Wednesday, November 30, 2022

06.02.179 – ஆனைக்கா - மோகத்தோடு மிக்க - (வண்ணம்)

06.02.179 – ஆனைக்கா - மோகத்தோடு மிக்க - (வண்ணம்)

2014-02-02

06.02.179 - மோகத்தோடு மிக்க - ஆனைக்கா - (திருவானைக்கா)

-------------------------

(வண்ணவிருத்தம்;

தானத் தான தத்த

தானத் தான தத்த

தானத் தான தத்த .. தனதான )

(காதைக் காதி மெத்த - திருப்புகழ் - சிதம்பரம்)


மோகத் தோடு மிக்க காசைத் தேட வைக்கு(ம்)

.. .. மூடத் தோடு சுற்றி .. அடைவாதை

.. மூடப் பேத லித்து நோயுற் றாவி விட்டு

.. .. மூளத் தீயெ ரித்த .. பொடியாமுன்

பாகைத் தேனை ஒத்த பாவைப் பூநி கர்த்த

.. .. பாதத் தேவி ருப்பொ .. டிடுஞானம்

.. பாலித் தாற லைக்க ஓடிச் சூழ லுற்ற

.. .. பாவத் தீவி லக்கி .. அருளாயே

நாகத் தோடு மத்தம் வாசக் கூவி ளத்தை

.. .. நாடிச் சூடு பித்த .. மறைநாவா

.. நால்வர்க் கோர்ம ரத்தின் நீழற் சீர்மி குத்த

.. .. நாலைத் தானு ரைத்த .. குருநாதா

ஆகத் தேயி டத்தை நாரிக் கீயு மத்த

.. .. ஆமைத் தாலி பெற்ற .. திருமார்பா

.. ஆலத் தால்மி டற்றில் நீலத் தாய்செ ழித்த

.. .. ஆனைக் காநி லைத்த .. பெருமானே.


பதம் பிரித்து:

மோகத்தோடு, மிக்க காசைத் தேட வைக்கும்

மூடத்தோடு, சுற்றி அடை வாதை

மூடப், பேதலித்து, நோயுற்று, ஆவி விட்டு,

மூள் அத் தீ எரித்த பொடி ஆம் முன்,


பாகைத் தேனை ஒத்த பாவைப் பூ நிகர்த்த

பாதத்தே விருப்பொடு இடு ஞானம்

பாலித்து, ஆறலைக்க ஓடிச் சூழலுற்ற

பாவத்-தீ விலக்கி அருளாயே;


நாகத்தோடு, மத்தம், வாசக் கூவிளத்தை

நாடிச் சூடு பித்த; மறை-நாவா;

நால்வர்க்கு ஓர் மரத்தின் நீழற் சீர் மிகுத்த

நாலைத்தான் உரைத்த குருநாதா;


ஆகத்தே இடத்தை நாரிக்கு ஈயும் அத்த;

ஆமைத் தாலி பெற்ற திருமார்பா;

ஆலத்தால் மிடற்றில் நீலத்தாய்; செழித்த

ஆனைக்கா நிலைத்த பெருமானே.


மோகத்தோடு, மிக்க காசைத் தேட வைக்கும் மூடத்தோடு, சுற்றி அடை வாதை மூப், பேதலித்து - மோகத்தால், மிகுந்த பொருளைத் தேடச்செய்யும் அறியாமையால், உலகில் அலைந்து திரிந்து, அடைந்த பல துன்பங்கள் என்னைச் சுற்றி மூட, மனம் கலங்கி; (மூடம் - அறிவின்மை); (சுற்றி - உலகில் திரிந்து; என்னைச் சுற்றி); (வாதை - துன்பம்); (பேதலித்தல் - மனம் குழம்புதல்);

நோயுற்று, வி விட்டு, மூள் அத் தீரித்த பொடி ஆம் முன் - நோய்கள் அடைந்து, உயிர் நீங்கி, மூண்டெழும் அந்த ஈமத்தீயில் சாம்பலாகும் முன்னமே; (அத் தீ - அந்தத் தீ - சுடுகாட்டுத் தீ); (- பண்டறி சுட்டு);

பாகைத் தேனை த்பாவைப் பூ நிகர்த்த ாதத்தே விருப்பொடு இடு ஞானம் பாலித்து - பாகையும் தேனையும் ஒத்து இனிக்கின்ற பாமாலைகளைத் தாமரைமலர் போன்ற திருவடியில் அன்போடு இட்டு வழிபடும் அறிவை எனக்குத் தந்து; (பா - பாட்டு); (பாலித்தல் - கொடுத்தல்);

றலைக்க ஓடிச் சூழலுற்ற பாவத்-தீ விக்கி அருளாயே - என்னைக் கெடுக்க விரைந்துவந்து சூழ்கின்ற தீவினையாகிய நெருப்பை நீக்கி அருள்வாயாக; (ஆறலைத்தல் - வழிப்பறி செய்தல்); (சுந்தரர் தேவாரம் - 7.7.5 - "அரித்து நம்மேல் ஐவர் வந்திங் காறலைப்பான் பொருட்டால்")


நாகத்தோடு, மத்தம், வாசக் கூவிளத்தை நாடிச் சூடு பித்த - பாம்பு, ஊமத்தமலர், மணம் கமழும் வில்வம் இவற்றையெல்லாம் விரும்பி அணிந்த பித்தனே; (மத்தம் - ஊமத்தமலர்); (கூவிளம் - வில்வம்); (பித்தன் - சிவன் திருநாமம் - பேரருளாளன்); (சம்பந்தர் தேவாரம் - 2.38.3 - "நாறு கூவிள நாகிள வெண்மதியத்தோ டாறு சூடும் அமரர் பிரான்");

மறை-நாவா - வேதங்களைப் பாடியருளியவனே;

நால்வர்க்கு ஓர் மரத்தின் நீழற் சீர் மிகுத்த நாலைத்தான் உரைத்த குருநாதா - சனகாதி முனிவர்களுக்குக் கல்லால மரத்தின்கீழ்ச் சீர் மிகுந்த நான்கு வேதங்களை உபதேசித்த குருவே; (தான் - அசை);


ஆகத்தேத்தை நாரிக்கு ஈயும் அத்த - திருமேனியில் இடப்பக்கத்தை உமைக்கு ஈந்த எம் தந்தையே; (அத்தன் - தந்தை);

ஆமைத் தாலி பெற்ற திருமார்பா - ஆமையோட்டை மார்பில் அணிந்தவனே; (தாலி - கழுத்தில் அணியும் ஆபரணம்); (சுந்தரர் தேவாரம் - 7.53.5 - " மருப்பும் ஆமைத் தாலியார்"); (சம்பந்தர் தேவாரம் - 1.1.2 - "முற்றலாமை இளநாகமோடேன முளைக்கொம்பவை பூண்டு");

ஆலத்தால் மிடற்றில் நீலத்தாய் - ஆலகால விடத்தால் கண்டத்தில் கருமையை உடையவனே;

செழித்த ஆனைக்கா நிலைத்த பெருமானே - செழிப்புடைய திருவானைக்காவில் நீங்காமல் உறைகின்ற பெருமானே; (செழித்தல் - தழைத்தல்; சிறந்து விளங்குதல்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

06.01.143 - சிவன் - ஏடிஎம் (ATM) - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்

2014-01-12

06.01.143 - சிவன் - ஏடிஎம் (ATM) - சிலேடை

-----------------------------------------------

சார்ந்தவர்கள் தப்பாமல் எண்ணிடத் தந்திடும்

ஏந்துபணங் கைச்சேரும் இட்டதுண்ணும் - நாந்திகைக்கச்

சிற்சமயம் இல்லையென்னுஞ் சேர்த்துவைத்த செல்வநதிப்

பொற்சடையன் ஏடிஎம் போல்.


சொற்பொருள்:

சார்தல் - 1. சென்றடைதல்; / 2. புகலடைதல்;

தப்புதல் - 1. தவறுதல் (To err, mistake, blunder); / 2. செய்யத் தவறுதல் (To fail to do);

எண்ணிடுதல் - 1. எண்களை இடுதல்; / 2. சிந்தித்தல்;

ஏந்துதல் - 1. மிகுதல்; / 2. தாங்குதல்; தரித்தல்;

பணம் - 1. நிதி; / 2. பாம்பு;

சிற்சமயம் - 1. சில நேரம்; / 2. சில மதங்கள்; (சில் - 1. சில; 2. அற்பமான);

செல்வநதி - செல்வம்+நதி;


ஏடிஎம் (ATM) (Automated Teller Machine - தானியங்கிப் பணம் வழங்கு இயந்திரம்):

சார்ந்தவர்கள் தப்பாமல் எண் இடத் தந்திடும் - சென்றடைந்தவர்கள் பிழையின்றித் தம் ரகசிய எண்ணை இட்டதும் கொடுக்கும்;

ஏந்து பணங் கைச் சேரும் - மிகுந்த பணம் கையைச் சேரும்;

இட்டது உண்ணும் நாம் திகைக்கச் சிற்சமயம் - அக்கருவியில் இட்ட நம் அட்டையை (ATM card) நாம் திகைக்கும்படி அது சில சமயங்களில் விழுங்கிவிடும்;

நாம் திகைக்கச் சில் சமயம் இல்லை என்னும் சேர்த்து வைத்த செல்வம் - நாம் திகைக்கும்படி அது சில சமயங்களில் நம் கணக்கில் பணம் இருந்தாலும் அது கொடாது. (நாந்திகைக்கச் சிற்சமயம் - இடைநிலைத் தீவகமாக இப்படி இருபக்கமும் இயைத்துப் பொருள்கொள்ளலாம்);


சிவன்:

சார்ந்தவர்கள் தப்பாமல் எண்ணிடத் தந்திடும் - புகலடைந்தவர்கள் தொடர்ந்து / முறைப்படி தியானிக்க அருள்புரிவான்;

ஏந்து பணம் கைச் சேரும் - தரிக்கின்ற பாம்பு கையில் இருக்கும்; (அப்பர் தேவாரம் - 6.97.7 - "பலிக்கோடித் திரிவார்கைப் பாம்பு கண்டேன்" - பிச்சைக்கு ஓடித்திரியும் அவன் கையில் பாம்பைக் கண்டேன்);

இட்டது உண்ணும் நாம் திகைக்க - நாம் வியப்புறும் வண்ணம் பிச்சை ஏற்று உண்பான்;

சில் சமயம் இல்லை என்னும் - சில சமயங்கள் சிவனை இல்லை என்று மறுக்கும்;

சேர்த்து வைத்த செல்வம் - அடியவர்களுக்கு அவன் வைப்புநிதி ஆவான்; (சம்பந்தர் தேவாரம் - 2.64.5 - "வைத்த நிதியே மணியே" - வைத்தநிதி - சேமவைப்பாக வைக்கப்பெற்ற செல்வம்);

நதிப்பொற்சடையன் - கங்கையைத் தரித்த பொற்சடையை உடைய சிவபெருமான்.


இலக்கணக் குறிப்புகள்:

1. சில்சமயம் என்பது எதுகைநோக்கிச் சிற்சமயம் என்று திரிந்தது;

(சில்சமயம் என்ற பிரயோகத்தை ஒத்த பிரயோகங்கள் -

குசேலோபாக்கியானம் - "கண்ணன் றனைக்கண்... எனச் சில்பொழு துள்ளத் தெண்ணி";

நற்றிணை - 42 - கீரத்தனார் - "மறத்தற் கரிதால் பாக! ..... சில்போது கொண்டு பல்குரல் அழுத்திய");


2. செய்யும் என்ற வாய்பாட்டு வினைமுற்று விகுதி:

"செய்யும்" என்னும் வாய்பாட்டு வினைமுற்றில் உள்ள "உம்" விகுதி நிகழ்காலமும், எதிர்காலமும் உணர்த்தும். படர்க்கை ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால், பலவின்பால் ஆகியவற்றில் மட்டுமே இது இடம்பெறும்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


06.02.178 – நாலூர் - நாணான் மேலோர் - (வண்ணம்)

06.02.178 – நாலூர் - நாணான் மேலோர் - (வண்ணம்)

2013-12-31

06.02.178 - நாணான் மேலோர் - (நாலூர்)

(நாலூர் - பலாசவனநாதர் கோயில் - தேவார வைப்புத்தலம்)

-------------------------

(வண்ணவிருத்தம்;

தானா தானா தானா தானா

தானா தானத் .. தனதான )

(தாமா தாமா லாபா லோகா - திருப்புகழ் - திருச்செங்கோடு)


நாணான் மேலோர் மேலாய் பேரே

.. நாவால் ஓதித் .. தமிழ்பாடி

வாணாள் வீணா காதே பூமேல்

.. வாழ்வே னாகப் .. பணியாயே

நாணா தூரூர் ஊணே தேர்வாய்

.. நாதா நேமிக் .. கரனேடச்

சேணார் தீயா னாய்தே னீயார்

.. சீர்நா லூரிற் .. பெருமானே.


பதம் பிரித்து:

நாள் நான் மேலோர் மேலாய் பேரே

.. நாவால் ஓதித் தமிழ் பாடி,

வாழ்நாள் வீண் ஆகாதே பூமேல்

.. வாழ்வேன் ஆகப் பணியாயே;

நாணாது ஊர்ஊர் ஊணே தேர்வாய்;

.. நாதா; நேமிக்-கரன் நேடச்

சேண் ஆர் தீ ஆனாய்; தேனீ ஆர்

.. சீர் நாலூரில் பெருமானே.


நாள் நான் மேலோர் மேலாய் பேரே நாவால் ஓதித் தமிழ் பாடி - மேலோர்க்கும் மேலான உன் திருநாமத்தையே நான் நாள்தோறும் நாவால் ஓதித், தேவாரம் திருவாசகம் முதலிய தெய்வத்தமிழ் பாடி; (நாள் - நாளும் - உம்மைத்தொகை); (மேலோர் - தேவர்);

வாழ்நாள் வீண் ஆகாதே பூமேல் வாழ்வேன் ஆகப் பணியாயே - என் வாழ்நாள் வீணாகாமல் இப்புவிமேல் பயனுள்ள வாழ்வு வாழ்வதற்கு அருள்புரிவாயாக; (பூ - பூமி); (பணித்தல் - அருளிச்செய்தல்; ஆணையிடுதல்);

நாணாது ஊர்ஊர் ஊணே தேர்வாய் - கூச்சமின்றிப் பல ஊர்களில் பிச்சை ஏற்பவனே; (ஊண் - உணவு); (தேர்தல் - தேடுதல்);

நாதா - தலைவனே;

நேமிக்-கரன் நேடச் சேண் ஆர் தீ ஆனாய் - சக்கராயுதத்தைக் கையில் தாங்கிய திருமால் தேடும்படி, வான் ஓங்கும் சோதி ஆனவனே; (நேமி - சக்கராயுதம்); (கரன் - கையினன்); (சம்பந்தர் தேவாரம் - 1.22.6 - "வடமுகம் உறைதரு கரன்" - வடவை முகத்தீ ஆகியன உறையும் திருக்கரங்களை உடையவன்); (நேடுதல் - தேடுதல்); (சேண் - உயரம்; ஆகாயம்); (ஆர்தல் - பொருந்துதல்);

தேனீ ஆர் சீர் நாலூரில் பெருமானே - தேனீக்கள் ஒலிக்கும் புகழ் உடைய நாலூரில் எழுந்தருளியிருக்கும் பெருமானே; (தேனீ - தேன் தொகுக்கும் வண்டு); (ஆர்த்தல் - ஒலித்தல்); (சீர் - புகழ்); (நாலூர் - பலாசவனநாதர் கோயில் - தேவார வைப்புத்தலம்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


Tuesday, November 29, 2022

06.02.177 – ஆரூர் - காவார் பாலே - (வண்ணம்)

06.02.177 – ஆரூர் - காவார் பாலே - (வண்ணம்)

2013-12-30

06.02.177 - காவார் பாலே - (ஆரூர் - திருவாரூர்)

-------------------------

(வண்ணவிருத்தம்;

தானா தானா தானா தானா

தானா தானத் .. தனதான )

(தாமா தாமா லாபா லோகா - திருப்புகழ் - திருச்செங்கோடு)


காவார் பாலே போய்நா ணாதே

.. .. காசே நாடித் .. திரியாமல்

.. காவார் நாலூர் தேனார் ஆவூர்

.. .. கானூர் நீலக் .. குடிமேயாய்

நாவார் பாவால் வீறார் தாளே

.. .. நாணா னோதிப் .. பணிவேனே

.. நாவா யாவா யானே றூர்வாய்

.. .. ஞானா கோலச் .. சடையானே

சாவாய் மூவாய் வானோர் கோனே

.. .. சாரா தாருக் .. கருளானே

.. தாரா மார்போர் நாகா மூலா

.. .. தாதார் போதைப் .. புனைவோனே

ஏவான் மேவார் மூவூர் தீவா

.. .. யேகா வீழப் .. பொருதோனே

.. ஈசா மானேர் மாதோர் பாகா

.. .. ஏரா ரூரிற் .. பெருமானே.


பதம் பிரித்து:

காவார்பாலே போய் நாணாதே

.. .. காசே நாடித் திரியாமல்,

.. கா ஆர் நாலூர் தேன் ஆர் ஆவூர்

.. .. கானூர் நீலக்குடி மேயாய்,

நா ஆர் பாவால் வீறு ஆர் தாளே

.. .. நாள் நான் ஓதிப் பணிவேனே;

.. நாவாய் ஆவாய்; ஆன் ஏறு ஊர்வாய்;

.. .. ஞானா; கோலச் சடையானே;

சாவாய்; மூவாய்; வானோர் கோனே;

.. .. சாராதாருக்கு அருளானே;

.. தாரா மார்பு ஓர் நாகா; மூலா;

.. .. தாது ஆர் போதைப் புனைவோனே;

ஏவால் மேவார் மூ ஊர் தீவாய்

.. .. ஏகா வீழப் பொருதோனே;

.. ஈசா; மான் நேர் மாது ஓர் பாகா;

.. .. ஏர் ஆரூரில் பெருமானே.


காவார்பாலே போய் நாணாதே காசே நாடித் திரியாமல் - என்னைக் காப்பாற்றாதவர்களிடம்போய் வெட்கமின்றிப் பணத்திற்காக அலையாமல்;

கா ஆர் நாலூர் தேன் ஆர் ஆவூர் கானூர் நீலக்குடி மேயாய் - சோலை சூழ்ந்த நாலூர், வண்டுகள் ஒலிக்கும் ஆவூர், திருக்கானூர், திருநீலக்குடி என்ற தலங்களில் உறைபவனே; (கா - சோலை); (ஆர்தல் - பொருந்துதல்; உண்ணுதல்); (தேன் - வண்டு); (ஆர்த்தல் - ஒலித்தல்); (நாலூர் - பலாசவனநாதர் கோயில் - தேவார வைப்புத்தலம்); (ஆவூர், கானூர், நீலக்குடி - தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்);

நா ஆர் பாவால் வீறு ஆர் தாளே நாள் நான் ஓதிப் பணிவேனே - நாவில் பொருந்திய நற்றமிழ்ப் பாக்களால், மேன்மை மிக்க திருவடியையே நாள்தோறும் நான் போற்றிப் பணிவேன்; (வீறு - தனிப்பட்ட சிறப்பு; வெற்றி; அழகு);

நாவாய் ஆவாய்; ஆன் ஏறு ஊர்வாய்; - பிறவிக்கடலைக் கடப்பிக்கும் மரக்கலம் ஆனவனே; இடப வாகனனே; (நாவாய் - மரக்கலம்); (ஆன் ஏறு - இடபம்); (ஊர்தல் - ஏறிச் செலுத்துதல்);

ஞானா; கோலச் சடையானே - ஞான வடிவினனே; அழகிய சடையை உடையவனே; (திருவாசகம் - திருவுந்தியார் - 8.14.17 - "கோலச் சடையற்கே யுந்தீபற");

சாவாய்; மூவாய்; வானோர் கோனே; - இறப்பும் மூப்பும் இல்லாதவனே; தேவர்களுக்கு எல்லாம் தலைவனே; (அப்பர் தேவாரம் - 6.55.9 - "மூவாய் பிறவாய் இறவாய் போற்றி...");

சாராதாருக்கு அருளானே - அடையாதவர்களுக்கு அருள்புரியாதவனே; (சார்தல் - அடைதல்; சரண்புகுதல்); (அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால் நலமிலன்...");

தாரா மார்பு ஓர் நாகா; மூலா; - மாலையாக மார்பில் ஒரு நாகத்தை அணிந்தவனே; முதற்பொருளே; (தாரா - தாராக என்பது கடைக்குறையாக வந்தது); (தார் - மாலை); (நாகா - நாகம் அணிந்தவனே); (சம்பந்தர் தேவாரம் - 3.117.1 - "யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா" - நாகா - பாம்புகளை உடையவனே.);

தாது ஆர் போதைப் புனைவோனே - மகரந்தம் பொருந்திய மலர்களைச் சூடியவனே; (தாது - மகரந்தம்); (போது - பூ);

ஏவால் மேவார் மூ ஊர் தீவாய் ஏகா வீழப் பொருதோனே - அம்பினால் பகைவர்களது முப்புரங்களும் தீயின்கண் புகுந்து அழியும்படி போர் செய்தவனே; (- அம்பு); (மேவார் - பகைவர்); (தீ வாய் - தீயின்கண்); (வாய் - ஏழாம் வேற்றுமை உருபு); (ஏகா வீழ - ஏகி வீழ - சென்று/புகுந்து அழிய; - செய்யா என்ற வாய்பாட்டு வினையெச்சம்);

ஈசா; மான் நேர் மாது ஓர் பாகா - ஈசனே; மான் போன்ற மங்கையை ஒரு பாகமாக உடையவனே; (நேர் - உவமை; போன்ற);

ஏர் ஆரூரில் பெருமானே - அழகிய திருவாரூரில் உறையும் சிவபெருமானே.


இலக்கணக் குறிப்பு: செய்யா என்ற வாய்பாட்டு வினையெச்சம்: எதிர்மறைச்சொல் போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

(.கா) பெய்யாக் கொடுக்கும் - (பெய்து கொடுக்கும் என்பது பொருள்)


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


06.01.142 - சிவன் - மேகம் - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்

2013-12-15

06.01.142 - சிவன் - மேகம் - சிலேடை

-----------------------------------------------

ஆழ்கடல் ஆலத்தை ஆர்ந்த அழகிருக்கும்

வாழ்வளிக்கும் மண்ணடைந்தால் மாவமரும் - கேழ்கிளரும்

மின்னிடை ஒன்றிடு மேன்மையுடை மேகமதி

சென்னிமிசை வைத்த சிவன்.


சொற்பொருள்:

ஆலம் - 1. நீர்; / 2. விடம்;

ஆர்தல் - உண்ணுதல்;

மண் - 1) தரை; 2) உலக மக்கள்;

அடைதல் - 1. சேர்தல்; / 2. சரண் புகுதல்;

மா - 1. கருமை; / 2a. அழகு; 2b. விலங்கு - இங்கே எருது; 2c. மாமரம்;

அமர்தல் - 1. இருத்தல்; / 2a. பொருந்துதல்; பொலிதல்; 2b. விரும்புதல்;

கேழ் - ஒளி;

கிளர்தல் - விளங்குதல்; மிகுதல்;

ஒன்றுதல் - பொருந்துதல்; ஒன்றாதல்;

மின் இடை ஒன்றிடுதல் - 1. மின்னல் இடையே பொருந்துதல்; 2. மின்னல் போன்ற நுண்ணிடையாள் (= ஆகுபெயராக உமையம்மை) ஒன்றாதல்;


மேகம்:

ஆழ்கடல் ஆலத்தை ஆர்ந்த அழகிருக்கும் - கடல் நீரைக் குடித்த அழகு உடையது;

வாழ்வு அளிக்கும் மண் அடைந்தால் - நிலத்தை அடைந்தால் உயிர்கள் தழைக்கும்;

மா அமரும் - கருமை திகழும்; (சம்பந்தர் தேவாரம் - 1.10.2 - "தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித் தூமாமழை..." - தூ மா மழை - தூய்மையான கரிய மேகம்);

கேழ் கிளரும் மின் இடை ஒன்றிடும் மேன்மையுடை மேகம் - ஒளி விளங்கும் மின்னல் இடையே பொருந்தியிருக்கும் சிறப்பு உடைய மேகம்.


சிவன்:

ஆழ்கடல் ஆலத்தை ஆர்ந்த அழகிருக்கும் - பாற்கடலில் தோன்றிய நஞ்சை உண்ட அழகு (கண்டத்தில்) இருக்கும்;

வாழ்வு அளிக்கும் மண் அடைந்தால் - மண்ணுலகத்தோர் சரண்புகுந்தால் அவர்களுக்கு நல்வாழ்வு கொடுப்பவன்;

மா அமரும் - அழகு பொலியும்; / (ஊர்தியாக) இடபத்தை விரும்புபவன்;

("மண் அடைந்தால்" என்ற சொற்றொடரை இடைநிலைத் தீவகமாகக் கொண்டு, இருபுறமும் இயைத்து, "மண் அடைந்தால் மா அமரும்" என்று கொண்டு, "காஞ்சி - ப்ருத்வி ஸ்தலம். அங்கே மாமரத்தின்கீழ் ஏகாம்பரன்" என்றும் பொருள்கொள்ளக் கூடுமாறுபோல் அமைந்துள்ளது);

கேழ் கிளரும் மின் இடை ஒன்றிடும் மேன்மையுடை - ஒளி மிகும் மின்னல் போன்ற இடையை உடைய உமையம்மை ஒன்றாகப் பொருந்தும் சிறப்புடைய; ("மா அமரும் கேழ் கிளரும் மின் இடை" என்று கொண்டு, "அழகிய ஒளி மிகும் மின்னல் போன்ற இடையுடைய உமாதேவி" என்றும் பொருள்கொள்ளல் ஆம்);

மதி சென்னிமிசை வைத்த சிவன் - சந்திரனைத் தன் தலைமேல் அணிந்த சிவபெருமான்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


06.02.176 – (ஐயாறு - திருவையாறு) - மாடிளங்கொடி - (வண்ணம்)

06.02.176 – (ஐயாறு - திருவையாறு) - மாடிளங்கொடி - (வண்ணம்)

2013-11-15

06.02.176 - மாடிளங்கொடி - (ஐயாறு - திருவையாறு)

-------------------------

(வண்ணவிருத்தம்;

தான தந்தன தானான தானன

தான தந்தன தானான தானன

தான தந்தன தானான தானன .. தனதான )

(நாத விந்துக லாதீ நமோநம - திருப்புகழ் - திருவாவினன்குடி)


மாடி ளங்கொடி யார்மாது பேர்புகழ்

.. .. .. நாளு நெஞ்சினி லேயாசை யாகிட

.. .. மாயை என்றறி யாதேயி ராவொடு .. பகல்வேளை

.. வாடி இங்கிடர் தீராது தீவினை

.. .. .. மூடி நொந்துழ லாதேச தாவுனை

.. .. வாழ்க வென்றிடு வேனாக வேவினி .. தருளாயே

நேடி உம்பரின் மேலோடு நான்முகன்

.. .. .. நீணி லங்குடை மாமாய னார்தொழ

.. .. நேரி லஞ்சுட ரானாய்நி லாவொடு .. முடிமீது

.. நீரி ருந்திட வேசூடி னாய்மறை

.. .. .. ஆக மம்பகர் நாவாப ராபர

.. .. நீடும் அன்பொடு நாடோறும் ஏர்மலி .. மலர்தூவிப்

பாடி நின்பத மேபணி மாணியை

.. .. .. ஓடி வந்தடை கார்மேதி யானுயிர்

.. .. பாற அன்றுதை காலாவ ராவணி .. திருமார்பா

.. பாரி டம்பல சூழ்கானில் ஓர்நடம்

.. .. .. ஆடி டுங்கழ லார்பாத தீமலி

.. .. பாணம் ஒன்றொடு மேவார்த மூவெயில் .. அடுவோனே

தோடி லங்கிய காதாவ வாவெழ

.. .. .. நாறும் அம்பெறி வேள்வேவ வேமுனி

.. .. தூய வெண்பொடி ஆர்மேனி யாயொரு .. துகிலேபோல்

.. தோல ணிந்திடு மாதேவ காவிரி

.. .. .. ஆறும் வண்டறை ஓவாத பூமலி

.. .. சோலை யுந்திகழ் சீராரை யாறுறை .. பெருமானே.


பதம் பிரித்து:

மாடு, இளங்கொடி ஆர் மாது, பேர் புகழ்,

நாளும் நெஞ்சினிலே ஆசை ஆகிட,

மாயை என்று அறியாதே இராவொடு பகல் வேளை

வாடி, இங்கு இடர் தீராது, தீவினை

மூடி, நொந்து உழலாதே, சதா உனை

"வாழ்க" என்றிடுவேன் ஆகவே இனிது அருளாயே;


நேடி உம்பரின்மேல் ஓடு நான்முகன்,

நீள்-நிலம் குடை மா-மாயனார் தொழ,

நேர் இல் அஞ்சுடர் ஆனாய்; நிலாவொடு முடிமீது

நீர் இருந்திடவே சூடினாய்; மறை

ஆகமம் பகர் நாவா; பராபர;

நீடும் அன்பொடு நாள்தோறும் ஏர் மலி மலர் தூவிப்


பாடி, நின் பதமே பணி மாணியை

ஓடி வந்தடை கார்-மேதியான் உயிர்

பாற அன்று உதை காலா; அரா அணி திருமார்பா;

பாரிடம் பல சூழ் கானில் ஓர் நடம்

ஆடிடும் கழல் ஆர் பாத; தீ மலி

பாணம் ஒன்றொடு மேவார்தம் மூவெயில் அடுவோனே;


தோடு இலங்கிய காதா; அவா எழ

நாறும் அம்பு எறி வேள் வேவவே முனி

தூய; வெண்-பொடி ஆர் மேனியாய்; ஒரு துகிலேபோல்

தோல் அணிந்திடும் மாதேவ; காவிரி

ஆறும், வண்டு-அறை ஓவாத பூ மலி

சோலையும் திகழ் சீர் ஆர் ஐயாறு உறை பெருமானே.


மாடு, ளங்கொடி ர் மாது, பேர் புகழ், நாளும் நெஞ்சினிலேசை கிட - பொருள், இளம் கொடி போன்ற பெண்கள், பேர் புகழ், என்று தினமும் மனத்தில் பல ஆசைகள் பெருக; (மாடு - செல்வம்); (ஆர்தல்- ஒத்தல்);

மாயை என்று அறியாதேராவொடு பகல் வேளை வாடி, இங்கு இடர் தீராது, தீவினை மூடி, நொந்துழலாதே - இது மாயை என்று அறியாமல் இரவும் பகலும் வாடி, இங்குத் தீராத துன்பம் அடைந்து, தீவினையால் மூடப்பெற்று, வருந்தி உழலாமல்;

சதானை "வாழ்க" ன்றிடுவேன் ஆகவேனிது அருளாயே - எப்பொழுதும் உன்னை "வாழ்க" என்று துதிக்கும் குணம் உடையவன் என்று நான் ஆகும்படி இன்னருள் செய்வாயாக;


நேடி உம்பரின்மேல் ஓடு நான்முகன், நீள்-நிம் குடை மா-மாயனார் தொழ, நேர் இல் அம் சுடர் ஆனாய் - (அடிமுடியைத்) தேடி ஆகாயத்தில் மேலே சென்ற பிரமனும், பெரிய நிலத்தைக் குடைந்து சென்ற திருமாலும் தொழும்படி, ஒப்பற்ற அழகிய ஜோதியாய் நின்றவனே; (நேடுதல் - தேடுதல்); (உம்பர் - ஆகாயம்); (நீணிலம் - நீள் நிலம் - நீண்டவுலகு - பூமி); (மாயன் - திருமால்); ( நேர் - நிகர்; ஒப்பு); (அம் - அழகு); (ஆனாய் - ஆனவனே);

நிலாவொடு முடிமீது நீர் இருந்திடவே சூடினாய் - திருமுடிமேல் நிலைத்திருக்கும்படி சந்திரனையும் கங்கையையும் அணிந்தவனே;

மறை ஆகமம் பகர் நாவா - வேதங்களையும் ஆகமங்களையும் ஓதியவனே; (பகர்தல் - சொல்லுதல்);

பராபர - பாரபரனே - பரம்பொருளே;

நீடும் அன்பொடு நாள்தோறும் ஏர் மலி மலர் தூவிப் பாடி - மிகுந்த பக்தியோடு தினமும் அழகு மிக்க மலர்களத் தூவித் துதிகள் பாடி; (நீடுதல் - நீள்தல்); (ஏர் - அழகு);

நின் பதமே பணி மாணியை ஓடி வந்தடை கார்-மேதியான் உயிர் பாற அன்றுதை காலா - உன் திருவடியையே வணங்கிய மார்க்கண்டேயரைக் கொல்ல விரைந்துவந்த கரிய எருமைவாகனம் உடைய காலன் இறக்கும்படி அன்று அவனை உதைத்த காலனே; (மாணி - இங்கே மார்க்கண்டேயர்); (கார் - கருமை); (மேதி - எருமை); (பாறுதல் - அழிதல்);

அராணி திருமார்பா - பாம்பை மார்பில் அணிந்தவனே;

பாரிடம் பல சூழ் கானில் ஓர் நடம் ஆடிடும் கழல் ஆர் பாத - பல பூதங்கள் சூழும் சுடுகாட்டில் ஒப்பற்ற கூத்து ஆடும் கழல் அணிந்த திருப்பாதனே; (பாரிடம் - பூதம்); (கான் - இங்கே சுடுகாடு);

தீ மலி பாணம் ஒன்றொடு மேவார்தம் மூவெயில் அடுவோனே - தீ மிகுந்த ஒரு கணையால் பகைத்த அசுரர்களது முப்புரங்களை எரித்தவனே; (மேவார் - பகைவர்); (ஏயில் - கோட்டை); (அடுதல் - அழித்தல்; எரித்தல்);


தோடு இலங்கிய காதா - ஒரு காதில் தோடு அணிந்தவனே; (அர்த்தநாரீஸ்வரன்);

வா நாறும் அம்பு எறி வேள் வேவவே முனி தூய - ஆசையைத் தூண்டுவதற்காக மணம் கமழும் கணையை ஏவிய மன்மதன் வெந்து சாம்பலாகும்படி அவனைக் கோபித்த தூயனே; (நாறுதல் - மணம் கமழ்தல்); (வேள் - மன்மதன்); (முனிதல் - கோபித்தல்);

வெண்-பொடி ஆர் மேனியாய் - திருநீற்றை மேனியில் பூசியவனே;

ரு துகிலேபோல் தோல் அணிந்திடும் மாதேவ - சிறந்த வஸ்திரம்போல் (புலித்)தோலை அணிந்த மகாதேவனே;

காவிரி ஆறும், வண்டு-றை ஓவாத பூ மலி-சோலையும் திகழ் சீர் ஆர் ஐயாறுறை பெருமானே - காவிரிநதியும், வண்டுகள் செய்யும் ஒலி எப்பொழுதும் இருக்கும் பூக்கள் நிறைந்த சோலையும் விளங்கும் அழகிய திருவையாற்றில் எழுந்தருளிய பெருமானே; (சிறை - சிறகு); (அறை - ஓசை); (சம்பந்தர் தேவாரம் - 1.80.40 - "சிறைவண் டறையோவாச் சிற்றம் பலமேய"); (சீர் - அழகு; புகழ்; பெருமை);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------