2019-02-18
P.465 - மாடம்பாக்கம்
(தாம்பரம் அருகுள்ள தலம்)
---------------------------------
(எண்சீர் விருத்தம் - விளம் விளம் மா தேமா - அரையடி வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.8.1 - "புண்ணியர் பூதியர் பூதநாதர்")
1)
இதழிவண் கூவிளம் வன்னி தூவி .. இருக்கொடு தோத்திரம் பலவும் ஓதிப்
பதமலர் போற்றிய பகீர தற்காப் .. பாய்புனற் கங்கையைச் சடையில் ஏற்றான்
முதலொடு முடிவுமி லாத மூர்த்தி .. முக்கணன் மலைமகள் அஞ்சு மாறு
மதகரி உரித்தவன் மாடம் பாக்கம் .. மகிழ்ந்துறை தேனுபு ரீசன் தானே.
இதழி வண்-கூவிளம் வன்னி தூவி இருக்கொடு தோத்திரம் பலவும் ஓதிப் - கொன்றைமலர், வளமையான வில்வம், வன்னி இவற்றையெல்லாம் தூவி, வேதமந்திரங்கள், தோத்திரங்கள் எல்லாம் சொல்லி;
பதமலர் போற்றிய பகீரதற்காப் பாய்-புனல் கங்கையைச் சடையில் ஏற்றான் - திருவடித்தாமரையை வழிபட்ட பகீரதனுக்காகப் பாய்ந்து வந்த கங்கையைச் சடையில் ஏற்றவன்;
முதலொடு முடிவும் இலாத மூர்த்தி முக்கணன் - ஆதியும் அந்தமும் இல்லாத இறைவன், முக்கண்ணன்;
மலைமகள் அஞ்சுமாறு மதகரி உரித்தவன் - உமாதேவி அஞ்சும்படி மதயானையின் தோலை உரித்தவன்;
மாடம்பாக்கம் மகிழ்ந்து உறை தேனுபுரீசன்தானே - மாடம்பாக்கத்தில் விரும்பி உறைகின்ற தேனுபுரீசன்; (* தேனுபுரீசன் - மாடம்பாக்கத்தில் ஈசன் திருநாமம்);
2)
ஆரணம் ஓதிவ ணங்கி நின்ற .. அருமறைச் சிறுவன தாவி காத்த
பூரணன் பூங்கணை எய்த வேளைப் .. பொடிபட நோக்கிய நெற்றிக் கண்ணன்
காரணன் மெல்லிடை அங்க யற்கண் .. காரிகை அஞ்சிடக் கான கத்து
வாரணம் உரித்தவன் மாடம் பாக்கம் .. மகிழ்ந்துறை தேனுபு ரீசன் தானே.
ஆரணம் ஓதி வணங்கி நின்ற அருமறைச் சிறுவனது ஆவி காத்த பூரணன் - வேதம் ஓதி வழிபட்ட மார்க்கண்டேயரது உயிரைக் காத்த முழுமுதற்பொருள்;
பூங்கணை எய்த வேளைப் பொடிபட நோக்கிய நெற்றிக்கண்ணன் - மலர்க்கணை எய்த மன்மதனைச் சாம்பலாகும்படி பார்த்த நெற்றிக்கண்ணன்;
காரணன் - அனைத்திற்கும் மூலமானவன்;
மெல்லிடை அங்கயற்கண் காரிகை அஞ்சிடக் கானகத்து வாரணம் உரித்தவன் - சிற்றிடையும் அழகிய கயல்மீன் போன்ற கண்ணும் உடைய உமாதேவி அஞ்சும்படி காட்டுயானையின் தோலை உரித்தவன்;
மாடம்பாக்கம் மகிழ்ந்து உறை தேனுபுரீசன்தானே - மாடம்பாக்கத்தில் விரும்பி உறைகின்ற தேனுபுரீசன்;
3)
சாகரந் தனிலெழு நஞ்சு கண்டு .. தாளிணை தொழுசுரர் உய்ய உண்டு
மேகநி றந்திகழ் மணிமி டற்றன் .. விரிசடை மேலிளம் திங்க ளோடு
நாகமும் வைத்தவன் பூத நாதன் .. நரைவிடை ஊர்தியன் நாரி அஞ்ச
மாகரி உரித்தவன் மாடம் பாக்கம் .. மகிழ்ந்துறை தேனுபு ரீசன் தானே.
சாகரம்-தனில் எழு நஞ்சு கண்டு தாளிணை தொழு சுரர் உய்ய உண்டு - கடலில் தோன்றிய ஆலகாலத்தைக் கண்டு அஞ்சித் திருவடியை வழிபட்ட தேவர்கள் பிழைக்கும்படி அதனைத் தான் உண்டதனால்;
மேகநிறம் திகழ் மணி மிடற்றன் - மேகம் போல் கரிய நிறம் திகழும் நீலகண்டத்தை உடையவன்;
விரிசடைமேல் இளம்-திங்களோடு நாகமும் வைத்தவன் - விரிந்த சடையின்மேல் இளம்பிறையையும் பாம்பையும் அணிந்தவன்;
பூத-நாதன் - பூதகணங்களுக்குத் தலைவன்;
நரைவிடை ஊர்தியன் - வெண்ணிற இடபத்தை ஊர்தியாக உடையவன்;
நாரி அஞ்ச மா-கரி உரித்தவன் - உமாதேவி அஞ்சும்படி பெரிய யானையின் தோலை உரித்தவன்;
மாடம்பாக்கம் மகிழ்ந்து உறை தேனுபுரீசன்தானே - மாடம்பாக்கத்தில் விரும்பி உறைகின்ற தேனுபுரீசன்;
4)
குழைவுறு மனத்தொடு பூவும் நீரும் .. கொண்டடி இணைதனைப் போற்றி செய்வார்
பழவினை தீர்த்தருள் செய்யும் பண்பன் .. பாய்புலித் தோலினன் பால்வெண் ணீற்றன்
அழகிய உமையொரு பாகம் ஆகும் .. அற்புதன் வெற்புவில் ஏந்து வீரன்
மழவிடை ஊர்தியன் மாடம் பாக்கம் .. மகிழ்ந்துறை தேனுபு ரீசன் தானே.
குழைவுறு மனத்தொடு பூவும் நீரும் கொண்டு அடி-இணைதனைப் போற்றிசெய்வார் பழவினை தீர்த்தருள் செய்யும் பண்பன் - மனம் உருகிப் பூவாலும் நீராலும் இரு-திருவடிகளை வழிபடும் பக்தர்களது பழைய வினைகளையெல்லாம் தீர்த்து அருளும் குணம் உடையவன்;
பாய்-புலித் தோலினன் - பாயும் புலியின் தோலை ஆடையாக உடையவன்;
பால்வெண்ணீற்றன் - பால் போல் வெண்மை திகழும் திருநீற்றைப் பூசியவன்;
அழகிய உமை ஒரு பாகம் ஆகும் அற்புதன் - அழகிய உமையம்மையை ஒரு பாகமாக உடைய அற்புதன்;
வெற்புவில் ஏந்து வீரன் - மேருமலையை வில்லாக ஏந்திய வீரன்;
மழவிடை ஊர்தியன் - இளைய இடபத்தை ஊர்தியாக உடையவன்;
மாடம்பாக்கம் மகிழ்ந்து உறை தேனுபுரீசன்தானே - மாடம்பாக்கத்தில் விரும்பி உறைகின்ற தேனுபுரீசன்;
5)
கூன்பிறை கூவிளம் குரவம் கொன்றை .. குளிர்புனல் அணிந்தவன் தேவர் ஏத்தும்
கோன்புலித் தோலினை ஆடை யாகக் .. கொண்டவன் நூல்திகழ் கோல மார்பன்
மான்புரை நோக்கியை வாமம் வைத்த .. மன்னவன் வில்லென மலைவ ளைத்து
வான்புரம் எய்தவன் மாடம் பாக்கம் .. மகிழ்ந்துறை தேனுபு ரீசன் தானே.
கூன்பிறை கூவிளம் குரவம் கொன்றை குளிர்புனல் அணிந்தவன் - வளைந்த சந்திரன், வில்வம், குராமலர், கொன்றைமலர், கங்கை இவற்றையெல்லாம் அணிந்தவன்;
தேவர் ஏத்தும் கோன் - தேவர்களெல்லாம் வணங்கும் தலைவன்;
புலித்தோலினை ஆடையாகக் கொண்டவன் - புலித்தோலை அரையில் ஆடையாக உடையவன்;
நூல் திகழ் கோல மார்பன் - அழகிய மார்பில் முப்புரிநூல் திகழ்பவன்;
மான் புரை நோக்கியை வாமம் வைத்த மன்னவன் - மான் போலப் பார்வையுடைய உமையை இடப்பக்கம் ஏற்ற மன்னன்; (புரைதல் - ஒத்தல்);
வில் என மலை வளைத்து வான்-புரம் எய்தவன் - மேருமலையை வில்லாக வளைத்து பெரிய முப்புரங்களை எய்தவன்;
மாடம்பாக்கம் மகிழ்ந்து உறை தேனுபுரீசன்தானே - மாடம்பாக்கத்தில் விரும்பி உறைகின்ற தேனுபுரீசன்;
6)
சுறவணி கொடியுடை வேள தாகம் .. சுடுபொடி ஆகிட நோக்க வல்லான்
குறமகள் கொழுநனைப் பெற்ற அத்தன் .. குற்றமில் பெற்றியன் குரவ னாகி
அறமுரை செய்திட ஆல நீழல் .. அமர்ந்தவன் அடியவர் வாழ அன்று
மறலியைச் செற்றவன் மாடம் பாக்கம் .. மகிழ்ந்துறை தேனுபு ரீசன் தானே.
சுறவு அணி கொடியுடை வேளது ஆகம் சுடுபொடி ஆகிட நோக்க வல்லான் - மகரக்கொடியை உடைய மன்மதனது உடல் சாம்பல் ஆகும்படி நெற்றிக்கண்ணால் பார்த்தவன்;
குறமகள் கொழுநனைப் பெற்ற அத்தன் - வள்ளிகணவனான முருகனைப் பெற்ற தந்தை;
குற்றம் இல் பெற்றியன் - குற்றமற்றவன்; (பெற்றி - இயல்பு; தன்மை; பெருமை);
குரவன் ஆகி அறம் உரைசெய்திட ஆல-நீழல் அமர்ந்தவன் - குருவாகிக் கல்லாலமரத்தின்கீழ் இருப்பவன்;
அடியவர் வாழ அன்று மறலியைச் செற்றவன் - மார்க்கண்டேயர் வாழ்வதற்காக முன்னர் இயமனை உதைத்தவன்; (மறலி - இயமன்);
மாடம்பாக்கம் மகிழ்ந்து உறை தேனுபுரீசன்தானே - மாடம்பாக்கத்தில் விரும்பி உறைகின்ற தேனுபுரீசன்;
7)
சிலந்திசெய் பணியுகந் துலகம் ஆளும் .. செங்கணன் என்றொரு பிறவி தந்தான்
சலந்தரன் உடலினை வெட்டு மாறு .. தரைமிசைச் சக்கரம் தனைவ ரைந்தான்
அலந்தடி வீழ்தரு திங்கள் தன்னை .. அஞ்சடை அதன்மிசை ஒளிர வைத்தான்
வலந்திகழ் மழுவினன் மாடம் பாக்கம் .. மகிழ்ந்துறை தேனுபு ரீசன் தானே.
சிலந்தி செய் பணி உகந்து உலகம் ஆளும் செங்கணன் என்று ஒரு பிறவி தந்தான் - திருவானைக்காவில் சிலந்தி செய்த தொண்டினைக் கண்டு மகிழ்ந்து செங்கட்சோழன் என்ற அரசனாகப் பிறப்பித்தவன்;
சலந்தரன் உடலினை வெட்டுமாறு தரைமிசைச் சக்கரம் தனை வரைந்தான் - ஜலந்தராசுரனது உடலை வெட்டி அவனை அழிக்கும்படி தரைமேல் ஒரு சக்கரத்தை வரைந்தவன்;
அலந்து அடி வீழ்தரு திங்கள்-தன்னை அஞ்சடை அதன்மிசை ஒளிர வைத்தான் - வருந்திவந்து திருவடியில் விழுந்த சந்திரனை அழகிய சடையின்மேல் ஒளிவீசும்படி வைத்தவன்;
வலம் திகழ் மழுவினன் - வெற்றியுடைய மழுவாயுதத்தை ஏந்தியவன்;
மாடம்பாக்கம் மகிழ்ந்து உறை தேனுபுரீசன்தானே - மாடம்பாக்கத்தில் விரும்பி உறைகின்ற தேனுபுரீசன்;
8)
தோள்மலை போல்திகழ் வல்ல ரக்கன் .. தூக்கிய வரைமிசை விரலை ஊன்றித்
தாள்மலர்ப் புகழ்தனைப் பாட வைத்த .. தயைமலி சங்கரன் வாளி னோடு
நாள்மிகத் தந்தவன் நக்க னாகி .. நாரியர் இடுபலிக் குழலும் ஏந்தல்
வாள்மதிக் கண்ணியன் மாடம் பாக்கம் .. மகிழ்ந்துறை தேனுபு ரீசன் தானே.
* இலக்கணக் குறிப்பு - "ள் + ம = ண்ம" என்று புணர்ச்சியில் திரியும்.
தோள் மலை போல் திகழ் வல்-அரக்கன் தூக்கிய வரைமிசை - மலைபோல் திகழும் புஜங்களை உடைய வலிய அரக்கனான இராவணன் தூக்கிய கயிலைமலையின்மேல்; (வரை - மலை);
விரலை ஊன்றித் தாள்மலர்ப்-புகழ்தனைப் பாடவைத்த தயை மலி சங்கரன் - திருப்பாதவிரல் ஒன்றை ஊன்றி (அவனை நசுக்கி), அவனைத் தன் திருவடித்தாமரையின் புகழைப் பாடச்செய்த அருள் மிகுந்த சங்கரன்;
வாளினோடு நாள் மிகத் தந்தவன் - பின்னர் அவனுக்கு இரங்கிச் சந்திரஹாஸம் என்ற வாளையும் நீண்ட ஆயுளையும் தந்தவன்;
நக்கன் ஆகி நாரியர் இடுபலிக்கு உழலும் ஏந்தல் - திகம்பரன் ஆகிப், பெண்கள் இடும் பிச்சைக்குத் திரிகின்ற பெருமை உடையவன்;
வாள்-மதிக் கண்ணியன் - ஒளியுடைய சந்திரனைச் சடையில் கண்ணிமாலை போல் அணிந்தவன்;
மாடம்பாக்கம் மகிழ்ந்து உறை தேனுபுரீசன்தானே - மாடம்பாக்கத்தில் விரும்பி உறைகின்ற தேனுபுரீசன்;
9)
நான்முகன் நாரணன் இவர்கள் நேடி .. நாணிவ ணங்கிட நின்ற சோதி
தேன்மலர்க் கொன்றைய லங்கல் மார்பன் .. செய்யவன் சினவிடை யேறி ஆவின்
பான்மகிழ்ந் தாடிய பரமன் கானில் .. பார்த்தனுக் கருளிய வேடன் சூலம்
மான்மறி தரித்தவன் மாடம் பாக்கம் .. மகிழ்ந்துறை தேனுபு ரீசன் தானே.
நான்முகன் நாரணன் இவர்கள் நேடி நாணி வணங்கிட நின்ற சோதி - பிரமனும் திருமாலும் அடிமுடி தேடிக் காணாது வெட்கி வழிபடும்படி ஓங்கி நின்ற ஜோதிவடிவினன்;
தேன்மலர்க்-கொன்றை அலங்கல் மார்பன் - தேன் நிறைந்த கொன்றைமலர்-மாலையை மார்பில் அணிந்தவன்; (அலங்கல் - பூமாலை);
செய்யவன் - செம்மேனியன்;
சினவிடை ஏறி - சினம் உடைய இடபத்தை வாகனமாக உடையவன்;
ஆவின் பால் மகிழ்ந்து ஆடிய பரமன் - பசுவின் பாலால் அபிஷேகத்தை விரும்பிய பரமன்; (* இலக்கணக் குறிப்பு - "ல் + ம = ன்ம" என்று புணர்ச்சியில் திரியும்).
கானில் பார்த்தனுக்கு அருளிய வேடன் - காட்டில் அருச்சுனனுக்கு வேடன் வடிவில் சென்று அருளியவன்;
சூலம் மான்மறி தரித்தவன் - திரிசூலத்தையும் மான்கன்றையும் ஏந்தியவன்;
மாடம்பாக்கம் மகிழ்ந்து உறை தேனுபுரீசன்தானே - மாடம்பாக்கத்தில் விரும்பி உறைகின்ற தேனுபுரீசன்;
10)
பொய்யினை நெஞ்சினில் தாங்கி என்றும் .. புறனுரை செய்பவர்க் கருள கில்லான்
மெய்யினில் வெண்பொடி பூசி நின்று .. விரைகமழ் பூக்களைத் தூவி வாழ்த்திக்
கையினைக் கூப்பிய நேயர் நெஞ்சில் .. கருதிய யாவையும் நல்கும் வள்ளல்
மையணி மிடறினன் மாடம் பாக்கம் .. மகிழ்ந்துறை தேனுபு ரீசன் தானே.
பொய்யினை நெஞ்சினில் தாங்கி என்றும் புறனுரை செய்பவர்க்கு அருளகில்லான் - நெஞ்சில் பொய்யைத் தாங்கி எந்நாளும் பழிமொழிகளையே பேசுவார்க்கு அருளாதவன்;
மெய்யினில் வெண்பொடி பூசி நின்று, விரை கமழ் பூக்களைத் தூவி வாழ்த்திக் - உடம்பில் வெண்திருநீற்றைப் பூசி, மணம் கமழும் பூக்களைத் தூவி வாழ்த்தி;
கையினைக் கூப்பிய நேயர் நெஞ்சில் கருதிய யாவையும் நல்கும் வள்ளல் - கைகூப்பி வழிபடும் அடியவர்களுக்கு அவர்கள் விரும்பிய வரங்களையெல்லாம் அளிக்கும் வள்ளல்;
மை அணி மிடறினன் - நீலகண்டன்; (மிடறு - கண்டம்);
மாடம்பாக்கம் மகிழ்ந்து உறை தேனுபுரீசன்தானே - மாடம்பாக்கத்தில் விரும்பி உறைகின்ற தேனுபுரீசன்;
11)
துணிமதி சூடிய தேவ என்றும் .. சுடலையில் ஆடிய கூத்த என்றும்
அணியென அரவினை மார்பில் ஏற்ற .. அழகிய சங்கர என்றும் ஓதிப்
பணிபவர் இன்புற அபயம் நல்கிப் .. பழவினை தீர்ப்பவன் பரசு பாணி
மணியணி மிடறினன் மாடம் பாக்கம் .. மகிழ்ந்துறை தேனுபு ரீசன் தானே.
"துணி-மதி சூடிய தேவ" என்றும் - பிறையைச் சூடிய தேவனே என்றும்; (துணி - துண்டம்);
"சுடலையில் ஆடிய கூத்த" என்றும் - சுடுகாட்டில் ஆடும் கூத்தனே என்றும்;
"அணி என அரவினை மார்பில் ஏற்ற அழகிய சங்கர" என்றும் - ஆபரணமாகப் பாம்பினைத் திருமார்பில் தரித்த அழகிய சங்கரனே என்றும்;
ஓதிப் பணிபவர் இன்புற அபயம் நல்கிப் பழவினை தீர்ப்பவன் - பாடி வணங்கும் அன்பர்கள் இன்புறும்படி அவர்களுக்கு அபயம் அளித்து அவர்களது பழைய வினைகளையெல்லாம் தீர்ப்பவன்;
பரசு-பாணி - மழுவாயுதத்தை ஏந்தியவன்;
மணி அணி மிடறினன் - நீலகண்டன்; (மிடறு - கண்டம்);
மாடம்பாக்கம் மகிழ்ந்து உறை தேனுபுரீசன்தானே - மாடம்பாக்கத்தில் விரும்பி உறைகின்ற தேனுபுரீசன்;
பிற்குறிப்பு: யாப்புக் குறிப்பு :
எண்சீர் விருத்தம் - விளம் விளம் மா தேமா - என்ற அரையடி வாய்பாடு.
அரையடிச் சந்தம் - தானன தானன தான தானா.
விளச்சீர் வரும் இடத்தில் மாங்காய்ச்சீரோ மாச்சீரோ வரலாம். விளச்சீர் வரும் இடத்தில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்.
சம்பந்தர் தேவாரம் - 1.8.1 - "புண்ணியர் பூதியர் பூத நாதர்".
காரைக்கால் அம்மையார் அருளிய மூத்த திருப்பதிகம் - 11.2.1 - "கொங்கை திரங்கி நரம்பெ ழுந்து" - இவ்வமைப்பு என்று கருதுகின்றேன்.
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment