Saturday, November 17, 2018

03.04.071 - சிவன் - சாப்பாட்டுக்கடை (Restaurant) - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2007-06-12

3.4.71 - சிவன் - சாப்பாட்டுக்கடை (Restaurant) - சிலேடை

-------------------------------------------------------------

சிறந்திருக்கு மாறுசெய்வார் தேநீர் அடையும்

நிறையுமெப் போதும் நிலவு - மறையில்

தினமகிழ் வெய்திடச் சேர்கூட்டம் போற்றும்

கனற்கணன்சாப் பாட்டுக் கடை!


சொற்பொருள் :

தே - தெய்வம்;

நீர் - கங்கை;

தேநீர் - தேய்நீர் (tea);

நிறைதல் - நிரம்புதல்; பூரணமாக இருத்தல்; வியாபித்து இருத்தல்;

நிலவுமறையில் - 1. நிலவும் அறையில்; / 2. நிலவும் மறையில்;

மறை - வேதம்;

தினமகிழ்வெய்திட - 1. தின்ன மகிழ்வு எய்திட; / 2. தினம் மகிழ்வு எய்திட;

தின்னுதல் - உண்ணுதல்;

போற்றுதல் - விரும்புதல்; புகழ்தல்; வணங்குதல்;

கனற்கணன் - கண்ணில் நெருப்பை உடையவன் - நெற்றிக்கண்ணன்;


சாப்பாட்டுக்கடை (Restaurant):

சிறந்திருக்குமாறு செய்வார் தேநீர் அடையும் - மிகப் பக்குவமாகத் தேநீரும் அடையும் (மற்றவையும்) செய்வர்; (தேநீர் அடையும் - தேநீரும் அடையும் - உம்மைத்தொகை);

நிறையும் எப்போதும் - எப்போதும் (கூட்டம்) நிரம்பியிருக்கும்;

நிலவும் அறையில் தி[ன்], மகிழ்வெய்திடச் சேர் கூட்டம் - (அந்த உண்ணும்) அறையில் சாப்பிடக், களிக்கச் சேர்கின்ற கூட்டம் இருக்கும். (தின - தின்ன; - இடைக்குறை);

சாப்பாட்டுக் கடை - .


சிவன்:

சிறந்திருக்குமாறு செய்வார் - நல்ல நிலை அடையச் செய்வார்; (இலக்கணக் குறிப்பு - செய்வார் என்றது ஒருமை பன்மை மயக்கம்);

தே, நீர் அடையும் - கங்கை (சடையில்) அடைகின்ற தெய்வம்;

நிறையும் எப்போதும் - எப்போதும் பூரணமாக இருப்பான்.

நிலவும் மறையில் - வேதத்தில் இருப்பவன். (அப்பர் தேவாரம் - 6.66.7 - "மறையானை");

தினம் மகிழ்வெய்திடச் சேர் கூட்டம் போற்றும் - என்றும் இன்புற வேண்டிச் சேர்கின்ற (அடியவர்) கூட்டத்தினர் போற்றுகின்ற.

கனற்கணன் - நெற்றிக்கண்ணன்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.070 - சிவன் - சந்தை - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2007-06-10

3.4.70 - சிவன் - சந்தை - சிலேடை

-------------------------------------------------------------

அரிய கனிகா யுடன்மலியங் காடி

அரவமிகும் மாலை அதனில் - அரியும்

பதம்தேடிச் செல்வார் பணிசெய்வோர் சூழும்

விதம்திகழ் சந்தைமுக்கண் வேந்து!


சொற்பொருள் / குறிப்புகள்:

அரிய கனி காயுடன்மலியங்காடி - 1. "அரிய கனி; காய் உடல் மலி அங்கு ஆடி"; / 2. அரிய கனி காயுடன் மலி அங்காடி;

அரிய கனி - அருமையான கனி; கற்பகக் கனி; (திருவிசைப்பா - 9.5.2 - "கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்");

காய் உடல் - எரிகின்ற உடல்; (காய்தல் - எரித்தல்; அழித்தல்);

மலிதல் - மிகுதல்;

அங்காடி - கடை; கடைவீதி;

அரவம் - 1. பாம்பு; / 2. சத்தம்;

மிகுதல் - 1. சிறத்தல்; / 2. அதிகமாதல்;

மாலை - 1. அணிகின்ற மாலை; / 2. சாயங்காலம்;

அரி - 1.விஷ்ணு; / 2. நறுக்கு; வெட்டு; (அரிதல்);

பதம் - 1. பாதம்; / 2. பொருள்; வஸ்து; பக்குவம்;

பணிசெய்வோர் - 1. தொண்டு செய்கின்ற பக்தர்கள்; / 1. வேலை செய்பவர்கள்;

சூழ்தல் - 1. வலம்செய்தல் / 2. சுற்றிவருதல்; மொய்த்தல்;

சந்தை - குறித்த காலத்தில் கூடும் கடைகள்; கடைவீதி;

வேந்து - அரசன்;

இலக்கணக் குறிப்பு : ல்+ = ன்ம; உதாரணம்: கல்+ மனம் = கன்மனம்;


சந்தை:

அரிய கனி காயுடன் மலி அங்காடி - அருமையான பழங்களும் காய்கறிகளும் மிகுந்திருக்கும் கடைவீதி;

அரவம் மிகும் மாலை அதனில் - சாயங்கால வேளையில் அங்கே இரைச்சல் மிகுந்து இருக்கும்;

அரியும் பதம் தேடிச் செல்வார் - நறுக்கக்கூடிய ( காய்கறிகள், கனிகள் ஆகிய ) பொருள்களைத் தேடி அங்கே போவார்கள் ; (--அல்லது-- நறுக்க ஏற்ற பக்குவம் உள்ள பொருளைத் தேடி அங்கே போவார்கள்).

பணி செய்வோர் சூழும் விதம் திகழ் சந்தை - வேலை செய்பவர்கள் பலர் இருக்கின்ற சந்தை;


சிவன் :

அரிய கனி - கற்பகக் கனி போன்றவன்;

காய் உடல் மலி அங்கு ஆடி - எரியும் உடல்கள் இருக்கும் அந்த இடத்தில் (சுடுகாட்டில்) ஆடுபவன்;

அரவம் மிகும் மாலை அதனில் - அவன் மேல் இருக்கும் மாலையில் (சீறும்) பாம்பு இருக்கும்; (--சிறந்த மாலையாகப் பாம்பு ஆகும்--);

அரியும் பதம் தேடிச் செல்வார் - விஷ்ணுவும் அவனது திருவடியைத் தேடிச் செல்வார்;

பணிசெய்வோர் சூழும் விதம் திகழ் முக்கண் வேந்து - திருத்தொண்டு செய்பவர்கள் வலஞ்செய்யும்படி இருக்கின்ற முக்கண் அரசன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.069 - சிவன் - முருகன் - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2007-06-08

3.4.69 - சிவன் - முருகன் - சிலேடை

-------------------------------------------------------------

ஏறுமயில் வேலு மிருக்கும் அருணகிரி

கூறுடையான் கோவிலாக் குன்றாகும் - ஆறு

முகந்தெரியும் கைஏந்தி முன்பணிபத் தர்க்கிச்

சகந்தருமீ சன்முருகன் தான்!


சொற்பொருள்:

ஏறுமயில் வேலுமிருக்கும் - 1. ஏறும் அயில் வேலும் இருக்கும்; / 2. ஏறு மயில் வேலும் இருக்கும்;

ஏறு - 1. இடபம்; எருது; / 2. பல விலங்குகளின் ஆண்;

அயில் - கூர்மை;

ஏறு மயில் - ஆண் மயில்; சிறந்த மயில்; ஏறுகின்ற மயில்;

வேல் - 1. சூலம்; / 2. வேலாயுதம்;

அருணகிரி - 1. அண்ணாமலை; / 2. அருணகிரிநாதர் ;

கூறுடையான் - கூறு உடையான்;

கூறு - 1. பாகம்; பங்கு; / 2. கூறுதல் - சொல்லுதல்;

உடையான் - 1. உடையவன்; / 2. சுவாமி;

கோவிலா - 1. கோ வி[ல்]லாக; கோ இ[ல்]லா; / 2. கோவிலாக;

கோ - தலைவன்;

ஆறுமுகந்தெரியும் - 1. ஆறும் உகந்து எரியும்; / 2. ஆறு முகம் தெரியும்;

எரி - நெருப்பு;

இச்சகம் - 1. விருப்பம்; / 2. இந்த உலகம் (இச்-சகம்);


முருகன்:

ஏறு மயில் வேலும் இருக்கும் - ஆண்மயில் வாகனம், வேல் இவற்றை உடைய;

அருணகிரி கூறு உடையான் - அருணகிரிநாதர் துதிக்கும் சுவாமி;

கோவிலாக் குன்று ஆகும் - (அவனுக்குக்) கோயிலாகக் குன்று ஆகும்; (குன்றுதோறாடும் குமரன்);

ஆறுமுகம் தெரியும் - ஆறுமுகம் காணலாம்;

கை ஏந்தி முன் பணி பத்தர்க்கு இச்-சகம் தரும் - (வரம் வேண்டிக்) கையை ஏந்தி முன்னால் பணிகின்ற பக்தர்களுக்கு இவ்வுலகை ஆளத் தருகின்றவன்;


சிவன்:

ஏறும் அயில் வேலும் இருக்கும் - இடப வாகனமும், கூரான சூலமும் உடையவன்;

அருணகிரி - அண்ணாமலை; (அண்ணாமலையே இறைவன் திருமேனி ஆகும்)

கூறு உடையான் - பார்வதியை ஒரு கூறாக உடையவன்;

கோ வி[ல்]லாக் குன்று ஆகும் - (முப்புரம் எரித்தபொழுது) தலைவனுடைய வில்லாக மேரு மலை ஆகும்; ("கோ இலாக் குன்று ஆகும் - தனக்கு ஒரு தலைவன் இல்லாத மலை போன்றவன்" என்றும் பொருள்கொள்ளலாம்);

ஆறும் உகந்து எரியும் கை ஏந்தி - (சடையில்) கங்கையையும் விரும்பித் தரித்துக், கையில் தீயையும் ஏந்துபவன்;

முன் பணி பத்தர்க்கு இச்சகம் தரும் - முன்னால் பணிகிற பக்தர்களுக்கு அவர்கள் விரும்பியவற்றைத் தருகின்றவன்;


குறிப்புகள்:

1) அண்ணாமலையாகி நிற்பது - சம்பந்தர் தேவாரம் - திருமுறை 3.108.9 - "மாலு(ம்) நான்முகனும் காண்பரியதோர் கோல மேனிய தாகிய குன்றமே");

2) "வில்லாக" என்பது இடைக்குறை, கடைக்குறையாக "விலா";

3) சிவனுக்கும் ஆறுமுகம் இருப்பதை இந்தத் திருமந்திரப் பாடல் விளக்கத்தில் காணலாம்:

"எந்தை பிரானுக் கிருமூன்று வட்டமாய்த் தந்தைதன் முன்னமே சண்முகன் தோன்றலால்" (சிவபிரானுக்கு இயல்பாகவே ஆறு முகம் இருப்பினும் அவற்றுள் அதோமுகம் தோன்றாதிருக்க)

எனவே, சிவனுக்கும் ஆறுமுகம் என்றும் "ஆறுமுகந்தெரியும்" என்ற தொடரைப் பொருள்கொள்ளலாம்.

4) ஈசனைக் 'குன்றே', 'மலையே' என்று சொல்லும் தேவாரப் பாடல்களுக்குச் சில உதாரணங்கள்:

அப்பர் தேவாரம் - 6.32.2 - "செங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி".

சுந்தரர் தேவாரம் - 7.21.9 - "திரு மேற்றளி உறையும் மலையே உன்னையல்லால் மகிழ்ந்தேத்த மாட்டேனே".


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

04.58 - பொது - "உமைபங்கன் போற்றி"

04.58 - பொது - "உமைபங்கன் போற்றி"

2014-03-30

பொது - (உமைபங்கன் போற்றி)

----------------------------------

(சந்தக் கலிவிருத்தம் - தானன தானன தானன தானா)

(லிங்காஷ்டகம் - "ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்")


முற்குறிப்பு - படிப்போர் வசதி கருதிச் சில இடங்களில் புணர்ச்சி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது.

1)

காமன(து) ஆகமெ ரித்தனை போற்றி

சோமனை அஞ்சடை ஏற்றினை போற்றி

சேமம ளித்திடு சேவக போற்றி

கோமக னேஉமை கூறின போற்றி.


பதம் பிரித்து:

காமனது ஆகம் எரித்தனை போற்றி;

சோமனை அம் சடை ஏற்றினை போற்றி;

சேமம் அளித்திடு சேவக போற்றி;

கோமகனே; உமை கூறின போற்றி.


* போற்றி - வணக்கம்; "நம" என்ற வடசொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்;

காமனது ஆகம் எரித்தனை - மன்மதனது உடலை எரித்தவனே; (ஆகம் - உடல்); (எரித்தனை - எரித்தாய் - எரித்தவனே);

சோமனை அம் சடை ஏற்றினை - சந்திரனை அழகிய சடையின்மீது ஏற்றியவனே; (சோமன் - சந்திரன்); (அம் - அழகு);

சேமம் அளித்திடு சேவக - க்ஷேமம் அளிக்கும் வீரனே; (சேவகன் - வீரன்);

கோமகனே, உமை கூறின - தலைவனே, உமையை ஒரு கூறாக உடையவனே; (உமை கூறினன் - உமையை ஒரு கூறாக உடையவன் - உமைபங்கன்); (கூறின – கூறினன் என்பதன் அண்மை விளி); (சம்பந்தர் தேவாரம் - 2.112.3 - "மங்கைகூறினன்");

(எரித்தனை போற்றி, ஏற்றினை போற்றி, போன்ற பிரயோக உதாரணம்: திருவாசகம் - போற்றித்திருவகவல் - 8.4: அடி-86: தாயே ஆகி வளர்த்தனை போற்றி; அடி-209: கருங்குருவிக்கு அன்று அருளினை போற்றி; அடி-210: இரும்புலன் புலர இசைந்தனை போற்றி);


2)

காலனை நெஞ்சிலு தைத்தனை போற்றி

பாலனை வாழ்ந்திட வைத்தனை போற்றி

வேலனை ஈன்றப ரம்பர போற்றி

கோலம டக்கொடி கூறின போற்றி.


காலனை நெஞ்சில் உதைத்தனை - காலனை மார்பில் உதைத்தவனே;

பாலனை வாழ்ந்திட வைத்தனை - மார்க்கண்டேயரை வாழவைத்தவனே;

வேலனை ஈன்ற பரம்பர - முருகனைப் பெற்ற பரம்பரனே; (பரம்பரன் - மிக மேலானவன்; முழுமுதற்கடவுள்);

கோல மடக்கொடி கூறின - அழகிய இளம்கொடி போன்ற உமையை ஒரு கூறாக உடையவனே;


3)

அன்றெரி நஞ்சினை ஆர்ந்தனை போற்றி

அன்றினர் ஏரெயில் அட்டனை போற்றி

மன்றினில் ஆடிடு மன்னவ போற்றி

ஒன்றென மாதொடு நின்றனை போற்றி.


பதம் பிரித்து:

அன்று எரி நஞ்சினை ஆர்ந்தனை போற்றி;

அன்றினர் ஏர் எயில் அட்டனை போற்றி;

மன்றினில் ஆடிடும் மன்னவ போற்றி;

ஒன்று என மாதொடு நின்றனை போற்றி.


அன்று எரி நஞ்சினை ஆர்ந்தனை - முன்பு ஆலகால விடத்தை உண்டவனே; (ஆர்தல் – உண்ணுதல்);

அன்றினர் ஏர்-எயில் அட்டனை - பகைவர்களது அழகிய கோட்டைகளை எரித்தவனே; (அன்றினர் - பகைவர்); (ஏர் எயில் - அழகிய கோட்டைகள் - முப்புரங்கள்); (அடுதல் - எரித்தல்; அழித்தல்);

மன்றினில் ஆடிடும் மன்னவ - அம்பலத்தில் ஆடும் நடராஜனே;

ஒன்று என மாதொடு நின்றனை - உமையோடு ஒன்றாகி நின்றவனே;


4)

வெற்புவி லால்அரண் எய்தனை போற்றி

மற்புயம் எட்டுடை வல்லவ போற்றி

இற்பலி வெண்டலை ஏற்றனை போற்றி

அற்புத னேஉமை பங்கின போற்றி.


பதம் பிரித்து:

வெற்பு விலால் அரண் எய்தனை போற்றி;

மற்புயம் எட்டுடை வல்லவ போற்றி;

இல் பலி வெண் தலை ஏற்றனை போற்றி;

அற்புதனே உமைபங்கின போற்றி.


வெற்பு விலால் அரண் எய்தனை - மேருமலை என்ற வில்லால் முப்புரங்களை எய்தவனே; (அரண் - கோட்டை); (சம்பந்தர் தேவாரம் - 1.135.10 - "பருவிலால் எயில் எய்து பராய்த்துறை மருவினான்");

மற்புயம் எட்டுடை வல்லவ – வலிமைமிக்க எட்டுத்-தோள்கள் உடைய சமர்த்தனே; (மற்புயம் - மல் + புயம்); (வல்லவன் - வலிமையுடையவன்; சமர்த்தன்); (அப்பர் தேவாரம் - 4.9.2 - "எண்தோள் வீசிநின்றாடும் பிரான்");

இல்-பலி வெண் தலை ஏற்றனை - பல இல்லங்களில் வெண்ணிற மண்டையோட்டில் பிச்சை ஏற்றவனே;

அற்புதனே, உமைபங்கின - அற்புதனே, உமைபங்கனே;


5)

விண்ணவர் ஏத்திடு முக்கண போற்றி

தண்ணதி பாய்தரு வேணிய போற்றி

எண்ணடி யார்வினை தீர்த்தனை போற்றி

பெண்ணொரு பங்கில மர்ந்தனை போற்றி;


விண்ணவர் ஏத்திடும் முக்கண – தேவர்கள் துதிக்கும் முக்கண்ணனே;

தண்-நதி பாய்தரு வேணிய - குளிர்ந்த கங்கை பாயும் சடையினனே; (தண் நதி - குளிர்ந்த கங்கை); (தரு - ஒரு துணைவினைச்சொல்); (வேணி - சடை);

எண்டியார் வினை தீர்த்தனை - உன்னை நினையும் பக்தர்களது வினைகளைத் தீர்த்தவனே; (எண்ணுதல் - நினைதல்);

பெண் ஒரு பங்கில் அமர்ந்தனை - உமையை ஒரு கூறாக விரும்பியவனே;


6)

வெள்விடை ஏறிய வித்தக போற்றி

கள்விரி கொன்றைய ணிந்தனை போற்றி

ஒள்ளெரி வண்ணவு ருத்திர போற்றி

விள்ளரி யாய்உமை கூறின போற்றி.


வெள்-விடை ஏறிய வித்தக - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடைய வித்தகனே; (வித்தகன் - சாமர்த்தியம் உள்ளவன்; பேரறிவாளன்);

கள் விரி கொன்றை அணிந்தனை - தேன் நிறைந்த கொன்றைப்பூவைச் சூடியவனே; (கள் - தேன்); (விரிதல் - மலர்தல்);

ஒள்-எரி வண்ண உருத்திர - ஒளிவீசும் நெருப்புப் போன்ற செம்மேனியுடைய உருத்திரனே; ( "ஒள்-எரி வண்ண = தீவண்ணனே" என்று தனியாகவும் பொருள்கொள்ளலாம்);

விள்ளரியாய் - விள்ள அரியாய் (தொகுத்தல் விகாரம்) - சொல்லற்கு அரியவனே; (விள்ளுதல் - சொல்லுதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.81.2 - "சொல்லரிய தொண்டர் துதிசெய்ய");

உமை கூறின – உமாதேவியை ஒரு கூறாக உடையவனே;


7)

நாரண னுக்கரி நல்கினை போற்றி

ஆரணம் ஓதிய நாவின போற்றி

வாரண ஈருரி போர்த்தனை போற்றி

பூரண மாதொரு பங்கின போற்றி.


பதம் பிரித்து:

நாரணனுக்கு அரி நல்கினை போற்றி;

ஆரணம் ஓதிய நாவின போற்றி;

வாரண ஈருரி போர்த்தனை போற்றி;

பூரண; மாது ஒரு பங்கின போற்றி.


நாரணனுக்கு அரி நல்கினை - திருமாலுக்குச் சக்கராயுதத்தை அருளியவனே; (அரி - சக்கரம்; 3. ஆயுதம்); (விஷ்ணு ஸஹஸ்ர-நாமத்தின் தியான-ச்லோகத்தில், "அரி நளின, கதா, சங்க பாணி:" என்னும் சொற்றொடரில் வரும் "அரி" சக்கரத்தைக் குறிக்கும் ஸம்ஸ்க்ருதச் சொல்); (நல்குதல் - கொடுத்தல்);

ஆரணம் ஓதிய நாவின - வேதங்களைப் பாடியருளியவனே; (ஆரணம் - வேதம்);

வாரண ஈருரி போர்த்தனை - ஆனையின் உரித்த தோலைப் போர்த்தவனே; (ஈர்த்தல் - உரித்தல்); (ஈர் - ஈரம்; பசுமை);

பூரண, மாது ஒரு பங்கின - பூரணனே, உமை ஒரு பங்கினனே;


8)

வாளவு ணன்வலி வாட்டினை போற்றி

நீளவ வன்தொழு நின்மல போற்றி

வாளவ னுக்களி பண்பின போற்றி

கோளர வாஉமை கூறின போற்றி.


பதம் பிரித்து:

வாள் அவுணன் வலி வாட்டினை போற்றி;

நீள அவன் தொழு நின்மல போற்றி;

வாள் அவனுக்கு அளி பண்பின போற்றி;

கோள் அரவா, உமை கூறின போற்றி.


வாள் அவுணன் வலி வாட்டினை - கொடிய அரக்கனான இராவணனது வலிமையை அழித்தவனே; (வாள் - கொடிய); (அவுணன் - இங்கே, அரக்கன்); (வலி - ஆற்றல்; வலிமை); (வாட்டுதல் - கெடுத்தல்); (அப்பர் தேவாரம் - 5.74.10 - "வாளரக்கன் வலி வாட்டினான் எறும்பியூர்மலை எம்மிறை"); (திருமங்கையாழ்வார் - திருநெடுந்தாண்டகம் - 2079 - "தென்னிலங்கை அரண் சிதறி அவுணன் மாளச் சென்று");

நீள அவன் தொழு நின்மல - பன்னெடுங்காலம் அவனால் தொழப்பெற்ற தூயனே; (நீள – நெடுங்காலமாக);

வாள் அவனுக்கு அளி பண்பின – பின்பு அவனுக்குச் சந்திரஹாஸம் என்ற வாளை அருளியவனே; (பண்பு - குணம்; இயல்பு);

கோள்-அரவா, உமை கூறின - கொடிய பாம்பை அணிந்தவனே, உமைபங்கனே; (கோள் - கொடிய);


9)

மாலயன் நேடவ ளர்ந்தனை போற்றி

ஆலம துண்டமி டற்றின போற்றி

மூலமும் அந்தமும் ஆயினை போற்றி

கோலவ ணங்கொரு கூறின போற்றி.


பதம் பிரித்து:

மால் அயன் நேட வளர்ந்தனை போற்றி;

ஆலமது உண்ட மிடற்றின போற்றி;

மூலமும் அந்தமும் ஆயினை போற்றி;

கோல அணங்கு ஒரு கூறின போற்றி.


மால் அயன் நேட வளர்ந்தனை - திருமால் பிரமன் இவர்கள் தேடும்படி ஓங்கியவனே; (நேடுதல் - தேடுதல்); (வளர்தல் - ஓங்குதல்; நீளுதல்);

ஆலம் அது உண்ட மிடற்றின - ஆலகாலத்தை உண்ட கண்டனே - நீலகண்டனே; (மிடறு - கண்டம்);

மூலமும் அந்தமும் ஆயினை - முதலும் முடிவும் ஆனவனே;

கோல அணங்கு ஒரு கூறின - அழகிய உமையை ஒரு கூறாக உடையவனே;


10)

ஏசிடு வார்க்கிலன் ஆயினை போற்றி

பேசிடு வார்வினை தீர்த்தனை போற்றி

மாசில னேமழு வாளின போற்றி

மாசிவை வாமம கிழ்ந்தனை போற்றி.


பதம் பிரித்து:

ஏசிடுவார்க்கு இலன் ஆயினை போற்றி;

பேசிடுவார் வினை தீர்த்தனை போற்றி;

மாசு இலனே, மழுவாளின போற்றி;

மா-சிவை வாமம் மகிழ்ந்தனை போற்றி.


ஏசிடுவார்க்கு இலன் ஆயினை - இகழ்பவர்களுக்கு அருள் இல்லாதவனே; (ஏசுதல் - இகழ்தல்);

பேசிடுவார் வினை தீர்த்தனை - போற்றும் பக்தர்களது வினையைத் தீர்ப்பவனே; (பேசுதல் - துதித்தல்; திருப்புகழைப் பேசுதல்); (அப்பர் தேவாரம் - 6.1.1 - "பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே");

மாசு இலனே, மழுவாளின - குற்றமற்றவனே, மழுவை ஏந்தியவனே;

மா-சிவை வாமம் மகிழ்ந்தனை - அழகிய உமையை இடப்பக்கம் கூறாக விரும்பியவனே; (மா - அழகு); (சிவை - பார்வதி);


11)

கொக்கிற கும்புனை பிஞ்ஞக போற்றி

நக்கர ணஞ்சுடு நாயக போற்றி

முக்கண முப்புரி நூலின போற்றி

பக்கமு மைக்களி பாங்கின போற்றி.


பதம் பிரித்து:

கொக்கிறகும் புனை பிஞ்ஞக போற்றி;

நக்கு அரணம் சுடு நாயக போற்றி;

முக்கண, முப்புரி நூலின போற்றி;

பக்கம் உமைக்கு அளி பாங்கின போற்றி.


கொக்கிறகும் புனை பிஞ்ஞக - கொக்கிறகை அணிந்த தலைக்கோலம் உடையவனே; (பிஞ்ஞகன் - தலைக்கோலம் உடையவன்); (கொக்கிறகு - 1. கொக்கிறகு என்ற பூ; 2. கொக்குவடிவாய் இருந்த குரண்டாசுரனை அழித்து, அவன் இறகைச் சிவபிரான் தலையில் அணிந்தனன் என்பது புராண வரலாறு); (அப்பர் தேவாரம் - 6.39.2 - "கொக்கிறகு சென்னி உடையான் கண்டாய்");

நக்கு அரணம் சுடு நாயக - சிரித்து முப்புரங்களை எரித்த தலைவனே;

முக்கண, முப்புரி நூலின - முக்கண்ணனே, பூணூல் அணிந்தவனே;

பக்கம் உமைக்கு அளி பாங்கின - ஒரு பக்கத்தை உமைக்கு அளித்தவனே; (பாங்கு - இயல்பு);


பிற்குறிப்பு : யாப்புக் குறிப்பு:

சந்தக் கலிவிருத்தம் - தானன தானன தானன தானா - என்ற சந்தம்.

வடமொழியில் இச்சந்தத்தை - தோதகம் - दोधकम् - என்ற பெயரால் சுட்டுகின்றனர்.

குரு - நெடில் / நெடில்+ஒற்று / குறில்+ஒற்று.

லகு - குறில் (ஒற்றுத் தொடராதபோது).

அடி ஈற்றில் வரும் லகுவும் குருவாகக் கருதப்படும்.

வடமொழியில் ஐகாரம் நெடில் (குரு) என்று கருதப்படினும், தமிழ்ப் பாடலில் அலகிடும்போது ஐகாரக் குறுக்கம் வரும் இடங்களில் அது குறில் (லகு) என்று கொள்ளப்படும்.)


உதாரணம்: - லிங்காஷ்டகம் - "ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்"


வி. சுப்பிரமணியன்

----------- --------------

Tuesday, October 23, 2018

04.57 - முதுகுன்றம் (விருத்தாசலம்) - சந்திரன் ஏறிய

04.57 - முதுகுன்றம் (விருத்தாசலம்) - சந்திரன் ஏறிய

2014-03-29

முதுகுன்றம் (திருமுதுகுன்றம் - விருத்தாசலம்)

----------------------------------

(12 பாடல்கள்)

(சந்தக் கலிவிருத்தம் - தானன தானன தானன தானா)

(லிங்காஷ்டகம் - "ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்")


முற்குறிப்பு - படிப்போர் வசதி கருதிச் சில இடங்களில் புணர்ச்சி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது.

1)

சந்திர னேறிய தாழ்சடை அண்ணல்

வந்தனை செய்தடை வானவ ருக்கா

முந்தடை யார்புர மூன்றையு மெய்த

மைந்தன வன்பதி மாமுது குன்றே.


சந்திரன் ஏறிய தாழ்சடை அண்ணல் - தாழும் சடையில் சந்திரனைச் சூடிய பெருமான்;

வந்தனை செய்து அடை வானவருக்கா - வணங்கிச் சரண்புகுந்த தேவர்களுக்காக; (வானவருக்கா - வானவர்களுக்காக; கடைக்குறை விகாரம்);

முந்து அடையார் புரம் மூன்றையும் எய்த - முன்பு பகைவர்களான அசுரர்களது முப்புரங்கள் எய்து அழித்த; (அடையார் - பகைவர்);

மைந்தன் அவன் பதி மா முதுகுன்றே - வீரன் அவன் உறையும் தலம் அழகிய திருமுதுகுன்றம்; (மைந்தன் - வீரன்); (பதி - தலம்);


2)

தேன்மல ரால்தொழு சீலர கத்தன்

கூன்மதி கூவிளம் ஆறணி கூத்தன்

ஆன்மிசை யான்அர வார்த்தவன் அங்கை

மான்மறி யன்பதி மாமுது குன்றே.


தேன்மலரால் தொழு சீலர் அகத்தன் - தேன்மலர்களால் வழிபாடு செய்யும் சீலர்கள் உள்ளத்தில் உறைபவன்;

கூன்-மதி, கூவிளம், று அணி கூத்தன் - வளைந்த திங்கள், வில்வம், கங்கை இவற்றை அணிந்த கூத்தன்;

ஆன்மிசையான் அரவு ஆர்த்தவன் - இடபவாகனன், பாம்பை அரைநாணாகக் கட்டியவன்; (சம்பந்தர் தேவாரம் - 2.80.5 - "வெள்ளையெருத்தின் மிசையார்"); (ஆர்த்தல் - கட்டுதல்; பிணித்தல்);

அங்கை மான்மறியன் பதி மா முதுகுன்றே - கையில் மான்கன்றை ஏந்தியவன் உறையும் தலம் அழகிய திருமுதுகுன்றம்;


3)

ஊன்படை வேடன தோர்கணு கந்தான்

மான்பர சார்கர னூலணி மார்பன்

கூன்பிறை கோளர வம்புனை கூத்தன்

வான்பணி கோன்பதி மாமுது குன்றே.


பதம் பிரித்து:

ஊன் படை வேடனது ஓர் கண் உகந்தான்;

மான் பரசு ஆர் கரன்; நூல் அணி மார்பன்;

கூன்-பிறை, கோள்-அரவம் புனை கூத்தன்;

வான் பணி கோன் பதி மா முதுகுன்றே.


ஊன் படை வேடனது ஓர் கண் உகந்தான் - கண்ணப்பருக்கு அருள்புரிந்ததைச் சுட்டியது;

மான் பரசு ஆர் கரன் - மானையும் மழுவையும் கையில் ஏந்தியவன்; ("மான் - பெரியோன்" என்று கொண்டும் பொருள் கொள்ளல் ஆம்); (பரசு - மழு); (ஆர்தல் - பொருந்துதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.127.1 - "பிரம புரத்துறை பெம்மா னெம்மான்"); (சுந்தரர் தேவாரம் - 7.25.8 - "பரசாருங் கரவா பதினெண் கணமுஞ்சூழ")

கூன் பிறை, கோள் அரவம் புனை கூத்தன் - வளைந்த பிறையையும் கொடிய பாம்பையும் அணிந்த கூத்தன்;

வான் பணி கோன் - தேவர்கள் போற்றும் தலைவன்;


4)

மும்மத வெங்கரி முன்னுரி செய்தான்

அம்மதி சூடிய செஞ்சடை அண்ணல்

விம்மிய வானவர் உய்ந்திட நஞ்சுண்

மைம்மிட றன்பதி மாமுது குன்றே.


மும்மத வெங்கரி முன் உரி செய்தான் - மும்மதங்களையுடைய கொடிய யானையின் தோலை முன்பு உரித்தவன்;

அம்மதி - அம் மதி - அழகிய திங்கள்;

விம்முதல் - தேம்பி அழுதல்; வருந்துதல்;

நஞ்சு உண் மைம் மிடறன் - விடத்தை உண்ட நீலகண்டன்;


5)

பன்னிய வன்மறை பால்மதி பாம்பு

துன்னிய சென்னியன் நீறணி தூயன்

உன்னிய வர்க்கருள் உத்தமன் என்றும்

மன்னிய வன்பதி மாமுது குன்றே.


பன்னியவன் மறை - வேதங்களைப் பாடியவன்; (பன்னுதல் - பாடுதல்);

பால்மதி பாம்பு துன்னிய சென்னியன் - பால் போன்ற வெண்திங்களும் பாம்பும் நெருங்கித் திகழ்கின்ற முடி உடையவன்; (துன்னுதல் - பொருந்துதல்; செறிதல்);

நீறு அணி தூயன் - திருநீற்றைப் பூசிய பரிசுத்தன்;

உன்னியவர்க்கு அருள் உத்தமன் - தன்னை எண்ணிப் போற்றும் அன்பர்களுக்கு அருள்புரியும் உத்தமன்; (உன்னுதல் - நினைதல்; எண்ணுதல்;);

என்றும் மன்னியவன் - என்றும் நிலைத்து இருப்பவன்;


6)

செஞ்சுட ரார்திரு மேனியன் அஞ்சொல்

வஞ்சியை அன்பொடு வாம(ம்)ம கிழ்ந்தான்

அஞ்சல ளித்திடு(ம்) மஞ்சன கண்டன்

வஞ்சமி லான்பதி மாமுது குன்றே.


செஞ்சுடர் ஆர் திரு மேனியன் - இளஞாயிறுபோல் திகழும் திருமேனி உடையவன்;

அஞ்சொல் வஞ்சியை அன்பொடு வாமம் மகிழ்ந்தான் - அழகிய மொழி பேசும், கொடி போன்ற உமையை இடப்பாகமாக விரும்பியவன்;

அஞ்சல் அளித்திடும், மஞ்சு அன கண்டன் - அபயம் அளிக்கின்ற, மேகம் போல் திகழும் நீலகண்டன்;

வஞ்சம் இலான் - ஒளித்தல் இல்லாதவன்; - வரங்களை வாரி வழங்குபவன்;


7)

கோல்வளை யாள்கொழு நன்மணி மார்பின்

மேல்விட நாகமு(ம்) மேவிடும் ஈசன்

கால்வெளி மண்ணெரி நீரென ஆனான்

மால்விடை யான்பதி மாமுது குன்றே.


கோல்வளையாள் கொழுநன் - திரண்ட வளையல்களை அணிந்த உமைக்குக் கணவன்; (கோல் - திரட்சி); (கொழுநன் - கணவன்); (திருவாசகம் - திருத்தெள்ளேணம் - 8.11.20 - "கோல்வளையாள் நலம்பாடி");

மணி மார்பின்மேல் விட-நாகமும் மேவிடும் ஈசன் - பவளம் போன்ற அழகிய மார்பின்மேல் விஷப்பாம்பும் திகழும் இறைவன்; (மணி - பவளம்; அழகு); (மேவுதல் - பொருந்துதல்; விரும்புதல்); (உம் - எச்சவும்மை; அசை என்றும் கொள்ளல் ஆம்);

கால் வெளி மண் எரி நீர் என ஆனான் - காற்று, ஆகாயம், நிலம், நெருப்பு, நீர் என்று ஐம்பூதங்களாக ஆனவன்; (பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்ற பஞ்சபூதங்களின் முறை யாப்பு நோக்கி மாறிவந்தது);

மால் விடையான் - பெரிய இடபத்தை வாகனமாக உடையவன்;


8)

தேர்விட வெற்பையெ டுத்தவன் அஞ்ச

ஓர்விர லூன்றிநெ ரித்திசை கேட்டுப்

பேர்தரு பிஞ்ஞகன் உண்பலி தேரும்

வார்சடை யான்பதி மாமுது குன்றே.


தேர் விட வெற்பைடுத்தவன் அஞ்ச ஓர் விரல் ஊன்றி நெரித்து - (கீழே இறங்கிய தன்) தேரை மீண்டும் வானில் பறக்கச்செய்யும் பொருட்டுக் கயிலைமலையைப் பெயர்த்த தசமுகன் அஞ்சும்படி ஒரு விரலை ஊன்றி அவனை நசுக்கி;

இசை கேட்டுப் பேர் தரு பிஞ்ஞகன் - பின், அவன் இசைபாடிப் போற்றியதைக் கேட்டு இரங்கி, அவனுக்கு இராவணன் (அழுதவன்) என்ற பெயரைத் தந்து அருள்புரிந்தவன், தலைக்கோலம் உடையவன்; (சம்பந்தர் தேவாரம் - 1.11.8 - "பின்னைப் பணிந்தேத்தப் பெருவாள் பேரொடுங் கொடுத்த");

உண்பலி தேரும் வார் சடையான் - பிச்சை ஏற்கின்ற, நீள்சடை உடையவன்; (திருவாசகம் - திருக்கோத்தும்பி - 8.10.2 - "உண்பலிதேர் அம்பலவன்");


9)

ஆழ்கட லான்அல ரான்அறி யாத

கேழ்கிள ருந்தழல் ஆனவன் அன்பர்

ஊழ்வினை தீர்த்தருள் உத்தமன் இந்து

வாழ்சடை யான்பதி மாமுது குன்றே.


ஆழ்கடலான் அலரான் அறியாத - ஆழமான கடல்மேல் இருக்கும் திருமாலும் மலர்மேல் இருக்கும் பிரமனும் அறியாத;

கேழ் கிளரும் தழல் ஆனவன் - ஒளி மிக்க ஜோதி ஆனவன்; (கேழ் - ஒளி); (கிளர்தல் - வளர்தல்; மிகுதல்);

அன்பர் ஊழ்வினை தீர்த்தருள் உத்தமன் - பக்தர்களது பழவினையைத் தீர்த்து அருள்கின்ற உத்தமன்;

இந்து வாழ் சடையான் - திங்கள் தங்குகின்ற சடையை உடையவன்; (இந்து - சந்திரன்);


10)

புந்தியி லார்பல பொய்யுரை சொல்லி

நிந்தனை செய்தலை நீசரை நீங்கும்

வந்தனை செய்தடை மாணிபி ழைக்க

வந்தப ரன்பதி மாமுது குன்றே.


புந்தி இலார், பல பொய்யுரை சொல்லி நிந்தனை செய்து அலை நீசரை நீங்கும் - அறிவற்றவர்களும் பல பொய்களைச் சொல்லி இகழ்ந்து திரிகின்றவர்களுமான கீழோர்களை விட்டு அகலுங்கள்; (புந்தி - அறிவு);

வந்தனை செய்து அடை மாணி பிழைக்க வந்த பரன் - வழிபாடு செய்து அடைக்கலம் புகுந்த மார்க்கண்டேயர் உயிர் பிழைக்கும்படி வந்து (காலனை உதைத்து) அருளிய பரமன்;


11)

கள்ளலர் ஏவிய காமன தாகம்

வெள்ளிய நீறது வாகவி ழித்தான்

உள்ளிடு பத்தரை உம்பரில் ஏற்றும்

வள்ளல வன்பதி மாமுது குன்றே.


கள்-லர் ஏவிய காமனது ஆகம் வெள்ளிய நீறுஅது ஆக விழித்தான் - தேன்மலர்களைக் கணையாக எய்த மன்மதனது உடலைச் சாம்பலாகும்படி நெற்றிக்கண்ணால் பார்த்தவன்;

உள்ளிடு பத்தரை உம்பரில் ஏற்றும் வள்ளல் அவன் - தன்னை மனத்தில் இருத்தித் தியானிக்கும் அன்பர்களை வானுலகில் ஏற்றுகின்ற வள்ளல்; (உள்ளுதல் - நினைத்தல்; உள் - மனம்; இடுதல் - வைத்தல்; ஒரு துணைவினை);


12)

மான்றிக ழுங்கர வாமழு வாளா

ஈன்றவ னேஉல கங்களை என்னை

ஏன்றுகொ ளாயென ஏத்திடு வார்க்கு

வான்றரு வான்பதி மாமுது குன்றே.


மான் திகழும் கரவா - மானைக் கையில் ஏந்தியவனே;

மழுவாளா - மாழுவாள் உடையவனே;

ஈன்றவனே உலகங்களை என்னை - எல்லா உலகங்களையும் படைத்தவனே; என் தந்தையே; (குறிப்பு: "ஈன்றவனே உலகங்களை, ஈன்றவனே என்னை" என்று இயைக்க);

"என்னை ஏன்றுகொளாய்" என ஏத்திடுவார்க்கு வான் தருவான் - "என்னை ஏற்றுக்கொள்வாயாக" என்று போற்றும் பக்தர்களுக்கு வானுலகம் தருபவன்; ("என்னை" என்ற சொல்லை இடைநிலைத்தீவகமாக இருபுறமும் இயைத்துப் பொருள்கொள்க);

பதி மாமுது குன்றே - அப்பெருமான் உறையும் தலம் திருமுதுகுன்றம்.


பிற்குறிப்பு : யாப்புக் குறிப்பு:

சந்தக் கலிவிருத்தம் - தானன தானன தானன தானா - என்ற சந்தம்.

வடமொழியில் இச்சந்தத்தை - தோதகம் - दोधकम् - என்ற பெயரால் சுட்டுகின்றனர்.

குரு - நெடில் / நெடில்+ஒற்று / குறில்+ஒற்று.

லகு - குறில் (ஒற்றுத் தொடராதபோது).

அடி ஈற்றில் வரும் லகுவும் குருவாகக் கருதப்படும்.

வடமொழியில் ஐகாரம் நெடில் (குரு) என்று கருதப்படினும், தமிழ்ப் பாடலில் அலகிடும்போது ஐகாரக் குறுக்கம் வரும் இடங்களில் அது குறில் (லகு) என்று கொள்ளப்படும்.)


உதாரணம்: - லிங்காஷ்டகம் - "ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்"


வி. சுப்பிரமணியன்

----------- --------------