Tuesday, November 29, 2022

06.02.176 – (ஐயாறு - திருவையாறு) - மாடிளங்கொடி - (வண்ணம்)

06.02.176 – (ஐயாறு - திருவையாறு) - மாடிளங்கொடி - (வண்ணம்)

2013-11-15

06.02.176 - மாடிளங்கொடி - (ஐயாறு - திருவையாறு)

-------------------------

(வண்ணவிருத்தம்;

தான தந்தன தானான தானன

தான தந்தன தானான தானன

தான தந்தன தானான தானன .. தனதான )

(நாத விந்துக லாதீ நமோநம - திருப்புகழ் - திருவாவினன்குடி)


மாடி ளங்கொடி யார்மாது பேர்புகழ்

.. .. .. நாளு நெஞ்சினி லேயாசை யாகிட

.. .. மாயை என்றறி யாதேயி ராவொடு .. பகல்வேளை

.. வாடி இங்கிடர் தீராது தீவினை

.. .. .. மூடி நொந்துழ லாதேச தாவுனை

.. .. வாழ்க வென்றிடு வேனாக வேவினி .. தருளாயே

நேடி உம்பரின் மேலோடு நான்முகன்

.. .. .. நீணி லங்குடை மாமாய னார்தொழ

.. .. நேரி லஞ்சுட ரானாய்நி லாவொடு .. முடிமீது

.. நீரி ருந்திட வேசூடி னாய்மறை

.. .. .. ஆக மம்பகர் நாவாப ராபர

.. .. நீடும் அன்பொடு நாடோறும் ஏர்மலி .. மலர்தூவிப்

பாடி நின்பத மேபணி மாணியை

.. .. .. ஓடி வந்தடை கார்மேதி யானுயிர்

.. .. பாற அன்றுதை காலாவ ராவணி .. திருமார்பா

.. பாரி டம்பல சூழ்கானில் ஓர்நடம்

.. .. .. ஆடி டுங்கழ லார்பாத தீமலி

.. .. பாணம் ஒன்றொடு மேவார்த மூவெயில் .. அடுவோனே

தோடி லங்கிய காதாவ வாவெழ

.. .. .. நாறும் அம்பெறி வேள்வேவ வேமுனி

.. .. தூய வெண்பொடி ஆர்மேனி யாயொரு .. துகிலேபோல்

.. தோல ணிந்திடு மாதேவ காவிரி

.. .. .. ஆறும் வண்டறை ஓவாத பூமலி

.. .. சோலை யுந்திகழ் சீராரை யாறுறை .. பெருமானே.


பதம் பிரித்து:

மாடு, இளங்கொடி ஆர் மாது, பேர் புகழ்,

நாளும் நெஞ்சினிலே ஆசை ஆகிட,

மாயை என்று அறியாதே இராவொடு பகல் வேளை

வாடி, இங்கு இடர் தீராது, தீவினை

மூடி, நொந்து உழலாதே, சதா உனை

"வாழ்க" என்றிடுவேன் ஆகவே இனிது அருளாயே;


நேடி உம்பரின்மேல் ஓடு நான்முகன்,

நீள்-நிலம் குடை மா-மாயனார் தொழ,

நேர் இல் அஞ்சுடர் ஆனாய்; நிலாவொடு முடிமீது

நீர் இருந்திடவே சூடினாய்; மறை

ஆகமம் பகர் நாவா; பராபர;

நீடும் அன்பொடு நாள்தோறும் ஏர் மலி மலர் தூவிப்


பாடி, நின் பதமே பணி மாணியை

ஓடி வந்தடை கார்-மேதியான் உயிர்

பாற அன்று உதை காலா; அரா அணி திருமார்பா;

பாரிடம் பல சூழ் கானில் ஓர் நடம்

ஆடிடும் கழல் ஆர் பாத; தீ மலி

பாணம் ஒன்றொடு மேவார்தம் மூவெயில் அடுவோனே;


தோடு இலங்கிய காதா; அவா எழ

நாறும் அம்பு எறி வேள் வேவவே முனி

தூய; வெண்-பொடி ஆர் மேனியாய்; ஒரு துகிலேபோல்

தோல் அணிந்திடும் மாதேவ; காவிரி

ஆறும், வண்டு-அறை ஓவாத பூ மலி

சோலையும் திகழ் சீர் ஆர் ஐயாறு உறை பெருமானே.


மாடு, ளங்கொடி ர் மாது, பேர் புகழ், நாளும் நெஞ்சினிலேசை கிட - பொருள், இளம் கொடி போன்ற பெண்கள், பேர் புகழ், என்று தினமும் மனத்தில் பல ஆசைகள் பெருக; (மாடு - செல்வம்); (ஆர்தல்- ஒத்தல்);

மாயை என்று அறியாதேராவொடு பகல் வேளை வாடி, இங்கு இடர் தீராது, தீவினை மூடி, நொந்துழலாதே - இது மாயை என்று அறியாமல் இரவும் பகலும் வாடி, இங்குத் தீராத துன்பம் அடைந்து, தீவினையால் மூடப்பெற்று, வருந்தி உழலாமல்;

சதானை "வாழ்க" ன்றிடுவேன் ஆகவேனிது அருளாயே - எப்பொழுதும் உன்னை "வாழ்க" என்று துதிக்கும் குணம் உடையவன் என்று நான் ஆகும்படி இன்னருள் செய்வாயாக;


நேடி உம்பரின்மேல் ஓடு நான்முகன், நீள்-நிம் குடை மா-மாயனார் தொழ, நேர் இல் அம் சுடர் ஆனாய் - (அடிமுடியைத்) தேடி ஆகாயத்தில் மேலே சென்ற பிரமனும், பெரிய நிலத்தைக் குடைந்து சென்ற திருமாலும் தொழும்படி, ஒப்பற்ற அழகிய ஜோதியாய் நின்றவனே; (நேடுதல் - தேடுதல்); (உம்பர் - ஆகாயம்); (நீணிலம் - நீள் நிலம் - நீண்டவுலகு - பூமி); (மாயன் - திருமால்); ( நேர் - நிகர்; ஒப்பு); (அம் - அழகு); (ஆனாய் - ஆனவனே);

நிலாவொடு முடிமீது நீர் இருந்திடவே சூடினாய் - திருமுடிமேல் நிலைத்திருக்கும்படி சந்திரனையும் கங்கையையும் அணிந்தவனே;

மறை ஆகமம் பகர் நாவா - வேதங்களையும் ஆகமங்களையும் ஓதியவனே; (பகர்தல் - சொல்லுதல்);

பராபர - பாரபரனே - பரம்பொருளே;

நீடும் அன்பொடு நாள்தோறும் ஏர் மலி மலர் தூவிப் பாடி - மிகுந்த பக்தியோடு தினமும் அழகு மிக்க மலர்களத் தூவித் துதிகள் பாடி; (நீடுதல் - நீள்தல்); (ஏர் - அழகு);

நின் பதமே பணி மாணியை ஓடி வந்தடை கார்-மேதியான் உயிர் பாற அன்றுதை காலா - உன் திருவடியையே வணங்கிய மார்க்கண்டேயரைக் கொல்ல விரைந்துவந்த கரிய எருமைவாகனம் உடைய காலன் இறக்கும்படி அன்று அவனை உதைத்த காலனே; (மாணி - இங்கே மார்க்கண்டேயர்); (கார் - கருமை); (மேதி - எருமை); (பாறுதல் - அழிதல்);

அராணி திருமார்பா - பாம்பை மார்பில் அணிந்தவனே;

பாரிடம் பல சூழ் கானில் ஓர் நடம் ஆடிடும் கழல் ஆர் பாத - பல பூதங்கள் சூழும் சுடுகாட்டில் ஒப்பற்ற கூத்து ஆடும் கழல் அணிந்த திருப்பாதனே; (பாரிடம் - பூதம்); (கான் - இங்கே சுடுகாடு);

தீ மலி பாணம் ஒன்றொடு மேவார்தம் மூவெயில் அடுவோனே - தீ மிகுந்த ஒரு கணையால் பகைத்த அசுரர்களது முப்புரங்களை எரித்தவனே; (மேவார் - பகைவர்); (ஏயில் - கோட்டை); (அடுதல் - அழித்தல்; எரித்தல்);


தோடு இலங்கிய காதா - ஒரு காதில் தோடு அணிந்தவனே; (அர்த்தநாரீஸ்வரன்);

வா நாறும் அம்பு எறி வேள் வேவவே முனி தூய - ஆசையைத் தூண்டுவதற்காக மணம் கமழும் கணையை ஏவிய மன்மதன் வெந்து சாம்பலாகும்படி அவனைக் கோபித்த தூயனே; (நாறுதல் - மணம் கமழ்தல்); (வேள் - மன்மதன்); (முனிதல் - கோபித்தல்);

வெண்-பொடி ஆர் மேனியாய் - திருநீற்றை மேனியில் பூசியவனே;

ரு துகிலேபோல் தோல் அணிந்திடும் மாதேவ - சிறந்த வஸ்திரம்போல் (புலித்)தோலை அணிந்த மகாதேவனே;

காவிரி ஆறும், வண்டு-றை ஓவாத பூ மலி-சோலையும் திகழ் சீர் ஆர் ஐயாறுறை பெருமானே - காவிரிநதியும், வண்டுகள் செய்யும் ஒலி எப்பொழுதும் இருக்கும் பூக்கள் நிறைந்த சோலையும் விளங்கும் அழகிய திருவையாற்றில் எழுந்தருளிய பெருமானே; (சிறை - சிறகு); (அறை - ஓசை); (சம்பந்தர் தேவாரம் - 1.80.40 - "சிறைவண் டறையோவாச் சிற்றம் பலமேய"); (சீர் - அழகு; புகழ்; பெருமை);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment