Tuesday, December 7, 2021

05.27 – வலிவலம்

05.27 – வலிவலம்

2015-03-13

வலிவலம் (திருவலிவலம்)

------------------

(வஞ்சிவிருத்தம் - "தானன தானன தானதனா" என்ற சந்தம்)

(சம்பந்தர் தேவாரம் - 1.112.1 - "இன்குரல் இசைகெழும் யாழ்முரலத்")


1)

கண்புனை நெற்றியன் காமனைமுன்

வெண்பொடி ஆக்கிட விழிசெய்தவன்

தண்புனல் தாங்கிய சடையனிடம்

வண்வயல் சூழ்திரு வலிவலமே.


கண் புனை நெற்றியன் - நெற்றிக்கண்ணன்;

காமனை முன் வெண்பொடி ஆக்கிட விழிசெய்தவன் - முன்பு மன்மதனைச் சாம்பலாக்கிட நெற்றிக்கண்ணால் பார்த்தவன்; (சம்பந்தர் தேவாரம் 2.85.8 - "வேள்பட விழிசெய்தன்று" - விழிசெய்து - நெற்றிவிழி திறந்து எரித்து);

தண் புனல் தாங்கிய சடையன் இடம் - குளிர்ந்த கங்கையைச் சடையில் தாங்கிய பெருமான் உறையும் தலம்;

வண்வயல் சூழ் திரு வலிவலமே - வளமையான வயல் சூழ்ந்த திருவலிவலம்;


(இலக்கணக் குறிப்பு - "விழிசெய்தவன்" - தனதனனா என்ற சந்தமாகக் கொள்ளவேண்டும். சந்தப்பாடல்களில் இடையின ஒற்றுகள் சில இடங்களில் அலகிடப்படா; சம்பந்தர் தேவாரம் - 1.113.1 - இப்பாடலில் "திருவல்லமே" என்ற சொற்றொடரைக் காண்க);


2)

பேர்பல உடையவன் பெற்றமேறி

ஊர்பவன் நான்மறை உரைகுரவன்

கார்மலி நஞ்சணி கண்டனிடம்

வார்பொழில் சூழ்திரு வலிவலமே.


பேர் பல உடையவன் - எண்ணற்ற திருநாமங்களை உடையவன்;

பெற்றம் ஏறி ஊர்பவன் - இடபவாகனன்; (பெற்றம் - எருது); (அப்பர் தேவாரம் - 5.69.7 - "கருவிலிக் கொல்லே றூர்பவன் கொட்டிட்டை சேர்மினே")

நான்மறை உரை குரவன் - நால்வேதப்பொருளை விரித்து உரைத்த குரு - தட்சிணாமூர்த்தி;

கார்மலி நஞ்சு அணி கண்டன் இடம் - கருமை நிறம் மிகுந்த விடத்தைக் கண்டத்தில் அணிந்தவன் உறையும் தலம்;

வார் பொழில் சூழ் திரு வலிவலமே - நீண்ட சோலை சூழ்ந்த திருவலிவலம் ஆகும்;


3)

தேனமர் மலரணி செஞ்சடையன்

வானவர் வேண்டவும் வல்விடத்தைப்

போனகம் செய்தருள் புண்ணியனூர்

வானுயர் பொழிலணி வலிவலமே.


தேன் அமர் மலர் - வண்டுகள் விரும்பும் மலர்; தேன் திகழும் மலர்;

போனகம் செய்தல் - உண்ணுதல்; (போனகம் - உணவு);


4)

வெஞ்சினக் கூற்றுயிர் வீட்டியவன்

செஞ்சடை மேலிளம் திங்களினான்

குஞ்சரம் உரிசெய்த குழகனிடம்

மஞ்சடை பொழிலணி வலிவலமே.


வெஞ்சினக் கூற்றுயிர் வீட்டியவன் - கடும் கோபமுடைய காலனது உயிரைப் போக்கியவன்; (சம்பந்தர் தேவாரம் - 2.75.2 - "வலிய காலனுயிர் வீட்டினான்");

செஞ்சடைமேல் இளம் திங்களினான் - சிவந்த சடையின்மீது பிறைச்சந்திரனைச் சூடியவன்;

குஞ்சரம் உரிசெய்த குழகன் இடம் - யானையை உரித்த இளைஞன் உறையும் தலம்;

(குஞ்சரம் - யானை); (குழகன் - இளைஞன்; அழகன்);

மஞ்சு அடை பொழில் அணி வலிவலமே - மேகங்கள் வந்து அடைகின்ற சோலை திகழும் திருவலிவலம் ஆகும்; (மஞ்சு - மேகம்);


5)

அளிமனம் உடையவர்க் கருளுடையான்

இளமயில் அன்னவள் இடமுடையான்

துளிமணி மிடறுடைத் தூயவனூர்

வளவயல் சூழ்திரு வலிவலமே.


அளிமனம் - அளிகின்ற மனம் / அளிக்கின்ற மனம்; (அளிதல் - குழைதல்; அளித்தல் - கொடுத்தல்);

(அப்பர் தேவாரம் - 4.38.10 - "இரப்பவர்க் கீய வைத்தார் ஈபவர்க் கருளும் வைத்தார்");

துளி - விடம்;


6)

கணமுழ வார்த்திடக் கடுவிருளில்

பிணமெரி காட்டிடைப் பெருநடத்தான்

பணமுடைப் பாம்பணி பரமனிடம்

மணமலி பொழிலணி வலிவலமே.


கணம் முழவு ஆர்த்திட - பூதகணங்கள் முழவுகளை ஒலித்திட;

கடுவிருளில் பிணம் எரி காட்டிடைப் பெருநடத்தான் - செறிந்த இருளில் சுடுகாட்டில் பெரும் கூத்து ஆடுபவன்; (கடுமை - மிகுதி); (சுந்தரர் தேவாரம் - 7.29.3 - "பாடுவார் பசிதீர்ப்பாய் ... காடுநல் லிடமாகக் கடுவிருள் நடமாடும் வேடனே...");

பணம்உடைப் பாம்பு அணி பரமன் - படத்தை உடைய நாகப்பாம்புகளை அணிகின்ற பரமன்; (பணம் - பாம்பின் படம்);


7)

மான்மறிக் கையினன் வார்சடைமேல்

கூன்பிறை சூடிய கூத்தனிடம்

தேன்மலர் நாடிய சிறையளியார்

வான்பொழில் சூழ்திரு வலிவலமே.


மான்மறி - மான்கன்று;

கூன்பிறை - வளைந்த பிறைச்சந்திரன்;

சிறை அளி ஆர் வான்பொழில் - சிறகுகளை உடைய வண்டுகள் ஒலிக்கின்ற உயர்ந்த சோலை; (சிறை - சிறகு); (அளி - வண்டு); (வான் - பெருமை; அழகு);


8)

தலைமலி மாலையன் தானுறையும்

மலையசை தசமுகன் வாய்களெல்லாம்

அலறிட ஊன்றிய அடிகளிடம்

மலர்மலி பொழிலணி வலிவலமே.


தலைமலி மாலையன் - தலைமாலை அணிந்தவன்;

தசமுகன் - இராவணன்;

அடிகள் - கடவுள்;


9)

தாமரைக் கண்ணனும் சதுர்முகனும்

தாமறி யாவொரு தழலுருவன்

தூமறை நான்கினைச் சொன்னவனூர்

மாமதில் சூழ்திரு வலிவலமே.


தாமரைக்கண்ணன் - தாமரை மலர்போன்ற கண்களை உடைய திருமால்;

சதுர்முகன் - நான்குமுகங்களை உடைய பிரமன்;

தாம் அறியா ஒரு தழல் உருவன் - அவர்கள் அறியாத ஒப்பற்ற சோதி வடிவினன்;


10)

பிழைமலி நெஞ்சினர் பேச்சுநஞ்சு

குழையுரை பொருளெனக் கொள்ளன்மினீர்

குழையொரு காதணி கூத்தனிடம்

மழைநுழை பொழிலணி வலிவலமே.


பிழை மலி நெஞ்சினர் பேச்சு - குற்றம் மிகுந்த மனத்தை உடையவர்களது பேச்சு;

நஞ்சு குழை உரை - நஞ்சைக் குழைத்த உரை - விஷம் கலந்த வார்த்தைகள்; (குழைத்தல் - கலத்தல்);

பொருள் எனக் கொள்ளன்மினீர் - அவற்றை நீங்கள் மதிக்கவேண்டா; (கொள்ளன்மினீர் - கொள்ளல்மின் நீர் - நீங்கள் கொள்ளாதீர்கள்; அல் - எதிர்மறை ஏவல் ஒருமை விகுதி; மின் - முன்னிலை ஏவல் பன்மை விகுதி);

குழை ஒரு காது அணி கூத்தன் இடம் - ஒரு காதில் குழையை அணிந்த (உமை ஒரு பங்கனான) ஆடல்வல்லான் உறையும் தலம்;

மழை நுழை பொழில் அணி வலிவலமே - மேகங்கள் நுழையும்படி உயர்ந்த சோலைகள் சூழ்ந்த திருவலிவலம் ஆகும்; (மழை - மேகம்);


11)

அந்தமும் ஆதியும் ஆயசிவன்

சந்திரன் ஏறிய தாழ்சடையன்

முந்தெயில் மூன்றெரி முதல்வனிடம்

வந்தவர் வரமகிழ் வலிவலமே.


அந்தமும் ஆதியும் ஆய சிவன் - உலகங்களைப் படைத்துப் பின் ஒடுக்கும் சிவன்; (சம்பந்தர் தேவாரம் - 3.39.1 - "அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல்");

சந்திரன் ஏறிய தாழ்சடையன் - தாழும் சடையின்மேல் சந்திரனை அணிந்தவன்;

முந்து எயில் மூன்று எரி முதல்வன் இடம் - முன்பு முப்புரங்களை எரித்த முதல்வன் உறையும் தலம்; (முந்து - முன்னர்); (எயில் - கோட்டை);

வந்தவர் வரம் மகிழ் வலிவலமே - வந்து வழிபட்ட அடியவர்கள் வரங்கள் பெற்று மகிழ்கின்ற திருவலிவலம் ஆகும்; வந்து தரிசித்தவர்கள் மீண்டும் வந்து தரிசிக்க விரும்புகின்ற திருவலிவலம் ஆகும்; (வரமகிழ் = 1. வரம் மகிழ்; 2. வர மகிழ்);


வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்பு :

1) யாப்புக் குறிப்பு:

  • வஞ்சிவிருத்தம் - "தானன தானன தானதனா" என்ற சந்தம். ('விளம் விளம் விளங்காய்'); தானன என்பது தனதன என்றும், தானதனா என்பது தனதனனா/தானதானா என்றும் வரலாம்;

  • சந்தப்பாடல்களில் இடையின ஒற்றுகள் சில இடங்களில் அலகிடப்படா;

2) சம்பந்தர் தேவாரம் - 1.113.1 -

எரித்தவன் முப்புர மெரியின்மூழ்கத்

தரித்தவன் கங்கையைத் தாழ்சடைமேல்

விரித்தவன் வேதங்கள் வேறுவேறு

தெரித்தவ னுறைவிடந் திருவல்லமே.

-------------- --------------


No comments:

Post a Comment