Sunday, June 26, 2022

06.01.127 - சிவன் - முருகன் வேல் - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்

2010-11-08

06.01.127 - சிவன் - முருகன் வேல் - சிலேடை

-----------------------------------------------

கந்தன் கரம்சேரக் காணும் அபயத்தைத்

தந்து புரக்கும் தரிப்பாரை - வந்தசுரர்

வீழ விடமடுக்கும் மின்னெறிக்கும் வேணியினான்

வேழ முகற்கிளையோன் வேல்.


சொற்பொருள்:

கம் - கபாலம்;

கந்தன் கரம் சேரக் காணும் - 1) முருகனின் கையில் இருக்கும்; / 2) கையில் முருகன் இருப்பான்; முருகன் கரம்குவித்துப் போற்றும் தந்தை ஆவான்; கபாலத்தைத் தன் கையில் ஏந்தியவன்;

புரத்தல் - காத்தல்;

தரித்தல் - 1) தாங்குதல்; / 2) மறவாது உள்ளத்துக்கொள்ளுதல்;

வந்தசுரர் - 1) வந்து அசுரர்; / 2) வந்த சுரர்;

வீழ்தல் - விழுதல் - 1) தோற்றுப்போதல்; சாதல்; / 2) விழுந்து வணங்குதல்;

அடுத்தல் - நெருங்குதல்;

மடுத்தல் - உண்ணுதல்;

மின் - ஒளி;

எறித்தல் - ஒளிவீசுதல்;

வேணி - சடை;


முருகன் வேல்:

கந்தன் கரம் சேரக் காணும் - முருகனின் கையில் இருக்கும்;

அபயத்தைத் தந்து புரக்கும் தரிப்பாரை - (முருகன் வேலை மனத்தில்) தியானிப்பவரை அவர்களது அச்சத்தைத் தீர்த்துக் காக்கும்;

வந்து அசுரர் வீழ இடம் அடுக்கும் - அசுரர்கள் அழியும்படி அவர்கள் இடத்தை வந்து அடையும்;

மின் எறிக்கும் - ஒளி வீசும்;

வேழமுகற்கு இளையோன் வேல் - யானைமுகனுக்குத் தம்பியான முருகன் வேல்;


சிவன்:

கந்தன் கரம் சேரக் காணும் - சோமாஸ்கந்தராகக் கையில் முருகனோடு காட்சி தருவான்; ("முருகன் கரங்குவித்துப் போற்றும்" என்றும் பொருள்கொள்ளல் ஆம்); ("கம் தன் கரம்" - என்று பிரித்துக், "கபாலத்தைத் தன் கையில் ஏந்தியவன்" என்றும் பொருள்கொள்ளல் ஆம்);

அபயத்தைத் தந்து புரக்கும் தரிப்பாரை - தன்னை மனத்தில் தரிப்பார்க்கு அபயம் தந்து காப்பான்;

வந்த சுரர் வீழ விடம் மடுக்கும் - (அஞ்சி) வந்த தேவர்கள் விழுந்து வணங்க, (அவர்களுக்கு இரங்கி) ஆலகால விடத்தை உண்பவன்;

மின் எறிக்கும் வேணியினான் - ஒளி வீசும் சடையை உடைய சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment