Tuesday, August 2, 2022

06.02.153 – கருப்பறியலூர் (திருக்கருப்பறியலூர்) - மனத்தில் நித்தம் - (வண்ணம்)

06.02.153 – கருப்பறியலூர் (திருக்கருப்பறியலூர்) - மனத்தில் நித்தம் - (வண்ணம்)

2011-08-28

06.02.153 - மனத்தில் நித்தம் - (கருப்பறியலூர் (திருக்கருப்பறியலூர்))

(இக்கால வழக்கில் "தலைஞாயிறு" - வைத்தீஸ்வரன் கோயில் அருகே உள்ள தலம்)

-------------------------

(வண்ணவிருத்தம்;

தனத்த தத்த தனத்த தத்த

தனத்த தத்த .. தனதான )


மனத்தில் நித்தம் மயக்க முற்று

.. .. மறுப்பெ ருக்கு .. வினைமேவி

.. வயிற்றி லிட்டு வளர்க்கும் இப்பை

.. .. வனத்தெ ரித்த .. பொடியாமுன்

சினத்தை மற்ற விருப்பை விட்ட

.. .. சிறப்பர் சொற்ற .. தமிழ்பாடித்

.. திருத்த முற்று வருத்த மற்ற

.. .. திறத்தை எட்ட .. அருளாயே

வனத்தில் அற்றை மலர்க்க ணப்பு

.. .. மருத்து வத்தை .. மகிழ்வோனே

.. மறித்தி டக்கை தனைப்பி டித்து

.. .. வலத்தி ருத்தும் .. அருளாளா

தெனத்தெ னத்த இசைப்பு மிக்க

.. .. திருக்க ருப்ப .. றியலூரா

.. சிறப்பி டத்தை அருத்தி மிக்க

.. .. சிவைக்க ளித்த .. பெருமானே.


பதம் பிரித்து:

மனத்தில் நித்தம் மயக்கம் உற்று

மறுப் பெருக்கு வினை மேவி,

வயிற்றில் இட்டு வளர்க்கும் இப்-பை

வனத்து எரித்த பொடி ஆமுன்,


சினத்தை மற்ற விருப்பை விட்ட

சிறப்பர் சொற்ற தமிழ் பாடித்,

திருத்தம் உற்று, வருத்தம் அற்ற

திறத்தை எட்ட அருளாயே;


வனத்தில் அற்றை மலர்க்கண் அப்பு

மருத்துவத்தை மகிழ்வோனே;

மறித்திடக் கைதனைப் பிடித்து

வலத்து இருத்தும் அருளாளா;


தெனத்தெனத்த இசைப்பு மிக்க

திருக்கருப்பறியலூரா;

சிறப்பு இடத்தை அருத்தி மிக்க

சிவைக்கு அளித்த பெருமானே.


* திருக்கருப்பறியலூர் - கருமூலத்தைப் பறிப்பதால் கருப்பறியலூர் என்றாயிற்று. இத்தலத்தில் சுவாமி பெயர்: குற்றம்பொறுத்தநாதர்.


மனத்தில் நித்தம் மயக்கம் உற்று, மறுப் பெருக்கு வினை மேவி - தினந்தோறும் மனம் மயங்கிக், குற்றம் பெருக்கும் செயல்களையே விரும்பிச் செய்து; (நித்தம் - எப்பொழுதும்); (மறு - குற்றம்); (வினை - செயல்); (மேவுதல் - விரும்புதல்);

வயிற்றில் இட்டு வளர்க்கும் இப்-பை வனத்து எரித்த பொடி ஆமுன் - வயிற்றில் உணவை இட்டு வளர்க்கும் இந்தப் பை போன்ற உடலானது சுடுகாட்டில் எரித்த சாம்பல் ஆகும் முன்னமே; (பை - பையைப் போன்ற உடம்பு); (வனம் - ஈமவனம் - சுடுகாடு);

சினத்தை, மற்ற விருப்பை விட்ட சிறப்பர் சொற்ற தமிழ் பாடித் - கோபத்தையும் பிற ஆசைகளையும் துறந்த மேன்மையுடைய ஞானியர் பாடியருளிய திருமுறைப் பதிகங்களைப் பாடி; (சொற்ற - சொன்ன); (சிறப்பர் - சிறப்புடையவர்கள்; மேன்மையுடையவர்); (பெரியபுராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 12.29.219 - "சங்கிலியார் தாம் சொற்ற வண்ணஞ் செயத்துணிந்து");

திருத்தம் உற்று, வருத்தம் அற்ற திறத்தை எட்ட அருளாயே - செப்பம் அடைந்து, வருத்தம் இல்லாத இன்ப நிலையைப் பெற அருள்வாயாக; (திருத்தம் - செப்பம்); (திறம் - இயல்பு; வழி; மேன்மை; ஒழுக்கம்);

வனத்தில் அற்றை மலர்க்கண் அப்பு மருத்துவத்தை மகிழ்வோனே - காட்டில் அன்று கண்ணப்பர் தம் மலர் போன்ற கண்ணைத் தோண்டி அப்பிய வைத்தியத்தை விரும்பியவனே; (அற்றை - அன்று); (மலர்க்கணப்பு - மலர்க்கண் அப்பு); (அப்புதல் - சாத்துதல்); (மகிழ்தல் - விரும்புதல்);

மறித்திடக் கைதனைப் பிடித்து வலத்து இருத்தும் அருளாளா - (அவர் தமது இரண்டாம் கண்ணையும் தோண்டுவதைத் தடுக்க உன் கையால்) அவர் கையைப்பற்றித் தடுத்து அவரை உன் வலப்பக்கத்தில் இருக்க அருள்புரிந்த அருளாளனே; (மறித்தல் - தடுத்தல்);

தெனத் தெனத்த இசைப்பு மிக்க திருக்கருப்பறியலூரா - வண்டுகளின் ரீங்காரம் மிகுந்த திருக்கருப்பறியலூரில் உறைகின்றவனே; (இசைப்பு - ஒலி);

சிறப்பு இடத்தை அருத்தி மிக்க சிவைக்கு அளித்த பெருமானே - சிறப்புடைய இடப்பாகத்தை அன்பு மிக்க உமைக்கு அளித்த பெருமானே; (அருத்தி - அன்பு); (சிவை - பார்வதி);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment