுதும் நாவால் துதிக்கின்ற தொண்டர்களது நெஞ்சம் என்ற கோயிலில் உறைபவர்; (பதி - உறைவிடம்; கோயில்); மதியினார் - பிறை சூடியவர்; (அப்பர் தேவாரம் - 4.37.6 - "நெய்த்தான மேய கூனிள மதியினானைக் கூடுமா றறிகிலேனே"); மல்குதல் - மிகுதல்; நிறைதல்;


9)

பூவினான் மாலிவர் போற்று சோதியான்

ஏவினால் மூவெயில் எய்த சேவகன்

பாவினால் கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறை

மேவினான் அடிதொழ வினைகள் வீடுமே.


பூவினான் - தாமரைமேல் இருக்கும் பிரமன்; மால் - திருமால்; - அம்பு; மூ-எயில் - மூன்று மதில்கள்; சேவகன் - வீரன்; பாவினால் - பாமாலைகளைப் பாடி; மேவுதல் - உறைதல்; வீடுதல் - நீங்குதல்;


10)

பேய்மனப் பிட்டர்கள் பேசும் பொய்விடும்;

ஆய்மல ரால்தொழும் அன்பர்க்(கு) அன்பினன்,

பாய்புனற் கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறை

மேயவன் அடிதொழ வினைகள் வீடுமே.


பிட்டர் - பிரட்டர் (பிரஷ்டர்) - நெறியிலிருந்து வழுவினவர்; ஆய்மலரால் தொழும் - ஆய்ந்தெடுத்த சிறந்த பூக்களால் வழிபடும்; மேயவன் - உறைபவன்;


11)

துணிமதி சூடியைச், சூல பாணியை,

அணியுமை பங்கனை, அரையில் நாணெனப்

பணியசை, கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறை

மணியினை அடிதொழ மல்கும் இன்பமே.


துணி-மதி சூடியைச் - ; பிறைச்சந்திரனைச் சூடியவனை; (துணி - துண்டம்);

சூல பாணியை - சூலாயுதத்தை ஏந்தியவனை;

அணி-மை பங்கனை - அழகிய உமையை ஒரு பங்கில் உடையவனை;

அரையில் நாண் எனப் பணி அசை - அரையில் அரைநாணாக நாகப்பாம்பைக் கட்டிய; (பணி - நாகம்); (அசைத்தல் - கட்டுதல்);

கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறை மணியினை - கொள்ளிடக் கரையில் உள்ள திருப்பாற்றுறையில் உறைகின்ற மணி போன்றவனை;

அடிதொழ மல்கும் இன்பமே - வணங்கினால் இன்பம் பெருகும்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------

04.11 - ஆக்கூர் - வையம் வந்து வணங்கும்

04.11 - ஆக்கூர் - வையம் வந்து வணங்கும்

2013-09-21

ஆக்கூர் (இத்தலம் திருக்கடவூர் அருகே உள்ளது)

----------------------------------

(12 பாடல்கள்)

(கலிவிருத்தம்; திருக்குறுந்தொகை அமைப்பு)


1)

வையம் வந்து வணங்கும் வரதனோர்

கையில் வெள்ளைக் கபாலம் தனையேந்தி

ஐயம் தேரும் அணியாரும் ஆக்கூரில்

தையல் பங்கினன் தான்தோன்றி அப்பனே.


வையம் வந்து வணங்கும் வரதன் - உலகினர் வந்து வணங்குகின்ற வரதன் (வரம் அருள்பவன்);

ஓர் கையில் வெள்ளைக் கபாலம்-தனை ஏந்தி ஐயம் தேரும் - ஒரு கையில் வெள்ளை மண்டையோட்டை ஏந்திப் பிச்சையேற்பவன்; ("தேரும் - கொள்வான்" என்றும் பொருள்கொள்ளல் ஆம்; செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று);

அணி ஆரும் ஆக்கூரில் - அழகிய ஆக்கூரில் உறைகின்ற;

தையல் பங்கினன் - உமைபங்கன்; (தையல் - பெண்);

தான்தோன்றி அப்பனே - தான்தோன்றி-அப்பன் என்ற திருநாமம் உடைய பெருமான்; (* இத்தலத்து ஈசன் திருநாமம்);


2)

எங்கும் என்றும் இருப்பவன், அன்பர்க்குப்

பொங்கும் இன்பம் அருளிப் புரப்பவன்,

அங்கம் பூணும் அணியாரும் ஆக்கூரில்

சங்கம் ஆர்கரன், தான்தோன்றி அப்பனே.


அங்கம் - எலும்பு; பூணும் - அணிபவன்; (செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று); சங்கம் ஆர் கரன் - வளையல் பொருந்திய கையினன் - அர்த்தநாரீஸ்வரன்;


3)

கண்ணி ரண்டும் கசியக் கரம்கூப்பி

எண்ணி நிற்கும் அடியார்க்(கு) இடர்நீக்கி

அண்ணி நிற்கும் அணியாரும் ஆக்கூரில்

தண்ண திச்சடைத் தான்தோன்றி அப்பனே.


அண்ணி நிற்கும் - அடுத்திருப்பான்; (அண்ணுதல் - கிட்டுதல்); தண்ணதிச்சடை - தண் நதிச் சடை - குளிர்ந்த கங்கையைச் சடையில் தாங்கிய;


4)

அஞ்சி உம்பர் அடிதொழக் கண்டத்தில்

நஞ்ச டைத்தவன், நன்னீர் நதியடை

அஞ்ச டைப்பரன், அணியாரும் ஆக்கூரில்

தஞ்ச ளிப்பவன், தான்தோன்றி அப்பனே.


உம்பர் - தேவர்; அஞ்சடைப்பரன் - அம் சடைப் பரன் - அழகிய சடையை உடைய மேலானவன்; தஞ்சு - தஞ்சம்;


5)

இலையே என்னா(து) இரப்பவர்க்(கு) ஈபவன்,

சிலையால் மூவெயில் தீயெழச் செற்றவன்,

அலையார் சென்னி, அணியாரும் ஆக்கூரில்

தலையாய் நின்றவன், தான்தோன்றி அப்பனே.


இலை - இல்லை; சிலை - வில்; மூ-எயில் - முப்புரம்; அலை ஆர் சென்னி - கங்காதரன்; (சென்னி - சென்னியினன் என்ற பொருளில்); (சுந்தரர் தேவாரம் - 7.1.6 - தழல் போலுந் திருமேனீ - "திருமேனி" என்றது அடையடுத்த ஆகுபெயராய், அதனை உடையவனைக் குறித்தது); தலை - தலைவன்;


6)

விமலன் மாவடு வைக்கண மங்கலக்

கமரில் வந்து கடித்தவன், இன்னமு(து)

அமரர்க்(கு) ஈந்தான், அணியாரும் ஆக்கூரில்

தமருக்(கு) உற்றவன், தான்தோன்றி அப்பனே.


விமலன் - மலமற்றவன்; மாவடுவைக் கணமங்கலக் கமரில் வந்து கடித்தவன் - அரிவாட்டாய நாயனார்க்கு அருளியதைச் சுட்டியது; (கணமங்கலம் - அரிவாட்டாய நாயனார் வாழ்ந்த ஊர்); கமர் - நிலத்தில் இருக்கும் வெடிப்பு ; இன்-அமுது அமரர்க்கு ஈந்தான் - இனிய அமுதத்தைத் தேவர்களுக்குக் கொடுத்தவன்; தமர் - அடியவர்கள்; உற்றவன் - சுற்றத்தான்; (அப்பர் தேவாரம் - 6.85.6 - "உற்றவன்காண் உறவெல்லாம் ஆவான் தான்காண்");


7)

மங்கை பங்கனே, கங்கை முடியனே,

எங்கள் நாதனே, என்றடி யார்தொழும்

அங்கைத் தீயன், அணியாரும் ஆக்கூரில்

சங்க டங்களை தான்தோன்றி அப்பனே.


அங்கைத் தீயன் - கையில் தீயை ஏந்தியவன்; சங்கடம் களை - வருத்தத்தைப் போக்கும்;


8)

கருவ(ம்) மிக்குக் கயிலையைப் பேர்த்தவன்

வெருவப் பாத விரல்வைத்(து) அடர்த்துவாள்

அருளும் அண்ணல், அணியாரும் ஆக்கூரில்

தருக ரத்தினன் தான்தோன்றி அப்பனே.


கருவம் - கர்வம் - செருக்கு; ஆணவம்; மிக்கு - மிகுந்து; வெருவ - அஞ்சும்படி; பாத விரல் வைத்து அடர்த்து - திருப்பாத விரல் ஒன்றைச் சற்று ஊன்றி அவனை நசுக்கி; வாள் அருளும் அண்ணல் - இராவணனுக்குச் சந்திரஹாசம் என்ற வாளை அருளிய பெருமான்; தரு கரத்தினன் - கொடுக்கின்ற கையை உடையவன்; (வரத-ஹஸ்தன்);


9)

செங்கண் மாலொடு செந்தா மரையானும்

எங்கும் நேடிய எல்லையில் சோதியன்,

அங்கண் அண்ணல், அணியாரும் ஆக்கூரில்

தங்கு கின்றவன், தான்தோன்றி அப்பனே.


செங்கண் மாலொடு செந்தாமரையானும் - சிவந்த கண் உடைய திருமாலும் செந்தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும்; எங்கும் நேடிய - வானிற் பறந்தும் மண்ணை அகழ்ந்தும் தேடிய; எல்லை இல் சோதியன் - அளவற்ற ஜோதி வடிவின்; அங்கண் அண்ணல் - அருள்நோக்கு உடைய பெருமான்; தங்குகின்றவன் - நீங்காது உறைகின்றவன்;


10)

கடையர் கட்டிய கட்டுரை கொள்ளன்மின்,

சடையில் வெண்பிறை சூடிதன் தாளிணை

அடைய வல்லார்க்(கு), அணியாரும் ஆக்கூரில்

தடைகள் தீர்ப்பவன், தான்தோன்றி அப்பனே.


கடையர் - கீழோர்; இழிந்தோர்; கட்டிய கட்டுரை - புனைந்து கூறும் பொய்ம்மொழிகள்; கொள்ளன்மின் - ஏற்றுக் கொள்ளாதீர்கள்; மதிக்கவேண்டா; "தன் தாளிணை அடைய வல்லார்க்குத் தடைகள் தீர்ப்பவன் அணி ஆரும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனே" என்று இயைக்க.


11)

ஈந்து வந்த சிறப்புலி ஏத்திய

பாந்தள் வேணியன், பாற்கடல் நஞ்சினை

ஆர்ந்த கண்டன், அணியாரும் ஆக்கூரில்

சார்ந்த வர்க்கருள் தான்தோன்றி அப்பனே.


ஈந்து உவந்த சிறப்புலி - கொடுத்து மகிழ்ந்த சிறப்புலி நாயனார்; ("ஈந்து வந்த" என்று கொண்டு, "எப்பொழுதும் ஈதலைச் செய்த சிறப்புலி" என்றும் பொருள் கொள்ளலாம்); (சிறப்புலி நாயனார் ஆக்கூரில் வாழ்ந்தவர்); (சுந்தரர் தேவாரம் - 7.39.6 - "சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்"); பாந்தள் - பாம்பு; வேணி - சடை; ஆர்தல் - உண்ணுதல்; சார்தல் - சென்றடைதல்; புகலடைதல்; பொருந்தியிருத்தல்;


12)

சலமு லாவிய தாழ்சடைச் சங்கரன்,

அலகில் சீரன், அருந்தமிழ் பாடித்தேன்

அலரிட் டார்கட்(கு) அணியாரும் ஆக்கூரில்

சலமி லாதவன், தான்தோன்றி அப்பனே.


சலம் உலாவிய தாழ்சடைச் சங்கரன் - கங்கை உலாவுகின்ற தாழும் சடையை உடைய சங்கரன்; (சலம் - ஜலம் - நீர்); அலகு இல் சீரன் - அளவில்லாத புகழ் உடையவன்; அரும் தமிழ் பாடித் தேன் அலர் இட்டார்கட்கு - அரிய தமிழான தேவாரம் திருவாசகம் முதலியன பாடித் தேன் பொருந்திய மலர் தூவும் அடியவர்களுக்கு; சலம் இலாதவன் - வஞ்சம் இன்றி அருள்பவன்; (சலம் - வஞ்சனை; பட்சபாதம்); (அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன்"); அணி அரும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனே - அழகிய ஆக்கூரில் உறைகின்ற, தான்தோன்றி அப்பன் என்ற திருநாமம் உடைய சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------

04.10 - பூவாளூர் - கானாறு கணையெய்த

04.10 - பூவாளூர் - கானாறு கணையெய்த

2013-09-04

பூவாளூர் (இத்தலம் லால்குடி அருகே உள்ளது)

----------------------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(சம்பந்தர் தேவாரம் - 2.43.1 - "கள்ளார்ந்த பூங்கொன்றை")


1)

கானாறு கணையெய்த காமனுடல் பொடிசெய்தாய்,

வானாறு மதித்துண்டம் வார்சடையில் வைத்துகந்தாய்,

ஊனாறு சிரமேந்தீ, உன்னடியேற் கருள்புரியாய்,

பூநாறு பொழிலாரும் பூவாளுர் மேயவனே.


கான் நாறு கணை எய்த காமன் உடல் பொடி செய்தாய் - மணம் வீசும் மலர்க்கணையை எய்த மன்மதன் உடலை எரித்துச் சாம்பலாக்கியவனே; (கான் - வாசனை); (நாறுதல் - மணம் வீசுதல்);

வானாறு மதித்துண்டம் வார்சடையில் வைத்து உகந்தாய் - கங்கையையும் பிறைச்சந்திரனையும் நீண்ட சடையில் சூடி மகிழ்ந்தவனே; (வானாறு - கங்கை); (வார்தல் - நீள்தல்); (ஏந்தீ - ஏந்தியே - ஏந்தியவனே);

ஊன் நாறு சிரம் ஏந்தீ; உன் அடியேற்கு அருள்புரியாய் - புலால் நாற்றம் வீசும் பிரமன் தலையை ஏந்தியவனே; உன் பக்தனான எனக்கு அருள்புரிவாயாக;

பூ நாறு பொழில் ஆரும் பூவாளுர் மேயவனே - பூக்கள் மணம் வீசும் சோலைகள் பொருந்திய பூவாளூர் என்ற தலத்தில் எழுந்தருளிய பெருமானே.


2)

நற்றவனே, நாளுமுனை நம்பியடி பணிவார்கட்(கு)

உற்றவனே, ஊர்விடையொன்(று) உகந்தேறும் கொற்றவனே,

சொற்றமிழால் துணையடியே துதிப்பேற்கும் அருள்புரியாய்,

புற்றரவா, பொழிலாரும் பூவாளுர் மேயவனே.


நம்புதல் - விரும்புதல்; உற்றவன் - உற்ற துணையாக இருப்பவன்; கொற்றவன் - அரசன்; சொற்றமிழ் - சொல்+தமிழ்; துணையடி - இரு-திருவடிகள்; துதிப்பேற்கும் - துதிக்கின்ற அடியேனுக்கும்; புற்றரவா - புற்றில் வாழும் தன்மை உடைய அரவத்தை அணிந்தவனே;


3)

பண்ணியலும் பாடலுக்கு மிழலைதனில் படியருள்வாய்,

தண்ணியலும் சந்திரனைச் சடைவைத்தாய், அடிபரவில்

பண்ணியவல் வினைதீர்ப்பாய், பணிந்தேற்குப் பரிந்தருளாய்,

புண்ணியனே, பொழிலாரும் பூவாளுர் மேயவனே.


* அடி-1 - திருவீழிமிழலையில் சம்பந்தருக்கும் அப்பருக்கும் தினமும் படிக்காசு அருளியதைச் சுட்டியது.

பண் இயலும் பாடல் - தேவாரம்; படி - படிக்காசு; தண் - குளிர்ச்சி; பரவில் - பரவினால்; துதித்தால்; பணிந்தேற்கு - பணிந்து தொழும் எனக்கு; பரிதல் - இரங்குதல்;


4)

முன்னிடையாய் முடிவானாய், மூவாத முக்கண்ணா,

மின்னிடையாள் பங்கினனே, வெள்விடையாய், மழுப்படையாய்,

என்னுடையாய், என்றுன்னை ஏத்தலல்லால் மற்றறியேன்,

புன்சடையாய், பொழிலாரும் பூவாளுர் மேயவனே.


"முன் இடை ஆய் முடிவு ஆனாய் - "முதலும் நடுவும் ஆகி முடிவும் ஆனவனே;

மூவாத முக்கண்ணா - என்றும் இளமையோடு இருக்கும் முக்கண்ணனே;

மின் இடையாள் பங்கினனே - மின்னற்கொடி போல் நுண்ணிய இடையை உடைய உமையம்மையை ஒரு பாகமாக மகிழ்ந்தவனே;

வெள் விடையாய் - வெள்ளை இடபத்தை ஊர்தியாக உடையவனே;

மழுப்படையாய் - மழுவாயுதத்தை ஏந்தியவனே;

என் உடையாய்" என்று உன்னை ஏத்தல் அல்லால் மற்று அறியேன் - என் சுவாமியே" என்று உன்னைத் துதித்தல் அல்லாமல் வேறு ஒன்றும் அறியேன்;

புன்சடையாய்; பொழில் ஆரும் பூவாளுர் மேயவனே - செஞ்சடை உடையவனே; சோலைகள் பொருந்திய பூவாளூர் என்ற தலத்தில் எழுந்தருளியிருப்பவனே. (அருள்புரிவாயாக).


5)

துரிசடையா நெஞ்சத்தார் துதிசெய்து மகிழ்கின்ற

பரிசுடையாய், பாரிடங்கள் முழவார்க்கப் பல்பிணங்கள்

எரிசுடலை யிடையாடீ, இணையடியை மறவேனே,

புரிசடையாய், பொழிலாரும் பூவாளுர் மேயவனே.


துரிசு - குற்றம்; பரிசு - குணம்; பெருமை; பாரிடம் - பூதம்; முழவு ஆர்க்க - முழவுகளை ஒலிக்க; பல்பிணங்கள் எரி சுடலையிடை ஆடீ - பல பிணங்கள் எரியும் சுடலையில் ஆடுபவனே; புரி-சடையாய் - சுருண்ட சடையை உடையவனே;


6)

கற்சிலையைக் கையேந்திக் கணையொன்றால் புரமெரித்த

அற்புதனே, தொழுமிரதிக் கருள்புரிந்தாய், உன்னிரண்டு

நற்பதமே நாடிவந்தேன், நரைவிடையாய், நஞ்சுண்ணும்

பொற்புடையாய், பொழிலாரும் பூவாளுர் மேயவனே.


கற்சிலை - கல்+சிலை - மேருமலையாகிய வில்; தொழும் இரதிக்கு அருள்புரிந்தாய் - தொழுத இரதிக்கு இரங்கி மன்மதனுக்கு உயிர்கொடுத்தவனே; (இரதிக்கு அருள்புரிந்த வரலாற்றைப் பூவாளூர்த் தலபுராணத்திற் காண்க). நரை - வெண்மை; பொற்பு - தன்மை;


7)

நதியணியும் நாதாஉன் நாமத்தை மறவேனே,

துதியடியார்க்(கு) அணியாகித் துயர்துடைப்பாய், இரதிக்குப்

பதியவனை உயிர்ப்பித்த பரிவுடையாய், பழையவனே,

புதியவனே, பொழிலாரும் பூவாளுர் மேயவனே.


அணி - அருகே; சமீபத்தில்; துடைத்தல் - நீக்குதல்; அழித்தல்; இரதிக்குப் பதி - மன்மதன்;


8)

வலியதனைக் கருதிவந்து மலையெடுத்த வாளரக்கன்

மெலியவொரு விரலூன்றி மிகவுமருள் புரிந்தவனே,

கலியடையா வாறென்னைக் காத்தருளாய், கண்ணுதலே,

புலியதளாய், பொழிலாரும் பூவாளுர் மேயவனே.


வலி அதனை - தன் வலிமையை; வாள் அரக்கன் - கொடிய இராவணன்; (வாள் - கொடுமை); மெலிதல் - வருந்துதல்; கலி - துன்பம்; கண்ணுதலே - நெற்றிக்கண்ணனே; புலி-அதளாய் - புலித்தோலை அணிந்தவனே; (அதள் - தோல்);


9)

கருவ(ம்)மலி நெஞ்சினராய்க் கழலுச்சி காணமுயல்

இருவரறி தற்கரிய எரியானாய், இருள்கொண்ட

ஒருமிடறு திகழ்வோனே, உனைப்பரவும் எனக்கருளாய்,

பொருவிடையாய், பொழிலாரும் பூவாளுர் மேயவனே.


கருவம் மலி நெஞ்சினராய்க் கழல் உச்சி காண முயல் இருவர் - ஆணவத்தோடு அடியும் முடியும் தேடிய திருமாலும் பிரமனும்; (கருவம் - கர்வம், செருக்கு); (அப்பர் தேவாரம் - இலிங்கபுராணத் திருக்குறுந்தொகை - 5.95.6 - "தருக்கினாற் சென்று தாழ்சடை அண்ணலை நெருக்கிக் காணலுற்றார் அங்கு இருவரே"); ஒரு மிடறு - ஒப்பற்ற கண்டம்; பரவுதல் - புகழ்தல்; துதித்தல்; பொரு-விடை - போர்செய்ய வல்ல இடபம்;


10)

நள்ளார்கள் அரனடியை; நாக்கொண்டு பொய்யல்லால்

விள்ளார்கள்; அவர்பிதற்றும் வெற்றுரையைப் பொருளாகக்

கொள்ளார்கள் நன்மதியோர்; கும்பிடுவார் வினைதீர்ப்பான்

புள்ளார்பூம் பொழிலாரும் பூவாளுர் மேயவனே.


நள்ளார்கள் - விரும்பமாட்டார்கள்; (நள்ளுதல் - நட்டல் - விரும்புதல்); நாக்கொண்டு - நாக்கால்; பொய் அல்லால் - பொய்யைத் தவிர வேறு ஒன்றும்; விள்ளார்கள் - சொல்லமாட்டார்கள்; (விள்ளுதல் - சொல்லுதல்); கொள்ளார்கள் - மதிக்கமாட்டார்கள்;

கொள்ளார்கள் நன்மதியோர் கும்பிடுவார் வினைதீர்ப்பான் - "....கொள்ளார்கள் நன்மதியோர்; நன்மதியோர் அரனடியைக் கும்பிடுவார்; கும்பிடுவார் வினைதீர்ப்பான்...." என்றும் இடைநிலைத்-தீவகமாக இயைத்தும் பொருள்கொள்ளலாம்;

புள் ஆர் பூம்பொழில் - பறவைகள் ஒலிக்கும் சோலைகள்;


11)

நாகமணி மார்பினனே, நயந்துண்ட நஞ்சதனால்

மேகமணி கண்டத்தாய், வெற்பரையன் மங்கையொரு

பாகமணி ஆகத்தாய், பணிவார்க்குப் பரிவாய்,முப்

போகமணி வயல்சூழ்ந்த பூவாளுர் மேயவனே.


பதம் பிரித்து:

நாகம் அணி மார்பினனே; நயந்து உண்ட நஞ்சு அதனால்

மேகம் அணி கண்டத்தாய்; வெற்பு அரையன் மங்கை ஒரு

பாகம் அணி ஆகத்தாய்; பணிவார்க்குப் பரிவாய்; முப்

போகம் அணி வயல் சூழ்ந்த பூவாளுர் மேயவனே.


நாகம் அணி மார்பினனே - பாம்பை மாலையாக மார்பில் அணிந்தவனே;

நயந்து உண்ட நஞ்சு அதனால் மேகம் அணி கண்டத்தாய் - விரும்பி உண்ட விடத்தால் கழுத்தில் மேகம்போல் கருமையை (/ மேகம் போல் அழகிய) அணிந்தவனே; (மேகமணி - 1. மேகம் அணி; 2. மேக மணி); (மணி - அழகிய);

வெற்பு அரையன் மங்கை ஒரு பாகம் அணி ஆகத்தாய் - மலைமகளை ஒரு பாகமாகக் கொண்ட திருமேனி உடையவனே;

பணிவார்க்குப் பரிவாய் - பணிகின்ற பக்தர்களுக்கு இரங்குபவனே;

முப்-போகம் அணி வயல் சூழ்ந்த பூவாளுர் மேயவனே - வருடத்திற்கு மூன்று போகம் விளைச்சல் திகழும் செழுமையான வயல்கள் சூழ்ந்த பூவாளுர் என்ற தலத்தில் எழுந்தருளியவனே; (முப்போகமணி வயல் - முப்போகம் அணி வயல் / முப்போக மணி வயல்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------

04.09 - புனவாயில் (திருப்புனவாசல்) - கள்ளார் கொன்றை

04.09 - புனவாயில் (திருப்புனவாசல்) - கள்ளார் கொன்றை

2013-09-02

புனவாயில் (திருப்புனவாயில் - "திருப்புனவாசல்")

----------------------------------

(அந்தாதி) (ஆசிரிய இணைக்குறட்டுறை.

தானா தானன தானன தானன

தானா தானன தானனா)

(சம்பந்தர் தேவாரம் - 1.56.1 - காரார் கொன்றை கலந்த முடியினர்")


1)
கள்ளார் கொன்றை கதிர்மதி சூடிய
வள்ளால் வல்விடம் உண்பிரான்
புள்ளார் பூம்பொழில் சூழ்புன வாயிலில்
உள்ளாய் என்னுமென் உள்ளமே.

கள்ர் கொன்றை, கதிர்-மதி சூடிய வள்ளால் - தேன் மலிந்த கொன்றைமலறையும் கதிர் வீசும் திங்களையும் சூடிய வள்ளலே; (வள்ளால் - வள்ளல் என்பதன் விளி);

வல்விடம் உண்-பிரான் - வலிய நஞ்சை உண்ட பிரானே; (பிரான் - தலைவன்);
புள் ஆர் பூம்பொழில் சூழ் புனவாயிலில் உள்ளாய் என்னும் என் உள்ளமே - பறவைகள் ஒலிக்கும் அழகிய சோலை சூழ்ந்த திருப்புனவாசலில் எழுந்தருளியவனே என்று என் மனம் போற்றும்; (புள் - பறவை); (ஆர்த்தல் - ஒலித்தல்);

2)
உள்ளும் நெஞ்சில் உகந்துறை உத்தமன்
வெள்ளம் தாங்கிய வேணியன்
புள்ளி மான்கரன் பூம்புன வாயிலில்
வெள்ளை ஏறு விரும்பியே.

உள்ளுதல் - தியானித்தல்; உகத்தல் - விரும்புதல்; வெள்ளம் - கங்கை; வேணி - சடை; புள்ளிமான் கரன் - மானைக் கையில் ஏந்தியவன்;

3)
விரும்பி வாழ்த்திட வெவ்வினை தீர்ப்பவன்
சுரும்பு சேர்குழ லிக்கிடம்
தரும்ப வித்திரன் தண்புன வாயிலில்
இரும்பு னல்சடை ஏற்றியே.

சுரும்பு சேர் குழலிக்கு இடம் தரும் பவித்திரன் - வண்டுகள் சேரும் மலரணிந்த குழலியான உமைக்கு இடப்பாகம் தரும் தூயவன்; இரும் புனல் - பெரிய புனல் - கங்கை; சடை ஏற்றி - சடையில் ஏற்றியவன்;

4)
ஏற தேறிய ஏந்தலை ஒண்திரு
நீற ணிந்த நிமலனைத்
தேற லின்தெளி வைப்புன வாயிலிற்
கூற இன்பங்கள் கூடுமே.

ஏறு - இடபம்; ஏந்தல் - பெருமையுடையவன்; அரசன்; தேறலின் தெளிவைப் புனவாயிலிற் - புனவாயிலில் தேறலின் தெளிவை; தேறல் - தேன்; கூறுதல் - புகழ்தல்; சொல்லுதல்; கூடுதல் - பொருந்துதல்; மிகுதல்;

5)
கூடு முப்புரம் செற்றவன் கொன்றையும்
சூடும் ஈசன் சுடலையில்
ஆடு வான்புன வாயிலை அன்பொடு
நாடு வார்வினை நாசமே.

கூடுதல் - சேர்தல்; செறுதல் - அழித்தல்;

6)
நாசம் அற்றவன் நற்றவர்க் குற்றவன்
வாசம் ஆர்தமிழ் மாலையால்
பூச னைக்கருள் வான்புன வாயிலை
நேச மாயடை நெஞ்சமே.

நாசம் அற்றவன் - அழிவில்லாதவன்; நற்றவர்க்கு உற்றவன் - நல்ல தவம் செய்பவர்க்குத் துணை ஆனவன்; அருள்வான் - அருள்பவன்; நேசம் - அன்பு;

7)
நெஞ்சில் நாளு(ம்) நினைப்பவர்க் கன்பினன்
நஞ்சை உண்டருள் நல்லவன்
மஞ்சு சேர்பொழில் சூழ்புன வாயிலில்
மஞ்சன் தாள்தொழ வம்மினே.

மஞ்சு - மேகம்; மஞ்சன் - மைந்தன்; வம்மின் - வாருங்கள்; வருவீராக;

8)
வந்து வெற்பெறி வாளரக் கன்வலி
சிந்த ஓர்விரல் வைத்தவன்
அந்தி வண்ணன் அணிபுன வாயிலைச்
சிந்தித் தார்வினை தீருமே.

வந்து வெற்பு எறி வாளரக்கன் வலி சிந்த ஓர் விரல் வைத்தவன் - வந்து கயிலையைப் பெயர்த்து வீச முயன்ற கொடிய அரக்கனான இராவணனது வலிமை அழியும்படி ஒரு விரலை ஊன்றி நசுக்கியவன்; (வெற்பு - மலை); (வாள் - கொடுமை); (வலி - வலிமை); (சிந்துதல் - அழிதல்);
அந்தி வண்ணன் அணி புனவாயிலைச் சிந்தித்தார் வினை தீருமே - சந்தியாகாலத்து வானம் போலச் செம்மேனியன் உறையும் அழகிய திருப்புனவாயிலை மனத்தால் எண்ணியவர் வினை தீரும்;

9)
தீரா வாதுசெய் மாலயன் தேடியும்
சேரா அந்தமில் தீயவன்
போரான் ஊர்தியன் பூம்புன வாயிலைப்
பேரான் எம்மரன் பெற்றியே

மால் அயன் - திருமாலும் பிரமனும்; சேர்தல் - அடைதல்; அந்தம் இல் தீ அவன் - முடிவில்லாத ஜோதி ஆனவன்; போர் ஆன் ஊர்தியன் - போர் செய்யும் ஆற்றலோடுகூடிய இடபத்தை ஊர்தியாக உடையவன்; (அப்பர் தேவாரம் - 5.12.3 - "போர்விடை ஊர்தியான்"); பேரான் - நீங்காதவன்; (பேர்தல் - நீங்குதல்); பெற்றி - தன்மை; பெருமை;

10)
பெற்றம் ஏறியைப் பேணகி லார்மொழி
வெற்றுப் பேச்சை விடுமினே
புற்ற ராப்புனை வான்புன வாயிலைச்
சுற்று வார்க்கிலை துன்பமே.

பெற்றம் - இடபம்; பேணகிலார் - பேணமாட்டாதவர்கள் - போற்றாதவர்கள்; விடுமின் - விடுங்கள்; நீங்குவீர்; புற்று அராப் புனைவான் - புற்றில் வாழும் தன்மை உடைய பாம்பை அணிபவன்; சுற்றுதல் - பிரதட்சிணம் செய்தல்;

11)
துன்பம் நல்கிடும் தொல்வினை நீங்கிட,
என்பு பூண்டவன் ஏற்றினன்
புன்ச டைப்பரன் தென்புன வாயிலை
அன்பி னாலடை மின்களே.


துன்பம் நல்கிடும் தொல்வினை நீங்கிட - துன்பம் தரும் பழவினை தீர்வதற்கு;
என்பு பூண்டவன், ஏற்றினன் - எலுமை அணிந்தவன், இடபவாகனன்; (என்பு - எலும்பு);
புன்சடைப்-பரன் தென்-புனவாயிலை அன்பினால் அடைமின்களே - செஞ்சடைப் பரமன் உறையும் அழகிய திருப்புனவாயிலை அன்போடு அடையுங்கள்; (புன்மை - புகர் நிறம் - tawny color); (தென் - அழகிய); (அடைமின்கள் - சென்று அடையுங்கள்);


பிற்குறிப்புகள் : யாப்புக் குறிப்பு :

அந்தாதியாக மண்டலித்து வரும் 11 பாடல்கள். முதற்பாடல் "கள்ளார்" என்று தொடங்கி, இறுதிப்பாடல் "அடைமின்களே" என்று முடிகின்றது.

ஆசிரிய இணைக்குறட்டுறை என்று கருதலாம். 1, 3-ஆம் அடிகள் - அளவடி; 2, 4-ஆம் அடிகள் - சிந்தடி.

அடி 1 & 3: தான தானன தானன தானன ( = மா கூவிளம் கூவிளம் கூவிளம்).

அடி 2 & 4: தான தானன தானனா ( = மா கூவிளம் கூவிளம்).

அடி நேரசையில் தொடங்கினால், 11 / 8 எழுத்துகள். அடி நிரையசையில் தொடங்கினால் 12 / 9 எழுத்துகள்.

அடிதோறும் 2-ஆம் சீர் நேரசையில் தொடங்கும்.

2, 3, 4 சீர்களிடையே வெண்டளை பயிலும்.

அடிதோறும் ஈற்றுச்சீரைத் தவிர மற்ற சீர்களில் விளச்சீர் வரும் இடத்தில் மாச்சீர் வரலாம். அப்படி அங்கு மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்.

விளச்சீர் வரும் இடத்தில் ஒரோவழி மாங்காய்ச்சீரும் வரும்.

இவ்வமைப்பு உள்ள சம்பந்தர் தேவாரப் பதிகங்கள்: 1.54 - 1.58 & 1.135.


வி. சுப்பிரமணியன்

----------- --------------