Wednesday, July 10, 2019

04.71 – கடம்பந்துறை (கடம்பர்கோயில் - குளித்தலை)


04.71 – கடம்பந்துறை (கடம்பர்கோயில் - குளித்தலை)


2014-08-01
கடம்பந்துறை (இக்காலத்தில் - கடம்பர்கோயில் - குளித்தலை. )
---------------------------------------------------------------
(எழுசீர் விருத்தம் - 'விளம் மா விளம் மா விளம் விளம் மா' என்ற வாய்பாடு.)
(சம்பந்தர் தேவாரம் - 3.120.1 - "மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி");
(சுந்தரர் தேவாரம் - 7.14.1 - "வைத்தனன் தனக்கே தலையும்என் நாவும்");



1)
சேய்மதி யோடு சீறிள நாகம் தேன்மலர் திகழ்திருச் சடையில்
பாய்புனல் தேக்கிப் பகீரதற் கருளும் பரிவினன் அஞ்செழுத் தோதி
ஆய்மலர் தூவி அடிதொழு மாணி ஆவியைக் காத்துவன் கூற்றைக்
காய்கழ லானூர் காவிரித் தென்பால் கவின்கடம் பந்துறை யதுவே.



சேய் மதி - பிள்ளை மதி - இளம்பிறை; (சேய் - இளமை); (2.71.7 - "பொன்றொத்த கொன்றையும் பிள்ளை மதியும் புனலுஞ்சூடிப்");
சீறு இள நாகம் - சீறுகின்ற இளம்பாம்பு;
ஆய்மலர் - ஆய்ந்த மலர் - சிறந்த பூக்கள்;
மாணி - மார்க்கண்டேயர்;
வன் கூற்றைக் காய் கழலான் ஊர் - கொடிய நமனை உதைத்த பாதத்தை உடைய சிவபெருமான் உறைகின்ற தலம்;
காவிரித் தென்பால் கவின் கடம்பந்துறை அதுவே - காவிரி ஆற்றின் தென்கரையில் உள்ள அழகிய கடம்பந்துறை;



2)
புலியதள் உடுத்துப் பொருவிடை ஏறும் புண்ணிய மூர்த்தியே பெண்ணாண்
அலியென ஆன அற்புத அண்ணால் அருளெனும் அன்பருக் கிரங்கி
நலிவினை நீக்கி நலமருள் நம்பன் நம்பெரு மானுறை ஊராம்
கலிகடல் அன்ன காவிரித் தென்பால் கவின்கடம் பந்துறை யதுவே.



புலி அதள் - புலித்தோல்;
பொருவிடை - போர்செய்யவல்ல இடபம்;
அண்ணால் - அண்ணல் என்பதன் விளி - அண்ணலே;
நலிவினை நீக்கி - வருத்துகின்ற வினையைத் தீர்த்து; துன்பத்தைத் தீர்த்து; (நலிதல் - வருத்துதல்; நலிவு - துன்பம்);
நம்பன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று;
கலி கடல் அன்ன காவிரி - ஒலிக்கின்ற கடல் போன்ற காவிரி; (கலித்தல் - ஒலித்தல்);
(சம்பந்தர் தேவாரம் - 1.67.5 - "குலவெஞ்சிலையான் மதின்மூன்றெரித்த கொல்லே றுடையண்ணல் கலவமயிலுங் குயிலும்பயிலுங் கடல்போற் காவேரி ...");



3)
மினலிடை யாளை மேனியிற் பங்கு விரும்பிய எம்மிறை கங்கைப்
புனலடை சடையான் போர்விடை உடையான் பொன்வெளி இருப்பெயில் மூன்றில்
அனலெழு மாறோர் அம்பினை ஏவி அமரரைக் காத்தவன் கையில்
கனல்மழு வானூர் காவிரித் தென்பால் கவின்கடம் பந்துறை யதுவே.



மினல் இடையாள் - மின்னல் போன்ற நுண்ணிடை உடைய உமையம்மை;
கங்கைப்புனல் அடை சடையான் - கங்கையாற்றை அடைத்த சடையை உடையவன்;
வெளி - வெள்ளி - இடைக்குறையாக வந்தது;
எயில் - மதில்; கோட்டை;
பொன் வெளி இருப்பு எயில் - பொன் எயில், வெள்ளி எயில், இருப்பு எயில் - முறையே தங்கம், வெள்ளி, இரும்பு இவற்றால் செய்யப்பெற்ற முப்புரங்கள்;
கனல்மழு - கனல் வீசும் மழுப்படை - சொலிக்கின்ற மழு;



4)
தங்கைகள் குவித்துத் தாள்தொழு வார்க்குச் சங்கடம் தீர்த்தருள் கின்ற
சங்கரன் நீறு தாங்கிய மார்பன் தாவிடு மான்மறி ஏந்தி
அங்கையில் மழுவன் அரையினில் அரவன் ஆரழல் போல்திகழ் சடையிற்
கங்கையி னானூர் காவிரித் தென்பால் கவின்கடம் பந்துறை யதுவே.



தங்கைகள் - தம் கைகள்;
தாவிடு மான்மறி ஏந்தி - தாவும் மான்கன்றை ஏந்தியவன்;
ஆரழல் போல் திகழ் சடை - தீப்போல் திகழ்கின்ற சடை;
(அப்பர் தேவாரம் - 4.57.6 - "காரழல் கண்டமேயாய்... நீரழற் சடையுளானே..." - அழற் சடை - உவமைத்தொகை- அழல்போலும் ஒளிர் செஞ்சடை);
அங்கையில் மழுவன் - கையில் மழுவை உடையவன்;



5)
சலந்தரி சடையன் தண்மதி சூடி தாள்பணி வார்க்கருள் தந்தை
சலந்தரன் தன்னைத் தடிந்தசக் கரத்தைத் தாமரைக் கண்ணனுக் கீந்த
நலந்திகழ் அண்ணல் நரைவிடை ஏறி நளிர்மல ரான்சிரம் என்ற
கலந்தரித் தானூர் காவிரித் தென்பால் கவின்கடம் பந்துறை யதுவே.



சலம் தரி சடையன் - கங்கையைத் தரித்த சடையன்;
தண்மதி சூடி - குளிர்ந்த சந்திரனைச் சூடியவன்;
சலந்தரன் தன்னைத் தடிந்த சக்கரத்தைத் தாமரைக்கண்ணனுக்கு ஈந்த - சலந்தரனை அழித்த சக்கராயுதத்தைத் திருமாலுக்கு அளித்த;
நளிர்மலரான்சிரம் என்ற கலம் தரித்தான் - குளிர்ந்த தாமரையில் இருக்கும் பிரமனுடைய மண்டையோடு என்ற பிச்சைப்பாத்திரம் ஏந்தியவன்;



6)
பெரியவன் சிறிதிற் சிறியவன் எண்ணில் பேரினன் அரியவன் கண்டம்
கரியவன் நெற்றிக் கண்ணினில் தீயன் கனவிடை ஊர்தியன் எங்கும்
வரியர வேறும் வடிவினன் கயிலை மலையினன் மலைமகள் அஞ்சக்
கரியுரித் தானூர் காவிரித் தென்பால் கவின்கடம் பந்துறை யதுவே.



சிறிதிற் சிறியவன் - அணுவினும் நுண்ணியன்;
எண் இல் பேரினன் - எண்ணற்ற திருநாமங்கள் உடையவன்;
கன விடை ஊர்தியன் - பெரிய இடபத்தை வாகனமாக உடையவன்;
எங்கும் வரி அரவு ஏறும் வடிவினன் - திருமேனியில் எங்கும் வரிகளை உடைய நாகம் ஏறுகின்ற உருவுடையவன்;
(சம்பந்தர் தேவாரம் - 1.50.6 - "புரிசடையாய் புண்ணியனே ... வரியரவா வந்துநல்காய் வலிவலமே யவனே");
மலைமகள் அஞ்சக் கரி உரித்தான் ஊர் - உமாதேவி அஞ்சும்படி யானையின் தோலை உரித்தவன் உறையும் தலம்;



7)
ஒருமட மங்கை உடலிடம் கொள்ள உச்சியிற் கங்கையை வைத்தான்
மருவிடும் அன்பர் வல்வினை மாய்த்து வானம ளித்திடும் வள்ளல்
அருவிடம் கண்டு வெருவிய தேவர் அடிதொழ அவர்களுக் கருள்செய்
கருமிடற் றானூர் காவிரித் தென்பால் கவின்கடம் பந்துறை யதுவே.



ஒரு மடமங்கை உடல் இடம் கொள்ள - அழகிய உமாதேவி திருமேனியில் இடப்பாகம் ஆக;
மருவுதல் - சார்தல்; (4.66.7 - "வஞ்சகர்க் கரியர் போலும் மருவினோர்க் கெளியர் போலும்");
வெருவுதல் - அஞ்சுதல்;
கருமிடற்றான் - நீலகண்டன்;



8)
எண்ணுதல் இன்றி எழில்மலை அசைத்த இலங்கையர் மன்னனை நெரித்தான்
உண்ணுதல் ஒண்ணா நஞ்சினை உண்டு விண்ணவர்க் கின்னமு தீந்தான்
ஒண்ணுதல் மங்கை உமையவள் பங்கன் ஒளித்தெய்த காமனைக் காய்ந்த
கண்ணுத லானூர் காவிரித் தென்பால் கவின்கடம் பந்துறை யதுவே.



எழில் மலை - அழகிய கயிலைமலை;
உண்ணுதல் ஒண்ணா நஞ்சினை உண்டு - யாராலும் உண்ண இயலாத விடத்தை உண்டு;
(சம்பந்தர் தேவாரம் - 1.49.9 - "உண்ணலாகா நஞ்சுகண்டத் துண்டுடனே யொடுக்கி");
ஒண்ணுதல் மங்கை உமையவள் - ஒளி பொருந்திய நெற்றியை உடைய உமாதேவி;
ஒளித்து எய்த காமனைக் காய்ந்த கண்ணுதலான் - தன்னை மறைத்துக்கொண்டு மலர்க்கணை எய்த மன்மதனை எரித்த நெற்றிக்கண்ணன்;
(பெரியபுராணம் - கண்ணப்ப நாயனார் புராணம் - 12.10.158 - " உனக்கவன்தன் செயல்காட்ட நாளைநீ யொளித்திருந்தால் எனக்கவன்தன் பரிவிருக்கும் பரிசெல்லாம் காண்கின்றாய்")



9)
படந்திகழ் பாம்பைப் பால்மதிப் பாங்கர்ப் பயின்றிட வைத்தவன் பரவை
விடந்திகழ் கண்டன் மேருவில் வீரன் வேதனும் மாயனும் மேல்கீழ்
அடைந்திட நேடி அலந்தடி போற்ற ஆரழ லாய்உல கெல்லாம்
கடந்துநின் றானூர் காவிரித் தென்பால் கவின்கடம் பந்துறை யதுவே.



படம் திகழ் பாம்பைப் பால்மதிப் பாங்கர்ப் பயின்றிட வைத்தவன் - நாகப்பாம்பைத் திங்கள் அருகே இருக்கவைத்தவன்; (பாங்கர் - பக்கம்); (பயில்தல் - பொருந்துதல்; தங்குதல்);
பரவை விடம் திகழ் கண்டன் - கடல்விடத்தை உண்ட கண்டன்; (பரவை - கடல்);
வேதனும் மாயனும் மேல்கீழ் அடைந்திட நேடி அலந்து அடி போற்ற - பிரமனும் திருமாலும் அடிமுடி தேடிக் காணாமல் வருந்தி வணங்கும்படி; (நேடுதல் - தேடுதல்); (அலத்தல் - துன்புறுதல்);
ஆரழலாய் உலகெல்லாம் கடந்து நின்றான் ஊர் - சோதியாகி அண்டங்களையெல்லாம் கடந்து நீண்ட பெருமான் உறையும் தலம்;



10)
நறையில தான பொய்ம்மலர் தன்னை நன்மலர் என்றுரை செய்வர்
குறைபல உடைய கொள்கையி னார்தம் கூற்றினை நீர்மதி யேன்மின்
மறைதுதி பாடும் பிறைமதி சூடும் வல்லவன் நல்லவன் கண்டம்
கறையுடை யானூர் காவிரித் தென்பால் கவின்கடம் பந்துறை யதுவே.



நறை இலதான பொய்ம்மலர் தன்னை நன்மலர் என்று உரைசெய்வர் - வாசனை இல்லாத பொய்ப்பூவை நல்ல பூ என்று அவர்கள் சொல்வார்கள்; (நறை - தேன்; வாசனை);
குறை பல உடைய கொள்கையினார்தம் கூற்றினை நீர் மதியேன்மின் - பல குற்றங்களை உடைய கொள்கைகளை உடையவர்களது பேச்சை நீங்கள் மதிக்கவேண்டா;
மறை துதிபாடும் பிறைமதி சூடும் வல்லவன் - வேதங்கள் துதிக்கும் சந்திரசேகரன் சர்வ வல்லமை உடையவன்;
நல்லவன் கண்டம் கறை உடையான் ஊர் - நல்லவனும் நீளகண்டனுமான சிவபெருமான் உறையும் தலம்;
காவிரித் தென்பால் கவின் கடம்பந்துறை அதுவே - காவிரி ஆற்றின் தென்கரையில் உள்ள அழகிய கடம்பந்துறை;



