Saturday, January 6, 2018

04.07 - நனிபள்ளி (புஞ்சை) - கொம்பனாள் திருமேனியில்

04.07 - நனிபள்ளி (புஞ்சை) - கொம்பனாள் திருமேனியில்

2013-08-30

நனிபள்ளி (இக்கால வழக்கில் - புஞ்சை)

----------------------------------

(சந்தக் கலித்துறை - தான தானன தானன தானன தானன)

(சம்பந்தர் தேவாரம் - 2.10.1 - “சீரி னார்மணி யும்மகில் சந்துஞ் செறிவரை")


1)

கொம்ப னாள்திரு மேனியில் கூறு விரும்பினாய்

அம்பி னாலரண் மூன்றையும் ஆரழல் கூட்டினாய்

நம்ப னேநட னேவயல் சூழ்நனி பள்ளியுள்

செம்பொ னேஎனத் தீவினை தீர்வது திண்ணமே.


கொம்பு அனாள் திரு மேனியில் கூறு விரும்பினாய் - "உமையை ஒரு பாகமாக விரும்பியவனே; (கொம்பு அனாள் - பூங்கொம்பு அன்னவள்); (விரும்பினாய் - விரும்பியவனே);

அம்பினால் அரண் மூன்றையும் ஆர் அழல் கூட்டினாய் - ஒரு கணையால் முப்புரங்களையும் தீப்புகச் செய்தவனே;

நம்பனே - விரும்பத்தக்கவனே;

நடனே - திருநடம் செய்பவனே;

வயல் சூழ் நனிபள்ளியுள் செம்பொனே எனத் - வயல் சூழ்ந்த திருநனிபள்ளியுள் எழுந்தருளிய சிறந்த பொன் போன்றவனே" என்று போற்றி வழிபட்டால்; (செம்பொன் - சிறந்த பொன்);

தீவினை தீர்வது திண்ணமே - தீவினையெல்லாம் தீர்வது நிச்சயம்;


2)

போத னேபுன லார்புரி புன்சடை யாய்குழைக்

காத னேநுதல் மேலொரு கண்ணினைக் காட்டிடும்

நாத னேநட னேவயல் சூழ்நனி பள்ளியுள்

வேத னேஎன வெவ்வினை ஆயின வீடுமே.


போதனே - ஞானவடிவினனே;

புனல் ஆர் புரி-புன்-சடையாய் - கங்கையைச் சுருண்ட செஞ்சடையில் அணிந்தவனே; (புரிதல் - முறுக்குக்கொள்ளுதல்); (புன்மை - புகர் நிறம் - tawny color);

குழைக்-காதனே - காதில் குழையை அணிந்தவனே;

நுதல்மேல் ஒரு கண்ணினைக் காட்டிடும் நாதனே - நெற்றிக்கண் உடைய தலைவனே; (நுதல் - நெற்றி);

நடனே - திருநடம் செய்பவனே;

வயல் சூழ் நனிபள்ளியுள் வேதனே என - வயல் சூழ்ந்த திருநனிபள்ளியுள் எழுந்தருளிய வேதனே; (வேதன் - வேதப்பொருள் ஆனவன்; வேதம் ஓதியவன்);

வெவ்வினை ஆயின வீடுமே - கொடிய வினை அழியும்; (வீடுதல் - கெடுதல்);


3)

புகலி யாரழு போதினில் வந்தருள் புண்ணியா

இகலி யார்எயில் மூன்றை நொடியில் எரித்திடும்

நகையி னாய்நட னேவயல் சூழ்நனி பள்ளியுள்

பகவ னேஎனப் பண்டை வினைப்பகை பாறுமே.


புகலியார் அழு போதினில் வந்து அருள் புண்ணியா - "சம்பந்தர் அழுதபொழுது வந்து அருளிய புண்ணியனே; (புகலியார் - புகலியில் அவதரித்த திருஞானசம்பந்தர்);

இகலியார் எயில் மூன்றை நொடியில் எரித்திடும் நகையினாய் - பகைவர்களது முப்புரங்களையும் ஒருநொடி அளவில் சிரித்து எரித்தவனே; (இகலியார் - பகைவர்கள்); (எயில் - கோட்டை); (நொடி - ஒருநொடிப் பொழுது); (நகை - சிரிப்பு);

நடனே - கூத்தனே;

வயல் சூழ் நனிபள்ளியுள் பகவனே எனப் பண்டை வினைப்பகை பாறுமே - வயல் சூழ்ந்த திருநனிபள்ளியுள் எழுந்தருளிய பகவானே" என்று போற்றி வழிபட்டால்;

பண்டை வினைப்பகை பாறுமே - பழவினையெல்லாம் அழியும்; (பண்டை - பழைய); (பாறுதல் - அழிதல்);


4)

புற்ற ராவொடு போழ்மதி யம்புனை கின்றவெம்

கொற்ற வாகுயில் போல்மொழி மாதொரு கூறனே

நற்ற வாநட னேவயல் சூழ்நனி பள்ளியுள்

உற்ற வாஎன உள்ள வினைத்தொடர் ஓயுமே.


புற்றராவொடு போழ்-மதியம் புனைகின்ற எம் கொற்றவா - "புற்றில் வாழும் பாம்பையும் துண்டப் பிறையையும் அணியும் எம் தலைவனே; (புற்றரா - புற்றில் வாழும் தன்மையுடைய பாம்பு); (போழ்தல் - பிளத்தல்); (கொற்றவன் - அரசன்);

குயில் போல் மொழி மாது ஒரு கூறனே - இனிய மொழியுடைய உமையை ஒரு கூறாக உடையவனே; (சம்பந்தர் தேவாரம் - 2.106.8 - "குயிலினேர்மொழிக் கொடியிடை");

நற்றவா - நல்ல தவ-வடிவினனே;

நடனே - கூத்தனே;

வயல் சூழ் நனிபள்ளியுள் உற்றவா என உள்ள வினைத்தொடர் ஓயுமே - வயல் சூழ்ந்த திருநனிபள்ளியுள் எழுந்தருளிய உறுதுணையே" என்று உள்ளத்தில் எண்ணிப் போற்றி வழிபட்டால், பழவினையெல்லாம் அழியும்; (உற்றவன் - உறுதுணையாக இருப்பவன்); (என்னுதல் - என்றுசொல்லுதல்); (உள்ள வினைத்தொடர் - இருக்கும் பழவினைகள் எல்லாம்;

உள்ளுதல் - எண்ணுதல் / தியானித்தல் என்ற பொருளிலும் கொள்ளலாம்); (ஓய்தல் - அழிதல்); (* நற்றுணையப்பர் - திருநனிபள்ளி ஈசன் திருநாமம்);


5)

முக்க ணாமுடி மேல்முளை வெண்பிறை சூடினாய்

அக்க ராஅர னேஅர வம்மரை ஆர்த்துழல்

நக்க னேநட னேவயல் சூழ்நனி பள்ளியுள்

சொக்க னேஎனத் தொல்வினை போய்ச்சுகம் எய்துமே.


முக்கணா, முடி மேல் முளை வெண்பிறை சூடினாய் - "முக்கண்ணனே, தலைமேல் வெண்பிறைச்சந்திரனை அணிந்தவனே; (சூடினாய் - சூடியவனே);

அக்கரா அரனே - அழிவற்றவனே, ஹரனே; (அக்கரன் - அக்ஷரன் - அழிவற்றவன்);

அரவம் அரை ஆர்த்து உழல் நக்கனே - இடுப்பில் ஒரு பாம்பை அரைநாணாகக் கட்டித் திரியும், திகம்பரனே; (அரவம்மரை - மகர ஒற்று விரித்தல் விகாரம்);

நடனே - கூத்தனே;

வயல் சூழ் நனிபள்ளியுள் சொக்கனே எனத் தொல்வினை போய்ச் சுகம் எய்துமே - வயல் சூழ்ந்த திருநனிபள்ளியுள் எழுந்தருளிய அழகனே" என்று போற்றி வழிபட்டால், பழவினையெல்லாம் அழிந்து இன்பம் வந்தடையும்; (சொக்கன் - பேரழகு உடையவன்);


6)

சிந்தி யாதடி யாரிடம் சென்றவன் கூற்றினைச்

சிந்து மாறுதை செய்துயிர் காத்தருள் சேவகா

நந்தி யேநட னேவயல் சூழ்நனி பள்ளியுள்

எந்தை யேஎன வல்லவர்க் கிங்கிடர் இல்லையே.


சிந்தியாது அடியாரிடம் சென்ற வன்-கூற்றினைச் சிந்துமாறு உதை-செய்து உயிர் காத்தருள் சேவகா - "சற்றும் எண்ணாமல் மார்க்கண்டேயரிடம் போன கொடிய வலிய நமனை அழியும்படி உதைத்து மார்க்கண்டேயரது உயிரைக் காத்த வீரனே; (சிந்தியாது - எண்ணிப்பாராமல்); (வன் கூற்று - கொடிய கூற்றுவன்); (சிந்துதல் - அழிதல்); (சேவகன் - வீரன்);

நந்தியே - சிவனே; (நந்தி - சிவன் திருநாமங்களுள் ஒன்று; - இன்பவடிவினன்);

நடனே - கூத்தனே;

வயல் சூழ் நனிபள்ளியுள் எந்தையே என வல்லவர்க்கு இங்கு இடர் இல்லையே - வயல் சூழ்ந்த திருநனிபள்ளியுள் எழுந்தருளிய எம் தந்தையே" என்று போற்றி வழிபடும் அன்பர்களுக்கு இடர் எதுவும் இல்லை;


7)

ஓதி னாய்மறை ஒண்டொடி வண்டமர் ஓதியாள்

பாதி யாய்படர் செஞ்சடை மேற்பணி சூடினாய்

நாதி யேநட னேவயல் சூழ்நனி பள்ளியுள்

ஆதி யேஎன வல்லவர்க் கல்லலொன் றில்லையே.


ஓதினாய் மறை - "வேதம் ஓதியவனே;

ஒண்டொடி வண்டு அமர் ஓதியாள் பாதியாய் - ஒளி வீசும் வளையல் அணிந்தவளும் வண்டுகள் விரும்பும் கூந்தலை உடையவளுமான உமையை ஒரு பாதியாக உடையவனே; (ஒண்டொடி - ஒண்தொடி - பெண்); (அமர்தல் - விரும்புதல்); (ஓதி - கூந்தல்); (சம்பந்தர் தேவாரம் 3.22.8 - "வண்டமர் ஓதி மடந்தை");

படர் செஞ்சடைமேல் பணி சூடினாய் - படரும் செஞ்சடையின்மேல் பாம்பை அணிந்தவனே; (பணி - நாகப்பாம்பு);

நாதியே - காப்பாற்றுபவனே; (நாதி - உறவினன்; காப்பாற்றுபவன்; தலைவன்); (அப்பர் தேவாரம் - 6.20.1 - "அயனோடு மாலுங் காணா நாதியை");

நடனே - கூத்தனே;

வயல் சூழ் நனிபள்ளியுள் ஆதியே என வல்லவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே - வயல் சூழ்ந்த திருநனிபள்ளியுள் எழுந்தருளிய ஆதிமூர்த்தியே" என்று போற்றி வழிபடும் அன்பர்களுக்கு ஒரு துன்பமும் இல்லை; (ஒன்று இல்லை - ஒன்றும் இல்லை; உம்மை தொக்கது); (அப்பர் தேவாரம் - 5.67.1 - "வாஞ்சியம் அடைய வல்லவர்க்கு அல்லலொன் றில்லையே");


8)

மல்லி னால்மலை பேர்த்தவன் வாயொரு பத்தழ

மெல்ல வேவிரல் ஒன்றினை வெற்பதன் மேலிடு

நல்ல னேநட னேவயல் சூழ்நனி பள்ளியுள்

வல்ல னேஎன வல்வினை ஆயின மாயுமே.


மல்லினால் மலை பேர்த்தவன் வாயொரு பத்தழ"தன் பலத்தால் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனது பத்துவய்களும் அழும்படி; (மல் - வலிமை);

மெல்லவே விரல் ஒன்றினை வெற்பு அதன்மேல் இடு நல்லனே - சிறிதளவே திருப்பாத விரல் ஒன்றை மலைமேல் ஊன்றிய நல்லவனே; (மெல்ல - மெதுவாக); (வெற்பு - மலை); (நல்லன் - நல்லவன்);

நடனே - கூத்தனே;

வயல் சூழ் நனிபள்ளியுள் வல்லனே என வல்வினை ஆயின மாயுமே - வயல் சூழ்ந்த திருநனிபள்ளியுள் எழுந்தருளிய சர்வவல்லமை உடையவனே" என்று போற்றி வழிபட்டால் வலிய வினையெல்லாம் அழியும்; (வல்லன் - வல்லவன்);


9)

பூவி னானொடு மாலடி போற்றிட ஓங்கினாய்

சேவி னாய்சிவை பங்குடை யாய்மறை செப்பிய

நாவி னாய்நட னேவயல் சூழ்நனி பள்ளியுள்

மேவி னாய்என வெவ்வினை ஆயின வீடுமே.


பூவினானொடு மால் அடி போற்றிட ஓங்கினாய் - "தாமரைமேல் உறையும் பிரமனும் திருமாலும் உன் திருவடியை வழிபடுமாறு ஜோதியாகி உயர்ந்தவனே;

சேவினாய் - இடப வாகனனே; (சே - எருது);

சிவை பங்கு உடையாய் - உமையை ஒரு பங்காக உடையவனே; (சிவை - பார்வதி);

மறை செப்பிய நாவினாய் - வேதங்களைப் பாடியருளியவனே;

நடனே - கூத்தனே;

வயல் சூழ் நனிபள்ளியுள் மேவினாய் என வெவ்வினை ஆயின வீடுமே - வயல் சூழ்ந்த திருநனிபள்ளியுள் எழுந்தருளியவனே" என்று போற்றி வழிபட்டால் கொடிய வினையெல்லாம் அழியும்;


10)

மான மேதரு நீறணி யார்மதி கேடர்கள்

ஈன மேஅவர் சொல்வழி என்றறி மின்களே

ஞான னேநட னேவயல் சூழ்நனி பள்ளியுள்

தேன னேஎனத் தீவினை தீர்வது திண்ணமே.


மானமே தரு நீறு அணியார் மதி கேடர்கள் - "உயர்வைத் தரும் திருநீற்றைப் பூசாதவர்கள் குணமற்றவர்கள்; (மானம் - பெருமை); (சம்பந்தர் தேவாரம் - 2.66.4 - "அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு");

ஈனமே அவர் சொல்வழி என்று அறிமின்களே - அவர்கள் சொல்லும் மார்க்கம் இழிவு என்று அறியுங்கள்; (ஈனம் - இழிவு); (அறிமின்கள் - அறியுங்கள்);

ஞானனே நடனே - ஞானவடிவினனே, கூத்தனே;

வயல் சூழ் நனிபள்ளியுள் தேனனே எனத் தீவினை தீர்வது திண்ணமே - வயல் சூழ்ந்த திருநனிபள்ளியுள் எழுந்தருளிய தேன் ஒத்தவனே" என்று போற்றி வழிபட்டால் பாவமெல்லாம் அழிவது உறுதி; (தேனன் - தேன் போலும் இனியன்); (அப்பர் தேவாரம் - 5.4.2 - "வானனைம் மதி சூடிய மைந்தனைத் தேனனைத்");


11)

குஞ்சி மேற்குர வத்தொடு கூவிளம் சூடினாய்

அஞ்ச லென்றம ரர்க்கருள் செய்தமி டற்றினில்

நஞ்ச னேநட னேவயல் சூழ்நனி பள்ளியுள்

மஞ்ச னேமணி யேஎன நல்லன மல்குமே.


குஞ்சிமேல் குரவத்தொடு கூவிளம் சூடினாய் - "தலைமேல் குராமலரும் வில்வமும் சூடியவனே; (குஞ்சி - ஆண்கள் தலைமயிர்; தலை); (குரவம் - குராமலர்); (கூவிளம் - வில்வம்); (5.23.9 - " குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே");

அஞ்சல் என்று அமரர்க்கு அருள் செய்த மிடற்றினில் நஞ்சனே - தேவர்களுக்கு அபயம் அளித்த நீலகண்டனே; (மிடறு - கண்டம்);

நடனே - கூத்தனே;

வயல் சூழ் நனிபள்ளியுள் மஞ்சனே மணியே என நல்லன மல்குமே - வயல் சூழ்ந்த திருநனிபள்ளியுள் எழுந்தருளிய வீரனே, மணியே" என்று போற்றி வழிபட்டால் நலம் பெருகும்; (மஞ்சன் - மைந்தன் - வீரன்; இளைஞன்); (அப்பர் தேவாரம் - 4.57.1 - "மஞ்சனே மணியும் ஆனாய்" - மஞ்சன் - மைந்தன் என்பதன் மரூஉ. போலி எனலும் ஆம்.); (மல்குதல் - பெருகுதல்; நிறைதல்);


பிற்குறிப்பு : யாப்புக் குறிப்பு :

சந்தக் கலித்துறை - தான தானன தானன தானன தானன - என்ற சந்தம்.

மா கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம் - என்ற அமைப்பு.

கட்டளை அடிகள்.

அடி ஈற்றைத் தவிர மற்ற சீர்கள் நெடிலில் முடியா. (குறில் / குறில்+ஒற்று)

அடிகளில் 2, 3, 4, 5 சீர்களிடையே வெண்டளை பயிலும்.

தானன வரும் இடத்தில் தான (மாச்சீர்) வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்.

தானன (விளச்சீர்) வரும் இடத்தில் ஒரோவழி தானான (மாங்காய்ச்சீர்) வரலாம்.


வி. சுப்பிரமணியன்

----------- --------------

04.06 - காழி (சீகாழி) - பிறையணி சடையினானை

04.06 - காழி (சீகாழி) - பிறையணி சடையினானை

2013-08-21

காழி (இக்கால வழக்கில் - சீர்காழி)

----------------------------------

(அறுசீர் ஆசிரிய விருத்தம் - விளம் மா தேமா - அரையடி வாய்பாடு). (திருநேரிசை அமைப்பு)

(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.56.1 - மாயிரு ஞால மெல்லாம்)


1)

பிறையணி சடையி னானைப் .. பெண்ணொரு பாகத் தானை

நறைமலி கொன்றை யானை .. நன்னிலம் மன்னி னானை

அறைகடல் தனிலெ ழுந்த .. அருவிடம் அமுது செய்த

கறைமிடற் றானை என்றும் .. காழியிற் காண லாமே.


பிறையணி சடையினானை - சடைமேற் சந்திரனைச் சூடியவனை;

பெண் ஒரு பாகத்தானை - உமைபங்கனை;

நறை மலி கொன்றையானை - மணம் மிக்க கொன்றையை அணிந்தவனை; (நறை - தேன்);

நன்னிலம் மன்னினானை - நன்னிலம் என்ற தலத்தில் எழுந்தருளியவனை;

அறை-கடல்தனில் எழுந்த அரு-விடம் அமுதுசெய்த கறைமிடற்றானை - ஒலிக்கின்ற கடலில் தோன்றிய கொடிய நஞ்சை உண்ட நீலகண்டனை;

என்றும் காழியில் காணல் ஆம் - அப்பெருமான் சீகாழியில் நீங்காது உறைகின்றான்; (காழி - சீகாழி - சீர்காழி); (- ஈற்றசை);


2)

நீர்மலி சடையி னானை .. நெடுங்களம் மேவி னானை

ஓர்விடை ஊர்தி யானை .. உம்பருக் கிரங்கி அன்று

தேர்மிசை நின்று மூன்று .. திரிபுரம் செற்ற தேவைக்

கார்மிடற் றானை என்றும் .. காழியிற் காண லாமே.


நீர்மலி சடையினானை - சடையில் கங்கையைத் தரித்தவனை;

நெடுங்களம் - ஒரு தலத்தின் பெயர்;

உம்பர் - தேவர்;

மூன்று திரிபுரம் - திரிந்த புரங்கள் மூன்று;

செற்ற தேவை - அழித்த கடவுளை;

கார் மிடறு - நீலகண்டம்;


3)

ஒண்ணுதல் மங்கை தன்னை .. ஒருபுறம் காட்டி னானை

எண்ணுதல் செய்யும் அன்பர் .. இருவினை நீக்கு வானைத்

தண்ணதி சூடி னானைச் .. சக்கரப் பள்ளி யானைக்

கண்ணுத லானை என்றும் .. காழியிற் காண லாமே.


ஒண்ணுதல் - ஒள் நுதல் - ஒளி பொருந்திய நெற்றி;

எண்ணுதல் - தியானித்தல்;

தண் நதி - குளிர்ந்த கங்கை;

சக்கரப்பள்ளி - ஒரு தலத்தின் பெயர்;

கண்ணுதலான் - கண் நுதலான் - நெற்றிக்கண்ணன்;


4)

சினவிடை ஊர்தி யானைச் .. சேய்ஞலூர் மேவி னானை

அனநடை உடைய மங்கைக் .. கன்பனை இன்பன் தன்னைப்

புனல்விழு சடையி னானைப் .. பொடியணி மேனி யானைக்

கனல்மழு வானை என்றும் .. காழியிற் காண லாமே.


சினவிடை ஊர்தியானை - சினக்கின்ற இடபத்தை வாகனமாக உடையவனை;

சேய்ஞலூர் - ஒரு தலத்தின் பெயர்;

அனநடை உடைய மங்கைக்கு அன்பனை - அன்னநடை உடைய உமைக்கு அன்பனை;

பொடி - திருநீறு;

கனல்மழுவான் - கனலும் மழுவும் ஏந்தியவன்; (அழல் போன்ற வெம்மையான மழுவாயுதத்தை ஏந்தியவன் என்றும் கொள்ளலாம்);


5)

மாய்ந்தவர் சேரும் காட்டில் .. மாநடம் ஆடு வானைத்

தேய்ந்தவெண் திங்கள் சூடிச் .. சிவபுரம் மேவி னானைத்

தோய்ந்தவன் பகத்தர் அஞ்சத் .. துரத்திய கூற்றைக் காலாற்

காய்ந்தவன் தன்னை என்றும் .. காழியிற் காண லாமே.


மாய்ந்தவர் சேரும் காடு - சுடுகாடு;

சிவபுரம் - ஒரு தலத்தின் பெயர்;

தோய்ந்த அன்பு அகத்தர் - அன்பு தோய்ந்த அகத்தர் - பக்தியில் தோய்ந்த உள்ளத்தை உடைய மார்க்கண்டேயர்;

அஞ்சத் துரத்திய கூற்றைக் காலால் காய்ந்தவன் தன்னை - மார்க்கண்டேயர் அஞ்சும்படி அவரைக் கொல்ல நெருங்கிய நமனைக் காலால் உதைத்தவனை; (காய்தல் - கோபித்தல்); (அப்பர் தேவாரம் - 6.33.8 - "காலனைக் காலாற் காய்ந்த கடவுள்");


6)

பாட்டினால் தன்னை நாளும் .. பரவுவார் வினையை எல்லாம்

வீட்டினான் தன்னை மேரு .. வில்லினில் நாகம் நாணாப்

பூட்டினான் தன்னை நீறு .. பூசியை நெற்றி யிற்கண்

காட்டினான் தன்னை என்றும் .. காழியிற் காண லாமே.


வீட்டுதல் - அழித்தல்;

நாணா - நாணாக;

நீறு பூசியை - திருநீற்றைப் பூசிய மேனியினானை;


7)

மட்டலர் ஒன்றை எய்த .. மன்மதன் ஆகம் நீறாச்

சுட்டவன் தன்னைத் தூய .. சோதியைத் தாளில் பூக்கள்

இட்டுவான் ஏத்து கின்ற .. ஈசனை அரையில் நாகம்

கட்டுவான் தன்னை என்றும் .. காழியிற் காண லாமே.


மட்டு அலர் - வாசமலர்;

ஆகம் - உடல்;

நீறா - நீறாக – சாம்பலாக;

தாளில் பூக்கள் இட்டு வான் ஏத்துகின்ற ஈசனை - தேவர்களால் திருவடியில் பூக்கள் தூவித் துதிக்கப்பெறுகின்ற ஈசனை; (வான் - வானுலகு; தேவர்கள்);

அரையில் நாகம் கட்டுவான் தன்னை - அரைநாணாக நாகப்பாம்பைக் கட்டியவனை;


8)

அளியிலா அரக்கர் கோனை .. அடர்த்திசை கேட்டு வாளும்

அளிபெரு மானை முக்கண் .. அண்ணலை ஆதி யானைப்

பிளிறுதல் செய்து வந்த .. பெருங்கரு மலைநி கர்த்த

களிறுரித் தானை என்றும் .. காழியிற் காண லாமே.


அளி - அன்பு;

அரக்கர் கோன் - இராவணன்;

அடர்த்து - நசுக்கி;

இசை கேட்டு வாளும் அளி பெருமானை - இராவணன் பாடிய இசையைக் கேட்டு மகிழ்ந்து அவனுக்கு (வாழ்நாளும், பெயரும்,) வாளும் கொடுத்த பெருமானை; (வாளும் - உம் - எச்சவும்மை);

ஆதியான் - முதல்வன்; ஆதிப்பிரான்;

பிளிறுதல் செய்து வந்த பெரும்-கரு-மலை நிகர்த்த களிறு உரித்தானை - பிளிறிக்கொண்டு வந்த பெரிய கரிய மலை போன்ற யானையின் தோலை உரித்தவனை;


9)

பூத்திரள் கொண்டு போற்றாப் .. போதனும் மாலும் காணாத்

தீத்திரள் ஆயி னானைத் .. திருமலி ஆனைக் காவில்

நீர்த்திரள் ஆயி னானை .. நினைந்தடி போற்று வாரைக்

காத்தருள் வானை என்றும் .. காழியிற் காண லாமே.


பூத்திரள் கொண்டு போற்றாப் - பல மலர்களால் வழிபாடு செய்யாத;

போதனும் மாலும் காணாத் தீத்திரள் ஆயினானை - பிரமனாலும் திருமாலாலும் காண ஒண்ணாத ஜோதி ஆனவனை; (போதன் - பூவின்மேல் இருக்கும் பிரமன்; போது - பூ); (தீத்திரள் - ஜோதி);

(அப்பர் தேவாரம் - 5.95.1 - "புக்கணைந்து புரிந்தலர் இட்டிலர் ... சுடரொளி வண்ணனை மிக்குக் காணலுற்றார் அங்கிருவரே");

திரு மலி ஆனைக்காவில் நீர்த்திரள் ஆயினானை - திரு மிக்க திருவானைக்கா என்ற தலத்தில் நீர்த்திரள் வடிவினனை; (அப்பர் தேவாரம் - 6.63.1 - "தென் ஆனைக்காவானைத் தேனைப் பாலைச் செழுநீர்த் திரளைச்சென் றாடினேனே");


10)

மாசும றைத்த நெஞ்சர் .. மறைவழி பழித்து ழல்வார்

பேசுபு றன்கள் பேணேல் .. பிறைமதி சூடி னானை

வீசுதென் றல்சேர் வீழி .. மிழலையில் தமிழ்க்கி ரங்கிக்

காசுதந் தானை என்றும் .. காழியிற் காண லாமே.


மாசு மறைத்த நெஞ்சர் - அழுக்கால் மறைக்கப்பட்ட நெஞ்சத்தை உடையவர்கள்; (மாசு - குற்றம்; அழுக்கு; தீமை);

மறைவழி பழித்து உழல்வார் - வேதநெறியைப் பழித்துத் திரிகின்றவர்கள்; (உழலுதல் - அலைதல்);

பேசு புறன்கள் பேணேல் - அவர்கள் சொல்லும் புறனுரைகளை நீங்கள் மதிக்கவேண்டா;

வீழிமிழலையில் தமிழ்க்கு இரங்கிக் காசு தந்தானை - திருவீழிமிழலையில் திருஞான சம்பந்தர்க்கும் திருநாவுக்கரசர்க்கும் படிக்காசு நல்கியவனை;


11)

அயிலுறு சூலத் தானை .. அடிதொழும் அன்பர் கட்கு

வெயிலினில் நிழலொப் பானை .. வேட்கையில் நீரொப் பானை

மயிலையின் னம்பர் ஆரூர் .. மன்னிய மணியை ஓங்கு

கயிலையு ளானை என்றும் .. காழியிற் காண லாமே.


அயில் உறு சூலத்தானை - கூர்மையான சூலத்தை ஏந்தியவனை;

வேட்கை - தாகம்;

மயிலை இன்னம்பர் ஆரூர் மன்னிய மணியை - மயிலாப்பூர்/மயிலாடுதுறை, இன்னம்பர் (இன்னம்பூர்), திருவாரூர் என்ற தலங்களில் உறையும் மாணிக்கம் போன்றவனை; (மயிலை - இப்பெயர் திருமுறையில் சில பதிகங்களில் மயிலாப்பூருக்கும் சில பதிகங்களில் மயிலாடுதுறைக்கும் வருவதைக் காணலாம்);

ஓங்கு கயிலை உளானை - உயர்ந்த கயிலையில் உள்ளவனை;


வி. சுப்பிரமணியன்

----------- --------------

04.05 - பறியலூர் (திருப்பறியலூர்) - திணிந்த நெஞ்சுடைய

04.05 - பறியலூர் (திருப்பறியலூர்) - திணிந்த நெஞ்சுடைய

2013-08-13

பறியலூர் (திருப்பறியலூர்) (இக்கால வழக்கில் - பரசலூர்)

----------------------------------

(அறுசீர் ஆசிரிய விருத்தம் - விளம் மா தேமா - அரையடி வாய்பாடு). (திருநேரிசை அமைப்பு)

(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.38.1 - கங்கையைச் சடையுள் வைத்தார்)


1)

திணிந்தநெஞ் சுடைய தக்கன் .. செய்தவேள் விக்குச் செல்லத்

துணிந்தவா னோரை யெல்லாம் .. தூய்மைசெய் தான்வெண் திங்கள்

அணிந்தவன் அன்ப ராகி .. அருந்தமிழ் பாடிப் பாதம்

பணிந்தவர் பாவம் தீர்க்கும் .. பரமனூர் பறிய லூரே.


திணிந்த நெஞ்சு உடைய தக்கன் - கல்மனம் கொண்ட தக்கன்;

செய்த வேள்விக்குச் செல்லத் துணிந்த வானோரை எல்லாம் தூய்மை செய்தான் - தக்கன் செய்த வேள்விக்குச் சென்ற தேவர்களையெல்லாம் தண்டித்துத் தூய்மை செய்தவன்; (திருவாசகம் - திருத்தோணோக்கம் - 8.15.11 - "காமன் உடல்,உயிர் காலன், … தூய்மைகள் செய்தவா தோணோக்கம் ஆடாமோ");

வெண் திங்கள் அணிந்தவன் - பிறைசூடி;

அன்பர் ஆகி அரும்-தமிழ் பாடிப் பாதம் பணிந்தவர் பாவம் தீர்க்கும் பரமன் - அடியவர்கள் ஆகித் தேவாரம் முதலிய பாமாலைகளைப் பாடித் திருவடியை வழிபட்டவர்களது தீவினைகளைத் தீர்க்கும் பெருமான்;

ஊர் பறியலூர் - அப்பெருமான் உறையும் ஊர் திருப்பறியலூர் ஆகும்;


2)

ஈடுதான் இல்லான் தன்னை .. இகழ்ந்ததக் கன்றன் சென்னி

ஆடுதான் ஆகு மாறே .. அன்றொறுத் தருள்செய் ஐயன்

தோடுமோர் காதன் தாளைத் .. துணையெனப் பற்றி நின்று

பாடுவார் பாவம் தீர்க்கும் .. பரமனூர் பறிய லூரே.


ஈடு - இணை; ஒப்பு;

இகழ்ந்த தக்கன்-ன் சென்னி ஆடுதான் ஆகுமாறு - அவமதித்த தக்கனுடைய தலை ஆட்டுத்தலை ஆகும்படி;

ஒறுத்தல் - தண்டித்தல்;

தோடும் ஓர் காதன் - ஒரு செவியில் தோடு அணிந்தவன்;


3)

விரவிடாத் தக்கன் செய்த .. வேள்வியைச் செற்ற மைந்தன்

இரவியின் கண்ணைக் கொண்டான் .. இந்திரன் தோள்து ணித்தான்

கரவிலாக் கரத்தன் கங்கை .. கரந்தசெஞ் சடையன் பாடிப்

பரவுவார் பாவம் தீர்க்கும் .. பரமனூர் பறிய லூரே.


விரவிடா - அன்பு இல்லாத;

செறுதல் - அழித்தல்;

மைந்தன் - வீரன்;

இரவி - சூரியன்;

துணித்தல் - வெட்டுதல்;

கரவு இலாக் கரத்தன் - வஞ்சனையின்றி வாரி வழங்கும் கையினன்;

கங்கை கரந்த செஞ்சடையன் - கங்கையைச் சடையினுள் ஒளித்தவன்; (கரத்தல் - ஒளித்தல்);

பரவுதல் - துதித்தல்;


4)

ஓரிடம் நில்லா தெங்கும் .. உலவிடும் புரங்கள் சுட்டான்

ஊரிடும் பிச்சை கொள்ள .. ஒருசிரம் ஏந்தும் கையன்

காரிடம் கொண்ட கண்டன் .. காய்நுதற் கண்ணன் கானில்

பாரிடம் சூழ ஆடும் .. பரமனூர் பறிய லூரே.


புரங்கள் சுட்டான் - முப்புரங்களை எரித்தவன்;

ஒரு சிரம் ஏந்தும் கையன் - பிரமனது மண்டையோட்டைக் கையில் ஏந்தியவன்;

கார் இடம் கொண்ட கண்டன் - நீலகண்டன்;

காய் நுதற் கண்ணன் - எரிக்கும் கண்ணை நெற்றியில் உடையவன்;

கான் - சுடுகாடு;

பாரிடம் - பேய்;


5)

இகலிய புரங்கள் மூன்றை .. எரிகணை ஒன்றால் எய்தான்

புகலிமன் தமிழைப் பாடிப் .. போற்றிசெய் தேத்து வார்க்குப்

புகலவன் இகழ்ந்த தக்கன் .. புரிந்தவவ் வேள்வி தன்னிற்

பகலவன் பல்லு குத்த .. பரமனூர் பறிய லூரே.


இகலிய புரங்கள் மூன்றை எரிகணை ஒன்றால் எய்தான் - பகைத்த முப்புரங்களை எரிக்கும் கணை ஒன்றால் எய்தவன்; (இகலுதல் - பகைமைகொள்ளுதல்);

புகலிமன் தமிழைப் பாடிப் போற்றிசெய்து ஏத்துவார்க்குப் - சம்பந்தர் அருளிய தேவாரத்தைப் பாடிப் போற்றித் துதிப்போர்க்கு; (புகலி - சீகாழியின் 12 பெயர்களுள் ஒரு பெயர்); (மன் - தலைவன்); (புகலிமன் - திருஞான சம்பந்தர்);

புகல் அவன் - அடைக்கலமாக இருப்பவன்;

இகழ்ந்த தக்கன் புரிந்த அவ்வேள்வி தன்னில் - அவமதித்துத் தக்கன் செய்த அந்த வேள்வியில்;

பகலவன் பல் உகுத்த - சூரியனின் பல்லைத் தகர்த்த; (அப்பர் தேவாரம் - 6.33.10 - "பகலவன்தன் பல்லுகுத்த படிறன் தன்னைப்");


6)

பூவையே கணையாக் கொண்டு .. போர்புரி காமன் ஆகம்

வேவவோர் நெற்றிக் கண்ணை .. விழித்தவன் அன்ப ருக்குக்

காவலாய்க் கூற்று தைத்த .. கழலினன் இமவான் பெற்ற

பாவையோர் பங்க மர்ந்த .. பரமனூர் பறிய லூரே.


பூவையே கணையாக் கொண்டு போர்-புரி காமன் ஆகம் வேவ - மலர்களையே அம்பாகக் கொண்டு தாக்கும் மன்மதனது உடல் வெந்து சாம்பலாக; (ஆகம் - உடல்);

ர் நெற்றிக்கண்ணை விழித்தவன் - ஒப்பற்ற நெற்றிக்கண்ணைத் திறந்து நோக்கியவன்;

அன்பருக்குக் காவல் ஆய்க் கூற்று உதைத்த கழலினன் - மார்க்கண்டேயருக்குப் பாதுகாவல் ஆகி நமனைத் திருவடியால் உதைத்தவன்;

இமவான் பெற்ற பாவை ஓர் பங்கு அமர்ந்த பரமன் - மலையான் மகளை ஒரு பாகமாக விரும்பிய பரமன்;


7)

சாம்பலைச் சாந்த மாகத் .. தரித்துநன் மலர்கள் தூவி

ஓம்பிடும் பத்தர்க் கென்றும் .. உறுதுணை யாக நிற்பான்

தேம்புனல் சடையில் தேக்கிச் .. சேயிழைக் கிடத்தை ஆக்கிப்

பாம்பினை அரையில் வீக்கும் .. பரமனூர் பறிய லூரே.


சாம்பல் - திருநீறு;

சாந்தம் - சந்தனம்;

தேம் புனல் - இனிய புனல் - கங்கை;

சேயிழை - பெண் - உமையம்மை;

இடத்தை - இடப்பாகத்தை;

வீக்குதல் - கட்டுதல்;


8)

கடலிடை எழுந்த நஞ்சைக் .. கருமணி ஆக்கும் கண்டன்

அடல்விடை அமர்ந்த அண்ணல் .. அரக்கனை அடர்த்துப் பின்னர்ப்

படையொடு நாளும் தந்தான் .. படவர வோடு திங்கள்

படர்சடை மீது சூடும் .. பரமனூர் பறிய லூரே.


அடல் விடை அமர்ந்த அண்ணல் - வலிய எருதினை வாகனமாக விரும்பிய தலைவன்; (அடல் - வலிமை); (அமர்தல் - விரும்புதல்; இருத்தல்);

அரக்கனை அடர்த்து - இராவணனை நசுக்கி; (அடர்த்தல் - நசுக்குதல்);

படை - ஆயுதம் - இங்கே சந்திரஹாஸம் என்ற வாள்;

நாள் - வாழ்நாள்; ஆயுள்;

பட-அரவு - படத்தை உடைய நாகப்பாம்பு;


9)

வானிலே றன்னத் தோடு .. மண்ணகழ் மாலும் காணார்

கானிலா டுங்க ருத்தன் .. கண்ணுத லான்த னக்கோர்

கோனிலான் குளிர்ந்த கங்கை .. கொக்கிற கரவம் கொன்றை

பானிலா விளங்கும் சென்னிப் .. பரமனூர் பறிய லூரே.


வானில் ஏறு அன்னத்தோடு மண் அகழ் மாலும் காணார் - அன்னமாகி வானில் உயர்ந்த பிரமன், பன்றியாகி மண்ணை அகழ்ந்த திருமால் இவர்களால் காண ஒண்ணாதவன்;

கானில் ஆடும் கருத்தன் - சுடுகாட்டில் ஆடும் கடவுள்; (கருத்தன் - கர்த்தா - மூலகாரணன்);

கண்ணுதலான் - நெற்றிக்கண்ணன்; (நுதல் - நெற்றி);

தனக்கு ஓர் கோன் இலான் - தனக்கு ஒரு தலைவன் இல்லாதவன் - எல்லார்க்கும் தலைவன்; (அப்பர் தேவாரம் - 6.98.1 - "தாமார்க்குங் குடியல்லாத் தன்மையான சங்கரன்");

குளிர்ந்த கங்கை, கொக்கிறகு, அரவம், கொன்றை, பால் நிலா விளங்கும் சென்னிப் பரமன் - கங்கை, கொக்கிறகு, பாம்பு, கொன்றைமலர், பால் போன்ற வெண்திங்கள் இவற்றைத் திருமுடிமேல் அணிந்த பரமன்; (கொக்கிறகு - 1. கொக்கு வடிவாய குரண்டாசுரனை அழித்த அடையாளம்; 2. கொக்கிறகு என்ற பூ);


10)

சத்தியம் பேச மாட்டார் .. தத்துவம் அறியா அந்த

எத்தரு ரைக்கும் மார்க்கம் .. இருள்தரும் பேண வேண்டா

நித்தியன் நெற்றிக் கண்ணன் .. நீறணிந் துருகி ஏத்தும்

பத்தருக் கின்பம் நல்கும் .. பரமனூர் பறிய லூரே.


அந்த எத்தர் - அவ்வஞ்சகர்கள்; குருட்டு வஞ்சகர்கள்; (அந்த - அத்தகைய; அந்தம் - குருடு; அஞ்ஞானம்); (எத்தர் - ஏமாற்றுவோர்; வஞ்சகர்);

இருள் - துன்பம்; அறியாமை;


11)

பாலனைக் கொல்வ தற்குப் .. பரிவிலா தோடி வந்த

காலனைக் காய்ந்த காலன் .. கையினிற் கபாலன் சூலன்

வேலனைப் பெற்ற ஐயன் .. மேருவை வளைத்த கையன்

பாலன வெள்ளே றேறும் .. பரமனூர் பறிய லூரே.


பாலனைக் கொல்வதற்குப் பரிவு இலாது ஓடி வந்த காலனைக் காய்ந்த காலன் - மார்க்கண்டேயரைக் கொல்ல எண்ணிக் கோபத்தோடு ஓடிவந்த காலனை உதைத்த காலகாலன்; (பரிவு - இரக்கம்);

கையினில் கபாலன் சூலன் - கையில் மண்டையோடு, சூலம் இவற்றை ஏந்தியவன்;

வேலனைப் பெற்ற ஐயன் - முருகனுக்குத் தந்தை;

மேருவை வளைத்த கையன் - (முப்புரம் எரித்த நாளில்) மேருமலையை வில்லாக வளைத்தவன்;

பான வெள்ளேறு ஏறும் பரமன் - காவலானதும் பால் போல் வெண்ணிறம் உடையதுமான இடபத்தை வாகனமாக உடைய பரமன்; (பாலனம் - பாதுகாப்பு; பால் அன - பால் போன்ற);

ஊர் பறியலூர் - அப்பெருமான் உறையும் ஊர் திருப்பறியலூர் ஆகும்; (அப்பர் தேவாரம் - 4.2.1 - "அண்ணல் அரண்முரண் ஏறும்");


வி. சுப்பிரமணியன்

----------- --------------