Monday, July 15, 2019

03.06.036 - 03.06.040 - ஓடு - பரியும் - மடக்கு

03.06 – மடக்கு

2008-06-09

3.6.36 - ஓடு - பரியும் - மடக்கு

----------------------------------------

ஓடு கலனா உழல்வான்;சேர் வான்உமை

யோடு; நரியை உருமாற்றி - ஓடு

பரியும் தரும்பரமன், பத்தர்க்குச் சாலப்

பரியும் சிவன்புகழே பாடு.


ஓடு - 1. மண்டையோடு; 2. உடன் (மூன்றாம்வேற்றுமை உருபு ); 3. ஓடுதல்;

பரியும் - 1. குதிரையும்; 2. இரங்கும்;

கலன் - கலம் - பாத்திரம்;

உழலுதல் - அலைதல்;


ஓடு கலனா உழல்வான் - பிரமனது மண்டையாடே பிச்சைப்பாத்திரமாக ஏந்தித் திரிபவன்; (சம்பந்தர் தேவாரம் - 1.32.1 - "ஓடே கலன் உண்பது ஊர் இடு பிச்சை....")

சேர்வான் உமையோடு - உமையொரு பங்கன்;

நரியை உரு மாற்றி ஓடு-பரியும் தரும் பரமன் - நரியை விரைந்து ஓடவல்ல குதிரைகளாக மாற்றி மதுரையில் தந்தவன்;

பத்தர்க்குச் சாலப் பரியும் சிவன் புகழே பாடு - அன்பர்களுக்கு மிகவும் இரங்கும் சிவபெருமான் புகழையே பாடு;

---------------------

2008-06-19

3.6.37 - மண்மிசை - உள்ளார் - மடக்கு

----------------------------

மண்மிசை மால்மலரோன் காணாத மாநெருப்பாய்

மண்மிசை தாண்டி வளர்இறையை - மண்மிசை

உள்ளார் வழிபட்டால் உய்வார் ஒருநாளும்

உள்ளார் துவள்வார் உழன்று.


மண் - நிலம்; பூமி;

மிசைதல் - 1. உண்ணுதல்;

மிசை - 2. வானம்; 3. ஏழாம்வேற்றுமை உருபு;

மால் - திருமால்;

மலரோன் - தாமரையில் இருக்கும் பிரமன்;

உள்ளுதல் - நினைத்தல்; இடைவிடாது நினைத்தல்;

உள்ளார் - 1. இருப்பவர்; 2. நினையாதவர்;


மண் மிசை- மால், மலரோன் காணாத மா நெருப்பாய் - மண்ணை உண்ட திருமாலும், பிரமனும் (அடி முடி) காணாத பெரிய ஜோதியாகி;

மண், மிசை தாண்டி வளர் இறையை - பூமி, வானம் அனைத்தையும் கடந்து ஓங்கி வளர்ந்த ஈசனை;

மண்மிசை உள்ளார் வழிபட்டால் உய்வார் - பூமியில் இருப்பவர்கள் வணங்கினால் நற்கதி அடைவார்கள்;

ஒரு நாளும் உள்ளார் துவள்வார் உழன்று - (ஈசனை) என்றும் எண்ணாதவர்கள், உலகில் உழன்று வருந்துவார்கள்.

---------------------

2008-06-20

3.6.38 - இழிந்தார்க்கும் - நீரோடு - மடக்கு

-------------------------------------------------

இழிந்தார்க்கும் கேடே இழைக்கு(ம்)மட நெஞ்சே

இழிந்தார்க்கும் ஏத்த அருள்வான் - இழிந்தார்க்கும்

நீரோடு செஞ்சடை நின்மலனைப் பூவோடு

நீரோடு போற்ற நினை.


இழிதல் - 1. இழிவுபடுதல்; தாழ்தல்; 2. இறங்குதல்; வீழ்தல்;

ஆர்த்தல் - ஒலித்தல்;

ஆர்க்கும் - 1. யார்க்கும் - எவருக்கும்; 2. ஒலிக்கும்;

ஏத்துதல் - துதித்தல்;


இழிந்து, ஆர்க்கும் கேடே இழைக்கும் மடநெஞ்சே - இழிந்த குணத்தால், எவருக்கும் தீங்கே செய்ய எண்ணும் பேதைமனமே;

இழிந்தார்க்கும் ஏத்த அருள் - இழிந்தவர்களுக்கும் (அவர்கள் தன்னைத்) துதித்தால் அருள்புரிகின்ற; ("வான் என்ற சொற்றொடரை இடைநிலைத் தீவகமாகக் கொண்டு இருபுறமும் இயைக்க நின்றது; அப்படிக் கொண்டால், அருள்வான் என்றே வினைமுற்றாக இங்குப் பொருள்கொள்ளல் ஆம்);

வான் இழிந்து ஆர்க்கும் நீர் ஓடு செஞ்சடை நின்மலனை - வானிலிருந்து விழுந்து அலைகள் ஒலிக்கும் கங்கை நீர் ஓடுகின்ற சிவந்த சடையை உடைய நிர்மலனான சிவபெருமானை;

பூவோடு நீரோடு போற்ற நினை - பூவும் நீரும் கொண்டு வழிபட நினைவாயாக.

(சம்பந்தர் தேவாரம் - திருமுறை 3.49.5 - "கொல்வாரேனும் குணம்பல நன்மைகள் இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் நல்லார் நாமம் நமச்சிவாயவே");

---------------------

2008-08-26

3.6.39 - குறளை - அருளாயே - மடக்கு

------------------------------------------

குறளை மொழிபவர்சொல் கொள்ளாது நெஞ்சே

குறளை உணர்ந்தய னோடு - குறளை

அருளாயே என்றுதொழும் அச்சுடரை நீயும்

அருளாயே என்னாய் அமர்ந்து.


பதம் பிரித்து:

குறளை மொழிபவர் சொல் கொள்ளாது, நெஞ்சே,

குறளை உணர்ந்து, அயனோடு - குறள்-

"அருளாயே" என்று தொழும் அச்சுடரை, நீயும்

"அருள் ஆயே" என்னாய் அமர்ந்து.


குறளை - கோட்சொல்; நிந்தனை;

கொள்ளுதல் - கருதுதல்; மதித்தல்; பொருட்படுத்துதல்;

குறள் - 1. திருக்குறள்; 2. குறுமை (shortness, dwarfishness); சிறுமை (smallness);

குறள் ஐ - வாமன உருவில் வந்த திருமால்; (- தலைவன்);


குறளை மொழிபவர் சொல் கொள்ளாது, நெஞ்சே - மனமே, நிந்திக்கின்றவர் பேச்சைப் பொருட்படுத்தாமல்;

குறளை உணர்ந்து - திருக்குறள் சொல்லும் நீதிகளை உணர்ந்து;

அயனோடு குறள்-"அருளாயே" என்று தொழும் அச்சுடரை - பிரமனும் வாமனனாக வந்த திருமாலும் "அருள்வாயாக" என்று போற்றிய ஜோதிவடிவான அந்தப் பெருமானை; (அயன் - பிரமன்);

நீயும் "அருள் ஆயே" என்னாய் அமர்ந்து - "அம்மையே! அருள்" என்று நீயும் விரும்பித் துதிப்பாயாக; (ஆய் - தாய்); (அமர்தல் - விரும்புதல்);

---------------------

2008-11-08

3.6.40 - துணையா - நிழலாய் - மடக்கு

------------------------------------------

துணையா எதுவுமிலாத் தூயா உமையாள்

துணையா உடையாய் தொழநல் - துணையா

நிழலாய் வருபவனே நித்தியனே நின்தாள்

நிழலாய் மனம்தாராய் நீ.


துணையா - "துணையாக" என்பதன் கடைக்குறை;

துணை - 1. ஒப்பு; 2. மனைவி; 3. காப்பு (protection);

நிழல் - 1. குளிர்ச்சி; சாயை (shadow); 2. ஸ்தானம் (place)

ஆய்தல் - சிந்தித்தல்; ஆராய்தல்;


துணையா எதுவும் இலாத் தூயா - உனக்கு நிகராக எதுவும் இல்லாத தூயவனே;

உமையாள் துணையா உடையாய் - உமாதேவியை மனைவியாக உடையவனே;

தொழ நல்-துணையா நிழலாய் வருபவனே - தொழுதவர்களுக்கு நல்ல பாதுகாவலாக, (வினைச்சூட்டிலிருந்து காக்கின்ற) குளிர்ச்சியாகி வருபவனே;

நித்தியனே - என்றும் உள்ளவனே;

நின் தாள் நிழல் ஆய் மனம் தாராய் நீ - நீ உன்னுடைய திருவடித்தலத்தைச் சிந்திக்கும் மனத்தை எனக்கு அருள்வாயாக.

---------------------

வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment