Thursday, November 17, 2022

06.01.140 - சிவன் - கண்ணன் - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்

2013-08-28

06.01.140 - சிவன் - கண்ணன் - சிலேடை

-----------------------------------------------

திருவாய் விரியத் தெரியும்பல் அண்டத்

துருவாய் ஒளித்திருப்பான் ஓடி - வருவான்

களிக்கக் கரியவன்னஞ் சார்பவன் கங்கை

தெளிக்குமுடி யான்கண்ணன் செப்பு.


சொற்பொருள்:

திரு - தெய்வத்தன்மை; செல்வம்;

விரிதல் - பரத்தல் (To expand; to spread out); மலர்தல் (To open, unfold);

சார்பு - துணை; புகலிடம்;

வன்னம் - வர்ணம்;

சார்தல் - பொருந்துதல்;

சார்பு - புகலிடம்;

வான் - தேவர்கள்;

ஆர்தல் - உண்ணுதல்;

பவன் - சிவபெருமான் திருநாமங்களுள் ஒன்று; (God, as self-existent);

கரியவன்னஞ் சார்பவன் - 1a. கரியவன் நம் சார்பு அவன் (னகர ஒற்று விரித்தல் விகாரம்); 1b. கரிய வன்னம் சார்பவன்; / 2. கரிய வன் நஞ்சு ஆர் பவன்;

முடி - உச்சி;


கண்ணன்:

திரு வாய் விரியத் தெரியும் பல் அண்டத்து

உரு வாய் ஒளித்திருப்பான் ஓடி வருவான்

களிக்கக்; கரியவன்; நம் சார்பு அவன்; கங்கை

தெளிக்கும் முடியான், கண்ணன் செப்பு.


("மண்ணை உண்டாயா?" என்று அசோதை கேட்டபோது) அவனுடைய திருவாய் விரியவும் பல அண்டங்களும் தெரியும்; (அவற்றைத் தன்) வாயுள் ஒளித்திருப்பான்; பெற்றோரும் மற்றோரும் களிப்பு அடையும்படி அவர்களிடம் ஓடி வருவான்; ("ஒளித்திருப்பான்" என்பதை இடைநிலைத்தீவகமாக, "ஓடி வருவான் களிக்க" என்பதோடும் மீண்டும் இயைத்துக், "தன்னை மறைத்துக்கொண்டு, கண்ணாமூய்ச்சி" விளையாடுவான் என்றும் பொருள்கொள்ளலாம்); கரிய நிறம் உடையவன்; நம் புகலிடம் அவன்; ("கரியவன்னஞ் சார்பவன்" என்பதைக் "கரிய வன்னம் சார்பவன்" என்றும் கொள்ளலாம் - கரிய வண்ணம் பொருந்துபவன்); கண்ணன்.


சிவன்:

திருவாய், விரியத் தெரியும் பல் அண்டத்து

உருவாய், ஒளித்து இருப்பான்; ஓடி வரு வான்

களிக்கக், கரிய வன் நஞ்சு ஆர் பவன்; கங்கை

தெளிக்கும் முடியான், கண்ணன் செப்பு.


திரு ஆகி, விரிந்து தெரிகின்ற எல்லா அண்டங்களின் உரு ஆகி, (அப்படி இருந்தாலும்) அறிய இயலாதபடி தன்னை ஒளித்து இருப்பவன்; (அஞ்சி) ஓடிவந்த தேவர்கள் மகிழும்படி, கரிய கொடிய விடத்தை உண்ட, பவன் என்ற திருநாமம் உடையவன்; கங்கைநீர் தெளிக்கின்ற உச்சியை உடையவன்; சிவபெருமான்.


குறிப்புகள்:

1) ஒளித்திருப்பான் : திருவாசகம் - சிவபுராணம் - அடி 49-50: "விண்ணோர்க ளேத்த மறைந்திருந்தாய்" - தேவர்கள் துதிக்க அவர்களுக்கு ஒளித்து இருந்தவனே.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment