05.16 – சிக்கல்
2014-12-28
சிக்கல்
-----------------------
(வஞ்சித்துறை - - 'மா விளம்' என்ற வாய்பாடு - திருவிருக்குக்குறள் அமைப்பு)
(சம்பந்தர் தேவாரம் - 1.92.1 - "வாசி தீரவே")
1)
தக்கன் வேள்வியில்
துக்கம் செய்தவன்
நக்கன் சிக்கலைப்
புக்குப் போற்றுமே.
தக்கன் செய்த வேள்வியை அழித்தவனும் திகம்பரனுமான சிவபெருமான் உறையும் சிக்கலை அடைந்து போற்றுங்கள்;
2)
அல்லில் ஆடுவான்
கொல்லை ஏறமர்
செல்வன் சிக்கலைச்
சொல்லி உய்ம்மினே.
இருளில் கூத்தாடுபவனும் இடபவாகனம் உடைய செல்வனுமான சிவபெருமான் உறையும் சிக்கலைப் போற்றி உய்யுங்கள்;
3)
காவ லார்புரம்
வேவ நக்கமா
தேவன் சிக்கலிற்
கோவைக் கூறுமே.
காவல் ஆர் புரம் - காவல் பொருந்திய முப்புரங்கள்; (சம்பந்தர் தேவாரம் - 1.100.6 - "கடைநெடுமாடக் கடியரண்மூன்றுங்..." - கடி அரண் - காவலோடு கூடிய அரண்);
வேவ நக்க மாதேவன் - வெந்து அழியச் சிரித்த மகாதேவன்;
சிக்கலிற் கோவைக் கூறுமே - சிக்கலில் உறையும் தலைவனைப் புகழுங்கள்; (கோ - தலைவன்);
4)
தையல் பங்கமர்
செய்யன் சிக்கலில்
ஐயன் தாள்தொழ
உய்யல் திண்ணமே.
தையல் பங்கு அமர் செய்யன் - உமாதேவியை ஒரு பங்காக விரும்பும் செம்மேனிப் பெருமான்;
சிக்கலில் ஐயன் - சிக்கலில் உறையும் தலைவன்;
தாள் தொழ உய்யல் திண்ணமே - அவனது திருவடியைத் தொழுதால் உய்தி நிச்சயம்;
5)
கொக்கின் தூவலார்
செக்கர் அஞ்சடைச்
சிக்க லானடி
துக்கம் நீக்குமே.
கொக்கிறகை அணிந்த அழகிய செஞ்சடையை உடைய, சிக்கலில் உறையும் பெருமான் திருவடி நம் துக்கத்தைப் போக்கும்; (தூவல் - இறகு); (செக்கர் - சிவப்பு); (அஞ்சடை - அம் சடை - அழகிய சடை);
6)
கண்ணில் தீயினன்
விண்ணி னார்தொழும்
அண்ணல் சிக்கலை
நண்ணல் நன்மையே.
தீ உமிழும் நெற்றிக்கண்ணனும், தேவர் தொழும் தலைவனுமான பெருமான் உறையும் சிக்கலை அடைந்தால் நன்மை கிட்டும்; (நண்ணல் - நண்ணுதல் - அடைதல்);
7)
வாசப் பூவினால்
தேசன் சிக்கலில்
ஈசன் தாள்தொழ
நாசம் பாவமே.
ஒளிவடிவினனும் சிக்கலில் உறைபவனுமான ஈசனது திருவடியை மணம் மிக்க பூக்கள் தூவி வணங்கினால் நம் பாவங்கள் அழியும்; (தேசன் - ஒளியுருவினன்); ("தேசன், சிக்கலில் ஈசன் தாள் வாசப் பூவினால் தொழப் பாவம் நாசமே" - என்று இயைக்க).
8)
மலையெ டுத்தவன்
அலற ஊன்றிய
தலைவன் சிக்கலை
வலம்வந் துய்ம்மினே.
கயிலையைப் பெயர்த்த இராவணனை அவன் அலறும்படி ஒரு விரலை ஊன்றி நசுக்கிய சிவபெருமான் உறையும் சிக்கலை வலம்செய்து உய்யுங்கள்;
9)
அரிய யன்தொழும்
பெரியன் ஆலமர்
குரவன் சிக்கலை
உரைசெய் துய்ம்மினே.
அரி அயன் தொழும் பெரியன் - திருமாலும் பிரமனும் வணங்கும் பெரியவன்;
ஆல் அமர் குரவன் - கல்லால மரத்தின்கீழ் இருக்கும் தட்சிணாமூர்த்தி;
சிக்கலை உரைசெய்து உய்ம்மினே - அப்பெருமான் உறையும் சிக்கலைப் போற்றி உய்யுங்கள்;
10)
சைவன் தாள்தொழாக்
கையர் சொல்விடும்
மெய்யன் சிக்கலை
எய்தி உய்ம்மினே.
சைவன் தாள் தொழாக் கையர் சொல் விடும் - சிவபெருமான் திருவடியைத் தொழாத கீழோர்களது (வஞ்சகர்களது) சொற்களை மதியாமல் நீங்குங்கள்; (சைவன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று); (கையர் - கீழோர்; வஞ்சகர்);
மெய்யன் சிக்கலை எய்தி உய்ம்மினே - மெய்ப்பொருளாக உள்ள சிவபெருமானது சிக்கலை அடைந்து உய்யுங்கள்;
11)
நிகரி லான்பொழில்
திகழும் சிக்கலில்
பகவன் தாள்தொழ
மிகவும் நன்மையே.
நிகர் இலான் - ஒப்பற்றவனும்;
பொழில் திகழும் சிக்கலில் பகவன் - சோலை சூழ்ந்த சிக்கலில் உறைகின்ற பகவானுமான;
தாள் தொழ மிகவும் நன்மையே - சிவபெருமானது திருவடியைத் தொழுதால் பேரின்பம் கிட்டும்.
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment