Monday, October 31, 2022

06.01.138 - சிவன் - பனிமலை - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்

2013-03-03

06.01.138 - சிவன் - பனிமலை - சிலேடை

-------------------------------------------------------

தண்புனல் தாங்கிடும் வெண்பொடி மேலிலங்கும்

விண்ணுயரும் உச்சி மிசையொருபுள் - நண்ணுதற்

கொண்ணா தடிவார முள்ளோர்கண் டுள்மகிழ்வர்

விண்ணோர் பிரான்பனி வெற்பு.


பதம் பிரித்து:

தண் புனல் தாங்கிடும் வெண் பொடி மேல் இலங்கும்

விண் உயரும் உச்சி மிசை ஒரு புள் - நண்ணுதற்கு

ஒண்ணாது அடிவாரம் உள்ளோர் கண்டு உள் மகிழ்வர்

விண்ணோர் பிரான் பனி-வெற்பு.


சொற்பொருள்:

வெண்பொடி - 1. பனித்துளி (snow); / 2. திருநீறு;

மிசை - 1. ஏழாம்வேற்றுமையுருபு; / 2. மேலிடம்;

புள் - பறவை;

அடி - 1. கீழ்; / 2. திருவடி;

வாரம் - அன்பு;

அடிவாரம் - 1. மலையினடி (Foot of a hill); 2. திருவடிக்கு அன்பு;

உள் - அகம்;

திண் - திண்மை - வலிமை;

வெற்பு - மலை;


பனிமலை:

தண் புனல் தாங்கிடும் வெண் பொடி மேல் இலங்கும் - குளிர்ந்த நீரை உள்ளே தாங்கிய பனித்துளி (snow) மேலே திகழும்;

விண் உயரும் உச்சி மிசை ஒரு புள் நண்ணுதற்கு ஒண்ணாது - வானளாவும் மலைமுகட்டின்மேல் எந்தப் பறவையும் சென்றடையமாட்டா; (This is generally speaking.) (புள் = புள்ளும்; உம்மைத்தொகை);

அடிவாரம் உள்ளோர் கண்டு உள் மகிழ்வர் - மலையின் அடிவாரத்தில் இருப்பவர்கள் (பனி திகழும் மலையுச்சியைக்) கண்டு மனம் மகிழ்வார்கள்;

(Given that some migratory birds do climb to high altitudes to cross mountain ranges, it is also possible to interpret these 2 phrases as:

"விண் உயரும் உச்சி மிசை ஒரு புள்; நண்ணுதற்கு ஒண்ணாது அடிவாரம் உள்ளோர் கண்டு உள் மகிழ்வர்" - மலையுச்சிமேல் ஒருவகைப் பறவை வானில் உயரும்; உச்சியை நெருங்க இயலாமல் அடிவாரத்திலேயே உள்ளவர்கள் அப்பறவைகளையும், மலைச்சிகரங்களையும் பார்த்து மனம் மகிழ்வார்கள்);

பனி-வெற்பு - பனிமலை;


சிவன்:

தண் புனல் தாங்கிடும் - கங்கையைத் தாங்குபவன்;

வெண் பொடி மேல் இலங்கும் - திருமேனிமேல் திருநீறு திகழும்;

விண் உயரும் - சோதியாகி வானில் உயர்ந்தவன்;

உச்சி மிசை ஒரு புள் நண்ணுதற்கு ஒண்ணாது - (அப்படி உயர்ந்தபொழுது) அன்னமாகிப் பறந்த பிரமனால் உச்சியைக் காண இயலாது; (உச்சி மிசை - ஒருபொருட்பன்மொழியாகக் கொள்ளல் ஆம்; "சோதியின் உச்சியின் மேற்பகுதி" என்றும் கொள்ளல் ஆம்);

அடி வாரம் உள்ளோர் கண்டு உள் மகிழ்வர் - திருவடியை அன்புடைய பக்தர்கள் கண்டு உள்ளம் மகிழ்வார்கள்;

விண்ணோர் பிரான் - தேவர்கள் தலைவனான சிவபெருமான்;


பிற்குறிப்பு:

(How high a can a bird fly? Google search reveals the following:

http://news.nationalgeographic.com/news/2011/06/110610-highest-flying-birds-geese-himalaya-mountains-animals/

In 2009, Hawkes and an international team of researchers tagged 25 bar-headed geese in India with GPS transmitters. Shortly thereafter, the birds left on their annual spring migration to Mongolia and surrounding areas to breed. To get there, the geese have to fly over the Himalaya.

The researchers that found the birds reached a peak height of nearly 21,120 feet (6,437 meters) during their travels. The migration took about two months and covered distances of up to 5,000 miles (8,000 kilometers).

Even more impressive, the birds completed the ascent under their own muscular power, with almost no aid from tail winds or updrafts. The team showed the birds forgo the winds and choose to fly at night, when conditions are relatively calmer.

)


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


Saturday, October 29, 2022

06.01.137 - சிவன் - சாளரம் (window) - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்

2013-02-24

06.01.137 - சிவன் - சாளரம் (window) - சிலேடை

-------------------------------------------------------

வளியொளி செல்லும் வழியாகும் உள்ளும்

வெளியும் உளபொருள் தோற்றும் - எளிதில்

அடைநீர்மை உண்டுகார் கண்டவிடத் தந்தாழ்

சடையீசன் சாளரம் தான்.


சொற்பொருள்:

வளி - காற்று;

ஒளி - வெளிச்சம்;

வழி - பாதை; நெறி;

தோற்றுதல் - 1. காட்டுதல்; 2. படைத்தல்;

அடைதல் - சேர்தல்; பெறுதல்;

அடைத்தல் - சாத்துதல்;

நீர்மை - தன்மை;

கார் - 1. மழை; / 2. கருமை;

கண்டவிடத்தே - கண்ட இடத்தே;

இடம் - 1. பொழுது; / 2. தானம் (ஸ்தானம்);

அம் - அழகு;

தாழ் - தாழ்ப்பாள்;

தாழ்தல் - நீண்டுதொங்குதல்;


சாளரம் (window):

வளி ஒளி செல்லும் வழி ஆகும் - காற்றும் வெளிச்சமும் செல்லும் வழி ஆகும்;

உள்ளும் வெளியும் உள பொருள் தோற்றும் - (வெளியில் இருப்போர்க்கு) உள்ளே இருப்பதையும், (உள்ளிருப்போர்க்கு) வெளியே இருப்பதையும் காட்டும்;

எளிதில் அடை நீர்மை உண்டு கார் கண்ட இடத்து அம் தாழ் - மழை வரும்போது அழகிய தாழ்ப்பாளால் சுலபமாகச் சாத்தும் தன்மை இருக்கும்.

சாளரம் - ஜன்னல்;


சிவன்:

வளி, ஒளி, செல்லும் வழி ஆகும் - காற்று ஒளி என ஐம்பூதங்களாகவும், நாம் செல்லும் நன்னெறியாகவும் இருப்பவன்; (நீர், நிலம், நெருப்பு ஆகியன குறிப்பால் பெறப்பட்டன);

உள்ளும் வெளியும் உள பொருள் - பிரபஞ்சத்தின் உள்ளேயும் புறத்தேயும் இருக்கும் மெய்ப்பொருள்; நமக்கு உள்ளும் இருப்பவன்; வெளியிலும் இருப்பவன்; ('கடவுள்');

உள பொருள் தோற்றும் - உள்ள எல்லாவற்றையும் படைப்பவன்; ("உள பொருள்" என்பதை இடைநிலைத்தீவகமாக இருபுறமும் இயைத்துப் பொருள்கொள்ள அமைந்தது);

எளிதில் அடை நீர்மை உண்டு - பக்தர்களால் எளிதில் அடையப்படும் இயல்பு உடையவன்;

உண்டு கார் கண்ட இடத்து - கழுத்துப் பகுதியில் கருமை உண்டு; ("உண்டு" என்ற சொல் இடைநிலைத்தீவகமாக இருபுறமும் இயைத்துப் பொருள்கொள்ள அமைந்தது);

அம் தாழ் சடை ஈசன் - அழகிய தாழும் சடையை உடைய சிவபெருமான்.


பிற்குறிப்புகள்:

1. சிவபெருமான் என்ற விளக்கத்திற்கு, 'உண்டு' என்ற சொல்லை - 'எளிதில் அடை நீர்மை உண்டு', 'உண்டு கார் கண்ட இடத்தே ' என்று இரு சொற்றொடர்களுக்கும் கூட்டிக்கொள்க.

(An example such construction in poetry: திருநாவுக்கரசர் தேவாரம்: 6.98.1 - "நாமார்க்கும் குடியல்லோம் ... இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை ..." -- 'எந்நாளும்' என்றதனை, 'இன்பமே' என்றதற்கு முன்னும் கூட்டுக. - we will always enjoy happiness only; we have no suffering at any time.)


2. தீவக அணி: ஒரு சொல், செய்யுளின் ஓரிடத்தில் நின்று, அச்செய்யுளில் பல இடங்களிலும் உள்ள சொற்களாடு சென்று பொருந்திப் பொருளைத் தருவது தீவக அணியாம்.

இடைநிலைத்தீவகம்: a figure of speech in which a word used in the middle of a sentence goes to amplify the meanings of words in various parts of the same.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


06.05.026 - அம்புதை - (மடக்கு)

06.05 – பலவகை

2013-02-20

06.05.026 - அம்புதை - (மடக்கு)

----------------------------------------

(அறுசீர் விருத்தம் - விளம் மா தேமா - அரையடி வாய்பாடு)


அம்புதை சடையின் மேலோர்

.. அணிமதி சூடும் அண்ணல்

அம்புதை ஏவும் வேளை

.. அனங்கனாய் ஆக்கும் கண்ணன்

அம்புதை கேழற் பின்போய்

.. அருச்சுனற் கருளும் வேடன்

அம்புதை நாவ லூர்க்கோன்

.. அவர்முடி வைத்தான் தானே.


சொற்பொருள்:

அம் - நீர்; அழகு;

அம்பு - பாணம்; நீர்;

புதை - புதைத்தல் (ஒளித்துவைத்தல்); அம்பு;

தை - தைத்தல்; அம்பு முதலியன ஊடுருவுதல்;

கேழல் - பன்றி;

நாவலூர்க்கோன் - சுந்தரமூர்த்திநாயனார்;


அம்புதை - 1a. அம்+புதை சடை (நீரை உள்ளடக்கிய சடை); 1b. அம்பு+உதை சடை ( அலைமோதுகின்ற சடை) / 2. அம்+புதை ஏவும் வேளை (அழகிய அம்பு - மலர்க்கணை ஏவிய மன்மதனை); / 3. அம்பு+தை கேழல் (அம்பு தைத்த பன்றி); / 4. அம்பு+உதை (அன்பு உதை; அன்பு, 'அம்பு' என மருவியது).


(அப்பர் தேவாரம் - 5.1.1 - "அன்னம் பாலிக்கும் .... என்னம் பாலிக்கு மாறு ....." -- என் அன்பு எனப் பிரிக்க. அன்பு என்பது அம்பு என மருவிற்று. )


அம் புதை சடையின் மேல் ஓர் அணிமதி சூடும் அண்ணல் - கங்கையை ஒளித்த சடையின் மேல் அழகிய சந்திரனைச் சூடும் தலைவன்; ("அம்பு - நீர்" என்ற பொருளில், "அம்பு உதை சடை" என்றும் பிரித்துப் பொருள்கொள்ளல் ஆம். அலை மோதுகின்ற சடை);

அம் புதை ஏவும் வேளை அனங்கனாய் ஆக்கும் கண்ணன் - அழகிய மலர்க்கணையை ஏவிய மன்மதனை உடலற்றவன் ஆக்கிய நெற்றிக்கண்ணன்;

அம்பு தை கேழல்பின் போய் அருச்சுனற்கு அருளும் வேடன் - வேடனாகிக் காட்டில் அம்பு தைத்த பன்றிப்பின் சென்று அருச்சுனனுக்குப் பாசுபதம் அருளியவன்;

அம்பு-உதை நாவலூர்க்கோன் அவர் முடி வைத்தான்தானே - (திருவதிகையில் முதியவர் உருவில் சென்று) சுந்தரர் உறங்கும்போது அவர் தலையில் அன்போடு உதை வைத்த சிவபெருமானே!


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


Thursday, October 27, 2022

06.02.171 – பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி) - சோம்பித் திரிமனப் பாங்குற்று - (வண்ணம்)

06.02.171 – பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி) - சோம்பித் திரிமனப் பாங்குற்று - (வண்ணம்)

2013-02-06

06.02.171 - சோம்பித் திரிமனப் பாங்குற்று - பாண்டிக்கொடுமுடி (இக்காலத்தில் 'கொடுமுடி' )

-------------------------

(வண்ணவிருத்தம்;

தாந்தத் தனதனத் தாந்தத் தனதனத்

தாந்தத் தனதனத் .. தனதான )

(பெரும்பாலும் இச்சந்தத்தை ஒத்த திருப்புகழ் - "காந்தட் கரவளை" - பாண்டிக்கொடுமுடி)


சோம்பித் திரிமனப் பாங்குற் றிடர்மிகத்

.. .. தோன்றக் கவலையுற் .. றலைநீரில்

.. தூண்டிற் கயலையொத் தேங்கித் துயரிடைத்

.. .. தோய்ந்தித் தரைமிசைச் .. சுழலாமல்

சாம்பற் பொலிவினைத் தாங்கிப் பிறவியைத்

.. .. தாண்டிச் சுகமுறற் .. கருளாயே

.. தாங்கற் கருநெருப் பேந்திப் புனலினைத்

.. .. தாங்கித் திகழ்மழுப் .. படையானே

ஓம்பித் தொழநினைப் பாங்கற் றவர்நடுக்

.. .. கோங்கத் தழலுருக் .. கொளுமீசா

.. ஊண்பெற் றிடவிரப் பாம்பெற் றியசிரித்

.. .. தூன்றித் தசமுகற் .. செறுபாதா

பாம்பைப் புதுமலர்க் கோங்கைப் பிறைமதிப்

.. .. பாங்கிற் புனைசுடர்ச் .. சடையானே

.. பாய்ந்தெற் றிடுபுனற் பாங்கர்த் திகழ்திருப்

.. .. பாண்டிக் கொடுமுடிப் .. பெருமானே.


பதம் பிரித்து:

சோம்பித் திரி மனப்பாங்கு உற்று, இடர் மிகத்

.. .. தோன்றக் கவலையுற்று, அலைநீரில்

.. தூண்டிற் கயலை ஒத்து ஏங்கித், துயரிடைத்

.. .. தோய்ந்து, இத்-தரைமிசைச் சுழலாமல்,

சாம்பற் பொலிவினைத் தாங்கிப் பிறவியைத்

.. .. தாண்டிச் சுகம் உறற்கு அருளாயே;

.. தாங்கற்கு அரு-நெருப்பு ஏந்திப், புனலினைத்

.. .. தாங்கித் திகழ் மழுப்-படையானே;

ஓம்பித் தொழ நினைப்பு ஆங்கு அற்றவர் நடுக்கு

.. .. ஓங்கத் தழல்-உருக் கொளும் ஈசா;

.. ஊண் பெற்றிட இரப்பு ஆம் பெற்றிய; சிரித்து

.. .. ஊன்றித் தசமுகற் செறு-பாதா;

பாம்பைப், புதுமலர்க் கோங்கைப், பிறைமதிப்

.. .. பாங்கிற் புனை சுடர்ச்-சடையானே;

.. பாய்ந்து எற்றிடு புனற் பாங்கர்த் திகழ் திருப்

.. .. பாண்டிக் கொடுமுடிப் பெருமானே.


சோம்பித் திரி மனப்பாங்குற்று, டர் மிகத் தோன்றக்வலையுற்று - நற்செயல்கள் செய்யாது அலையும் மனநிலையினால், துன்பம் மிகவும் வர, அதனால் கவலையடைந்து; (சோம்புதல் - மந்தமாதல்); (திரிதல் - அலைதல்; தன்மைகெடுதல்); (மனப்பாங்கு - மனநிலை; பாங்கு - இயல்பு);

லைநீரில் தூண்டிற் கயலைத்து ஏங்கித் - அலைகின்ற நீரில் தூண்டிலில் சிக்கிய மீன் போல வருந்தி; (கயல் - ஒருவகை மீன்); (ஏங்குதல் - மனம்வாடுதல்; அஞ்சுதல்);

துயரிடைத் தோய்ந்து, த்-தரைமிசைச் சுழலாமல் - துயரத்தில் மூழ்கி, இந்தப் பூமியில் பிறவிகளில் சுழலாமல்; (தோய்தல் - முழுகுதல்); (சுழல்தல் - சுற்றுதல்; சஞ்சலப்படுதல்);

சாம்பற் பொலிவினைத் தாங்கிப் பிறவியைத் தாண்டிச் சுகம் உறற்கு அருளாயே - திருநீற்றைப் பூசிப் பிறவிக்கடலைக் கடந்து இன்பம் அடைவதற்கு அருள்புரிவாயாக; (சாம்பல் - திருநீறு); (உறல் - உறுதல் - அடைதல்; பெறுதல்); (அப்பர் தேவாரம் - 4.102.1 - "சாம்பலைப் பூசிச் சலமின்றித் தொண்டுபட் டுய்ம்மின்களே");


தாங்கற்கு அரு-நெருப்பு ஏந்திப், புனலினைத் தாங்கித் திகழ் மழுப்-படையானே - கையில் தாங்குவற்கு அரிய நெருப்பை ஏந்தி, முடிமேல் கங்கையைத் தாங்கித் திகழ்கின்ற, மழுவாயுதத்தை ஏந்தியவனே;


ஓம்பித் தொழ நினைப்பு ஆங்கு அற்றவர் நடுக்கு ங்கத் தழல்-ருக் கொளும் ஈசா - உன்னைப் பேணி வழிபட எண்ணாத பிரமனும் திருமாலும் அங்கு மிக அஞ்சும்படி சோதிவடிவாக அவரிடையே தோன்றிய ஈசனே; (ஓம்புதல் - பேணுதல்; போற்றுதல்); (ஆங்கு - அங்கு; அசைச்சொல்லாகவும் கொள்ளலாம்); (நடுக்கு - நடுக்கம் - அச்சம்; துன்பம்);

ஊண் பெற்றிட இரப்பு ஆம் பெற்றிய - உணவு பெற யாசித்தலை உடைய பெருமையினனே; (ஊண் - உணவு); ( இரப்பு - யாசித்தல்); (பெற்றிய - பெற்றியனே; பெற்றி - பெருமை);

சிரித்து ஊன்றித் தசமுகற் செறு-பாதா - சிரித்துத் திருப்பாத விரலை ஊன்றி இராவணனை நசுக்கியவனே; (தசமுகன் - இராவணன்); (செறுதல் - வருத்துதல்); (தசமுகற் செறு - தசமுகனைச் செற்ற; இரண்டாம்வேற்றுமைத்தொகையில் உயர்திணையில் பொருளின் தெளிவு கருதி முதற்சொல்லின் ஈற்றில் உள்ள கர ஒற்று றகர ஒற்றாகத் திரியும்); (அப்பர் தேவாரம் - 4.80.10 - "மலைமகள்கோன் சிரித்து அரக்கன் மணிமுடி பத்தும் அணிதில்லை அம்பலவன் நெருக்கி மிதித்த விரல்");


பாம்பைப், புதுமலர்க் கோங்கைப், பிறைமதிப் பாங்கிற் புனை சுடர்ச்-சடையானே - பாம்பையும், புதிய கோங்கமலரையும், பிறைச்சந்திரன் பக்கத்தில் அணிந்த ஒளியுடைய சடையை உடையவனே; (கோங்கு - கோங்கமலர்); (பாங்கு - பக்கம்);

பாய்ந்து எற்றிடு புனற் பாங்கர்த் திகழ் திருப் பாண்டிக் கொடுமுடிப் பெருமானே - பாய்ந்து அலைமோதும் காவிரியின் கரையில் திகழ்கின்ற பாண்டிக்கொடுமுடியில் எழுந்தருளிய பெருமானே; (எற்றுதல் - மோதுதல்); (பாங்கர் - பக்கம்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


06.01.136 - சிவன் - புயல் - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்

2012-10-29

06.01.136 - சிவன் - புயல் - சிலேடை

-------------------------------------------------------

நீர்வெளி வல்வளியாய் நிற்கும் நிலமஞ்சும்

பேர்தரும் உச்சமழை பெய்யுமால் - ஆரும்

துணையாம் புணையென்று சொல்வர் புயலோர்

கணையால் எயிலெய்தான் காண்.


சொற்பொருள்:

வெளி - 1. பரப்பு (open space); / 2. ஆகாயம்;

வல் - வலிமை; விரைவு;

வளி - காற்று;

அஞ்சும் - 1. பயப்படும்; / 2. ஐந்தும்;

பேர் - பெயர்;

பேர்தல் - போதல் (To depart, go away);

தா/தருதல் - 1. துணைவினை - (An auxiliary added to verbs); / 2. கொடுத்தல்;

உச்சம் - 1. அறுதியளவு (Extreme limit); / 2. உச்சந்தலை;

மழை - 1. மாரி (Rain); / 2. நீர்;

ஆல் - 1. ஓர் அசைச்சொல்; / 2. ஆலகால விடம்;

ஆர் - யார்;

ஆர்தல் - உண்ணுதல்;

புணை =- தெப்பம்; படகு;

சொல்லுதல் - 1. கூறுதல் / 2. புகழ்தல்;

எயில் - கோட்டை;

காண் - பார்; முன்னிலை அசைச்சொல்;


புயல்:

நீர்வெளி வல்வளியாய் நிற்கும் - கடற்பரப்பில் மிக வலிமை உடைய காற்றாகத் தோன்றும்;

நிலம் அஞ்சும் - உலகம் அதனைக் கண்டு அச்சம்கொள்ளும்;

பேர் தரும் - அந்த அச்சத்தால் வேறு இடங்களுக்கு நீங்கிச்செல்வார்கள் (evacuation to safer places ahead of storm's landfall); (தருதல் - துணைவினைச்சொல்). (இக்காலத்தில் புயல்களுக்குப் பேர் வைக்கும் பழக்கத்தை ஒட்டி, "அதற்கு ஒரு பெயரைக் கொடுக்கும்' என்றும் பொருள்கொள்ளலாம்);

உச்ச மழை பெய்யுமால் - மிக அதிக மழை பெய்யும்; (ஆல் - அசைச்சொல்);

ஆரும் "துணை ஆம் புணை" என்று சொல்வர் - (புயலால் வெள்ளமும் ஏற்படுவதால்) எவரும் "ஒரு படகு இருந்தால் உதவும்" என்று சொல்வார்கள்;

புயல் - பேய்காற்றும் பெருமழையும் உடைய புயல் (cyclone / hurricane);


சிவன்:

நீர் வெளி வல்வளியாய் நிற்கும் - நீர், ஆகாயம், வலிய காற்று, என ஐம்பூதங்களாய் நிற்பவன்; (தீ, நிலம் என்ற மற்ற இருபூதங்களும் குறிப்பால் பெறப்பட்டன);

நிலம் அஞ்சும் - உலகோர் (இறைவனுக்குப்) பயப்படுவர்;

பேர் தரும் - (ஒரு பெயரும் இல்லாத அவனுக்குப்) பல பெயர்கள் தருவர்;

("நிலம் அஞ்சும் பேர் தரும்" - தமிழ் இலக்கணம் சொல்வதுபோல், "குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்ற இயற்கையான ஐந்துநிலப்பிரிவுகளில் உள்ளோர் கடவுளுக்கு முருகன், திருமால், முதலிய வெவ்வேறு பேர்கள் தருவர்" என்றும் பொருள்கொள்ளலாம்;)

உச்சம் மழை பெய்யும் - அவன் உச்சந்தலையில் கங்கை பொழியும்; (இலக்கணக் குறிப்பு: "உச்சம் + மழை = உச்சமழை" - என்று ஈற்று மகரம் கெட்டுப் புணரும்);

ஆல் ஆரும் - ஆலகால விடத்தை உண்பான்;

துணை ஆம் புணை என்று சொல்வர் - சம்சார சாகரத்தைக் கடக்க உதவும் தெப்பம் என்று புகழ்வார்கள்;

ஓர் கணையால் எயில் எய்தான் - ஒரு கணையால் முப்புரங்களை எய்து அழித்த சிவபெருமான்;


பிற்குறிப்புகள்:

(அப்பர் தேவாரம் - 5.23.9 - "அஞ்சியாகிலும் அன்புபட்டாகிலும் நெஞ்சம் வாழி நினை நின்றியூரை நீ" - அஞ்சியாகிலும் - அச்சம் கொண்டாவது. அன்பு பட்டாகிலும் - அன்பு கொண்டாவது. பயபக்தி இரண்டில் ஒன்றையேனும் கடைப்பிடித்து என்றபடி.);


(சம்பந்தர் தேவாரம் - 1.115.3 - "தழைமயி லேறவன் தாதையோதான் மழைபொழி சடையவன்");


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


06.01.135 - சிவன் - காகம் - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்

2012-10-20

06.01.135 - சிவன் - காகம் - சிலேடை

-------------------------------------------------------

உண்டிக் கெனவுழலுங் கண்ட விடமுண்ணுங்

கண்டங் கறுக்குங் கரவாமை - கொண்டு

கரையும் நரர்க்கு நலம்செய்யுங் காக்கை

திரைநதிசேர் சென்னிச் சிவன்.


சொற்பொருள்:

கண்டவிடம் - 1. கண்ட விடம் (காணப்பட்ட நஞ்சு); 2. எவ்விடமும்;

கரவாமை - வஞ்சனை இன்மை;

கொண்டு - 1. கொள்ளுதல் - மேற்கொள்ளுதல் (To adhere to, observe;); 2. மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு;

கரைதல் - 1. மனம் உருகுதல்; 2. ஒலித்தல்;

திரை - அலை;

சென்னி - தலை;


காகம்:

உண்டிக்கு என உழலும் - உணவுக்கு என்று அலையும்;

கண்ட இடம் உண்ணும் - பாகுபாடு இன்றி இரை கண்ட எந்த இடத்திலும் தின்னும்;

கண்டம் கறுக்கும் - கழுத்துக் கறுப்பாக இருக்கும்;

கரவாமை கொண்டு கரையும் - வஞ்சனையின்மையால் கரைந்து தன் இனத்தோடு பகிர்ந்து உண்ணும்; (திருக்குறள் - 527 - "காக்கை கரவா கரைந்துண்ணும்");

நரர்க்கு நலம் செய்யும் காக்கை - (இறந்த பிராணிகளின் ஊனையும் மற்றவற்றையும் உண்டு) மனிதர்க்குப் புறச்சூழல் சுத்தமாக இருக்க உதவும் காகம். ("பிண்டபோஜனம் செய்து மானிடர்களின் பித்ருக்கள் வழிபாட்டுக்கு உதவி செய்யும்" என்றும் பொருள்கொள்ளக்கூடும்);


சிவன்:

உண்டிக்கு என உழலும் - (மண்டையோட்டை ஏந்திப் பிச்சையாக இடும்) உணவுக்குத் திரிபவன்;

கண்ட விடம் உண்ணும் - காணப்பட்ட நஞ்சை உண்பவன்;

கண்டம் கறுக்கும் - மிடறு கருமையாக இருக்கும்; ("கண்டு அங்கு அறுக்கும் - பக்தர்களைக் கடைக்கண்ணால் பார்த்து அவர்கள் குறைகளைத் தீர்ப்பான்" என்றும் பொருள்கொள்ளலாம்);

கரவாமை கொண்டு கரையும் நரர்க்கு நலம் செய்யும் - வஞ்சனையின்றி உள்ளம் உருகும் பக்தர்களுக்கு நன்மை செய்பவன்; ('வஞ்சனையின்றி' என்பதைச் சிவனுக்கும் அடைமொழியாகக் கொள்ளலாம்);

திரைநதிசேர் சென்னிச் சிவன் - அலைக்கும் கங்கையைத் தலைமேல் ஏற்ற சிவபெருமான்.


இலக்கணக்குறிப்பு:

செய்யும் எனும் வாய்பாட்டு வினைமுற்று நிகழ்காலம் மட்டும் காட்டும். இது பலர்பால் படர்க்கை, முன்னிலை, தன்மை ஆகியவற்றில் வாராது. ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால், பலவின்பால் என்னும் படர்க்கைப் பெயர்களோடு மட்டுமே பொருந்தி வரும்.

(எடுத்துக்காட்டு): அவன் உண்ணும், அவள் உண்ணும், அது உண்ணும், அவை உண்ணும்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


06.03.058 - சேயவன் - பேரான்றன் - மடக்கு - (முருகன் / சிவன்)

06.03 – மடக்கு

2012-08-10 (ஆடிக்கிருத்திகை நாள்)

06.03.058 - சேயவன் - பேரான்ன் - மடக்கு - (முருகன் / சிவன்)

-------------------------

சேயவன் முக்கண்ணன் தேவர் தொழஅருள்செய்

சேயவன் வந்தனை செய்யார்க்குச் - சேயவன்

பேரான்றன் தாள்பேணும் பெற்றியரை ஆயிரம்

பேரான்றன் சீர்நாவே பேசு.


பதம் பிரித்து:

சேயவன்; முக்கண்ணன் தேவர் தொழ அருள்செய்

சேய் அவன்; வந்தனை செய்யார்க்குச் - சேயவன்;

பேரான் தன் தாள் பேணும் பெற்றியரை; ஆயிரம்

பேரான்தன் சீர் நாவே பேசு.


சேய் - செம்மை; மகன்; தலைவன்; தூரம்;

பேர்தல் - பெயர்தல் - நீங்குதல்; விலகுதல்;

பேர் - பெயர்; நாமம்;

சேயவன் - 1) சிவந்தவன்; 2) தலைவன் அவன்; 3) தூரத்தில் உள்ளவன்;

பேரான்தன் - 1) நீங்கான் தன்னுடைய; 2) பெயர் உடையவனுடைய;

பெற்றி - குணம்;

சீர் - புகழ்;


செம்மேனியன்; தேவர்கள் தொழ, அவர்களுக்கு இரங்கி முக்கண்ணன் அருளிய திருமகன்; போற்றி வழிபடாதவர்களுக்குத் தொலைவில் உள்ளவன்; தன் திருவடியைப் போற்றும் குணம் உடைய அடியவர்களை அகலாமல் அவர்களோடு இருப்பவன்; ஆயிரம் திருப்பெயர்கள் உடையவன்; நாக்கே! நீ அந்த முருகனது புகழைப் பேசு.


பிற்குறிப்பு:

இப்பாடலில் இரண்டாம் அடியின் முதற்சீரில் "சேயவன் = தலைவன்" என்று பொருள்கொண்டு சிவனைப் போற்றும் பாடலாகவும் கொள்ளல் ஆம்.

சேயவன் - செம்மேனியன்;

முக்கண்ணன் - நெற்றிக்கண்ணன்;

தேவர் தொழ அருள்செய் சேய் அவன் - தொழுத தேவர்களுக்கு அருள்செய்த தலைவன்;

வந்தனை செய்யார்க்குச் சேயவன் - வழிபடாதவர்களுக்குத் தொலைவில் இருப்பவன்;

பேரான் தன் தாள் பேணும் பெற்றியரை - தன் திருவடியைப் போற்றும் பக்தர்களை நீங்கமல் உடனே இருப்பவன்;

ஆயிரம் பேரான்தன் சீர் நாவே பேசு - ஆயிரம் திருநாமங்கள் உடைய சிவபெருமானது புகழை, நாக்கே நீ பேசு;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


06.04.022 – சுந்தரர் துதி - பொல்லாத வினைக்கடலில்

06.04.022 – சுந்தரர் துதி - பொல்லாத வினைக்கடலில்

2012-07-20

06.04.022) சுந்தரர் துதி - சுந்தரர் குருபூஜை - ஆடிச் சுவாதி - 2012-Jul-26

-------------------------


1) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---

பொல்லாத வினைக்கடலில் புணையாக வருமரனே

வெல்லோலை ஒன்றாலே மீளாத அடிமைகொண்டு

பல்லூரில் தமிழ்பாடிப் பரவென்று பணித்தவர்தம்

சொல்லாரும் தமிழ்பாடில் துன்பங்கள் நில்லாவே.


* அடிமை ஓலை காட்டிச் சுந்தரரைத் தடுத்தாட்கொண்டது.


புணை - தெப்பம்;

வெல் ஓலை - வழக்கில் வெல்கிற அடிமைப்பத்திரம்;

மீளாத அடிமை - நிரந்தர அடிமை;

பரவுதல் - துதித்தல்;

சொல் ஆரும் தமிழ் பாடில் - பல்வகையான இனிய அரிய தமிழ்ச்சொற்களால் அமைந்த தேவாரப் பதிகங்களைப் பாடினால்;

(பெரியபுராணம் - திருமலைச் சருக்கம் 5. தடுத்தாட்கொண்ட புராணம் - #222:

சொல்லார்தமி ழிசைபாடிய தொண்டன்தனை இன்னும்

பல்லாறுல கினில்நம்புகழ் பாடென்றுறு பரிவின்

நல்லார்வெண்ணெய் நல்லூரருட் டுறைமேவிய நம்பன்

எல்லாவுல குய்யப்புரம் எய்தானருள் செய்தான். )


2) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---

விழிகாட்டும் நுதலீசா வேலைவிடம் மிடற்றினிலே

எழில்கூட்டும் ஐயாறா என்றிறைஞ்ச அவனருளால்

சுழிகாட்டும் காவிரிநீர் விலகிநின்று துளக்கமிலா

வழிகாட்டும் வன்றொண்டர் மலர்ப்பாதம் வாழியவே.


* திருவையாற்றில் காவிரிவெள்ளம் விலகிச் சுந்தரர்க்கு வழிவிட்டது.


வேலை - கடல்;

மிடறு - கண்டம்;

துளக்கம் - நடுக்கம்; அச்சம்;

வன்றொண்டர் - வன் தொண்டர் - சுந்தரர்;


திருவையாற்றுக்குச் சென்றுகொண்டிருந்தபோது, வழியில் சுழித்து ஓடிக்கொண்டிருந்த காவிரிவெள்ளத்தால் அக்கரையில் தடைப்பட்டு நின்றார் சுந்தரர்.

"நெற்றிக்கண்ணனே; கடல் நஞ்சு கண்டத்தில் அழகாகச் சேரும் ஐயாற்றுப் பெருமானே" என்று துதிக்கவும், சிவனருளால், சுழித்து ஓடிக்கொண்டிருந்த காவிரி வெள்ளம் விலகி நல்லவழியைக் காட்டிய சுந்தரரின் மலர்ப்பாதங்கள் வாழ்க!


3) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---

பொய்யாற்றில் நாமுழன்று புகலின்றி வாடாமே

மெய்யாற்றில் நின்றுபழ வினைதீரத் தமிழ்தந்தார்

மையேற்ற கண்டத்தன் வண்கச்சூர் தனிற்பிச்சை

கையேற்றுண் பித்தருளும் வன்றொண்டர் கழல்போற்றி.


* திருக்கச்சூரில் சிவபெருமான் உணவை இரந்துவந்து சுந்தரர்க்கு அளித்துப் பசீதீர்த்ததைச் சுட்டியது.


ஆறு - வழி; நெறி;

புகல் - அடைக்கலம்;

மை - கறுப்பு;

வண்மை - வளம்;

உண்பித்தல் - உணவளித்தல்;


(பெரிய புராணம் - 29 ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணம் - #176 & 177:

வன்தொண்டர் பசிதீர்க்க மலையின்மேல் மருந்தானார்

மின்தங்கு வெண்டலையோ டொழிந்தொருவெற் றோடேந்தி

அன்றங்கு வாழ்வாரோர் அந்தணராய்ப் புறப்பட்டுச்

சென்றன்பர் முக[ம்]நோக்கி அருள்கூரச் செப்புவார்.


மெய்ப்பசியால் மிகவருந்தி இளைத்திருந்தீர் வேட்கைவிட

இப்பொழுதே சோறிரந்திங் கியானுமக்குக் கொணர்கின்றேன்

அப்புற[ம்]நீர் அகலாதே சிறிதுபொழு தமருமெனச்

செப்பியவர் திருக்கச்சூர் மனைதோறும் சென்றிரப்பார்.)


4) --- (கலிவிருத்தம் - "மாங்கனி மாங்கனி மாங்கனி மா" என்ற வாய்பாடு) ---

தெங்கம்பொழில் திகழும்திருப் புகலூர்தனிற் செங்கல்

அங்கம்பொனின் கல்லாகிட அரனாரருள் பெற்றார்

பங்கங்களை பாமாலைகள் பலபாடுவன் தொண்டர்

பொங்கும்புகழ் உடையாரவர் பொற்றாளிணை போற்றி.


* திருப்புகலூரில் கோயில் முற்றத்தில் செங்கற்களைத் தலையணையாக வைத்துச் சுந்தரர் துயின்றபொழுது சிவன் அருளால் அக்கற்கள் பொன்னாக மாறியதைச் சுட்டியது.


தெங்கம்பொழில் - தென்னை மரச்சோலை;

அங்கு - அசைச்சொல்;

அம்பொன் - சிறந்த பொன்;

பங்கம் களை பாமாலை - குற்றத்தைப் போக்கும் தேவாரப் பதிகங்கள்;

பொற்றாள் இணை - இரண்டு பொன்னடிகள்;


(பெரிய புராணம் - 29 ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணம் - #50:

சுற்றும் இருந்த தொண்டர்களும் துயிலும் அளவில் துணைமலர்க்கண்

பற்றும் துயில்நீங் கிடப்பள்ளி உணர்ந்தார் பரவை கேள்வனார்

வெற்றி விடையார் அருளாலே வேமண் கல்லே விரிசுடர்ச்செம்

பொன்திண் கல்லா யினகண்டு புகலூர் இறைவர் அருள்போற்றி. )


5) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---

ஏழையொரு கூறுடைய எம்பெருமான் இணையடியை

ஏழிசையார் இன்தமிழால் ஏத்தியவர் அவனுக்குத்

தோழமையும் பெற்றவர்வான் சூழநொடித் தான்மலைக்கு

வேழமிசைச் சென்றடைந்தார் விரைமலர்த்தாள் வாழியவே.


* திருவாரூரில் ஈசன் தன்னைச் சுந்தரர்க்குத் தோழனாகத் தந்தருளினான்;

* வெள்ளை ஆனையின்மேல் ஏறிக் கயிலாயத்தை அடைந்தது;


ஏழை - பெண் - பார்வதி;

ஏழிசை ஆர் இன் தமிழால் - ஏழாகிய இசையினையுடைய, இனிய தமிழால்;

வான் - தேவர்கள்;

நொடித்தான்மலை - கயிலைமலை;

வேழமிசை - யானையின்மேல்;

விரைமலர்த்தாள் - வாசமலர்த்திருவடி;


(சுந்தரர் தேவாரம் - 7.100.4 -

வாழ்வை உகந்தநெஞ்சே மடவார் தங்கள் வல்வினைப்பட்

டாழ முகந்தவென்னை அது மாற்றி அமரரெல்லாம்

சூழ அருள்புரிந்து தொண்டனேன் பரமல்லதொரு

வேழம் அருள்புரிந்தான் நொடித்தான்மலை உத்தமனே.)


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------