Monday, August 15, 2022

06.02.162 – வலஞ்சுழி (திருவலஞ்சுழி) - வரம்பில எனுந்துயர் - (வண்ணம்)

06.02.162 – வலஞ்சுழி (திருவலஞ்சுழி) - வரம்பில எனுந்துயர் - (வண்ணம்)

2012-03-14

6.2.162 - வரம்பில எனுந்துயர் - வலஞ்சுழி (திருவலஞ்சுழி)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனந்தன தனந்தன தனந்தன தனந்தன

தனந்தன தனந்தன .. தனதான )

(தலங்களில் வருங்கன இலங்கொடு - திருப்புகழ் - பெருங்குடி)


வரம்பில எனுந்துயர் மிகும்பிற வறுந்திட

.. .. மலங்களும் அகன்றிட .. மலர்தூவி

.. வரம்பல தருங்கழல் இரண்டினை வணங்கிடும்

.. .. மனந்தனை அடைந்திட .. அருளாயே

உரங்கொடு விலங்கலை இடந்திடும் இலங்கையன்

.. .. உடம்பிற நகந்தனை .. இடுவோனே

.. உணர்ந்தவன் நரம்பிசை பயின்றுனை இறைஞ்சவும்

.. .. உகந்தருள் புரிந்திடும் .. ஒருநாதா

முரண்டிரி புரங்களும் உடன்பொடி படும்படி

.. .. முனஞ்சுடு சரந்தொடு .. பெருவீரா

.. முழங்கெரி கரந்தனில் விளங்கிட நடந்தனை

.. .. முடிந்தவர் சுடுந்தலம் .. இடுவோனே

மரங்களு மணங்கமழ் வனங்களு மலிந்தரு

.. .. வளந்திகழ் நலந்தரும் .. இடம்நாடி

.. வருஞ்சிறை இலங்கறு பதஞ்சுர முரன்றிடு

.. .. வலஞ்சுழி மகிழ்ந்துறை .. பெருமானே.


பதம் பிரித்து:

வரம்பு இல எனும் துயர் மிகும் பிறவு அறுந்திட,

.. .. மலங்களும் அகன்றிட, மலர் தூவி,

.. வரம் பல தரும் கழல் இரண்டினை வணங்கிடும்

.. .. மனந்தனை அடைந்திட அருளாயே;

உரங்கொடு விலங்கலை இடந்திடும் இலங்கையன்

.. .. உடம்பு இற நகந்தனை இடுவோனே;

.. உணர்ந்து, அவன் நரம்பு இசை பயின்று உனை இறைஞ்சவும்,

.. .. உகந்து அருள் புரிந்திடும் ஒரு நாதா;

முரண் திரிபுரங்களும் உடன் பொடிபடும்படி

.. .. முனம் சுடுசரம் தொடு பெருவீரா;

.. முழங்கு எரி கரந்தனில் விளங்கிட, நடந்தனை,

.. .. முடிந்தவர் சுடும் தலம் இடுவோனே;

மரங்களும் மணம் கமழ் வனங்களும் மலிந்து, அரு

.. .. வளம் திகழ், நலம் தரும் இடம் நாடி

.. வரும் சிறை இலங்கு அறுபதம் சுரம் முரன்றிடு

.. .. வலஞ்சுழி மகிழ்ந்து உறை பெருமானே.


வரம்பு இல எனும் துயர் மிகும் பிறவு அறுந்திட, மலங்களும் அகன்றிட, மலர் தூவி வரம் பல தரும் கழல் இரண்டினை வணங்கிடும் மனந்தனை அடைந்திட அருளாயே - அளவற்றதான, துன்பம் மிகுந்த பிறவிகள் இல்லாமற் போக, அப்பிறவிகளுக்குக் காரணமான மும்மலங்களும் நீங்க, பல வரங்களைத் தரும் உன் இரு திருவடிகளில் பூக்களைத் தூவி வணங்கும் மனத்தை நான் பெறுமாறு அருள்புரிவாயாக! (வரம்பு - அளவு; எல்லை); (பிறவு - பிறவி); (அறுதல் - ஒழிதல்; தீர்தல்);


உரம்கொடு விலங்கலை இடந்திடும் இலங்கையன் உடம்பு இற நகம்தனை இடுவோனே - (தரையில் இறங்கிய தன் தேர் ஓட வேண்டித்) தன் வலிமையால் கயிலைமலையைப் பெயர்க்க இராவணன் முயன்றபோது, அவனுடைய உடம்பு நசுங்கும்படி அம்மலைமேல் ஒரு விரல்நகத்தின் நுனியை வைத்தவனே! (உரம் - வலிமை); (கொடு - கொண்டு); (விலங்கல் - மலை - இங்கே கயிலைமலை); (இடத்தல் - பெயர்த்தல்); (இறுதல் - முறிதல்; தளர்தல்); (இடுதல் - வைத்தல்); (சம்பந்தர் தேவாரம் - 1.9.8 - "வலியரக்கன் தலைதோளவை நெரியச் சரணுகிர் வைத்தவன் தன்னூர்" -- உகிர் - நகம்);


உணர்ந்து, அவன் நரம்பு இசை பயின்று உனை இறைஞ்சவும், உகந்து அருள் புரிந்திடும் ரு நாதா - தன் பிழையை உணர்ந்து, தன் உடம்பில் உள்ள நரம்புகளை வீணை நரம்புகளாகக் கொண்டு அவன் இன்னிசை பாடி உன்னைத் தொழவும், அதற்கு மகிழ்ந்து இரங்கி அவனுக்கு (வாழ்நாளும் வாளும் நாமமும்) அருள்புரிந்த ஒப்பற்ற தலைவனே! (நரம்பு இசை - தன் உடம்பில் உள்ள நரம்புகளை வீணை நரம்புகளாகக் கொண்டு இசைத்த இன்னிசை); (பயில்தல் - ஒலித்தல்); (உகத்தல் - மகிழ்தல்; விரும்புதல்); (அப்பர் தேவாரம் - 6.49.10 - "மெய்யின் நரம்பிசையாற் கேட்பித்தாற்கு மீண்டே அவற்கருள்கள் நல்கினான் காண்");


முரண் திரிபுரங்களும் உடன் பொடிபடும்படி, முனம் சுடுசரம் தொடு பெருவீரா - பகைமைகொண்ட அசுரர்களுடைய முப்புரங்களும் ஒரு நொடியில் அழியும்படி, முன்பு எரிக்கும் கணையைத் தொட்ட பெரிய வீரனே! (முரண்தல் - பகைத்தல்); (முரண்டிரிபுரங்கள் - முரண் திரிபுரங்கள் - பகைத்த முப்புரங்கள்);


முழங்கு எரி கரம்தனில் விளங்கிட, நடம்தனை, முடிந்தவர் சுடும் தலம் இடுவோனே - ஒலிக்கும் நெருப்பைக் கையில் ஏந்திப், பிணங்களை எரிக்கும் சுடுகாட்டில் திருநடம் செய்பவனே! (முடிதல் - சாதல்); (முடிந்தவர் - இறந்தவர்); (சம்பந்தர் தேவாரம் - 1.53.5 - "முழங்குசெந்தீ யேந்தியாடி மேயது முதுகுன்றே")


மரங்களும் மணம் கமழ் வனங்களும் மலிந்து, அரு வளம் திகழ், நலம் தரும் இடம் நாடி வரும் சிறை இலங்கு அறுபதம் சுரம் முரன்றிடு வலஞ்சுழி மகிழ்ந்து உறை பெருமானே - மரங்களும் வாசனை கமழும் நந்தனவனங்களும் மிகுந்து, அரிய வளம் திகழ்கின்ற, நன்மை அளிக்கின்ற இடத்தை நாடி வருகின்ற, சிறகுகள் திகழும் வண்டினங்கள் ரீங்காரம் செய்கின்ற திருவலஞ்சுழியில் விரும்பி உறைகின்ற பெருமானே! (சிறை - சிறகு); (அறுபதம் - ஆறுகால்களை உடைய வண்டினம்); (சுரம் - ஸ்வரம் - இசை); (முரல்தல் - ஒலித்தல்; பாடுதல்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment