Monday, June 27, 2022

06.02.131 – பொது - தனத்துக்குஞ் சுகத்துக்கும் - (வண்ணம்)

06.02.131 – பொது - தனத்துக்குஞ் சுகத்துக்கும் - (வண்ணம்)


2010-11-24

06.02.131 - தனத்துக்குஞ் சுகத்துக்கும் - பொது

-------------------------

(வண்ணவிருத்தம்;

தனத்தத்தந் தனத்தத்தந்

தனத்தத்தந் தனத்தத்தந்

தனத்தத்தந் தனத்தத்தந் .. தனதான )


(பெருக்கச்சஞ் சலித்துக்கந் தலுற்றுப்புந் தியற்றுப்பின் - திருப்புகழ் - திருச்செந்தூர்)


தனத்துக்குஞ் சுகத்துக்குந் .. தவிப்புற்றுங் கடைப்பட்டுஞ்

.. .. சலிப்புற்றுந் திகைப்புற்றும் .. பலகாலம்

.. சகத்திற்றுன் பினைப்பெற்றுந் .. திரைப்புற்றுங் கறுப்பற்றுந்

.. .. தனுக்கெட்டுந் தகிப்புற்றிங் .. கழியாமுன்


சினப்பற்றுங் குடிப்பற்றுஞ் .. செலப்பெற்றென் செருக்கற்றுன்

.. .. சிறப்பைத்தண் டமிழ்ச்சொற்கொண் .. டுரையேனோ

.. சிலைப்பற்றுங் கரத்துத்திண் .. புயத்திட்டன் களித்துத்தன்

.. .. செருப்பைக்கொண் டிடத்தைக்கண் .. டறிவானாய்த்


தனக்குக்கண் கெடுத்துக்கண் .. தரச்சித்தங் கொளப்பற்றுந்

.. .. தடக்கைப்பங் கயத்தற்கன் .. றருள்வோனே

.. தளத்தைக்கொண் டிருக்கைக்கொண் .. டுவப்புற்றுன் றனைப்பற்றுந்

.. .. தவத்தற்கந் தகற்குற்றுங் .. கழலானே


கனைத்தெட்டுந் துளிப்பட்டஞ் .. சுனைப்புட்பந் தனக்கொக்குங்

.. .. களத்தக்குஞ் சடைக்கொக்கின் .. சிறகோடு

.. கலித்தெற்றுந் திரைத்தட்பம் .. படச்சர்ப்பந் தரித்துச்செங்

.. .. கரத்திற்றண் டினைப்பற்றும் .. பெருமானே.


பதம் பிரித்து:

தனத்துக்கும் சுகத்துக்கும் .. தவிப்பு-உற்றும், கடைப்பட்டும்,

.. .. சலிப்பு-உற்றும், திகைப்பு-உற்றும், .. பல காலம்

.. சகத்தில் துன்பினைப் பெற்றும், .. திரைப்பு-உற்றும், கறுப்பு அற்றும்,

.. .. தனுக் கெட்டும், தகிப்பு-உற்று-இங்கு .. அழியாமுன்,


சினப்-பற்றும் குடிப்-பற்றும் .. செலப் பெற்று, என் செருக்கு அற்று, உன்

.. .. சிறப்பைத் தண்-தமிழ்ச்சொற்கொண்டு .. உரையேனோ;

.. சிலைப் பற்றும் கரத்துத் திண் .. புயத்து இட்டன் களித்துத் தன்

.. .. செருப்பைக்கொண்டு இடத்தைக் கண்டு-அறிவானாய்த்,


தனக்குக் கண் கெடுத்துக் கண் .. தரச் சித்தம் கொளப், பற்றும்

.. .. தடக்-கைப்-பங்கயத்தற்கு அன்று .. அருள்வோனே;

.. தளத்தைக்கொண்டு, இருக்கைக்கொண்டு .. உவப்பு-உற்று உன்-தனைப் பற்றும்

.. .. தவத்தற்கு அந்தகற்-குற்றும் .. கழலானே;


கனைத்து எட்டும் துளிப்-பட்டு அம் .. சுனைப்-புட்பம் தனக்கு ஒக்கும்

.. .. களத்து, அக்கும், சடைக் கொக்கின் .. சிறகோடு

.. கலித்து எற்றும் திரைத்-தட்பம் .. படச் சர்ப்பம் தரித்துச், செங்

.. .. கரத்தில் தண்டினைப் பற்றும் .. பெருமானே.