11)
மெய்யணி நாவர் மிகமகிழ்ந் தேத்தும் வேதியன் விருப்பொடு நாளும்
கொய்யணி மலர்கள் கொண்டடி போற்றிற் குறைகளைந் தின்னருள் புரிவான்
மையணி கண்டன் வளர்மதி இண்டை வார்சடைப் புனைசிவன் வளையல்
கையணி வானூர் காவிரித் தென்பால் கவின்கடம் பந்துறை யதுவே.



மெய் அணி நாவர் மிக மகிழ்ந்து ஏத்தும் வேதியன் - உண்மையை அணிந்த நாவினர் மிகவும் அன்போடு போற்றும் ஈசன், வேதப்பொருள் ஆனவன், வேதங்களைப் பாடியருளியவன்;;
கொய் அணி மலர்கள் கொண்டு அடி போற்றில் - கொய்த அழகிய பூக்களால் அவன் திருவடியைத் தொழுதால்;
குறை களைந்து இன்னருள் புரிவான் - குறையைத் தீர்த்து இனிது அருள்புரிபவன்;
மை அணி கண்டன் - கருமை திகழும் கழுத்தை உடையவன் - நீலகண்டன்;
வளர்மதி இண்டை வார்சடைப் புனை சிவன் - பிறைச்சந்திரனை இண்டைமாலையாக நீள்சடையில் அணிந்த சிவபெருமான்;
வளையல் கை அணிவான் ஊர் - கையில் வளையலை அணிந்த அர்த்தநாரீஸ்வரன் உறையும் தலம்;
காவிரித் தென்பால் கவின் கடம்பந்துறை அதுவே - காவிரி ஆற்றின் தென்கரையில் உள்ள அழகிய கடம்பந்துறை;



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்புகள் :
1) கடம்பந்துறை (கடம்பர்கோயில் - குளித்தலை) - கடம்பவனேஸ்வரர் கோயில் - தினமலர் தளத்தில்: https://temple.dinamalar.com/New.php?id=83



2)
----------------- Some Q&A on this padhigam -------
Q-1) "கலிகடல் அன்ன காவிரி" - நல்ல கதையா இருக்கே??.....!! சம்பந்தர், அப்பர் எல்லாம் காவிரி பற்றி பாடினது உண்மை..... இப்போ நீங்க போனப்போ கூட இப்படித்தான் இருந்ததா அண்ணா??
A) கடல் வற்றுமா? :)
மெரினா போன்று மணற்பரப்பு இருந்ததே போதுமே அங்கே கடல் உள்ளது என்று உணர்வதற்கு!
காஞ்சிப் பெரியவர் வாக்கில் - தெய்வத்தின் குரலிலிருந்து:
http://www.kamakoti.org/tamil/Kural108.htm
"பிரத்யக்ஷமாகக் கண்ணால் பார்ப்பது, காதால் கேட்பது முதலியனதான் முதலில் சொன்ன பிரத்யக்ஷப் பிரமாணம். அடுத்து வருகிற அநுமானம் என்ற பிரமாணந்தான் நியாயத்துக்கு ரொம்பவும் முக்கியமானது. ... புகை மாத்திரம் தெரிகிறது. ஆனாலும் நாம் நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் மலையிலே இருக்கிற காட்டில் நெருப்புப் பிடித்துக்கொண்டிருக்கிறது என்று ஊகித்து விடுகிறோம். இதுதான் 'அநுமானம்' என்பது. "
(பின்னொருநாள் - டிசம்பர் 2017-இல் கொடுமுடியில் காவிரியில் நீர்ப்பெருக்கினைக் கண்டு மகிழ்ந்தேன்.)



Q-2) அதுவே , இதுவே என்னும் பிரயோகங்கள் தேவாரத்தில் உண்டா?
A) ஆம். உள்ளன. உதாரணமாக:
சம்பந்தர் தேவாரம் - 1.10.4 - "உதிரும்மயி ரிடுவெண்டலை ... அதிருங்கழ லடிகட்கிடம் அண்ணாமலை யதுவே";
சம்பந்தர் தேவாரம் - 2.88.1 - "துளிமண்டி யுண்டு ... எங்க ளரனூர் ... திருமுல்லை வாயி லிதுவே"
-------------------

No comments:

Post a Comment