Thursday, July 25, 2024

08.05.038 - உன்றன் அடியவற்கா (பிறிதுபடுபாட்டு)

08.05.038 - உன்றன் அடியவற்கா (பிறிதுபடுபாட்டு)

08.05 - பலவகை

மிறைக்கவி - பிறிதுபடுபாட்டு:

அறுசீர் & வெண்பா - ஒரே பாடல்


2006-07-19

8.5.38 - உன்றன் அடியவற்கா (பிறிதுபடுபாட்டு - மிறைக்கவி)

-----------

1) ---- (வெண்பா) ----

உன்றன் அடியவற்கா ஓடிவந்த கூற்றையன்று

கொன்றாய் வணங்குமற்றார் கூறுமெந்தாய் - நன்றுசெய்வாய்

என்றே நடலையின்றி ஏத்துமென்றன் சொற்கிரங்காய்

இன்றென் துணையார் இயம்பு.


2) ---- (அறுசீர் விருத்தம் - 6 மா - வாய்பாடு) ----

உன்றன் அடிய வற்கா ஓடி வந்த கூற்றை

அன்று கொன்றாய்; வணங்கும் அற்றார் கூறும் எந்தாய்,

நன்று செய்வாய் என்றே, நடலை இன்றி ஏத்தும்

என்றன் சொற்(கு)இ ரங்காய், இன்(று)என் துணையார் இயம்பு.


உன்றன் அடியவற்கா ஓடி வந்த கூற்றை அன்று கொன்றாய் - உன் பக்தனான மார்க்கண்டேயனுக்காக (அவனைக் கொல்லக் கருதி) விரைந்து வந்தடைந்த காலனை அன்று உதைத்து அழித்தவனே;

வணங்கும் அற்றார் கூறும் எந்தாய், நன்று செய்வாய் என்றே, - வணங்கும் அன்பர்கள் நன்மை செய்பவன் நீ என்று புகழும் எந்தையே; ("நன்று செய்வாய் என்றே" - இடைநிலைத்தீவகமாக இருபக்கமும் இயைக்க நின்றது);

நன்று செய்வாய் என்றே, நடலை இன்றி ஏத்தும் என்றன் சொற்(கு)இ ரங்காய் - நீ நன்மை செய்வாய் என்று வஞ்சம் இன்றி வாழ்த்தும் என் பாமாலைக்கு இரங்கி அருள்வாயாக;

இன்(று)என் துணையார் இயம்பு - (உன்னையல்லால்) இன்று என் துணை வேறு எவர் சொல்;


பிற்குறிப்புகள்:

1. இலக்கணக் குறிப்பு: பிறிதுபடுபாட்டு என்பது ஒரே பாடலை வெவ்வேறு சீர், அடி அமைப்புகள் ஆக்கி இருவகைப் பாடல் அமைப்பாகக் கருதுமாறு அமைவது.

இங்கே, இந்த ஒரே பாடலை வெண்பா என்றும் அறுசீர் விருத்தம் என்று நோக்குமாறு அமைந்தது.


வி. சுப்பிரமணியன்

--------- ---------

08.05.037 - கூர்வேல் (பிறிதுபடுபாட்டு)

08.05.037 - கூர்வேல் (பிறிதுபடுபாட்டு)

08.05 - பலவகை

மிறைக்கவி - பிறிதுபடுபாட்டு:

அறுசீர் & வெண்பா - ஒரே பாடல்


2006-07-18

8.5.37 - கூர்வேல் (பிறிதுபடுபாட்டு - மிறைக்கவி)

-----------

1) ---- (வெண்பா) ----

கூர்வேல்நா கக்கச்சுக் கோளரா ஒண்திங்கள்

சேர்சென்னிக் கோன்ஈசன் தென்னானைக் காஉறைவான்

வார்சடைக்கண் ஆறுவைத்தான் மா(து)இடத்தில் சேர்த்தவன்மா

ஊர்ந்தசெல்வன் தாளேநீ ஓர்.


2) ---- (அறுசீர் விருத்தம் - 6 மா - வாய்பாடு) ----

கூர்வேல் நாகக் கச்சுக் கோள ராஒண் திங்கள்

சேர்சென் னிக்கோன் ஈசன் தென்ஆ னைக்கா உறைவான்

வார்ச டைக்கண் ஆறு வைத்தான் மா(து)இ டத்தில்

சேர்த்த வன்மா ஊர்ந்த செல்வன் தாளே நீஓர்.


கூர்வேல் நாகக்-கச்சுக் கோள்-அரா ஒண்-திங்கள் சேர் சென்னிக்கோன் - கூர்மையான சூலமும், அரையில் நாகக்கச்சும், கொடிய பாம்பையும் ஒளியுடைய சந்திரனையும் சேர்த்த திருமுடியும் உடைய தலைவன்;

ஈசன் - கடவுள்;

தென்-ஆனைக்கா உறைவான் - அழகிய திருவானைக்காவில் உறைகின்றவன்;

வார்-சடைக்கண் ஆறு வைத்தான் - நீண்ட சடையில் கங்கையை அணிந்தவன்;

மாது இடத்தில் சேர்த்தவன் - உமையைத் திருமேனியில் இடப்பாகமாக சேர்த்தவன்;

மா ஊர்ந்த செல்வன் தாளே நீ ஓர் - இடபத்தின்மேல் ஏறிய செல்வனது திருவடியையே, (மனமே) நீ எண்ணு;


பிற்குறிப்புகள்:

1. இலக்கணக் குறிப்பு: பிறிதுபடுபாட்டு என்பது ஒரே பாடலை வெவ்வேறு சீர், அடி அமைப்புகள் ஆக்கி இருவகைப் பாடல் அமைப்பாகக் கருதுமாறு அமைவது.

இங்கே, இந்த ஒரே பாடலை வெண்பா என்றும் அறுசீர் விருத்தம் என்று நோக்குமாறு அமைந்தது.


வி. சுப்பிரமணியன்

--------- ---------

08.05.036 - தேர்தன்னில் (பிறிதுபடுபாட்டு)

08.05.036 - தேர்தன்னில் (பிறிதுபடுபாட்டு)

08.05 - பலவகை

மிறைக்கவி - பிறிதுபடுபாட்டு:

அறுசீர் & வெண்பா - ஒரே பாடல்


2006-07-18

8.5.36 - தேர்தன்னில் (பிறிதுபடுபாட்டு - மிறைக்கவி)

-----------

1) ---- (வெண்பா) ----

தேர்தன்னில் சென்றம்பால் தீயாரூர் மூன்றெய்தார்

பேர்சொல்லும் பத்தர்க்குப் பித்தர்சே - ஊர்செல்வர்

கார்மிடற்றர் மூன்றுகண்கள் காட்(டு)அயன்மால் பார்க்கவொண்ணார்

ஓர்வார்பா வம்தீர்ப்பார் ஓது.


2) ---- (அறுசீர் விருத்தம் - 6 மா - வாய்பாடு) ----

தேர்தன் னில்சென்(று) அம்பால் தீயார் ஊர்மூன்(று) எய்தார்;

பேர்சொல் லும்பத் தர்க்குப் பித்தர்; சேஊர் செல்வர்;

கார்மி டற்றர்; மூன்று கண்கள் காட்(டு)அ யன்மால்

பார்க்க ஒண்ணார்; ஓர்வார் பாவம் தீர்ப்பார் ஓது.


தேர்தன்னில் சென்று அம்பால் தீயார் ஊர்மூன்று எய்தார் - தேரில் சென்று (ஒரு) கணையால் தீயவர்களான அசுரர்களது முப்புரங்களை எய்து அழித்தவர்;

பேர் சொல்லும் பத்தர்க்குப் பித்தர் - திருநாமத்தைச் சொல்லும் பக்தர்களுக்குப் பேரருள் உடையவர்;

சே ஊர் செல்வர் - இடபவாகனம் ஏறிய திருவாளர்;

கார்-மிடற்றர் - நீலகண்டர்;

மூன்று கண்கள் காட்டு, அயன் மால் பார்க்க ஒண்ணார் - முக்கண் உடைய, பிரமன் திருமால் இவர்களால் காண ஒண்ணாதவர்;

ஓர்வார் பாவம் தீர்ப்பார்; ஓது - தியானிப்பவர்களது பாவத்தைத் தீர்ப்பவர்; (என்று / அவரைப்) பாடு;


பிற்குறிப்புகள்:

1. இலக்கணக் குறிப்பு: பிறிதுபடுபாட்டு என்பது ஒரே பாடலை வெவ்வேறு சீர், அடி அமைப்புகள் ஆக்கி இருவகைப் பாடல் அமைப்பாகக் கருதுமாறு அமைவது.

இங்கே, இந்த ஒரே பாடலை வெண்பா என்றும் அறுசீர் விருத்தம் என்று நோக்குமாறு அமைந்தது.


வி. சுப்பிரமணியன்

--------- ---------