தனத்துக்கும் சுகத்துக்கும் தவிப்பு-ற்றும், கடைப்பட்டும், சலிப்பு-ற்றும், திகைப்பு-ற்றும் - பணத்திற்காகவும் உலகச் சுகங்களுக்காகவும் தவித்தும், இழிவடைந்தும், சோர்வடைந்தும், மயங்கியும்;

பல காலம் சகத்தில் துன்பினைப் பெற்றும் - நெடுங்காலம் உலகில் துன்பத்தை அனுபவித்தும்;

திரைப்பு-ற்றும், கறுப்பு அற்றும், தனுக் கெட்டும், தகிப்பு-ற்று-ங்கு ழியாமுன் - தோற்சுருக்கம் அடைந்து, (மயிர்) கருமையை இழந்து ( = நரைத்து), உடல் தளர்ந்து, (இறந்து), எரிக்கப்பட்டு அழிந்துபோகாமல்; (திரைப்பு - தோலின் சுருக்கம்); (தனு - உடம்பு); (தகிப்பு - தகித்தல் - எரித்தல்); (உம் - எண்ணும்மை; சில இடங்களில் அசை என்றும் கொள்ளலாம்);


சினப்-பற்றும் குடிப்-பற்றும் செலப் பெற்று - கோபத்திற்குக் காரணமாக உள்ள ஆசைகளும், குடும்பப் பற்றும் நீங்கி; (சினப்பற்று - கோபம்கொள்ளக் காரணமாக உள்ள பல ஆசைகள்); (குடி - குடும்பம்);

ன் செருக்கு அற்று - என் ஆணவம் நீங்கி;

ன் சிறப்பைத் ண்-மிழ்ச்சொற்கொண்டு ரையேனோ - உன் பெருமையைக் குளிர்ந்த தமிழ்ச்சொற்களால் உரைத்து உய்ய அருள்வாயாக;


சிலைப் பற்றும் கரத்துத் திண் புயத்து இட்டன் - வில்லைப் பற்றிய கையும் வலிய புஜங்களும் உடைய அன்பன்; (சிலை - வில்); (இட்டன் - இஷ்டம் உடையவன்); (சிலைப் பற்றும் - சந்தம் கருதி "ப்" மிக்கு வந்தது);

களித்துத் தன் செருப்பைக்கொண்டு இடத்தைக் கண்டு-றிவானாய்த் - (உன் இரண்டாம் கண்ணில் குருதி வழியக்கண்டு, அதற்கு மருந்து தன்னிடம் உண்டு என்று) மகிழ்ந்து, தன் செருப்பை உன் திருமுகத்தில் ஊன்றி உன் கண் இருக்கும் இடத்தைக் அறிந்துகொள்பவனாகி;

தனக்குக் கண் கெடுத்துக் கண் தரச் சித்தம் கொளப் - தனக்குக் கண் இழந்து உனக்கு அந்தக் கண்ணைத் தர எண்ணம் கொண்டு தன் இரண்டாம் கண்ணையும் தோண்டுவதற்கு;

பற்றும் தடக்-கைப்-பங்கயத்தற்கு அன்று ருள்வோனே - (அம்பினைப்) பற்றிய பெரிய தாமரைக்கை உடைய கண்ணப்பனுக்கு அன்று அருள்புரிந்தவனே; (தடம் - பெருமை); (பங்கயம் - தாமரை);


தளத்தைக்கொண்டு, ருக்கைக்கொண்டு வப்பு-ற்றுன்-னைப் பற்றும் தவத்தற்கு அந்தகற்-குற்றும் கழலானே - வில்வம் முதலிய இலைகளாலும் வேதமந்திரங்களாலும் மகிழ்ந்து வழிபாடு செய்து உன்னைச் சரணடைந்த மார்க்கண்டேயருக்காக நமனை உதைத்த திருவடியினனே; (தளம் - இலை - வில்வம் முதலியன); (இருக்கு - வேதம்); (தவத்தன் - தவம் உடையவன் - முனிவன்); (தவத்தற்கு - தவத்தன்+கு - தவம் செய்தவனுக்கு - மார்க்கண்டேயருக்காக); (அந்தகற்-குற்றும் = அந்தகனைக் குற்றும்); (குற்றுதல் - தாக்குதல்);

இலக்கணக் குறிப்பு:

இரண்டாம் வேற்றுமைத்தொகையில் உயர்திணையில் பொருள் தெளிவாகவேண்டி, முதற்சொல்லின் ஈற்றில் உள்ள னகர ஒற்று றகர ஒற்றாகத் திரியும்;

ஆறுமுக நாவலரின் இலக்கணச்சுருக்கத்திலிருந்து:
#101. உயர்திணைப் பெயரீற்று லகர ளகரங்கள், மாற்கடவுள், மக்கட்சுட்டு என இரு பெயரொட்டுப் பண்புத்தொகையினும், லகர ளகர னகரங்கள், குரிசிற் கண்டேன், மகட்கொடுத்தான், தலைவற்புகழ்ந்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினுந் திரியுமெனக் கொள்க.

கனைத்து எட்டும் துளிப்-பட்டு அம் சுனைப்-புட்பம் தனக்கு ஒக்கும் களத்து - ஆரவாரம் செய்யும் கடலில் தோன்றிய, பரவிய இடத்திலெல்லாம் அனைத்தையும் சுட்டெரிக்க அதனைத் தாளமாட்டாரின் ஓல ஒலியை எச்செய்த, தேவர்களின் ஓலத்தோடு சிவபெருமானிடம் வந்தடைந்த, இருண்ட நாவற்கனி போல் திரண்ட ஆலகால விடம் படுவதால், அழகிய, சுனையில் பூக்கும் (நீல) மலர் போன்ற கண்டத்தை உடைய பெருமானே; ("களத்து..... பெருமானே" என்று இயைத்துப் பொருள்கொள்ளல் ஆம்); (கனைத்தல் - ஒலித்தல்; இருளுதல்; திரளுதல்); (துளி - விடம்); (அம் - அழகு); (புட்பம் - புஷ்பம் - பூ); (புட்பம் தனக்கு ஒக்கும் - புட்பம்தனை ஒக்கும் - உருபு மயக்கம்); (களம் - கழுத்து); (துளி + பட்டு = துளிப்பட்டு; - சந்தத்திற்காக 'ப்' ஒற்று விரித்தல் விகாரம் என்று வேண்டுமானாலும் கருதலாம்);

இலக்கணக் குறிப்பு:

இரு குறில்களாலான சொல் நிலைமொழியாக, வருமொழி முதல் வல்லினமிருப்பின் *எழுவாய்த் தொடரில்* வல்லினம் மிகுந்தேனும் மிகாமலும் புணரலாம் (கே.ராஜகோபாலாச்சாரியார்): எடுத்துக்காட்டு - தினை சிறிது அல்லது தினைச்சிறிது.

க்கும் - எலும்பையும்; (அக்கு - எலும்பு; உருத்திராக்கம்); (கண்டி/கண்டிகை - கழுத்தில் அணியும் ருத்ராக்ஷ மாலை);

 (சம்பந்தர் தேவாரம் - 2.88.1 - "துளிமண்டி யுண்டு நிறம்வந்த கண்டன்");

(அப்பர் தேவாரம் - 5.19.5 - "சுனையுள் நீல மலரன கண்டத்தன்");

(அப்பர் தேவாரம் - 4.95.6 - "கண்டியிற் பட்ட கழுத்துடையீர்" - உருத்திராக்கமாலை அணிந்த கழுத்தை உடையவரே);

சடைக் கொக்கின் சிறகோடு, கலித்து எற்றும் திரைத்-தட்பம் படச் சர்ப்பம் தரித்துச் - சடையில் கொக்கின் இறகோடு, ஒலித்து மோதுகின்ற அலையின் குளிர்ச்சி அதன்மேல் படுமாறு பாம்பையும் அணிந்து; (கொக்கின் இறகு - குரண்டாசுரனை அழித்த அடையாளம்); (கலித்தல் - ஒலித்தல்); (எற்றுதல் - மோதுதல்); (திரை - அலை); (தட்பம் - குளிர்ச்சி); (சர்ப்பம் - பாம்பு);

செங் கரத்தில் தண்டினைப் பற்றும் பெருமானே - சிவந்த கையில் தண்டாயுதத்தை ஏந்தும் பெருமானே; (தண்டு - தண்டாயுதம்); ( சம்பந்தர் தேவாரம் - 1.116.3 - "இலைத்தலைச் சூலமுந் தண்டு மழுவு மிவையுடையீர்");


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


06.01.128 - சிவன் - கடல் - சிலேடை-3

06.01 – சிவன் சிலேடைகள்


2010-11-14

06.01.128 - சிவன் - கடல் - சிலேடை-3

-------------------------------------------------------

நங்கையுஞ் சேரும் நதிசேரும் ஆவிவரும்

மங்கல மாமழை கண்டமுறும் - பொங்கும்

அரவமும் பூண்டிருக்கும் அங்கரைக்கண் ஆழி

சிரமலி மாலைச் சிவன்.


சொற்பொருள்:

நங்கை - 1) நம் கை; / 2) நங்கை - பெண்;

ஆவிவரும் - 1) ஆவி வரும்; / 2) ஆ இவரும்;

இவர்தல் - ஏறுதல்; மீது ஊர்தல்;

மங்கல மாமழை - 1) மங்கலம் ஆம் மழை; / 2) மங்கல மா மழை;

மழை - 1) மேகத்திலிருந்து பொழியும் நீர்; / 2) கரிய மேகம்;

கண்டம் - 1) நிலப்பரப்பு; / 2) மிடறு; கழுத்து;

உறுதல் - 1) இருத்தல்; நிகழ்தல்; / 2) ஒத்தல்;

பொங்குதல் - 1) கொந்தளித்தல்; மிகுதல்; / 2) கோபித்தல்;

அரவம் - 1) சத்தம்; / 2) பாம்பு;

அங்கரைக்கண் - 1) அம் கரைக்கண்; / 2) அங்கு அரைக்கண்;

அம் - அழகு;

கண் - ஏழாம்வேற்றுமை உருபு;


கடல்:

நம் கையும் சேரும் நதி சேரும் - நாம் வணங்கும் புண்ணிய நதிகளெல்லாம் சென்று சேரும்; ("நம் கையும் சேரும் = கடல் நம்மால் தொடக்கூடியபடி உள்ளது" என்றும் பொருள்கொள்ளல் ஆம்);

ஆவி வரும் - (கடலிலிருந்து) நீராவி வரும்;

மங்கலம் ஆம் மழை கண்டம் உறும் - (அது) வளத்தைத் தரும் மழையை நிலப்பரப்புகள் அடையும்;

பொங்கும் அரவமும் பூண்டிருக்கும் அம் கரைக்கண் - அழகிய கரையில் மிகுந்த ஒலியும் கொண்டிருக்கும்; ("பொங்கும் = கொந்தளிக்கும்" என்றும் பொருள்கொள்ளல் ஆம்);

ஆழி - கடல்;


சிவன்:

நங்கையும் சேரும் நதி சேரும் - உமாதேவியும் கங்கையும் சேர்ந்திருப்பர்;

ஆ இவரும் - இடபத்தின்மேல் ஏறுவான்;

மங்கல மாமழை கண்டம் உறும் - நன்மை தரும் அழகிய மேகத்தைக் கண்டம் ஒக்கும்; (நீலகண்டம்);

பொங்கும் அரவமும் பூண்டிருக்கும் அங்கு அரைக்கண் - சீறும் பாம்பையும் அரையில் நாணாகக் கட்டியிருப்பான்;

சிரமலி மாலைச் சிவன் - மண்டையோட்டு மாலை அணிந்த சிவபெருமான்;


பிற்குறிப்பு:

முன்னர் எழுதிய "கடல் - சிவன்" சிலேடைகள் - 03.04.025 & 03.04.093 - காண்க.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


Sunday, June 26, 2022

06.01.127 - சிவன் - முருகன் வேல் - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்

2010-11-08

06.01.127 - சிவன் - முருகன் வேல் - சிலேடை

-----------------------------------------------

கந்தன் கரம்சேரக் காணும் அபயத்தைத்

தந்து புரக்கும் தரிப்பாரை - வந்தசுரர்

வீழ விடமடுக்கும் மின்னெறிக்கும் வேணியினான்

வேழ முகற்கிளையோன் வேல்.


சொற்பொருள்:

கம் - கபாலம்;

கந்தன் கரம் சேரக் காணும் - 1) முருகனின் கையில் இருக்கும்; / 2) கையில் முருகன் இருப்பான்; முருகன் கரம்குவித்துப் போற்றும் தந்தை ஆவான்; கபாலத்தைத் தன் கையில் ஏந்தியவன்;

புரத்தல் - காத்தல்;

தரித்தல் - 1) தாங்குதல்; / 2) மறவாது உள்ளத்துக்கொள்ளுதல்;

வந்தசுரர் - 1) வந்து அசுரர்; / 2) வந்த சுரர்;

வீழ்தல் - விழுதல் - 1) தோற்றுப்போதல்; சாதல்; / 2) விழுந்து வணங்குதல்;

அடுத்தல் - நெருங்குதல்;

மடுத்தல் - உண்ணுதல்;

மின் - ஒளி;

எறித்தல் - ஒளிவீசுதல்;

வேணி - சடை;


முருகன் வேல்:

கந்தன் கரம் சேரக் காணும் - முருகனின் கையில் இருக்கும்;

அபயத்தைத் தந்து புரக்கும் தரிப்பாரை - (முருகன் வேலை மனத்தில்) தியானிப்பவரை அவர்களது அச்சத்தைத் தீர்த்துக் காக்கும்;

வந்து அசுரர் வீழ இடம் அடுக்கும் - அசுரர்கள் அழியும்படி அவர்கள் இடத்தை வந்து அடையும்;

மின் எறிக்கும் - ஒளி வீசும்;

வேழமுகற்கு இளையோன் வேல் - யானைமுகனுக்குத் தம்பியான முருகன் வேல்;


சிவன்:

கந்தன் கரம் சேரக் காணும் - சோமாஸ்கந்தராகக் கையில் முருகனோடு காட்சி தருவான்; ("முருகன் கரங்குவித்துப் போற்றும்" என்றும் பொருள்கொள்ளல் ஆம்); ("கம் தன் கரம்" - என்று பிரித்துக், "கபாலத்தைத் தன் கையில் ஏந்தியவன்" என்றும் பொருள்கொள்ளல் ஆம்);

அபயத்தைத் தந்து புரக்கும் தரிப்பாரை - தன்னை மனத்தில் தரிப்பார்க்கு அபயம் தந்து காப்பான்;

வந்த சுரர் வீழ விடம் மடுக்கும் - (அஞ்சி) வந்த தேவர்கள் விழுந்து வணங்க, (அவர்களுக்கு இரங்கி) ஆலகால விடத்தை உண்பவன்;

மின் எறிக்கும் வேணியினான் - ஒளி வீசும் சடையை உடைய சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


06.05.018 - இருமைக்கும் ஒருவன் - (மடக்கு)

06.05 – பலவகை

2010-11-07

06.05.018) இருமைக்கும் ஒருவன் - (மடக்கு)

----------------------------------------

(அறுசீர் விருத்தம் - 6 மா - சொற்கள் மடக்குப் பெற்று வருமாறு அமைந்தது)


ஆறு சடையுள் நிலவும்

..  அருகே ஏறும் நிலவும்

ஏறு திகழும் கொடியான்

..  இடப்பால் ஓர்பூங் கொடியான்

நாறு கொன்றைத் தாரான்

..  நமக்கோர் பிறவி தாரான்

பேறு வேண்டி வேண்டில்

..  பெறலாம் ஐயம் இலையே.


நிலவும் - 1) இருக்கும்; 2) சந்திரனும்;

ஏறு - 1) மேலே ஏறுதல்; 2) இடபம்;

கொடி - 1) துவஜம்; 2) கொடி போன்ற பெண்;

தாரான் - 1) மாலை அணிபவன்; 2) அளிக்கமாட்டான்;

வேண்டுதல் - 1) விரும்புதல் 2) பிரார்த்தித்தல்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Saturday, June 18, 2022

06.05.017 - இருமை இலான் இருமை உளான் - (மடக்கு)

 

06.05 – பலவகை

2010-11-07

06.05.017) இருமை இலான் இருமை உளான் - (மடக்கு)

----------------------------------------

(எண்சீர் விருத்தம் - 'காய் காய் மா தேமா' என்ற அரையடி வாய்பாடு;

அரையடிதோறும் 3-ஆம் சீரில் சொற்கள் மடக்குப் பெற்று வருமாறு அமைந்தது)


மலமிலனே பிறப்பொடுமூப் பிறப்பும் இல்லாய்

.. வளர்எரியாய் மண்விண்ணை இறந்து நிற்பாய்

தலைவனிலாய் தனக்கொரு துணையும் இல்லாய்

.. தஞ்சமடை அன்பருக்குத் துணையாய் உள்ளாய்

அலைகடலில் அன்றெழுந்து பரவு நஞ்சம்

.. அதுகண்ட அமரரெலாம் பரவு கண்டா

மலையெடுத்தான் உறுவலியைத் தாளான் ஆக

.. மலர்விரலை வெற்பிட்ட தாளான் நீயே.


பதம் பிரித்து:

மலம் இலனே; பிறப்பொடு மூப்பு இறப்பும் இல்லாய்;

.. வளர்-எரியாய் மண்-விண்ணை இறந்து நிற்பாய்;

தலைவன் இலாய், தனக்கு ஒரு துணையும் இல்லாய்;

.. தஞ்சம் அடை அன்பருக்குத் துணையாய் உள்ளாய்;

அலைகடலில் அன்று எழுந்து பரவு நஞ்சம்

.. அது கண்ட அமரரெலாம் பரவு கண்டா;

மலை எடுத்தான் உறு-வலியைத் தாளான் ஆக

.. மலர்விரலை வெற்பு இட்ட தாளான் நீயே.


இருமை - 1. இம்மை, மறுமை; 2. இரு தன்மை (ஆணும் பெண்ணும் ஆயவன்); பெருமை;


இறத்தல் - 1. சாதல் 2. கடத்தல்;

துணை - 1. ஒப்பு; 2. உதவி; காப்பு;

பரவுதல் - 1. விரிதல்; 2. துதித்தல்;

உறு வலி - அடைந்த துன்பம்; பெரும் துன்பம்;

தாள் - பாதம்;

தாளுதல் - பொறுத்தல் (To bear, suffer, tolerate);

தாளான் - 1. தாங்காதவன்; 2. பாதத்தை உடையவன்;


தலைவன் இலாய், தனக்கு ஒரு துணையும் இல்லாய் - "தனக்கொரு" என்ற சொற்றொடரை இடைநிலைத்தீவகமாக இருபக்கமும் இயைத்து - "தனக்கு ஒரு தலைவன் இலாய்" & "தனக்கு ஒரு துணையும் இல்லாய்" என்று பொருள்கொள்ளல் ஆம்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Friday, June 17, 2022

06.02.130 – பொது - மனத்தினை அலைத்திடும் - (வண்ணம்)

06.02.130 – பொது - மனத்தினை அலைத்திடும் - (வண்ணம்)


2010-10-18

6.2.130) மனத்தினை அலைத்திடும் - பொது

-------------------------

(வண்ணவிருத்தம்;

தனத்தன தனத்தன தனத்தன தனத்தன

தனத்தன தனத்தன .. தனதான )


(இருப்பவல் திருப்புகழ் - திருப்புகழ் - திருத்தணிகை)


மனத்தினை அலைத்திடும் இடர்க்கடல் அமிழ்த்திடும்

.. .. மயக்கினை விலக்கிடு .. வழியோதி

.. மறைப்பொருள் தனைத்தமிழ் தனிற்றரு திருக்கழு

.. .. மலத்தவர் அளித்தன .. பலபாடி

உனைத்தினம் நினைத்திரு வினைக்கரு வழித்திடும்

.. .. உளத்தினை எனக்கருள் .. புரியாயே

.. உரக்கயி றெனப்பட அரப்பிணை பொருப்பலை

.. .. உறக்கடை சுரர்க்கணம் அமுதாரக்

கனைத்தெழு கடற்கரு விடத்தினை மடுத்தணி

.. .. களத்திடை நிறுத்திய .. தயையானே

.. கயற்கணி உமைக்கிடம் அளித்திடும் அருத்திய

.. .. கதைப்படை நமற்பட உதைகாலா

வனத்திடை அருச்சுனன் இயற்றிய தவத்தினை

.. .. மதித்தொரு படைக்கலன் அருள்வேடா

.. மதிப்பிறை தனைக்குளிர் திரைப்புனல் நிலைத்துழல்

.. .. மலர்ச்சடை மிசைப்புனை பெருமானே.


பதம் பிரித்து:

மனத்தினை அலைத்திடும், இடர்க்கடல் அமிழ்த்திடும்,

மயக்கினை விலக்கிடு வழி ஓதி,

மறைப்பொருள்தனைத் தமிழ்தனில் தரு திருக்கழு

மலத்தவர் அளித்தன பல பாடி,


உனைத் தினம் நினைத்து, இருவினைக்-கரு அழித்திடும்

உளத்தினை எனக்கு அருள் புரியாயே;

உரக்-கயிறு எனப் பட-அரப் பிணை பொருப்பு அலை

உறக் கடை சுரர்க்-கணம் அமுது ஆரக்,


கனைத்து எழு கடற்-கரு விடத்தினை மடுத்து, அணி

களத்திடை நிறுத்திய தயையானே;

கயற்கணி உமைக்கு இடம் அளித்திடும் அருத்திய;

கதைப்-படை நமற்-பட உதை காலா;


வனத்திடை அருச்சுனன் இயற்றிய தவத்தினை

மதித்து, ஒரு படைக்கலன் அருள் வேடா;

மதிப்பிறைதனைக் குளிர்-திரைப்புனல் நிலைத்து உழல்

மலர்ச்-சடைமிசைப் புனை பெருமானே.


மனத்தினை அலைத்திடும், இடர்க்கடல் அமிழ்த்திடும், மயக்கினை விலக்கிடு வழிதி - மனத்தை அலையச் செய்கின்றதும், துன்பக்கடலில் ஆழ்த்துபதுமான அறீயாமையை விலக்கும் வழியை உலகோருக்கு உபதேசித்து; (அலைத்தல் - அலையச்செய்தல்; வருத்துதல்); (மயக்கு - மயக்கம்; அறியாமை); (ஓதுதல் - சொல்லுதல்; பாடுதல்);

மறைப்பொருள்தனைத் தமிழ்தனில் தரு திருக்கழுமலத்தவர் அளித்தன பல பாடி - வேதப்பொருளைத் தமிழில் தந்தருளிய, திருக்கழுமலம் என்ற பெயருமுடைய சீகாழியில் அவதரித்தவரான சம்பந்தர் அருளிய பாமாலைகள் பலவும் பாடி;

உனைத் தினம் நினைத்து, ருவினைக்-கரு ழித்திடும் உளத்தினை எனக்கு அருள் புரியாயே - உன்னைத் தினமும் தியானித்து, இருவினையை வேரறுக்க விரும்பும் மனத்தை எனக்கு அருள்வாயாக;


உரக்-கயிறு எனப் பட-அரப் பிணை பொருப்பு அலை உறக் கடை சுரர்க்-கணம் அமுது ஆரக் - வலிய கயிறு என்று படம் திகழும் பாம்பைக் கட்டிய மேருமலை என்ற மத்தைப் பாற்கடலில் இட்டுக் கடைந்த தேவர்கூட்டம் அமுதத்தை உண்ணுமாறு; (உரம் - வலிமை); (படம் - பாம்பின் படம்); (அர - அரா - பாம்பு); (பிணைத்தல் - இணைத்தல்; கட்டுதல்); (பொருப்பு - மலை); (அலை - கடல்); (கணம் - கூட்டம்); (ஆர்தல் - உண்ணுதல்);

கனைத்து எழு கடற்-கரு விடத்தினை மடுத்து, அணி களத்திடை நிறுத்திய தயையானே - அலை ஒலித்து எழும் அக்கடலில் தோன்றிய கரிய நஞ்சினை உண்டு, அழகிய கண்டத்தில் வைத்த அருளுடையவனே; (கனைத்தல் - ஒலித்தல்); (மடுத்தல் - உண்ணுதல்); (அணி - அழகு); (களம் - கண்டம்); (தயையான் - தயை உடையவன்; தயை - கருணை; அருள்);

கயற்கணி உமைக்கு இடம் அளித்திடும் அருத்திய - கயல் போன்ற கண்ணை உடைய உமைக்கு இடப்பாகத்தை அளித்த அன்பினனே; (கயற்கணி - கயற்கண்ணி - இடைக்குறையாக வந்தது); (அருத்தி - அன்பு);

கதைப்-படை நமற்-பட உதை காலா - கதாயுதத்தை ஏந்தும் காலன் அழியும்படி அவனை உதைத்தருளியவனே (காலகாலனே); (கதை - தண்டாயுதம்); (படை - ஆயுதம்); (படுதல் - சாதல்; அழிதல்); (நமற்பட - நமனை அழியும்படி; இரண்டாம் வேற்றுமைத்தொகையில் உயர்திணையில் பொருள் தெளிவுபடுமாறு முதற்சொல்லின் இறுதியில் உள்ள னகர ஒற்று றகர ஒற்றாகத் திரியும்);


வனத்திடை அருச்சுனன் இயற்றிய தவத்தினை மதித்து, ரு படைக்கலன் அருள் வேடா - காட்டில் அருச்சுனன் செய்த தவத்தை மெச்சி அவனுக்கு ஒப்பற்ற பாசுபட்ஹாஸ்திரத்தை அருளிய வேடனே;

மதிப்பிறைதனைக் குளிர்-திரைப்புனல் நிலைத்துழல் மலர்ச்-சடைமிசைப் புனை பெருமானே - பிறைச்சந்திரனைக் குளிர்ந்த அலையுடைய கங்கை என்றும் தங்கித் திரிகின்ற, மலர் அணிந்த சடையின்மேல் அணிந்த பெருமானே;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

06.04.015 – நின்றசீர் நெடுமாற நாயனார் துதி - கூனிலா

06.04.015 – நின்றசீர் நெடுமாற நாயனார் துதி - கூனிலா

2010-10-24

6.4.15) நின்றசீர் நெடுமாற நாயனார் துதி

-------------------------

(குறள்வெண் செந்துறை)


கூனிலாச் சூடுவான் சீரையே பாடுவார் காழியார்

கூனிலாக் கோலமே ஆயினான் கூடலாள் கோனுமே.


பதம் பிரித்து:

கூன் நிலாச் சூடுவான் சீரையே பாடுவார் காழியார்;

கூன் இலாக் கோலமே ஆயினான் கூடல் ஆள் கோனுமே.


கூன் - வளைவு; உடற்கூனல் (Hump on the back of the body);

கூன் நிலா - வளைந்த பிறை;

காழியார் - திருஞான சம்பந்தர்;

கூடல் ஆள் கோன் - மதுரையை ஆளும் அரசன்;


பிற்குறிப்புகள்:

1) குறள்வெண் செந்துறை - யாப்புக் குறிப்பு:

இரண்டு அடிகளாய் அளவு ஒத்து அறம் பொருள் இன்பம் வீடு என்னும் சிறந்த உறுதிப் பொருள்களைப் பற்றி வருவது குறள்வெண்செந்துறை. இதனை "வெண் செந்துறை" என்றும் கூறுவது உண்டு.

2) பாண்டியன் கூன் நிமிர்ந்தது

2745 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 847

"எம்பிரான் சிவனே எல்லாப் பொருளும்" என்று எழுதும் ஏட்டில்
தம்பிரான் அருளால் வேந்தன் தன்னை முன் ஓங்கப் பாட
அம்புய மலராள் மார்பன் அனபாயன் என்னும் சீர்த்திச்
செம்பியன் செங்கோல் என்னத் தென்னன் கூன் நிமிர்ந்தது-அன்றே.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------