2019-02-14
P.464 - உத்தரகோசமங்கை
-------------------------------
(சந்தக் கலிவிருத்தம் - தானன தானதனா தனதானன தானதனா;
"தானதனா" என்பது "தானதானா" என்றும் வரலாம்)
(சம்பந்தர் தேவாரம் - 3.57.1 - "விடையவன் விண்ணுமண்ணும்")
(சுந்தரர் தேவாரம் - 7.100.1 - "தானெனை முன்படைத்தான்")
1)
மேவலர் முப்புரமும் விழவோர்மலை வில்வளைத்த
காவல கண்ணுதலே கமழ்புன்சடை மேற்பிறையாய்
சேவமர் செம்பெருமான் திருவுத்தர கோசமங்கைச்
சேவக னேஅடிகேள் சிறியேன்வினை தீர்த்தருளே.
மேவலர் முப்புரமும் விழ ஓர் மலை வில் வளைத்த காவல - பகைவர்களது முப்புரங்களும் அழியும்படி ஒரு மலையை வில்லாக வளைத்த அரசனே; (மேவலர் - பகைவர்);
கண்ணுதலே - நெற்றிக்கண்ணனே;
கமழ் புன்சடைமேல் பிறையாய் - கமழும் செஞ்சடைமேல் திங்களை அணிந்தவனே;
சே அமர் செம்பெருமான் - இடபவாகனைத்தை விரும்பிய செம்மேனிப் பெருமானே; (சே - எருது);
திருவுத்தரகோசமங்கைச் சேவகனே - திருஉத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருக்கும் வீரனே;
அடிகேள் - சுவாமீ; (அடிகள் என்ற சொல் விளியில் அடிகேள் என்று ஆகும்);
சிறியேன் வினை தீர்த்தருளே - சிறுமைகள் மிக்க அடியேனது வினைகளைத் தீர்த்து அருள்வாயாக;
2)
தீயினும் வெம்மையனே தினமேத்திடும் அன்பருக்குத்
தாயினு(ம்) நல்லவனே தனிவெள்விடை ஊர்தியினாய்
சேயிழை பங்கினனே திருவுத்தர கோசமங்கை
மேயவ னேவிமலா வினையாயின தீர்த்தருளே.
தீயினும் வெம்மையனே - தீயைக்காட்டிலும் வெம்மை மிக்கவனே;
தினம் ஏத்திடும் அன்பருக்குத் தாயினும் நல்லவனே - நாள்தோறும் வழிபடும் பக்தர்களுக்குத் தாயைக்காட்டிலும் நன்மை புரிபவனே;
தனி வெள்விடை ஊர்தியினாய் - ஒப்பற்ற வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவனே; (தனி - ஒப்பற்ற);
சேயிழை பங்கினனே - உமைபங்கனே; (சேயிழை - பெண்);
திருவுத்தரகோசமங்கை மேயவனே - திருஉத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருப்பவனே;
விமலா - தூயவனே;
வினையாயின தீர்த்தருளே - அடியேனது வினைகளையெல்லாம் தீர்த்து அருள்வாயாக;
3)
மந்திர நான்மறையாய் மணிமார்பினில் நூலினனே
சந்திர சேகரனே தலைமாலை அணிந்தவனே
செந்தழல் மேனியினாய் திருவுத்தர கோசமங்கை
அந்தண னேஅடிகேள் அடியேன்வினை தீர்த்தருளே.
மந்திர நான்மறையாய் - மந்திரமாக விளங்கும் நால்வேதப்பொருளே;
மணி-மார்பினில் நூலினனே - அழகிய பவளம் போன்ற மார்பில் முப்புரிநூல் அணிந்தவனே; (மணி - அழகு; பவளம்);
சந்திர-சேகரனே - பிறையைச் சூடியவனே;
தலைமாலை அணிந்தவனே - மண்டையோட்டு மாலையை அணிந்தவனே;
செந்தழல் மேனியினாய் - செந்தீப்போல் செம்மேனி உடையவனே;
திருவுத்தரகோசமங்கை அந்தணனே - திருஉத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருக்கும் அருளுடையவனே;
அடிகேள் - சுவாமீ;
அடியேன் வினை தீர்த்தருளே - அடியேனது வினைகளைத் தீர்த்து அருள்வாயாக;
4)
ஆலமர் மாமிடற்றாய் அணிமங்கள நாயகியோர்
பாலமர் பண்பினனே படுகானிடை ஆடலினாய்
சேலுகள் வாவிதிகழ் திருவுத்தர கோசமங்கை
நாலு மறைப்பொருளே நலிதீவினை தீர்த்தருளே.
ஆல் அமர் மா-மிடற்றாய் - ஆலகாலத்தை விரும்பி உண்ட அழகிய நீலகண்டனே;
அணி மங்களநாயகி ஓர் பால் அமர் பண்பினனே - அழகிய மங்களநாயகியைத் திருமேனியில் ஒரு பக்கம் பங்காக விரும்பியவனே; (* மங்களநாயகி - இத்தலத்து இறைவி திருநாமம்);
படுகானிடை ஆடலினாய் - சுடுகாட்டில் கூத்தாடுபவனே;
சேல் உகள் வாவி திகழ் திருவுத்தரகோசமங்கை நாலுமறைப்பொருளே - சேல்மீன்கள் பாயும் குளம் திகழும் திருஉத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருக்கும் வேதநாயகனே;
நலி-தீவினை தீர்த்தருளே - அடியேனை வருத்துகின்ற தீவினைகளைத் தீர்த்து அருள்வாயாக;
5)
வெஞ்சினக் காலனுயிர் விடவீசிய பூங்கழலாய்
மஞ்சடை மாகயிலை மலைமேலுறை மன்னவனே
செஞ்சடை மேற்பிறையாய் திருவுத்தர கோசமங்கை
நஞ்சடை நன்மிடற்றாய் நலிவினை தீர்த்தருளே.
வெஞ்சினக் காலன் உயிர் விட வீசிய பூங்கழலாய் - கடுங்கோபமுடைய கூற்றுவனே இறக்கும்படி அவனை அழகிய மென்மையான திருவடியால் உதைத்தவனே;
மஞ்சு அடை மா கயிலைமலைமேல் உறை மன்னவனே - மேகம் அடைகின்ற அழகிய கயிலைமலையின்மேல் வீற்றிருக்கும் மன்னனே;
செஞ்சடைமேல் பிறையாய் - சிவந்த சடையின்மீது சந்திரனை அணிந்தவனே;
திருவுத்தரகோசமங்கை நஞ்சு அடை நன்-மிடற்றாய் - திருஉத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருக்கும், ஆலகாலத்தை உண்டு ஒளித்த நல்ல கண்டம் உடையவனே (நீலகண்டனே);
நலி-வினை தீர்த்தருளே - அடியேனை வருத்துகின்ற தீவினைகளைத் தீர்த்து அருள்வாயாக;
6)
உண்ணரு மாவிடத்தை ஒருநற்கனி போலநுங்கி
எண்ணிய இன்னமுதை இமையோர்க்கருள் செய்தவனே
திண்ணிய மாமதில்சூழ் திருவுத்தர கோசமங்கைப்
பெண்ணொரு பங்கினனே பிணிவல்வினை தீர்த்தருளே.
உண்ணரு மாவிடத்தை ஒரு நற்கனி போல நுங்கி - உண்ணலாகாத பெரிய நஞ்சை ஒரு நல்ல பழம்போல் அள்ளி விழுங்கி; (உண்ணரு - உண்ண அரு - தொகுத்தல் விகாரம்); ( நுங்குதல் - விழுங்குதல்);
எண்ணிய இன்னமுதை இமையோர்க்கு அருள்செய்தவனே - தேவர்கள் விரும்பிய இனிய அமுதினை அவர்களுக்கு அருள்புரிந்தவனே;
திண்ணிய மா-மதில்சூழ் திருவுத்தரகோசமங்கைப் பெண் ஒரு பங்கினனே - வலிய பெரிய மதிலால் சூழப்பெற்ற திருஉத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருக்கும் உமைபங்கனே;
பிணி-வல்வினை தீர்த்தருளே - அடியேனைப் பிணித்துள்ள வலிய வினைகளைத் தீர்த்து அருள்வாயாக;
7)
மறைமொழி நாவினனே மதவேளை எரித்தவனே
நறைமலர் நச்சரவம் நளிர்கங்கை அணிந்தவனே
சிறையளி ஆர்பொழில்சூழ் திருவுத்தர கோசமங்கை
உறைதரும் உத்தமனே உறுதீவினை தீர்த்தருளே.
மறைமொழி நாவினனே - வேதங்களைப் பாடியருளியவனே;
மதவேளை எரித்தவனே - மன்மதனை எரித்தவனே;
நறைமலர் நச்சரவம் நளிர்-கங்கை அணிந்தவனே - வாசமலர்கள், விஷப்பாம்பு, குளிர்ந்த கங்கை இவற்றையெல்லாம் அணிந்தவனே;
சிறை-அளி ஆர் பொழில் சூழ் திருவுத்தரகோசமங்கை உறைதரும் உத்தமனே - சிறகுகளையுடைய வண்டுகள் ஒலிக்கின்ற சோலைகளால் சூழப்பெற்ற திருஉத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருக்கும் உத்தமனே; (சிறை - சிறகு); (அளி - வண்டு); (ஆர்த்தல் - ஒலித்தல்); (தருதல் - ஒரு துணைவினை);
உறு-தீவினை தீர்த்தருளே - எனது மிகுந்த தீவினையைத் தீர்த்து அருள்வாயாக;
8)
சென்றரு வெற்பிடந்த சிதடன்முடி பத்துமிற
அன்றொரு தாள்விரலால் அடர்செய்திசை கேட்டவனே
தென்றலில் வாசமலி திருவுத்தர கோசமங்கை
நின்ற அருட்கடலே நினைவேன்வினை தீர்த்தருளே.
சென்று அரு-வெற்பு இடந்த சிதடன் முடி பத்தும் இற - ஓடிச்சென்று கயிலைமலையைப் பெயர்த்த அறிவிலியான இராவணனது பத்துத்தலைகளும் நொறுங்கும்படி; (சிதடன் - அறிவிலி);
அன்று ஒரு தாள்விரலால் அடர்செய்து இசை கேட்டவனே - அன்று திருப்பாதவிரல் ஒன்றால் அவனை நசுக்கி, அவன் பாடிய இசையைக் கேட்டருளியவனே; (சம்பந்தர் தேவாரம் - 3.88.8 - "இலங்கையர் தலைவனைப் பண்பட வரைதனில் அடர்செய்த பைங்கழல்");
தென்றலில் வாசம் மலி திருஉத்தரகோசமங்கை நின்ற அருட்கடலே - தென்றலில் மணம் கமழும் திருஉத்தரகோசமங்கையில் நீங்காமல் உறைகின்ற பேரருளாளனே;
நினைவேன் வினை தீர்த்தருளே - உன்னையே எண்ணி வழிபடும் என் வினையைத் தீர்த்து அருள்வாயாக;
9)
மாயனு(ம்) நான்முகனும் மயலால்மிக வாதுசெய்து
போயடி மேலறியாப் பொருளாய்நிலம் வான்கடந்த
தீயென நின்றவனே திருவுத்தர கோசமங்கை
மேயவ னேவிமலா வினையாயின தீர்த்தருளே.
மாயனும் நான்முகனும் மயலால் மிக வாதுசெய்து - திருமாலும் பிரமனும் ஆணவத்தால் மிகவும் வாதிட்டு;
போய் அடி மேல் அறியாப் பொருளாய் நிலம் வான் கடந்த தீ என நின்றவனே - தேடிச்சென்று கீழும் மேலும் அறியாத பொருள் ஆகி, மண்ணையும் விண்ணையும் தாண்டி நின்ற ஜோதி ஆனவனே;
திருவுத்தரகோசமங்கை மேயவனே - திருஉத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருப்பவனே;
விமலா - தூயவனே;
வினையாயின தீர்த்தருளே - அடியேனது வினைகளையெல்லாம் தீர்த்து அருள்வாயாக;
10)
நிந்தனை செய்துழல்வார் நிசிபோலிருள் நெஞ்சுடைய
அந்தகர் தாமறியா அறிவேஒளி நீறணிந்த
செந்தழல் மேனியனே திருவுத்தர கோசமங்கை
ஐந்தொழில் ஆற்றவலாய் அடியேன்வினை தீர்த்தருளே.
நிந்தனை செய்து உழல்வார் - வைதிகதர்மத்தைப் பழித்துப் பேசித் திரிகின்றவர்கள்;
நிசிபோல் இருள் நெஞ்சுடைய அந்தகர் தாம் அறியா அறிவே - இரவினைப் போல் நெஞ்சில் இருளை (வஞ்சத்தை) வைத்திருக்கும் அக்-குருடர்களால் அறியப்படாத ஞானவடிவினனே;
ஒளி-நீறு அணிந்த செந்தழல் மேனியனே - ஒளிவீசும் திருநீற்றைப் பூசிய செந்தீப்போல் செம்மேனியனே;
திருவுத்தரகோசமங்கை ஐந்தொழில் ஆற்றவலாய் - திருஉத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருப்பவனே, பஞ்சகிருத்தியம் செய்பவனே; (ஐந்தொழில் - பஞ்சகிருத்தியம் - சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோபவம், அனுக்கிரஹம்);
அடியேன் வினை தீர்த்தருளே - என் தீவினையைத் தீர்த்து அருள்வாயாக;
11)
பரவிய நஞ்சையுண்ட பரமாசுடு காடிடமா
இரவில் நடம்புரிவாய் இகல்ஆனை உரித்தவனே
திரையணி செஞ்சடையாய் திருவுத்தர கோசமங்கை
அரவரை நாணுடையாய் அடியேன்வினை தீர்த்தருளே.
பரவிய நஞ்சை உண்ட பரமா - எங்கும் பரவிய ஆலகாலத்தை உண்டு காத்த பரமனே;
சுடுகாடு இடமா இரவில் நடம் புரிவாய் - சுடுகாட்டையே இடமாக விரும்பி இருளில் கூத்தாடுபவனே;
இகல்-ஆனை உரித்தவனே - போர்செய்த யானையின் தோலை உரித்தவனே; (இகல்தல் - பகைத்தல்; இகல் - பகை; போர்);
திரை அணி செஞ்சடையாய் - கங்கையைச் செஞ்சடையில் அணிந்தவனே; (திரை - அலை; நதி);
திருவுத்தரகோசமங்கை அரவு அரைநாண் உடையாய் - திருஉத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருப்பவனே, பாம்பை அரைநாணாகக் கட்டியவனே;
அடியேன் வினை தீர்த்தருளே - என் தீவினையைத் தீர்த்து அருள்வாயாக;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment