Thursday, February 22, 2024

07.33 – வான்மியூர் (திருவான்மியூர்) - சங்கரா சம்புவே

07.33 – வான்மியூர் (திருவான்மியூர்)

2016-03-15

வான்மியூர் (திருவான்மியூர்)

---------------------------------

(சந்தக் கலிவிருத்தம் - "தானனா தானனா தானனா தானனா")

(வடமொழி யாப்பில் - ஸ்ரக்விணீ (sragviNI - स्रग्विणी ) என்ற பெயருடைய சந்தம்)

(திருஞானசம்பந்தர் தேவாரம் - 3.30.1 - "பைத்தபாம் போடரைக் கோவணம் பாய்புலி")

(திருஞானசம்பந்தர் தேவாரம் - 3.36.1 - "சந்தமா ரகிலொடு சாதிதேக் கம்மரம்")


1)

சங்கரா சம்புவே சாமவே தாவெனத்

தங்கரங் கூப்பினார் தங்களைக் காப்பவன்

கங்கையார் சென்னியான் காம்புபோல் தோளுடை

மங்கையோர் பங்கினன் வான்மியூர் நாதனே.


"சங்கரா, சம்புவே, சாம வேதா" எனத் - "சங்கரனே (நன்மை செய்பவனே); சம்புவே (இன்பம் அளிப்பவனே), சாமவேதனே" என்று;

தம் கரம் கூப்பினார் தங்களைக் காப்பவன் - தம் கைகளைக் கூப்பி வணங்கும் அன்பர்களைக் காப்பவன்;

கங்கை ஆர் சென்னியான் - கங்கை பொருந்திய திருமுடியினன்; (சென்னி - தலை);

காம்பு போல் தோள் உடை மங்கை ஓர் பங்கினன் - மூங்கில் போல் புஜங்களை உடைய உமையை ஒரு பங்கில் உடையவன்; (காம்பு - மூங்கில்); (தோள் - புஜம்); (அப்பர் தேவாரம் - 4.23.2 - "கருத்தனாய்ப் பாட மாட்டேன் காம்பன தோளி பங்கா");

வான்மியூர் நாதனே - அப்பெருமான், திருவான்மியூரில் உறையும் தலைவன்;


2)

தேனுலாம் பூவிடும் சிந்தையார்க் கன்பினான்

மானுலாம் கையினான் மாசுணக் கச்சையான்

கானிலா டும்பிரான் காதிலோர் தோடினான்

வானிலாச் சூடினான் வான்மியூர் நாதனே.


தேன் உலாம் பூ இடும் சிந்தையார்க்கு அன்பினான் - தேன் திகழும் பூக்களைத் திருவடியில் இட்டுத் தொழும் எண்ணம் உடையவர்களுக்கு அன்பு உடையவன்; (உலாம் - உலவும் - பொருந்திய);

(சம்பந்தர் தேவரம் - 2.9.5 - "தேனுலாமலர் கொண்டு மெய்த்தேவர்கள் சித்தர்கள்");

மான் உலாம் கையினான் - கையில் மானை ஏந்தியவன்;

மாசுணக் கச்சையான் - பாம்பை அரையில் கச்சையாகக் கட்டியவன்; (மாசுணம் - பாம்பு); (கச்சை - அரைக்கச்சு); (திருவாசகம் - திருப்பொற்சுண்ணம் - 8.9.19 - "கட்டிய மாசுணக் கச்சை பாடிக்");

கானில் ஆடும் பிரான் - சுடுகாட்டில் ஆடும் தலைவன்;

காதில் ஓர் தோடினான் - ஒரு காதில் தோடு அணிந்தவன்; (சம்பந்தர் தேவாரம் - 3.113.3 - "காதம ரத்திகழ் தோடினனே"); (சம்பந்தர் தேவாரம் - 3.78.4 - "காடர்கரி காலர் ... செவியில் தோடர்");

வான் நிலாச் சூடினான் - அழகிய வெண்பிறைச் சந்திரனை அணிந்தவன்; (வானிலா - 1. வான் நிலா; 2. வால் நிலா); (வான்- அழகு); (வால் - வெண்மை);

வான்மியூர் நாதனே - அப்பெருமான், திருவான்மியூரில் உறையும் தலைவன்;


3)

ஓலமென் றன்றுவான் ஓடிவந் தேத்தவும்

ஆலகா லத்தையும் மன்பினால் உண்டவன்

கோலமா உச்சிமேற் கொக்கினோர் தூவலான்

மாலைவான் மேனியான் வான்மியூர் நாதனே.


"ஓலம்" என்று அன்று வான் ஓடிவந்து ஏத்தவும் - முற்காலத்தில் "ஓலம்" என்று கூவிக்கொண்டு தேவர்கள் ஓடிவந்து வணங்கியபொழுது;

ஆலகாலத்தையும் அன்பினால் உண்டவன் - அவர்களுக்கு இரங்கி ஆலகால விஷத்தையும் உண்டவன்; (ஆலகாலத்தையும்மன்பினால் - ஆலகாலத்தையும் அன்பினால் - மகர ஒற்று விரித்தல் விகாரம்);

கோலமா உச்சிமேல் கொக்கின் ஓர் தூவலான் - அழகாகத் திருமுடிமேல் ஒரு கொக்கின் இறகைச் சூடியவன்; (தூவல் - இறகு); (கொக்கிறகு அணிந்தது - கொக்கு வடிவம் உடைய குரண்டாசுரனை அழித்த அடையாளம்; கொக்கிறகு என்ற மலர்);

மாலை வான் மேனியான் - அந்திப்பொழுதின் வானம் போல் செம்மேனி உடையவன்; (சுந்தரர் தேவாரம் - 7.36.4 - "அந்தி வானமும் மேனியோ சொலும்");

வான்மியூர் நாதனே - அப்பெருமான், திருவான்மியூரில் உறையும் தலைவன்;


4)

தேறினார் சிந்தையிற் சேர்ந்தவன் தேவியோர்

கூறினான் கையிலோர் கூர்மழுப் பற்றினான்

ஈறிலாப் பெற்றியான் என்றுமே வெற்றியான்

மாறிலாச் சோதியான் வான்மியூர் நாதனே.


தேறினார் சிந்தையிற் சேர்ந்தவன் - மெய்ப்பொருளைத் தெளிந்தவர்கள் நெஞ்சில் குடிகொண்டவன்; (தேறுதல் - தெளிதல்); (திருநாவுக்கரசர் தேவாரம் - 6.78.4 - "தேறினார் சித்தத் திருந்தார் தாமே");

தேவி ஓர் கூறினான் - உமையை ஒரு கூறாக உடையவன்; (திருநாவுக்கரசர் தேவாரம் - 5.35.8 - "பழனத்தான் கூறினான் உமையாளொடுங் கூடவே");

கையில் ஓர் கூர் மழுப் பற்றினான் - கையில் கூர்மை மிக்க மழுப்படையை ஏந்தியவன்;

ஈறு இலாப் பெற்றியான் - அந்தம் இல்லாத பெருமை உடையவன்;

என்றுமே வெற்றியான் - என்றும் வெற்றி உடையவன்;

மாறு இலாச் சோதியான் - ஒப்பில்லாத சோதி வடிவன்; அழிவற்ற சோதி வடிவன்; (மாறு - 1. Mutation, change; வேறுபாடு; 4. Similarity; equality; ஒப்பு; 5. Death; இறந்துபாடு); (திருநாவுக்கரசர் தேவாரம் - 6.78.4 - "மாறிலா மேனி உடையார் தாமே");

வான்மியூர் நாதனே - அப்பெருமான், திருவான்மியூரில் உறையும் தலைவன்;


5)

கள்ளமொன் றின்றியே கைதொழும் பத்தரின்

உள்ளமே கோயிலாம் உத்தமன் கங்கையின்

வெள்ளமார் வேணியன் வெள்ளையே றேறினான்

வள்ளிகோன் அத்தனெம் வான்மியூர் நாதனே.


கள்ளம் ஒன்று இன்றியே கைதொழும் பத்தரின் உள்ளமே கோயில் ஆம் உத்தமன் - வஞ்சம் இன்றி வழிபடும் பக்தர்களுடைய நெஞ்சத்தில் உறையும் உத்தமன்; (சம்பந்தர் தேவாரம் - 1.50.4 - "மெய்யராகிப் பொய்யைநீக்கி ... செய்யரானார் சிந்தையானே");

கங்கையின் வெள்ளம் ஆர் வேணியன் - கங்கை நீர் பொருந்திய சடையை உடையவன்; (வெள்ளம் - நீர்); (வேணி - சடை);

வெள்ளை ஏறு ஏறினான் - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவன்;

வள்ளிகோன் அத்தன் - வள்ளிகணவனான முருகனுக்குத் தந்தை; (அத்தன் - தந்தை);

எம் வான்மியூர் நாதனே - அப்பெருமான், திருவான்மியூரில் உறையும் எம் தலைவன்;


6)

நாரிலார் மும்மதில் நாசமா கும்படி

தேரிலே ஏறியோர் தீச்சரம் தொட்டவன்

நாரியோர் பங்கினான் ஞானிமார் உச்சியான்

வாரிநஞ் சுண்டவன் வான்மியூர் நாதனே.


நார் இலார் மும்மதில் நாசம் ஆகும்படி - அன்பு இல்லாத அசுரர்களின் முப்புரங்களும் அழியும்படி; (நார் - அன்பு);

தேரிலே ஏறி ஓர் தீச் சரம் தொட்டவன் - தேவர்கள் அமைத்த தேரின்மேல் ஏறி ஒர் எரிக்கும் கணையை எய்தவன்; (சரம் - அம்பு);

நாரி ஓர் பங்கினான் - உமையை ஒரு பங்கில் உடையவன்; (நாரி - பெண்);

ஞானிமார் உச்சியான் - ஞானியர்கள்தம் தலைமேல் உறைபவன்; (சுந்தரர் தேவாரம் - 7.92.4 - "உரைப்பார் உரை உகந்து உள்க வல்லார் தங்கள் உச்சியாய்");

வாரி நஞ்சு உண்டவன் - கடல் விடத்தை அள்ளி உண்டவன்; (வாரி - கடல்); (வாருதல் - அள்ளுதல்);

வான்மியூர் நாதனே - அப்பெருமான், திருவான்மியூரில் உறையும் தலைவன்;


7)

அங்கழல் போற்றினார்க் கன்பினன் மாண்டவர்

அங்கமே ஆரமாப் பூண்டவன் தாண்டவன்

கொங்குதேர் வண்டுசேர் கொன்றையார் சென்னியான்

வங்கமார் வாரிசூழ் வான்மியூர் நாதனே.


அம் கழல் போற்றினார்க்கு அன்பினன் - அழகிய, கழல் அணிந்த திருவடியை வணங்கியவர்களுக்கு அன்பு உடையவன்;

மாண்டவர் அங்கமே ஆரமாப் பூண்டவன் - இறந்தவர்களுடைய எலும்பை மாலையாக அணிந்தவன்; (அங்கம் - எலும்பு); (ஆரமா - ஆரமாக; ஆரம் - மாலை);

தாண்டவன் - கூத்தன்; நடராஜன்;

கொங்கு தேர் வண்டு சேர் கொன்றை ஆர் சென்னியான் - தேனை நாடும் வண்டுகள் பொருந்தும் கொன்றையை முடிமேல் சூடியவன்; (கொங்கு - தேன்); (தேர்தல் - ஆராய்தல்; கொள்ளுதல்);

வங்கம் ஆர் வாரி சூழ் வான்மியூர் நாதனே - படகுகள் (/ அலைகள்) நிறைந்த கடல் சூழ்ந்த திருவான்மியூரில் உறையும் தலைவன்;


8)

தூற்றுவாய் பத்துடைத் தூர்த்தனும் சாலநாள்

போற்றுமா றோர்விரல் வெற்புமேல் ஊன்றினார்

கூற்றினைக் காய்ந்தவர் கொல்புலித் தோலினார்

மாற்றிலாப் பொன்னனார் வான்மியூர் நாதரே.


தூற்று வாய் பத்துஉடைத் தூர்த்தனும் - தூற்றிய வாய்கள் பத்து உடைய இராவணனும்; (தூர்த்தன் - கொடியவன்);

சால நாள் போற்றுமாறு ஓர் விரல் வெற்புமேல் ஊன்றினார் - தம்மை நெடுங்காலம் போற்றிப் பாடும்படி ஒரு விரலைக் கயிலைமலையின்மேல் ஊன்றி அவனை நசுக்கியவர்;

கூற்றினைக் காய்ந்தவர் - காலனைச் சினந்தவர்;

கொல்புலித் தோலினார் - கொல்லும் இயல்பு உடைய புலியின் தோலை அணிந்தவர்;

மாற்று இலாப் பொன் அனார் - உயர்ந்த பொன் போன்றவர்; (மாற்றிலாப் பொன் - உரைத்து மாற்றுக் காணுதற்கரிய, மிக உயர்ந்த பொன்); (அனார் - அன்னார் - அன்னவர் - போன்றவர்); (அப்பர் தேவாரம் - 5.60.5 - "மாற்றிலாச் செம்பொன் ஆவர் மாற்பேறரே"); (திருப்புகழ் - காஞ்சிபுரம் - "இறைவர்மாற் றற்ற செம்பொன் வடிவம்");

வான்மியூர் நாதரே - அப்பெருமானார், திருவான்மியூரில் உறையும் தலைவர்;


9)

அன்னமாய்ப் பன்றியாய் அம்புயன் மாலிவர்

முன்னநே டோர்தழற் சோதியான் முக்கணன்

சென்னிமேற் பாம்புடன் திங்களைச் சேர்த்தவன்

வன்னியோர் கையினான் வான்மியூர் நாதனே.


அன்னமாய்ப் பன்றியாய் அம்புயன் மால் இவர் முன்னம் நேடு ஓர் தழற் சோதியான் - பிரமனும் திருமாலும் அன்னப்பறவை ஆகியும் பன்றி ஆகியும் முன்னர்த் தேடிய ஒப்பற்ற தழல் பொருந்திய சோதி வடிவன்; (அம்புயன் - நான்முகன்; அம்புயம் - அம்புஜம் - தாமரை); (நேடுதல் - தேடுதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.7.9 - "பொன்னிற நான்முகன் பச்சையான் என்றிவர் புக்குழித் தன்னை இன்னான் எனக் காண்பரிய தழற் சோதியும்");

முக்கணன் - நெற்றிக்கண்ணன்;

சென்னிமேல் பாம்புடன் திங்களைச் சேர்த்தவன் - தன் திருமுடிமேல் பாம்பையும் சந்திரனையும் ஒன்றும்படி வைத்தவன்;

வன்னி ஓர் கையினான் - ஒரு கையில் தீயை ஏந்தியவன்; (வன்னி - நெருப்பு);

வான்மியூர் நாதனே - அப்பெருமான், திருவான்மியூரில் உறையும் தலைவன்;


10)

தத்துவம் தேர்கிலார் சத்தியம் சொல்கிலார்

கத்திடும் வார்த்தையைத் தள்ளுமின் கற்றவர்

நித்தலும் கைதொழும் நித்தியன் சென்னிமேல்

மத்தமும் சூடினான் வான்மியூர் நாதனே.


தத்துவம் தேர்கிலார் சத்தியம் சொல்கிலார் - ஒரு தத்துவமும் அறியாதவர்கள்; மெய்ப்பொருளைத் தெளியமாட்டார்கள்; உண்மையைப் பேசமாட்டார்கள்; (தேர்தல் - தெளிதல்; அறிதல்); (தேர்கிலார், சத்தியம் என்ற சொற்கள் இடைநிலைத் தீவகமாக இருபுறமும் இயைத்துப் பொருள்கொள்ளுமாறு அமைந்தன); (அப்பர் தேவாரம் - 5.90.5 - "நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்");

கத்திடும் வார்த்தையைத் தள்ளுமின் - அவர்கள் கத்துகின்ற வார்த்தைகளை மதிக்கவேண்டா; அவற்றைத் தள்ளுங்கள்; (தள்ளுதல் - அங்கீகரியாதிருத்தல்; நிராகரித்தல்; புறக்கணித்தல்);

கற்றவர் நித்தலும் கைதொழும் நித்தியன் - கற்றறிந்தவர்கள் தினமும் கைகூப்பி வணங்கும், என்றும் நிலைத்து இருக்கும் கடவுள்; (கைதொழுந்நித்தியன் - நகர ஒற்று விரித்தல் விகாரம்)

சென்னிமேல் மத்தமும் சூடினான் - தலைமேல் (பாம்பு, கங்கை, சந்திரன், கொன்றை, வில்வம் முதலியவற்றோடு) ஊமத்த மலரையும் சூடியவன்;

வான்மியூர் நாதனே - அப்பெருமான், திருவான்மியூரில் உறையும் தலைவன்;


11)

தேசனைத் திங்களைச் சென்னிவைத் தான்தனை

வாசனைப் பாக்களால் வாழ்த்துவார் வல்வினை

மாசினைத் தீர்ப்பவன் வானகம் சேர்ப்பவன்

மாசுணக் கச்சினான் வான்மியூர் நாதனே.


தேசனைத், திங்களைச் சென்னி வைத்தான்தனை - ஒளி உருவினனைச், சந்திர சேகரனை; (தேசன் - ஒளி வடிவினன்);

வாசனைப் பாக்களால் வாழ்த்துவார் வல்வினை மாசினைத் தீர்ப்பவன் - மணம் மிகுந்த பாமாலைகளால் வாழ்த்தும் அன்பர்களுடைய வலிய வினைகளை அழிப்பவன்; (வாசனைப் பா - தேவாரம் முதலிய மணம் கமழும் பாமாலைகள்); (மாசு - குற்றம்; மலம்);

வானகம் சேர்ப்பவன் - அவ்வடியார்களைச் சிவலோகத்தில் சேர்ப்பவன்;

மாசுணக் கச்சினான் - பாம்பை அரைநாணாகக் கட்டியவன்; (மாசுணம் - பாம்பு); (கச்சு - அரைப்பட்டிகை);

வான்மியூர் நாதனே - அப்பெருமான், திருவான்மியூரில் உறையும் தலைவன்;


பிற்குறிப்பு:
இப்பதிகத்தின் யாப்புக் குறிப்பு:
சந்தக் கலிவிருத்தம் - “தானனா தானனா தானனா தானனா" என்ற சந்தம்.
சமஸ்கிருதத்தில் - ஸ்ரக்விணீ - sragviNI - स्रग्विणी - என்ற பெயருடைய சந்தம்.

அடிதோறும் 4 முறை "குரு-லகு-குரு" அமைப்புப் பெற்று வந்து, 4 அடிகளால் ஆவது.

பலரும் அறிந்த அச்யுதாஷ்டகம் இவ்வமைப்பில் அமைந்த பாடல்.

அச்யுதம் கேசவம் ராமநா ராயணம்

க்ருஷ்ணதா மோதரம் வாசுதே வம்ஹரிம்

ஸ்ரீதரம் மாதவம் கோபிகா வல்லபம்

ஜானகீ நாயகம் ராமசந்த் ரம்பஜே.


சம்பந்தர் தேவாரம் - 3.35.7 -

கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள்

வானலைக் குந்தவத் தேவுவைத் தானிடம்

தானலைத் தெள்ளமூர் தாமரைத் தண்டுறை

தேனலைக் கும்வயல் தென்குடித் திட்டையே.


வி. சுப்பிரமணியன்

-------------------


07.32 – கச்சி மேற்றளி - பரிவொடு பத்தருக்கா

07.32 – கச்சி மேற்றளி

2016-03-15

கச்சி மேற்றளி

---------------------------------

(அறுசீர் விருத்தம் - "விளம் மா தேமா" என்ற அரையடி வாய்பாடு)

(திருநேரிசை அமைப்பு) (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.43.1 - "மறையது பாடி")


1)

பரிவொடு பத்த ருக்காப் .. பாண்டிநன் னாடு தன்னில்

நரிகளைப் பரிகள் ஆக்கி .. நாடகம் ஆட வல்லான்

சுரிகுழல் மங்கை பங்கன் .. தூமதி துலங்கு கின்ற

விரிசடை அண்ணல் கச்சி .. மேற்றளி மேவி னானே.


பரிவொடு பத்தருக்காப் பாண்டி நன்னாடு தன்னில் - பக்தருக்கு இரங்கிப் பாண்டிநாட்டினில்; (பத்தருக்கா - பத்தருக்காக); (குறிப்பு: "பத்தருக்கா" என்பதுபோல் வரும் இடத்தில் வல்லொற்று மிகும். உதாரணம் - சுந்தரர் தேவாரம் - 7.82.2 - "புரம் எரியச்சிலை வளைத்தான்இமை யவர்க்காத் திண்டேர்மிசை நின்றான்");

நரிகளைப் பரிகள் ஆக்கி நாடகம் ஆட வல்லான் - நரிகளைக் குதிரைகள் ஆக்கித் திருவிளையாடல் செய்தவன்;

சுரிகுழல் மங்கை பங்கன் - சுருண்ட கூந்தலை உடைய உமையை ஒரு பங்கில் உடையவன்; (சுரிதல் - சுருள்தல்; குழல்தல்);

தூ மதி துலங்குகின்ற விரிசடை அண்ணல் - தூய திங்கள் விளங்குகின்ற, விரிந்த சடையை உடைய கடவுள்; (துலங்குதல் - பிரகாசித்தல்);

கச்சி மேற்றளி மேவினானே - அப்பெருமான் காஞ்சிபுரத்தில் மேற்றளி என்ற கோயிலில் உறைகின்றான்;


2)

சீலநன் முனிவர் நால்வர் .. திருவடிக் கீழி ருக்க

ஆலதன் நீழல் தன்னில் .. அருமறை விரித்த ஐயன்

சூலமும் மழுவும் ஏந்தி .. சூரனைச் சமரில் வென்ற

வேலனுக் கத்தன் கச்சி .. மேற்றளி மேவி னானே.


சீல நன் முனிவர் நால்வர் திருவடிக்கீழ் இருக்க - சீலம் மிக்க நல்ல முனிவர்களான சனகாதியர் நால்வரும் திருவடியின்கீழ் அமர்ந்திருக்க;

ஆல்அதன் நீழல் நாடி, அருமறை விரித்த ஐயன் - கல்லால மரத்தடியில் அரிய வேதப்பொருளை விளக்கிய குரு;

சூலமும் மழுவும் ஏந்தி - திரிசூலத்தையும் மழுவாயுதத்தையும் ஏந்தியவன்; (ஏந்தி - ஏந்தியவன் என்ற பெயர்ச்சொல்);

சூரனைச் சமரில் வென்ற வேலனுக்கு அத்தன் - சூரபதுமனைப் போரில் வென்ற வடிவேலனுக்குத் தந்தை;

கச்சி மேற்றளி மேவினானே - அப்பெருமான் காஞ்சிபுரத்தில் மேற்றளி என்ற கோயிலில் உறைகின்றான்;


3)

பாரொடு விண்ணும் போற்றிப் .. பதமலர் ஏத்த நின்றான்

பேருரு ஒன்றும் இல்லான் .. பெண்ணொரு பங்கும் ஆனான்

ஊரொரு மூன்றெ ரிக்க .. ஒள்ளழற் கணைதொ டுக்க

மேருவில் ஏந்தி கச்சி .. மேற்றளி மேவி னானே.


பாரொடு விண்ணும் போற்றிப் பதமலர் ஏத்த நின்றான் - மண்ணுலகோரும் தேவர்களும் தன் திருவடியைப் போற்றி வணங்கும்படி நின்றவன்;

பேர், உரு ஒன்றும் இல்லான் - தனக்கென்று ஒரு பெயரோ உருவமோ இல்லாதவன்;

பெண் ஒரு பங்கும் ஆனான் - உமாதேவியை ஒரு பங்கில் உடையவன்;

ஊர் ஒரு மூன்று எரிக்க, ஒள் அழல் கணை தொடுக்க, மேரு வில் ஏந்தி - முப்புரங்களை எரிப்பதற்காக, ஒளியுடைய தீப் பொருந்திய அம்பினைத் தொடுப்பதற்காக, மேருமலையை வில்லாக ஏந்தியவன்; (ஏந்தி - ஏந்தியவன் என்ற பெயர்ச்சொல்);

கச்சி மேற்றளி மேவினானே - அப்பெருமான் காஞ்சிபுரத்தில் மேற்றளி என்ற கோயிலில் உறைகின்றான்;


4)

தண்மதி சடையில் தாங்கும் .. தலைமகன் தன்னைப் போற்றிப்

பண்மலி தமிழைப் பாடும் .. பத்தர்தம் வினைகள் தீர்ப்பான்

பெண்மயில் அன்ன மாதைப் .. பிரிகிலன் கூர்மை மிக்க

வெண்மழு வாளன் கச்சி .. மேற்றளி மேவி னானே.


தண்-மதி சடையில் தாங்கும் தலைமகன்-தன்னைப் போற்றிப் - குளிர்ந்த சந்திரனைச் சடையில் தாங்கும் தலைவனைப் போற்றி; (தலைமகன் - தலைவன்);

பண் மலி தமிழைப் பாடும் பத்தர்தம் வினைகள் தீர்ப்பான் - இசை பொருந்திய தேவாரம் முதலியவற்றைப் பாடும் பக்தர்களுடைய வினைகளைத் தீர்ப்பவன்; (தீர்ப்பான் - தீர்ப்பவன் என்ற பெயர்ச்சொல்);

பெண்மயில் அன்ன மாதைப் பிரிகிலன் - பெண்மயில் போன்ற சாயல் உடைய உமாதேவியை என்றும் பிரியாதவன்; (பிரிகிலன் - பிரியமாட்டான்);

கூர்மை மிக்க வெண் மழுவாளன் - கூர்மை மிகுந்த, ஒளி வீசும் மழுவை ஏந்தியவன்;

கச்சி மேற்றளி மேவினானே - அப்பெருமான் காஞ்சிபுரத்தில் மேற்றளி என்ற கோயிலில் உறைகின்றான்;


5)

மண்டிய அன்பி னாலே .. மலரடி வாழ்த்து கின்ற

தொண்டரின் மனத்தை நீங்காத் .. தூயவன் புலியின் தோலன்

வண்டமர் குழலி மார்கள் .. மனைதொறும் சென்றி ரக்கும்

வெண்டலை ஏந்தி கச்சி .. மேற்றளி மேவி னானே.


மண்டிய அன்பினாலே மலரடி வாழ்த்துகின்ற - மிகுந்த அன்பால் மலர் போன்ற திருவடிகளைப் போற்றுகின்ற;

தொண்டரின் மனத்தை நீங்காத் தூயவன் - அடியவர்களின் மனத்தில் என்று நீங்காமல் உறைகின்ற நின்மலன்;

புலியின் தோலன் - புலித்தோலை அரையில் அணிந்தவன்;

வண்டு அமர் குழலிமார்கள் மனைதொறும் சென்று இரக்கும் வெண் தலை ஏந்தி - வண்டுகள் விரும்பும் கூந்தலை உடைய பெண்களின் வீடுதோறும் சென்று யாசிக்க வெள்ளை மண்டையோட்டைக் கையில் ஏந்தியவன்; (ஏந்தி - ஏந்தியவன் என்ற பெயர்ச்சொல்);

கச்சி மேற்றளி மேவினானே - அப்பெருமான் காஞ்சிபுரத்தில் மேற்றளி என்ற கோயிலில் உறைகின்றான்;


6)

தடமெனக் கங்கை தங்கு .. சடையினன் இமவான் பெற்ற

மடமயில் தன்னை வாமம் .. மகிழ்ந்தவன் ஈமக் காட்டில்

நடமிடு நாதன் தேவர் .. நாடிய அமுதை உண்ண

விடமணி கண்டன் கச்சி .. மேற்றளி மேவி னானே.


தடம் எனக் கங்கை தங்கு சடையினன் - குளம் போல் கங்கை தங்குகின்ற சடையை உடையவன்; (தடம் - நீர்நிலை);

இமவான் பெற்ற மட-மயில் தன்னை வாமம் மகிழ்ந்தவன் - இமவான் மகளான, அழகிய மயில் போன்ற சாயல் உடைய உமையை இடப்பக்கம் பங்காக விரும்பியவன்; (மடமயில் - அழகிய பெண் - Woman, beautiful like a peafowl);

ஈமக்காட்டில் நடமிடு நாதன் - சுடுகாட்டில் திருநடம் செய்யும் தலைவன்; (ஈமக்காடு - சுடுகாடு);

தேவர் நாடிய அமுதை உண்ண, விடம் அணி கண்டன் - தேவர்களெல்லாம் அவர்கள் விரும்பிய அமுதினை உண்ண, ஆலகால விடத்தை உண்டு அதனைக் கண்டத்தில் அணிந்தவன்;

கச்சி மேற்றளி மேவினானே - அப்பெருமான் காஞ்சிபுரத்தில் மேற்றளி என்ற கோயிலில் உறைகின்றான்;


7)

ஆதியன் ஆல நீழல் .. அமர்ந்தவன் என்றும் மாறா

நீதியன் நெற்றிக் கண்ணன் .. நீள்நய னத்து மாதோர்

பாதியன் மார்க்கண் டேயர் .. பாலடை நமனைச் செற்ற

வேதியன் கவினார் கச்சி .. மேற்றளி மேவி னானே.


ஆதியன் - முதற்பொருள் ஆனவன்; (சுந்தரர் தேவாரம் - 7.97.1 - "ஆதியன் ஆதிரையன் ");

ஆலநீழல் அமர்ந்தவன் - கல்லாலின்கீழ் விரும்பி வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி; (அமர்தல் - விரும்புதல்; இருத்தல்);

என்றும் மாறா நீதியன் - என்றும் மாறாத மெய்ப்பொருள் ஆனவன், நீதி வடிவாக விளங்குபவன்;

நெற்றிக் கண்ணன் - முக்கண்ணன்;

நீள் நயனத்து மாது ஓர் பாதியன் - நீண்ட கண்களை உடைய உமையை ஒரு பாதியாக உடையவன்;

மார்க்கண்டேயர்பால் அடை நமனைச் செற்ற வேதியன் - மார்க்கண்டேயரிடம் நெருங்கிய காலனை உதைத்து அழித்த கடவுள்; (செறுதல் - அழித்தல்); (வேதியன் - வேதங்களைப் பாடியவன்; வேதப்பொருள் ஆனவன்; வேதித்தல் செய்பவன்);

கவின் ஆர் கச்சி மேற்றளி மேவினானே - அப்பெருமான் அழகிய காஞ்சிபுரத்தில் மேற்றளி என்ற கோயிலில் உறைகின்றான்;


8)

எண்ணுதல் இன்றி வெற்பை .. இடந்தவன் முடிகள் பத்தும்

திண்ணிய தோள்நா லஞ்சும் .. திருவிரல் இட்ட டர்த்தான்

பண்ணொடு பாடி னார்க்குப் .. பரிந்தருள் கின்ற பண்பன்

விண்ணவர் நாதன் கச்சி .. மேற்றளி மேவி னானே.


எண்ணுதல் இன்றி வெற்பை இடந்தவன் முடிகள் பத்தும் - சிறிதும் யோசியாமல் கயிலைமலையைப் பெயர்த்தவனான இராவணனது பத்துத் தலைகளையும்;

திண்ணிய தோள் நாலஞ்சும் திருவிரல் இட்டு அடர்த்தான் - வலிய இருபது புஜங்களையும் திருப்பாத விரலை ஊன்றி நசுக்கியவன்; (திண்ணிய - வலிய); (அடர்த்தல் - நசுக்குதல்);

பண்ணொடு பாடினார்க்குப் பரிந்து அருள்கின்ற பண்பன் - இசையோடு கீதம் பாடி வழிபடும் பக்தர்களுக்கு இரங்கி அருளும் குணம் உடையவன்;

விண்ணவர் நாதன் - தேவர்கள் தலைவன்;

கச்சி மேற்றளி மேவினானே - அப்பெருமான் காஞ்சிபுரத்தில் மேற்றளி என்ற கோயிலில் உறைகின்றான்;


9)

புள்ளமர் திருமா லோடு .. பூவுறை அயனும் நேட

ஒள்ளிய தழல தாகி .. ஓங்கிய தேவ தேவன்

உள்ளிய அன்பர்க் கென்றும் .. உறுதுணை ஆனான் மார்பில்

வெள்ளிய நீற்றன் கச்சி .. மேற்றளி மேவி னானே.


புள் அமர் திருமாலோடு பூ உறை அயனும் நேட - கருட வாகனம் உடைய விஷ்ணுவும் தாமரைப்பூவின்மேல் உறையும் பிரமனும் தேடும்படி; (புள் - பறவை); (அயன் - பிரமன்); (நேடுதல் - தேடுதல்);

ஒள்ளிய தழல்அது ஆகி ஓங்கிய தேவதேவன் - ஒளி வீசும் சோதியாகி உயர்ந்த மகாதேவன்; (ஒண்மை - விளக்கம்);

உள்ளிய அன்பர்க்கு என்றும் உறுதுணை ஆனான் - தியானிக்கும் பக்தர்களுக்கு என்றும் உற்ற துணைவன்; (உள்ளுதல் - நினைதல்; எண்ணுதல்; நன்கு மதித்தல்);

மார்பில் வெள்ளிய நீற்றன் - மார்பில் வெண் திருநீற்றைப் பூசியவன்;

கச்சி மேற்றளி மேவினானே - அப்பெருமான் காஞ்சிபுரத்தில் மேற்றளி என்ற கோயிலில் உறைகின்றான்;


10)

அஞ்சுதல் இன்றிப் பொய்யை .. அனுதினம் உரைக்கும் ஈனர்

தஞ்சிறு நெறிகள் நீங்கும் .. சாகர நஞ்சை உண்டு

மஞ்செனத் திகழும் கண்டன் .. மலரடி மறவார்க் கன்பன்

வெஞ்சின விடையன் கச்சி .. மேற்றளி மேவி னானே.


அஞ்சுதல் இன்றிப் பொய்யை அனுதினம் உரைக்கும் ஈனர்தம் சிறு-நெறிகள் நீங்கும் - சிறிதும் கூசாமல், அச்சம் இல்லாமல், தினந்தோறும் பொய்களைப் பேசுகின்ற கீழோர்கள் சொல்லும் அவர்களுடைய புன்னெறிகளைச் சேராமல் நீங்குங்கள்; (உம் - ஏவல் பன்மை விகுதி);

சாகர நஞ்சை உண்டு மஞ்சு எனத் திகழும் கண்டன் - கடலில் தோன்றிய விஷத்தை உண்டு மேகம் போலத் திகழ்கின்ற கண்டத்தை உடையவன்; (சாகரம் - கடல்); (மஞ்சு - மேகம்);

மலரடி மறவார்க்கு அன்பன் - தாமரைத்திருவடியை என்றும் எண்ணி வழிபடும் அன்பருக்கு அன்பன்;

வெஞ்சின விடையன் - கொடிய சினம் உடைய எருதினை ஊர்தியாக உடையவன்;

கச்சி மேற்றளி மேவினானே - அப்பெருமான் காஞ்சிபுரத்தில் மேற்றளி என்ற கோயிலில் உறைகின்றான்;


11)

ஆண்டியாய்ப் பழநி நின்ற .. அழகிய மைந்தற் கத்தன்

மாண்டவர் எலும்பைப் பூணும் .. மாண்பினன் எங்கும் ஆகித்

தாண்டினான் அண்ட மெல்லாம் .. தண்டமிழ் பாடிப் போற்றி

வேண்டினார்க் கருளக் கச்சி .. மேற்றளி மேவி னானே.


ஆண்டியாய்ப் பழநி நின்ற அழகிய மைந்தற்கு அத்தன் - கோவண ஆண்டி ஆகிப் பழநிமலைமேல் நின்ற (பழனியாண்டியான) அழகிய மகனான முருகனுக்குத் தந்தை; (மைந்தன் - மகன்);

மாண்டவர் எலும்பைப் பூணும் மாண்பினன் - (ஊழிக் காலத்தில் எல்லாம் அழிந்த பிறகும் தான் இருப்பதன் அடையாளமாக) இறந்தவர்களுடைய எலும்பை அணியும் பெருமை உடையவன் - கங்காளன்;

எங்கும் ஆகித், தாண்டினான் அண்டம் எல்லாம் - எங்கும் இருப்பவன், அண்டங்களை எல்லாம் கடந்தவன்;

தண்-தமிழ் பாடிப் போற்றி வேண்டினார்க்கு அருளக் கச்சி மேற்றளி மேவினானே - குளிர்ந்த தமிழான தேவாரம் திருவாசகம் முதலியவற்றைப் பாடிப் போற்றி வழிபடும் பக்தர்களுக்கு அருள்புரிவதற்கு அப்பெருமான் காஞ்சிபுரத்தில் மேற்றளி என்ற கோயிலில் உறைகின்றான்;


வி. சுப்பிரமணியன்

-------------- --------------


07.31 – வான்மியூர் (திருவான்மியூர்) - மேகம் ஒத்தொளிர்

07.31 – வான்மியூர் - (திருவான்மியூர்)

2016-03-13

வான்மியூர் (திருவான்மியூர்)

---------------------------------

(கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பு)

(திருநாவுக்கரசர் தேவாரம் - 5.82.9 - "ஓட்டை மாடத்தில் ஒன்பது வாசலும்")


1)

மேகம் ஒத்தொளிர் நீல மிடற்றினாய்

ஆகத் தோர்புடை ஆயிழை காட்டினாய்

வாக னங்கள் மலிதிரு வான்மியூர்

நாகம் வீக்கிய நாத அருளாயே.


மேகம் ஒத்து ஒளிர் நீல மிடற்றினாய் - கருமேகம் போல விளங்குகின்ற நீலகண்டம் உடையவனே; (மிடறு - கண்டம்);

ஆகத்து ஓர் புடை ஆயிழை காட்டினாய் - திருமேனியில் ஒரு பக்கத்தில் உமாதேவியை காட்டியவனே; (ஆகம் - உடல்); (காட்டினாய் - காட்டியவனே என்ற விளி);

வாகனங்கள் மலி திருவான்மியூர் - வாகன நெரிசல் மிக்க திருவான்மியூரில் உறைகின்ற;

நாகம் வீக்கிய நாத அருளாயே - அரையில் பாம்பைக் கட்டிய நாதனே! அருள்வாயாக! (வீக்குதல் - கட்டுதல்);


2)

பண்டு பாற்கடல் நஞ்சைப் பழமென

உண்ட கண்ட உமையொரு பங்கனே

வண்டி கள்மலி வான்மி நகருறை

அண்ட னேஅடி யேனுக் கருளாயே.


பண்டு பாற்கடல் நஞ்சைப் பழம் என உண்ட கண்ட - முற்காலத்தில் பாற்கடலில் தோன்றிய விஷத்தை நாவற்பழம் போல உண்ட நீலகண்டனே; (பண்டு - முற்காலம்); (என - உவம உருபு); (கண்ட - கண்டனே என்ற விளி);

உமை ஒரு பங்க - உமாதேவியை ஒரு பங்கில் உடையவனே;

வண்டிகள் மலி வான்மிநகர் உறை அண்டனே - வாகன நெரிசல் மிக்க திருவான்மியூரில் உறைகின்ற அண்ட நாயகனே; (அண்டன் - கடவுள் - God, as Lord of the universe);

அடியேனுக்கு அருளாயே - எனக்கு அருள்வாயாக!


3)

தண்ணி லாமதி தாழ்சடைத் தாங்கினாய்

பண்ணின் ஆர்தமிழ் பாடித் தினந்தொறும்

மண்ணி னார்பணி வான்மி நகருறை

அண்ண லேஅடி யேனுக் கருளாயே.


தண் நிலா மதி தாழ்சடைத் தாங்கினாய் - குளிர்ந்த கிரணங்களை உடைய திங்களைத் தாழும் சடையில் தாங்கியவனே; (தண் - குளிர்ச்சி); (நிலா - சந்திரனின் கிரணம்; சந்திரிகை - Moonlight);

பண்ணின் ஆர் தமிழ் பாடித் தினந்தொறும் மண்ணினார் பணி - பண் பொருந்திய தேவாரம் முதலிய பாட்டுகள் பாடி நாள்தோறும் உலக மக்கள் வழிபடுகின்ற;

வான்மிநகர் உறை அண்ணலே - திருவான்மியூரில் உறைகின்ற பெருமானே; (அண்ணல் - தலைவன்; பெருமையிற் சிறந்தோன்);

அடியேனுக்கு அருளாயே - எனக்கு அருள்வாயாக!


4)

வேடங் கள்பல ஏற்ற விகிர்தனே

வாடல் வெண்டலை ஏந்திய வள்ளலே

மாட மாளிகை சூழ்திரு வான்மியை

நாடி னாய்அடி யேனுக் கருளாயே.


வேடங்கள் பல ஏற்ற விகிர்தனே - பல உருவங்கள் ஏற்றவனே, விகிர்தனே; (வேடம் - வேஷம்); (விகிர்தன் - மாறுபட்ட செயலினன்; சுயம்பு என்றும் பொருள்கொள்ளல் ஆம்);

வாடல் வெண் தலை ஏந்திய வள்ளலே - பிச்சை எடுப்பதற்காகக் கையில் ஒரு வாடிய வெள்ளை மண்டையோட்டை ஏந்திய வள்ளலே;

மாட மாளிகை சூழ் திருவான்மியை நாடினாய் - உயர்ந்த பெரிய கட்டிடங்கள் சூழ்ந்த திருவான்மியூரை இடமாக விரும்பியவனே;

அடியேனுக்கு அருளாயே - எனக்கு அருள்வாயாக!


5)

அக்கின் ஆரம் அணிந்த அடிகளே

தக்கன் வேள்வி தகர்த்த சதுரனே

மிக்கொ லித்திடு வீதிசூழ் வான்மியூர்

அக்க ராஅடி யேனுக் கருளாயே.


அக்கின் ஆரம் அணிந்த அடிகளே - எலும்பு மாலையை அணிந்த கடவுளே; (அக்கு - எலும்பு); (ஆரம் - மாலை);

தக்கன் வேள்வி தகர்த்த சதுரனே - தக்கன் செய்த வேள்விய அழித்த வல்லவனே; (சதுரன் - சமர்த்தன்);

மிக்கு ஒலித்திடு வீதி சூழ் வான்மியூர் அக்கரா - ஒலி மிக்க வீதிகள் சூழ்ந்த திருவான்மியூரில் உறைகின்ற அழிவற்றவனே; (அக்கரன் - அக்ஷரன் - அழிவு இல்லாதவன்);

அடியேனுக்கு அருளாயே - எனக்கு அருள்வாயாக!


6)

நாரி பங்கமர் நம்ப சுரர்தொழக்

காரி லங்கிய கண்ட கல(ம்)மலி

வாரி சூழ்திரு வான்மி நகருறை

ஆரி யாஅடி யேனுக் கருளாயே.


நாரி பங்கு அமர் நம்ப - உமையை ஒரு பங்காக விரும்பும் நம்பனே; (நாரி - பெண்); (அமர்தல் - விரும்புதல்); (நம்பன் - விரும்பத்தக்கவன் - சிவபெருமான்);

சுரர் தொழக் கார் இலங்கிய கண்ட - தேவர்கள் போற்றக் கருமை விளங்கும் கண்டம் உடையவனே; (சுரர் - தேவர்); (கார் - கருமை); (இலங்குதல் - விளங்குதல்);

கலம் மலி வாரி சூழ் திருவான்மிநகர் உறை ஆரியா - படகுகள் நிறைந்த கடல் சூழ்ந்த திருவான்மியூரில் உறைகின்ற பெரியோனே; (கலம் - மரக்கலம்; படகு); (வாரி - கடல்); (ஆரியன் - பெரியோன்; குரு); (கலம் + மலி = கலமலி - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும்);

அடியேனுக்கு அருளாயே - எனக்கு அருள்வாயாக!


7)

செய்ய னேபலி தேர்ந்துழல் செல்வனே

வெய்ய நஞ்சை விரும்பு மிடற்றினில்

மைய னேகலி ஆர்திரு வான்மியூர்

ஐய னேஅடி யேனுக் கருளாயே.


செய்யனே - செம்மேனி உடையவனே; (செய் - சிவப்பு);

பலி தேர்ந்து உழல் செல்வனே - ஐயம் ஏற்றுத் திரியும் செல்வனே;

வெய்ய நஞ்சை விரும்பு மிடற்றினில் மையனே - கொடிய விஷத்தை விரும்பிய கண்டத்தில் கருமை உடையவனே; (வெய்ய - கொடிய); (மை - கருமை);

கலி ஆர் திருவான்மியூர் ஐயனே - ஒலி மிகுந்த திருவான்மியூரில் உறைகின்ற தலைவனே; (கலி - ஒலி); (ஆர்தல் - மிகுதல்; நிறைதல்; பொருந்துதல்); (ஐயன் - தலைவன்);

அடியேனுக்கு அருளாயே - எனக்கு அருள்வாயாக!


8)

மதியி லாத இராவணன் வாய்களால்

துதிசெ யும்படி தூவிரல் ஊன்றினாய்

மதிலி லங்கிய வான்மி நகர்தனில்

அதிப னேஅடி யேனுக் கருளாயே.


மதி இலாத இராவணன் வாய்களால் துதிசெயும்படி தூ விரல் ஊன்றினாய் - அறிவற்ற இராவணன் (கயிலைக்கீழ் நசுக்குண்டு) பத்து வாய்களாலும் உன்னைத் துதிக்கும்படி தூய பாதத்து ஒரு விரலை ஊன்றியவனே;

மதில் இலங்கிய வான்மிநகர்தனில் அதிபனே - மதில்கள் சூழ்ந்த திருவான்மியூரில் உறைகின்ற தலைவனே; (அதிபன் - தலைவன்);

அடியேனுக்கு அருளாயே - எனக்கு அருள்வாயாக!


9)

செங்கண் மாலொடு செம்மலர் மேலயன்

எங்கள் நாத எனவுயர் சோதியே

வங்கம் ஆர்கடல் சூழ்திரு வான்மியூர்

அங்க ணாஅடி யேனுக் கருளாயே.


செங்கண் மாலொடு செம்மலர் மேல் அயன் - சிவந்த கண்களை உடைய திருமாலும் தாமரைமலர்மேல் உறையும் பிரமனும்;

"எங்கள் நாத" என உயர் சோதியே - "எங்கள் நாதனே" என்று துதித்துப் போற்றுமாறு உயர்ந்த சோதியாகிய பெருமானே;

வங்கம் ஆர் கடல் சூழ் திருவான்மியூர் அங்கணா - படகுகள் (/அலைகள்) நிறைந்த கடல் சூழ்ந்த திருவான்மியூரில் உறைகின்ற அருட்கண்ணனே; (வங்கம் - மரக்கலம்; படகு; அலை); (அங்கணன் - அருள்நோக்கு உடையவன் - சிவன்- Šiva, as gracious-eyed);

அடியேனுக்கு அருளாயே - எனக்கு அருள்வாயாக!


10)

நிந்தை பேசியும் காசினை நீட்டியும்

மந்தை தன்னை வளர்ப்பவர் பொய்விடும்

வந்திக் கின்ற அடியரை வான்மியூர்

எந்தை ஏருடை வானுல கேற்றுமே.


நிந்தை பேசியும் காசினை நீட்டியும் மந்தை தன்னை வளர்ப்பவர் பொய் விடும் - வேதநெறியைப் பழித்துப் பேசியும், காசு வேலை முதலியவற்றைக் கொடுத்தும், தங்கள் கூட்டத்தைச் சேர்ப்பவர்கள் சொல்லும் பொய்ச்சொற்களை நீங்குங்கள்;

வந்திக்கின்ற அடியரை வான்மியூர் எந்தை ஏர் உடை வானுலகு ஏற்றுமே - தன்னை வணங்கும் அடியவர்களைத், திருவான்மியூரில் உறைகின்ற எம் தந்தை, நன்மைமிக்க சிவலோகத்திற்கு உயர்த்துவான்; (ஏர் - அழகு; நன்மை); (ஏற்றும் - உயர்த்துவான் - செய்யும் என்ற வாய்பாட்டு வினைமுற்று);

11)

பழுதி லாமறை பாடிப் பதமலர்

தொழுத மாணி துயர்கெடக் கூற்றுதை

மழுவ னைத்திரு வான்மி நகருறை

அழக னைப்பணி அன்பருக் கின்பமே.


பழுது இலா மறை பாடிப் - குற்றமற்ற வேதத்தைப் பாடி;

பதமலர் தொழுத மாணி துயர் கெடக் கூற்று உதை மழுவனைத் - மலர் போன்ற திருவடிகளை வழிபட்ட மார்க்கண்டேயரின் துயரம் நீங்கும்படி எமனை உதைத்தவனும், மழுவாளை ஏந்தியவனுமான ஈசனைத்;

திருவான்மி நகர் உறை அழகனைப் பணி அன்பருக்கு இன்பமே - திருவான்மியூரில் உறைகின்ற அழகனான சிவபெருமானைப் பணிகின்ற பக்தர்களுக்கு என்றும் இன்பமே.


பிற்குறிப்பு:

இலக்கணக் குறிப்பு: செய்யும் என்ற வாய்பாட்டு வினைமுற்று - இது பலர்பால் படர்க்கை, முன்னிலை, தன்மை ஆகியவற்றில் வாராது. ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால், பலவின்பால் என்னும் படர்க்கைப் பெயர்களோடு மட்டுமே பொருந்தி வரும்.

(.டு) அவன் உண்ணும், அவள் உண்ணும், அது உண்ணும், அவை உண்ணும்.


வி. சுப்பிரமணியன்

-------------------