Thursday, December 9, 2021

05.28 – வலிவலம்

05.28 – வலிவலம்

2015-03-26

வலிவலம் (திருவலிவலம்)

------------------

(அறுசீர் விருத்தம் - 'விளம் மா தேமா' என்ற அரையடி வாய்பாடு)

(திருநேரிசை அமைப்பு) (அப்பர் தேவாரம் - 4.62.1 - "வேதியா வேத கீதா")


1)

சூழைவர் வஞ்சம் செய்யத் தொடர்ந்திடர் உற்று வாடும்

ஏழையேன் தனக்கி ரங்கி இன்பமார் வாழ்வு நல்காய்

தாழவிர் சடையின் மீது தண்மதி ஏற்று கந்தாய்

மாழையொண் கண்ணி பங்கா வலிவலம் உடைய கோவே.


* மாழையொண்கண்ணி - திருவலிவலத்து இறைவி திருநாமம்.


சூழ் ஐவர் வஞ்சம் செய்யத் தொடர்ந்து இடர் உற்று வாடும் - சுற்றியுள்ள ஐம்புலன்களின் தாக்குதலால் தொடர்ந்து துன்பமே அடைந்து வாடுகின்ற;

ஏழையேன் தனக்கு இரங்கி இன்பம் ஆர் வாழ்வு நல்காய் - அடியேனுக்கு இரங்கி இன்பம் மிக்க வாழ்வை அருள்வாயாக;

தாழ் அவிர் சடையின்மீது தண்மதி ஏற்று உகந்தாய் - தாழ்கின்றதும் ஒளியுடையதுமான சடையின்மேல் குளிர்ந்த சந்திரனை அணிந்து மகிழ்ந்தவனே; (அவிர்தல் - பிரகாசித்தல்);

மாழையொண் கண்ணி பங்கா - மாவடுப் போன்ற, அழகிய, ஒளியுடை கண்களை உடைய உமையை ஒரு பங்கில் உடையவனே; (மாழை - அழகு, இளமை; மாவடு); (சம்பந்தர் தேவாரம் - 1.136.6 - "மாழையொண் கண்மடவா ளையொர் பாகம கிழ்ந்தவர்"); (திருவாசகம் - அடைக்கலப்பத்து - 8.24.8 - "மாவடு வகிரன்ன கண்ணிபங்கா")

வலிவலம் உடைய கோவே - திருவலிவலத்தில் உறைகின்ற தலைவனே;


2)

புயலென ஆசை வீசப் புரிவினை சூழ்ந்து தாக்க

அயர்வுறு வேற்கி ரங்கி அஞ்சலென் றேன்று கொள்ளாய்

கயலன கண்ணி பங்கா கதிர்மதி சூடும் எந்தாய்

வயலிடை வாளை பாயும் வலிவலம் உடைய கோவே.


புயலென ஆசை வீசப் புரிவினை சூழ்ந்து தாக்க - ஆசைகள் புயல் போல வீசப் பழவினைகள் சுற்றித் தாக்க; (புரிவினை - செய்த வினைகள்);

அயர்வுறுவேற்கு இரங்கி ஏன்றுகொள்ளாய் - அதனால் தளர்ந்த எனக்கு இரங்கி என்னைக் காத்தருள்வாயாக; (அயர்வுறுவேற்கு - அயர்வுறுவேன்+கு); (அயர்வுறுதல் - தளர்தல்; சோர்தல்); (ஏன்றுகொள்ளுதல் - ஏற்றுக்கொள்ளுதல்; தாங்குதல்);

கயல் அன கண்ணி பங்கா - கயல்மீன் போன்ற கண்ணை உடைய உமையை ஒரு பங்கில் உடையவனே;

கதிர்மதி சூடும் எந்தாய் - கதிர்களை உடைய சந்திரனைச் சூடிய எம் தந்தையே;

வயலிடை வாளை பாயும் வலிவலம் உடைய கோவே வாளை - வாளைமீன்கள் பாய்கின்ற வயல்கள் சூழ்ந்த திருவலிவலத்தில் எழுந்தருளிய எம் தலைவனே;


3)

கலிகடல் போலச் சூழ்ந்த கடுவினை தன்னில் ஆழ்ந்து

மெலியடி யேற்கி ரங்காய் வெண்டலை ஒன்றை ஏந்திப்

பலிதிரி கின்ற பண்பா பரவுவார்க் கென்றும் அன்பா

மலிபுனல் வாவி சூழ்ந்த வலிவலம் உடைய கோவே.


கலிகடல் - ஒலிக்கின்ற கடல்; (கலித்தல் - ஒலித்தல்);

மெலி அடியேற்கு - மெலிகின்ற அடியேனுக்கு; (மெலிதல் - வருந்துதல்);

பலி - பிச்சை;

பரவுதல் - துதித்தல்;

வாவி - குளம்; நீர்நிலை;


4)

பணமனை பதவி என்ற படுகடல் தன்னில் மூழ்கித்

திணறுகின் றேற்கி ரங்காய் திகழ்மதி சென்னி வைத்தாய்

பிணமெரி காட்டில் அல்லிற் பெருநடம் ஆடும் நாதா

மணமலி சோலை சூழ்ந்த வலிவலம் உடைய கோவே.


பணம் மனை பதவி என்ற படுகடல் தன்னில் மூழ்கித் திணறுகின்றேற்கு இரங்காய் - பொருள், குடும்பம், பதவி என்ற பெரிய மாயக்கடலில் மூழ்கித் திணறுகின்ற எனக்கு இரங்கி அருள்வாயாக;

(படுகடல் - கொடிய பெரிய கடல்; ஒலிக்கின்ற கடல்); (படு - 1. பெரிய. 2. கொடிய); (படுதல் - ஒலித்தல்); (சுந்தரர் தேவாரம் - 7.67.7 - "பந்தித்தவ் வல்வினைப் பற்றறப் பிறவிப் படுக டற்பரப் புத்தவிர்ப் பானைச்");

திகழ்மதி சென்னி வைத்தாய் - ஒளிவீசும் சந்திரனைத் திருமுடிமேல் அணிந்தவனே;

பிணம் எரி காட்டில் அல்லிற் பெருநடம் ஆடும் நாதா - சுடுகாட்டில் இரவில் திருக்கூத்துச் செய்யும் நாதனே; (அல் - இருள்);

மணம் மலி சோலை சூழ்ந்த - வாசம் நிறைந்த சோலைகள் சூழ்ந்த;

வலிவலம் உடைய கோவே - திருவலிவலத்தில் எழுந்தருளிய எம் தலைவனே;


5)

மண்டிவல் வினைகள் வந்தென் மதியினை மறைக்கு முன்னே

வண்டமிழ் பாடி உன்னை வாழ்த்திவ ணங்க நல்காய்

பண்டரு நஞ்சை உண்ட பரமனே பாவை பங்கா

வண்டறை சோலை சூழ்ந்த வலிவலம் உடைய கோவே.


மண்டுதல் - நெருங்குதல்; மிகுதல்;

வண்டமிழ் - வண் தமிழ் - தேவாரம், திருவாசகம்;

பண்டு - முற்காலத்தில்;

வண்டு அறை சோலை - வண்டுகள் ரீங்காரம் செய்யும் பொழில்;


(சுந்தரர் தேவாரம் - 7.83.1 - "அந்தியும் நண்பகலும் அஞ்சுப தம்சொல்லி முந்தி எழும்பழைய வல்வினை மூடாமுன்");


6)

தீவினை யான தீரத் தினமுமுன் நாமம் ஓதிப்

பாவினைப் பாடிப் பாதம் பணிந்திடும் எண்ணம் நல்காய்

தேவியைப் பாகம் வைத்தாய் சேவினைக் கொடியில் வைத்தாய்

வாவியில் மாதர் ஆடும் வலிவலம் உடைய கோவே.


பாவினை - பாடல்களை;

சே - எருது;

வாவி - குளம்; நீர்நிலை;

ஆடுதல் - நீராடுதல்; குளித்தல்;


7)

மதனனை எரித்த கண்ணா வல்வினை மாய உன்றன்

பதமலர் பரவி நாளும் பணிந்திடும் எண்ணம் நல்காய்

மதுகரம் நாடு கொன்றை வளர்மதி சூடும் எந்தாய்

மதகரி உரிவை போர்த்தாய் வலிவலம் உடைய கோவே.


மதனன் - மன்மதன்;

மதுகரம் - தேனீ; வண்டு;

மதகரி உரிவை - மதயானையின் தோல்;


8)

மானமர் கையாய் வெற்பை மதியிலா திடப்பேன் என்று

போனவன் முடிகள் பத்தும் பொன்றிட விரலை இட்டாய்

தேனமர் கொன்றை யோடு திங்களை உச்சி வைத்தாய்

வானுயர் மாடக் கோயில் வலிவலம் உடைய கோவே.


மானமர் கையாய் - மானை ஏந்தியவனே;

வெற்பை மதி இலாது இடப்பேன் என்று போனவன் - அறிவின்றிக் கயிலைமலையைப் பெயர்ப்பேன் என்று சென்ற இராவணனது;

முடிகள் பத்தும் பொன்றிட விரலை இட்டாய் - பத்துத் தலைகளும் அழியும்படி திருப்பாத விரலை ஊன்றியவனே; (பொன்றுதல் - அழிதல்);

தேன் அமர் கொன்றையோடு திங்களை உச்சி வைத்தாய் - வண்டுகள் விரும்பும் தேன் திகழும் கொன்றைமலரையும் சந்திரனையும் தலைமேல் அணிந்தவனே; (தேன் - மது; வாசனை; வண்டு); (அமர்தல் - இருத்தல்; விரும்புதல்)

வானுயர் மாடக் கோயில் வலிவலம் உடைய கோவே - வானில் ஓங்குகின்ற மாடக்கோயிலான திருவலிவலத்தில் எழுந்தருளிய எம் தலைவனே;


9)

பூமனும் அயனும் மாலும் போற்றிட நின்ற சோதீ

காமனைக் காய்ந்த நெற்றிக் கண்ணனே போற்றி நின்ற

தூமனத் தொண்டர் தம்மைத் தொடர்ந்தவன் கூற்று தைத்தாய்

மாமறை நாலும் ஓது வலிவலம் உடைய கோவே.


பூமனும் அயனும் மாலும் போற்றிட நின்ற சோதீ - தாமரைப்பூவில் உறையும் பிரமனும் திருமாலும் வணங்கும்படி ஓங்கிநின்ற சோதியே; (பூமனும் = பூ மன்னும்; இடைக்குறை விகாரம்); (சம்பந்தர் தேவாரம் - 3.21.9 - "பூமனுந் திசைமுகன் றானும் பொற்பமர் வாமனன் அறிகிலா வண்ண மோங்கெரி");

காமனைக் காய்ந்த நெற்றிக் கண்ணனே - மன்மதனை எரித்த முக்கண்ணனே;

போற்றி நின்ற தூமனத் தொண்டர் தம்மைத் தொடர்ந்த வன் கூற்று உதைத்தாய் - தூய மனத்தோடு வழிபட்ட மார்க்கண்டேயரைக் கொல்ல நெருங்கிய கொடிய கூற்றுவனை உதைத்தவனே; (வன் கூற்று - கொடிய நமன்);

மாமறை நாலும் ஓது - நால்வேதங்களையும் பாடியருளிய;

வலிவலம் உடைய கோவே - திருவலிவலத்தில் எழுந்தருளிய எம் தலைவனே;


10)

பொய்யினை நீங்க மாட்டாப் புன்சம யத்தோர்க் கில்லாய்

மெய்யினில் நீற ணிந்து வேதியா விடையா என்று

கையினைக் கூப்பி வாழ்த்தும் காதலர்க் கென்றும் உள்ளாய்

மையமர் சோலை சூழ்ந்த வலிவலம் உடைய கோவே.


புன்சமயம் - இழிந்த சமயங்கள்;

இல்லாய் - இல்லாதவனே; அருள் இல்லாதவனே;

காதலர் - அன்பர்; பக்தர்;

மையமர் சோலை - இருள் அடர்ந்த பொழில்;


11)

பூத்தொடுத் திருகை கூப்பிப் பொன்னடி போற்றி நின்று

தீத்திரள் போலும் மேனிச் சிவபெரு மானே கங்கை

ஆர்த்திடு வேணி மேலோர் அரவமும் அணிந்தாய் என்று

வாழ்த்திடு வார்கட் கீயும் வலிவலம் உடைய கோவே.


பூத் தொடுத்து இருகை கூப்பிப் பொன்னடி போற்றி நின்று - பூக்களைத் தொடுத்து மாலைகள் அமைத்து அணிவித்து, இருகைகளைக் கூப்பி, அழகிய பொன் போன்ற திருவடிகளை வணங்கி;

தீத்திரள் போலும் மேனிச் சிவபெருமானே - தீப் போன்ற செம்மேனியை உடைய சிவபெருமானே;

கங்கை ஆர்த்திடு வேணிமேல் ஓர் அரவமும் அணிந்தாய் என்று - கங்கைநதி ஒலிக்கின்ற சடையின்மேல் ஒரு பாம்பையும் அணிந்தவனே என்று போற்றி; (ஆர்த்தல் - ஒலித்தல்); (வேணி - சடை); (அரவம் - பாம்பு );

வாழ்த்திடுவார்கட்கு ஈயும் - வாழ்த்துவார்களுக்கு அளிப்பான்; (செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று);

வலிவலம் உடைய கோவே - திருவலிவலத்தில் எழுந்தருளிய எம் தலைவனே;


வி. சுப்பிரமணியன்

-------------- --------------


No comments:

Post a Comment