Monday, August 22, 2022

06.02.167 – பைஞ்ஞீலி (திருப்பைஞ்ஞீலி) - எந்நாளும் மயலுறு - (வண்ணம்)

06.02.167 – பைஞ்ஞீலி (திருப்பைஞ்ஞீலி) - எந்நாளும் மயலுறு - (வண்ணம்)

2012-05-04

06.02.167 - எந்நாளும் மயலுறு - (பைஞ்ஞீலி (திருப்பைஞ்ஞீலி))

(திருச்சிராப்பள்ளி அருகே வடமேற்கே 20 கிமீ தூரத்தில் உள்ள தலம்)

-------------------------

(வண்ணவிருத்தம்;

தன்னான தனதன .. தனதான )


எந்நாளும் மயலுறு .. மதியாலே

.. இஞ்ஞால மிசையுழல் .. அடியேனும்

அந்நாலு மறைமொழி .. அயன்மாலும்

.. அண்ணாத அடிதொழ .. அருளாயே

அந்நாரி தனையிடம் .. உடையானே

.. அஞ்ஞான இருளறு .. சுடரானே

பைந்நாகம் முடிமிசை .. அணிவோனே

.. பைஞ்ஞீலி தனிலுறை .. பெருமானே.


எந்நாளும் மயல் உறு மதியாலே இஞ்-ஞாலமிசை உழல் அடியேனும் - எப்பொழுதும் மயங்குகின்ற சிந்தையாலே இப்பூமியில் வருந்தும் அடியேனும்; (மயல் - மயக்கம்); (ஞாலம் - பூமி); (உழல்தல் - சுழல்தல்; அலைதல்);

அந் நாலுமறை மொழி அயன், மாலும் அண்ணாத அடி தொழ அருளாயே - அந்த நால்வேதங்களை உரைக்கும் பிரமனும் திருமாலும் அடைய இயலாத நின் திருவடியைத் தொழுமாறு அருள்வாயாக; (அண்ணுதல் - நெருங்குதல்; அடைதல்);

அம் நாரிதனை இடம் உடையானே - அழகிய உமையை இடப்பாகம் உடையவனே; (அம் - அழகிய); (நாரி - பெண்);

அஞ்ஞான இருள் அறு சுடரானே - அஞ்ஞான இருளைப் போக்கும் சோதியே; (அறுத்தல் - தீர்த்தல்):

பைந்நாகம் முடிமிசை அணிவோனே - படம் உடைய நாகப்பாம்பைத் தலைமேல் அணிபவனே; (பை - பாம்புப்படம்);

பைஞ்ஞீலிதனில் உறை பெருமானே - திருப்பைஞ்ஞீலியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே!


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment