05.17 – கோயில் (தில்லை - சிதம்பரம்)
2015-01-04
கோயில் (தில்லை - சிதம்பரம்)
-----------------------
(கலிவிருத்தம் - 'மா மாங்காய் மா மாங்காய்' என்ற அமைப்பு)
(சம்பந்தர் தேவாரம் - 1.80.1 - "கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே")
1)
கட்டத் தொடர்தீரக் கையால் மலர்தூவி
இட்டத் தொடுநாளும் ஏத்திப் பணிகின்ற
சிட்டர்க் கருள்வானைச் சிற்றம் பலமேய
நட்டப் பெருமானை நம்பித் தொழுவோமே.
கட்டத் தொடர் - கஷ்டத்தொடர் - துன்பத்தொடர்;
இட்டம் - விருப்பம்;
சிட்டர் - உயர்ந்தோர்;
நட்டப் பெருமான் - நடராஜன்;
நம்பி - விரும்பி; நம்பிக்கையோடு;
2)
ஓடும் புனல்திங்கள் உரகம் அணிகொன்றை
சூடும் முடியானைச் சுண்ணப் பொடியானை
மாடு வளர்தில்லை மன்றில் திருநட்டம்
ஆடும் கழலானை அன்பால் தொழுவோமே.
ஓடும் புனல் திங்கள் உரகம் அணிகொன்றை சூடும் முடியானைச் - கங்கை, பிறைச்சந்திரன், பாம்பு, அழகிய கொன்றைமலர் இவற்றையெல்லாம் திருமுடிமேல் அணிந்தவனை; (உரகம் - பாம்பு); (அணி - அழகு);
சுண்ணப் பொடியானை - திருநீற்றைப் பூசியவனை; திருநீற்றையே நறுமணப் பொடியாகப் பூசிக் கொள்பவனை;
மாடு வளர் தில்லை மன்றில் திருநட்டம் ஆடும் கழலானை - செல்வம் உயர்கின்ற தில்லை அம்பலத்தில் கூத்தாடுபவனை; (சம்பந்தர் தேவாரம் - 1.80.5 - "செல்வ நெடுமாடம் ... செல்வம் உயர்கின்ற செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய செல்வன்...");
3)
முடிக்குத் தலைமாலை முளைவெண் மதிசூடி
வெடிக்கும் துடியேந்தி விண்ணின் றிழியாற்றைக்
குடிக்கும் சடையானைக் தில்லைக் குடியானை
நடிக்கும் பெருமானை நம்பித் தொழுவோமே.
முடிக்குத் தலைமாலை - தலைக்குத் தலைமாலை;
வெடிக்கும் துடி - பெருத்த ஓசையோடு அதிரும் உடுக்கு; (4.73.6 - "வெடிபடு தமருகங் கை தரித்ததோர் கோல" - வெடிபடு தமருகம் - வெடி போன்ற ஒலியை யுண்டாக்கும் உடுக்கை);
விண்ணின்று இழி ஆற்றைக் குடிக்கும் சடையானைக் - வானிலிருந்து இறங்கிய கங்கையை உள்ளடக்கிய சடையை உடையவனை;
தில்லைக் குடியானை - தில்லையில் நீங்காது உறைபவனை; (குடி - உறைவிடம்);
நடிக்கும் பெருமானை - நடராஜனை;
இலக்கணக் குறிப்பு: நின்று - ஐந்தாம்வேற்றுமைப் பொருள்பட வரும் ஓரிடைச் சொல்;
உதாரணம்: சம்பந்தர் தேவாரம் - 1.82.11 - "மேனின் றிழிகோயில் வீழி மிழலையுள்" - (மேல்நின்று இழி கோயில் - விண்ணிழிகோயில்) - விண்ணிலிருந்து இழிந்து வந்துள்ள வீழிமிழலைக் கோயிலில்;
4)
பார்த்தற் கருள்செய்யப் பன்றிப் பின்சென்ற
மூர்த்தம் உடையானை முடிவில் புகழானைத்
தீர்த்தச் சடையானைச் சிற்றம் பலமேய
கூத்தப் பெருமானைக் கூறி மகிழ்வோமே.
பார்த்தற்கு - பார்த்தனுக்கு - அருச்சுனனுக்கு;
மூர்த்தம் - வடிவம்; (கிராதர் - வேட்டுவ வடிவம் - மாஹேஸ்வர மூர்த்தங்களுள் ஒன்று);
முடிவு இல் புகழானை - என்றும் இருக்கும் புகழ் உடையவனை;
தீர்த்தச்சடை - கங்கைச்சடை; (தீர்த்தம் - நீர்; தூய்மை);
5)
சனித்துத் தரைமீது தவிக்கும் நிலைமாற்றி
இனித்தொல் வினைநண்ணா இன்ப நிலைநல்கும்
தனித்தன் மையினானைக் கனக சபைதன்னில்
குனித்தல் உடையானைக் கூறி மகிழ்வோமே.
சனித்தல் - ஜனித்தல் - பிறத்தல்;
இனித் தொல்வினை நண்ணா - இனிமேல் பழவினைகள் அணுகாத;
தனித் தன்மையினானை - ஒப்பற்ற தன்மை உடையவனை;
கனகசபை - பொன்னம்பலம்;
குனித்தல் - ஆடுதல்;
6)
தலையின் மிசைநாகம் தண்வெண் மதியோடு
குலவும் பெருமானைக் கூடார் புரமெய்த
சிலைவில் உடையானைச் சிற்றம் பலமேய
அலகில் நடத்தானை அன்பால் தொழுவோமே.
தலையின்மிசை நாகம் தண் வெண் மதியோடு குலவும் பெருமானை - திருமுடிமேல் பாம்பு குளிர்ந்த வெண் பிறைச்சந்திரனோடு விளங்குகின்ற பெருமானை; (குலவுதல் - விளங்குதல்; மகிழ்தல்; உலாவுதல்);
கூடார் புரம் எய்த - பகைவர்களது முப்புரங்கள்மேல் கணையைச் செலுத்தி அழித்த;
சிலைவில் உடையானை - மலையை வில்லாக உடையவனை; (சிலை - மலை);
சிற்றம்பலம் மேய அலகு இல் நடத்தானை - தில்லையில் சிற்றம்பலத்தில் உறைகின்ற, அளவில்லாத திருக்கூத்து ஆடுபவனை;
அன்பால் தொழுவோமே - பக்தியோடு வழிபடுவோம்.
7)
பருக்கைம் மதமாவைப் பற்றி உரிசெய்தான்
இருக்கை மொழிநாவன் ஏத்தும் அடியார்வான்
இருக்க அருள்செய்து தில்லை எழில்மன்றில்
நிருத்தம் புரிவானை நித்தம் நினைவோமே.
பருக் கைம் மதமாப் பற்றி உரிசெய்தான் - பருத்த துதிக்கையை உடைய ஆண் யானையைப் பிடித்து அதன் தோலை உரித்தவன்;
இருக்கை மொழி நாவன் - வேதத்தை மொழிந்தவன்; (இருக்கு - ரிக்வேதம் - வேதம்);
ஏத்தும் அடியார் வான் இருக்க அருள்செய்து - துதிக்கும் பக்தர்களுக்குச் சிவலோக வாழ்வை அருளி;
தில்லை எழில்மன்றில் நிருத்தம் புரிவானை - அழகிய தில்லை அம்பலத்தில் ஆடுபவனை; (நிருத்தம் - ஆடல்);
நித்தம் நினைவோமே - தினந்தோறும் நினைப்போம்;
8)
தடந்தோள் வலியுன்னித் தருக்கிக் கயிலாயம்
இடந்தான் முடிபத்தை இறுத்த விரலானை
மடந்தை பிரியானைத் தில்லை மணிமன்றில்
நடஞ்செய் பெருமானை நம்பித் தொழுவோமே.
தடம் தோள் வலி உன்னித் தருக்கி - தன் பெரிய புஜங்களின் வலிமையை எண்ணிக் கருவத்தோடு;
கயிலாயம் இடந்தான் முடி பத்தை இறுத்த விரலானை - கயிலைமலையைப் பெயர்த்த இராவணனது பத்துத் தலைகளையும் அழித்த திருவிரல் உடையவனை;
மடந்தை பிரியானைத் - உமைபங்கனை;
தில்லை மணிமன்றில் நடம் செய் பெருமானை - அழகிய தில்லை அம்பலத்தில் ஆடுபவனை; (மணீ - அழகு);
நம்பித் தொழுவோமே - விரும்பி வணங்குவோம்;
9)
பன்றி அடிநேடப் பறவை முடிநேட
அன்று வரையின்றி நின்ற அழலானைத்
துன்றி அடியார்கள் துதிக்க அணிதில்லை
மன்றில் நடிகோனை வாழ்த்தி மகிழ்வோமே.
பன்றி - பன்றி உருக்கொண்ட திருமால்;
பறவை - அன்ன உருக்கொண்ட பிரமன்;
நேட - தேட;
வரையின்றி - எல்லையின்றி;
அழலான் - அழல் வடிவினன்; (அழல் - நெருப்பு);
துன்றுதல் - நெருங்குதல் (To be close, thick, crowded together;);
நடி கோன் - நடிக்கின்ற தலைவன் - நடராஜன்;
10)
வருத்தம் மிகவாக்கும் வழிகள் தமில்நின்று
பொருத்தம் இலசொல்லும் பொய்யர்க் கருளானைத்
திருத்தம் உடையானைச் சிற்றம் பலமேய
நிருத்தப் பெருமானை நித்தம் நினைவோமே.
வழிகள்தமில் - வழிகள்தம்மில் - வழிகளில்; நெறிகளில்;
நின்று - நின்றுகொண்டு; ஒழுகி;
பொருத்தம் இல சொல்லும் - தகாத வார்த்தைகளைச் சொல்கின்ற; பொருத்தமற்ற சொற்களைக் கூறுகின்ற;
"வருத்தம் மிக ஆக்கும் பொய்யர்; வழிகள்தமில் நின்று, பொருத்தம் இல சொல்லும் பொய்யர்" என்றும் இயைக்கலாம்.
திருத்தம் உடையான் - புனிதன்; கங்காதரன்; (திருத்தம் - புனிதம்; தீர்த்தம்);
நிருத்தம் - நடனம்;
11)
மட்டு மலிபூவார் மாலை தமிழ்மாலை
இட்டு மனமார ஏத்தின் வினையென்ற
கட்டைக் களைவானைக் கனக சபைமேய
நட்டப் பெருமானை நம்பித் தொழுவோமே.
மட்டு மலி பூ ஆர் மாலை - தேனும் வாசனையும் மிகுந்த பூக்கள் நிறைந்த மாலை; (மட்டு - தேன்; வாசனை); (மலிதல் - மிகுதல்; நிறைதல்); (ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்);
தமிழ்மாலை - தமிழ்ப் பாமாலை;
மட்டு மலி பூ ஆர் மாலை தமிழ்மாலை - வாசப் பூமாலையும் பாமாலையும் (உம்மைத்தொகை);
இட்டு - சாத்தி - அணிந்து; (சாத்துதல் - அணிதல்);
மனமார ஏத்தின் - மனம் மகிழ்ந்து துதித்தால்; (ஆர்தல் - நிறைதல்);
வினை என்ற கட்டைக் களைவானைக் - பழவினைப் பந்தத்தைத் தீர்ப்பவனை;
கனகசபை மேய நட்டப் பெருமானை - பொன்னம்பலத்தில் உறைகின்ற நடராஜனை;
நம்பித் தொழுவோமே - விரும்பி வணங்குவோம்;
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு :
1) யாப்புக்குறிப்பு :
கலிவிருத்தம் - 'மா மாங்காய் மா மாங்காய்' - என்ற அமைப்பு.
மாங்காய்ச்சீர் வரும் இடங்களில் பொதுவாக புளிமாங்காய்ச்சீர் வரும்; ஒரோவழி (சில சமயம்) கூவிளமும் வரலாம்.
2) சம்பந்தர் தேவாரம் - 1.80.1 -
கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே
செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே.
-------------------
No comments:
Post a Comment