Tuesday, December 14, 2021

06.02.120 – பொது - தீனருக்களியாது - (வண்ணம்)

06.02.120 – பொது - தீனருக்களியாது - (வண்ணம்)

2009-12-17

6.2.120) தீனருக்களியாது - பொது

-------------------------

(வண்ணவிருத்தம்;

தான தத்தன தான தத்தன

தான தத்தன தான தத்தன

தான தத்தன தான தத்தன .. தந்ததான )


(ஏது புத்திஐ யாஎ னக்கினி - திருப்புகழ் - திருத்தணிகை)


தீன ருக்களி யாது நற்றவ

.. .. சீல ருக்களி யாது பற்றொடு

.. .. தேடி வைக்கிற மாடும் எத்துணை .. நெஞ்ச மேமா

.. சேனை சுற்றிட நாடு பற்பல

.. .. ஆள லுற்றவர் காலன் உய்த்திடு

.. .. சேவ கர்த்தடு காவ லற்றவர் .. வென்றி லாரே


ஊனை விட்டுயிர் ஓட லுற்றதும்

.. .. ஓவெ னக்குடி ஓல மிட்டழு

.. .. தூரி னப்புறம் ஈமம் இட்டிட .. வெந்த நீறே

.. ஓவும் அத்தினம் ஆர்நி னைத்திடு

.. .. நாளும் மட்டலர் தூவி நற்றமிழ்

.. .. ஓதில் இத்தரை மீதும் நிச்சயம் .. இன்பம் ஆமே


வான வர்க்கமு தாக அப்பெரு

.. .. வாரி கக்கிய கார்வி டத்தினை

.. .. மாமி டற்றினி லேம றைத்தருள் .. உம்பர் நாதன்

.. மாழை மைக்கணி கோம ளக்கொடி

.. .. மாது மைக்கொரு கூறு வைத்தவன்

.. .. வார ணத்துரி மார்பி னிற்புனை .. கின்ற வீரன்


ஞான மெய்ப்பொருள் வாளி உய்த்திடு

.. .. வேள்த னைச்சுடும் ஓர்நு தற்கணன்

.. .. நார ணற்கலர் மேல னுக்கரி .. தென்ற சோதி

.. நாமம் நித்தலும் நாவு ரைத்தவர்

.. .. நேயன் அற்புத சேம வைப்பவன்

.. .. நாகம் நற்புனல் ஏறு பொற்சடை .. எம்பி ரானே.


பதம் பிரித்து:

தீனருக்கு அளியாது, நற்றவ

.. .. சீலருக்கு அளியாது, பற்றொடு

.. .. தேடி வைக்கிற மாடும் எத்துணை நெஞ்சமே? மா

.. சேனை சுற்றிட நாடு பற்பல

.. .. ஆளலுற்றவர் காலன் உய்த்திடு

.. .. சேவகர்த் தடு காவல் அற்றவர்; வென்றிலாரே;


ஊனை விட்டு உயிர் ஓடலுற்றதும்

.. .. ஓ எனக் குடி ஓலமிட்டு அழுது

.. .. ஊரின் அப்புறம் ஈமம் இட்டிட வெந்த நீறே;

.. ஓவும் அத்தினம் ஆர்? நினைத்திடு;

.. .. நாளும் மட்டு-அலர் தூவி நற்றமிழ்

.. .. ஓதில், இத்தரை மீதும் நிச்சயம் இன்பம் ஆமே;


வானவர்க்கு அமுது ஆக, அப்-பெரு

.. .. வாரி கக்கிய கார்-விடத்தினை

.. .. மா மிடற்றினிலே மறைத்தருள் உம்பர் நாதன்;

.. மாழை மைக்-கணி, கோமளக்-கொடி,

.. .. மாது-உமைக்கு ஒரு கூறு வைத்தவன்;

.. .. வாரணத்து உரி மார்பினிற் புனைகின்ற வீரன்;


ஞான மெய்ப்பொருள்; வாளி உய்த்திடு

.. .. வேள்தனைச் சுடும் ஓர் நுதற்கணன்;

.. .. நாரணற்கு அலர் மேலனுக்கு அரிது என்ற சோதி;

.. நாமம் நித்தலும் நா உரைத்தவர்

.. .. நேயன், அற்புத சேம வைப்பு-அவன்;

.. .. நாகம் நற்புனல் ஏறு பொற்சடை எம்பிரானே.


சொற்பொருள்:

தீனர் - வறியவர்;

அளியாது - 1) அன்பு இல்லாமல்; (அளிதல்) 2) கொடாமல்; (அளித்தல்);

மாடு - செல்வம்; பொருள்;

எத்துணை - எவ்வளவு; எக்-காப்பு; (துணை - அளவு; காப்பு) ;

குடி - குடும்பம்; வீடு;

ஊரின் அப்புறம் - ஊரின் வெளியே;

ஓவுதல் - சாதல்;

வாரி - கடல்;

கார் விடம் - கரிய விஷம் - ஆலகாலம்;

மா மிடறு - அழகிய கழுத்து;

மாழை - மாவடு;

மை - கண்ணுக்கு இடும் அஞ்சனம்;

கோமளம் - மென்மை;

வாரணம் - யானை;

உரி - தோல்;

வாளி - அம்பு;

வேள் - மன்மதன்;

அலர் மேலன் - தாமரைமேல் உறையும் பிரமன்;

சேம வைப்பு - சேமநிதி; வைப்புநிதி;


தீனருக்கு அளியாது, நற்றவ சீலருக்கு அளியாது, பற்றொடு தேடி வைக்கிற மாடும் த்துணை நெஞ்சமே? - நெஞ்சே! வறியோர்க்கும் தவசிகளுக்கும் கொடுத்து மகிழாமல், ஆசையாய்த் தேடி வைக்கின்ற பொருள் எல்லாம் எது வரை? துணையாக வருமா?


மா சேனை சுற்றிட நாடு பற்பல ஆளலுற்றவர் காலன் உய்த்திடு சேவகர்த் தடு காவல் அற்றவர்; வென்றிலாரே - பெரிய படைகள் சூழப் பல நாடுகளை ஆண்ட அரசர்களும் எமதூதர்களைத் தடுக்கின்ற காவல் இல்லாதவர்கள்; அத்தூதர்களை அவர் எவரும் வென்றது இல்லை;

("சேவகர்த் தடு காவல் அற்றவர்" - இலக்கணக் குறிப்பு : இரண்டாம் வேற்றுமைத்தொகையில் உயர்திணையில் பொருள் தெளிவு கருதி வல்லொற்று மிகும்; "ஒன்னலர்ச் செகுத்தான்" = ஒன்னலரைச் செகுத்தான் என்பது பொருள்.)


ஊனை விட்டுயிர் ஓடலுற்றதும் னக் குடி ஓலமிட்டு அழுது ரின் அப்புறம் ஈமம் இட்டிட வெந்த நீறே - உடம்பிலிருந்து உயிர் பிரிந்தபின், "" என்று குடும்பத்தினர் ஒப்பாரிவைத்து அழுது, பிறகு ஊரின் புறத்தே உள்ள சுடுகாட்டில் எரியில் இட்டபின் சுட்ட சாம்பலே;

ஓவும் அத்தினம் ஆர்? - உடல் அழியும் அந்த நாளில் யார் துணை?

நினைத்திடு - எண்ணு;

நாளும் மட்டு-லர் தூவி நற்றமிழ் தில், இத்தரை மீதும் நிச்சயம் இன்பம் ஆமே - தினமும் வாசமலர் தூவி நல்ல தமிழ்ப்பாமாலைகளைப் பாடி வழிபட்டால், (மறுமை இன்பம் மட்டுமல்லாமல்) இம்மை இன்பங்களும் உறுதியே;


வானவர்க்கு அமுது ஆ, அப்-பெரு வாரி கக்கிய கார்-விடத்தினை மா மிடற்றினிலே மறைத்தருள் உம்பர் நாதன் - தேவர்களுக்கு அமுதம் கிட்டுமாறு, அந்தப் பெரிய பாற்கடல் உமிழ்ந்த கரிய விடத்தை அழகிய கண்டத்தில் ஒளித்தருளிய தேவதேவன்;

மாழை மைக்-கணி, கோமளக்-கொடி, மாது-மைக்கு ஒரு கூறு வைத்தவன் - மாவடு ஒத்த, மை அணிந்த கண்களை உடையவளும், மென்மையான கொடி போன்றவளுமான அழகிய உமைக்கு ஒரு பாகத்தை வைத்தவன்;

வாரணத்துரி மார்பினிற் புனைகின்ற வீரன் - யானைத்தோலை மார்பில் போர்த்த வீரன்;


ஞான மெய்ப்பொருள் - ஞானமே வடிவான மெய்ப்பொருள்;

வாளி உய்த்திடு வேள்தனைச் சுடும் ஓர் நுதற்கணன் - கணை தொடுத்த மன்மதனைச் சுட்ட ஒப்பற்ற நெற்றிக்கண்ணன்;

நாரணற்கு அலர் மேலனுக்கு அரிது என்ற சோதி - நாராயனனுக்கும் பூமேல் இருக்கும் பிரமனுக்கும் காண அரிது என்று உயர்ந்த சோதி;

நாமம் நித்தலும் நாரைத்தவர் நேயன், அற்புத சேம வைப்பு-வன் - திருநாமத்தைத் தினமும் நாவால் சொல்லும் பக்தர்களுக்கு அன்பன்; அவர்களுக்கு அற்புதமான சேமநிதி ஆனவன்;

நாகம் நற்புனல் ஏறு பொற்சடை எம்பிரானே - பாம்பையும் நல்ல கங்கையையும் பொற்சடையில் சூடிய எம்பெருமான்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment