Tuesday, July 30, 2019

03.05.030 – ஒற்றியூர் (திருவொற்றியூர்) - அற்றவர்களுக்கு மிக உற்றவன் - (வண்ணம்)

03.05.030 – ஒற்றியூர் (திருவொற்றியூர்) - அற்றவர்களுக்கு மிக உற்றவன் - (வண்ணம்)

2007-04-02

3.5.30 – அற்றவர்களுக்கு மிக உற்றவன் - (ஒற்றியூர் - திருவொற்றியூர்)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தத்ததன தத்ததன தத்ததன தத்ததன

தத்ததன தத்ததன தத்ததன தத்ததன

தத்ததன தத்ததன தத்ததன தத்ததன .. தந்ததான )

(சுத்தியந ரப்புடனெ .. திருப்புகழ் - சுவாமிமலை)


அற்றவர்க ளுக்குமிக உற்றவன்ம ரத்தடியில்

... நற்றவர்க ளுக்கறமு ரைத்தவன்வெ றுப்புநசை

... அற்றவன்உ டுக்கெரிம ழுப்படைத ரித்தவிறை .. கொன்றை சூடி

ஒற்றியுறை உத்தமன்ம டக்கொடியி டத்துறைய

... உச்சிதனில் நற்புனலொ லித்தலைகள் எற்றவர

... வொட்டிமதி வைத்தகயி லைத்தலைவன் நட்டமிடும் .. அண்ட வாணன்

நெற்றிநய னப்பரமன் வெற்பெறிய ரக்கனைநெ

... ரிக்கவிரல் இட்டவன்இ சைக்குமகிழ் பொற்புடையன்

... நித்தன்மத மத்தமணி பித்தன்மணி ஒத்தொளிசெய் .. கண்டன் ஈசன்

சுற்றுமுல கத்தினிடை இப்பிறவி யிற்றினமும்

... அப்பனவ னைத்தொழுது நெக்குருகி அத்தமலி

... சொற்றொடையு ரைக்குமனம் உற்றிடின்வ ருத்தமிலை .. இன்ப மாமே.


பதம் பிரித்து:

அற்றவர்களுக்கு மிக உற்றவன்; மரத்தடியில்

... நற்றவர்களுக்கு அறம் உரைத்தவன்; வெறுப்பு நசை

... அற்றவன்; உடுக்கு எரி மழுப்படை தரித்த இறை; கொன்றை சூடி;

ஒற்றி உறை உத்தமன்; மடக்கொடி இடத்து உறைய,

... உச்சிதனில் நற்புனல் ஒலித்து அலைகள் எற்ற, அரவு

... ஒட்டி மதி வைத்த கயிலைத்-தலைவன்; நட்டமிடும் அண்ட வாணன்;

நெற்றி-நயனப் பரமன்; வெற்பு எறி அரக்கனை

... நெரிக்க விரல் இட்டு, அவன் இசைக்கு மகிழ் பொற்பு உடையன்;

... நித்தன்; மதமத்தம் அணி பித்தன்; மணி ஒத்து ஒளிசெய் கண்டன்; ஈசன்;

சுற்றும் உலகத்தினிடை இப்பிறவியில் தினமும்

... அப்பன்-அவனைத் தொழுது, நெக்குருகி, அத்தம் மலி

... சொற்றொடை உரைக்கும் மனம் உற்றிடின் வருத்தம் இலை, இன்பம் ஆமே.


அற்றவர்களுக்கு மிக உற்றவன் - அன்புடையவர்களுக்கு அன்புடையவன்;

மரத்தடியில் நற்றவர்களுக்கு அறம் உரைத்தவன் - தட்சிணாமூர்த்தியாகிக் கல்லாலின்கீழ் சனகாதியர்களுக்கு மறைப்பொருளை உபதேசித்தவன்;

வெறுப்பு நசை அற்றவன் - விருப்பு வெறுப்பு இல்லாதவன்; (நசை - விருப்பம்);

உடுக்கு எரி மழுப்படை தரித்த இறை - கையில் உடுக்கை, தீ, மழுவாயுதம் இவற்றை ஏந்தியவன்;

கொன்றை சூடி - கொன்றைமலரை அணிந்தவன்;

ஒற்றி உறை உத்தமன் - திருவொற்றியூரில் உறையும் உத்தமன்;

மடக்கொடி இடத்து உறைய, உச்சிதனில் நற்புனல் ஒலித்து அலைகள் எற்ற - இளங்கொடி போன்ற உமை இடப்பாகத்தில் இருக்கத், தன் திருமுடிமேல் கங்கை ஒலிசெய்து அலைகள் மோத; (எற்றுதல் - மோதுதல்);

அரவு ஒட்டி மதி வைத்த கயிலைத் தலைவன் - பாம்பின் அருகே சந்திரனை வைத்த கயிலைப் பெருமான்;

நட்டமிடும் அண்ட வாணன் - கூத்தாடும் கடவுள்;

நெற்றிநயனப் பரமன் - நெற்றிக்கண்ணுடைய பரமன்;

வெற்பு எறி அரக்கனை நெரிக்க விரல் இட்டு, அவன் இசைக்கு மகிழ் பொற்புடையன் - கயிலைமலையைப் பெயர்த்து எறிய முயன்ற இராவணனை நசுக்க ஒரு விரலை ஊன்றிப், பின் அவன் இசையைக் கேட்டு இரங்கிய குணம் உடையவன்;

நித்தன் - அழிவற்றவன்;

மதமத்தம் அணி பித்தன் - ஊமத்தமலரைச் சூடிய பேரருளாளன்;

மணி ஒத்து ஒளிசெய் கண்டன் - நீலமணி போல் ஒளிரும் கண்டத்தை உடையவன்;

ஈசன் - இறைவன்;

சுற்றும் உலகத்தினிடை இப்பிறவியில் தினமும் அப்பன்-அவனைத் தொழுது, நெக்குருகி, அத்தம் மலி சொற்றொடை உரைக்கும் மனம் உற்றிடின் வருத்தம் இலை, இன்பம் ஆமே - சுற்றுகின்ற இந்தப் பூமியில் இந்தப் பிறவியில் தினந்தோறும் நம் தந்தையான அவனை வணங்கி, நெகிழ்ந்து உருகி, பொருள் மிகுந்த பாமாலைகள் பாடும் மனம் இருந்தால் துன்பம் இல்லை, இன்பமே. (அத்தம் - அர்த்தம் - பொருள்); (சொற்றொடை - சொல் தொடை - பாமாலை);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment