Saturday, November 17, 2018

03.04.069 - சிவன் - முருகன் - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2007-06-08

3.4.69 - சிவன் - முருகன் - சிலேடை

-------------------------------------------------------------

ஏறுமயில் வேலு மிருக்கும் அருணகிரி

கூறுடையான் கோவிலாக் குன்றாகும் - ஆறு

முகந்தெரியும் கைஏந்தி முன்பணிபத் தர்க்கிச்

சகந்தருமீ சன்முருகன் தான்!


சொற்பொருள்:

ஏறுமயில் வேலுமிருக்கும் - 1. ஏறும் அயில் வேலும் இருக்கும்; / 2. ஏறு மயில் வேலும் இருக்கும்;

ஏறு - 1. இடபம்; எருது; / 2. பல விலங்குகளின் ஆண்;

அயில் - கூர்மை;

ஏறு மயில் - ஆண் மயில்; சிறந்த மயில்; ஏறுகின்ற மயில்;

வேல் - 1. சூலம்; / 2. வேலாயுதம்;

அருணகிரி - 1. அண்ணாமலை; / 2. அருணகிரிநாதர் ;

கூறுடையான் - கூறு உடையான்;

கூறு - 1. பாகம்; பங்கு; / 2. கூறுதல் - சொல்லுதல்;

உடையான் - 1. உடையவன்; / 2. சுவாமி;

கோவிலா - 1. கோ வி[ல்]லாக; கோ இ[ல்]லா; / 2. கோவிலாக;

கோ - தலைவன்;

ஆறுமுகந்தெரியும் - 1. ஆறும் உகந்து எரியும்; / 2. ஆறு முகம் தெரியும்;

எரி - நெருப்பு;

இச்சகம் - 1. விருப்பம்; / 2. இந்த உலகம் (இச்-சகம்);


முருகன்:

ஏறு மயில் வேலும் இருக்கும் - ஆண்மயில் வாகனம், வேல் இவற்றை உடைய;

அருணகிரி கூறு உடையான் - அருணகிரிநாதர் துதிக்கும் சுவாமி;

கோவிலாக் குன்று ஆகும் - (அவனுக்குக்) கோயிலாகக் குன்று ஆகும்; (குன்றுதோறாடும் குமரன்);

ஆறுமுகம் தெரியும் - ஆறுமுகம் காணலாம்;

கை ஏந்தி முன் பணி பத்தர்க்கு இச்-சகம் தரும் - (வரம் வேண்டிக்) கையை ஏந்தி முன்னால் பணிகின்ற பக்தர்களுக்கு இவ்வுலகை ஆளத் தருகின்றவன்;


சிவன்:

ஏறும் அயில் வேலும் இருக்கும் - இடப வாகனமும், கூரான சூலமும் உடையவன்;

அருணகிரி - அண்ணாமலை; (அண்ணாமலையே இறைவன் திருமேனி ஆகும்)

கூறு உடையான் - பார்வதியை ஒரு கூறாக உடையவன்;

கோ வி[ல்]லாக் குன்று ஆகும் - (முப்புரம் எரித்தபொழுது) தலைவனுடைய வில்லாக மேரு மலை ஆகும்; ("கோ இலாக் குன்று ஆகும் - தனக்கு ஒரு தலைவன் இல்லாத மலை போன்றவன்" என்றும் பொருள்கொள்ளலாம்);

ஆறும் உகந்து எரியும் கை ஏந்தி - (சடையில்) கங்கையையும் விரும்பித் தரித்துக், கையில் தீயையும் ஏந்துபவன்;

முன் பணி பத்தர்க்கு இச்சகம் தரும் - முன்னால் பணிகிற பக்தர்களுக்கு அவர்கள் விரும்பியவற்றைத் தருகின்றவன்;


குறிப்புகள்:

1) அண்ணாமலையாகி நிற்பது - சம்பந்தர் தேவாரம் - திருமுறை 3.108.9 - "மாலு(ம்) நான்முகனும் காண்பரியதோர் கோல மேனிய தாகிய குன்றமே");

2) "வில்லாக" என்பது இடைக்குறை, கடைக்குறையாக "விலா";

3) சிவனுக்கும் ஆறுமுகம் இருப்பதை இந்தத் திருமந்திரப் பாடல் விளக்கத்தில் காணலாம்:

"எந்தை பிரானுக் கிருமூன்று வட்டமாய்த் தந்தைதன் முன்னமே சண்முகன் தோன்றலால்" (சிவபிரானுக்கு இயல்பாகவே ஆறு முகம் இருப்பினும் அவற்றுள் அதோமுகம் தோன்றாதிருக்க)

எனவே, சிவனுக்கும் ஆறுமுகம் என்றும் "ஆறுமுகந்தெரியும்" என்ற தொடரைப் பொருள்கொள்ளலாம்.

4) ஈசனைக் 'குன்றே', 'மலையே' என்று சொல்லும் தேவாரப் பாடல்களுக்குச் சில உதாரணங்கள்:

அப்பர் தேவாரம் - 6.32.2 - "செங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி".

சுந்தரர் தேவாரம் - 7.21.9 - "திரு மேற்றளி உறையும் மலையே உன்னையல்லால் மகிழ்ந்தேத்த மாட்டேனே".


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment