05.18 – வேட்களம் (திருவேட்களம்)
2015-01-19
வேட்களம் (திருவேட்களம்) (சிதம்பரத்தை அடுத்து உள்ள தலம்)
-----------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானும் கனல்காட்டும் கையானும்")
1)
இசைமலிந்த இணையடியை ஏத்தியதிங் களைச்சடையின்
மிசையணிந்த சிவபெருமான் விரைமலர்த்தாள் மனத்திருத்தித்
திசையனைத்தும் இருள்சூழ்ந்த செறிகானில் தவம்செய்த
விசயனுக்குப் படையீந்த வேடனிடம் வேட்களமே.
இசை மலிந்த இணையடியை ஏத்திய திங்களைச் சடையின்மிசை அணிந்த சிவபெருமான் - புகழ் மிக்க இரு திருவடிகளைத் துதித்த சந்திரனைச் சடையின்மேல் சூடிய சிவபெருமான்; (இசை - புகழ்); (மிசை - மேல்);
விரைமலர்த்தாள் மனத்து இருத்தித் - வாசம் மிக்க மலர் போன்ற திருவடியை மனத்தில் வைத்து;
திசை அனைத்தும் இருள் சூழ்ந்த செறிகானில் தவம் செய்த - எல்லாத் திசைகளிலும் இருள் சூழும் அடர்ந்த காட்டில் தவம் செய்த;
விசயனுக்குப் படை ஈந்த வேடன் இடம் வேட்களமே - அருச்சுனனுக்குப் பாசுபாதாஸ்திரத்தை அருளிய வேடன் கோலத்தில் வந்த பெருமான் உறையும் தலம் திருவேட்களம்; (விசயன் - அருச்சுனன்); (படை - அஸ்திரம்; ஆயுதம்); (வேடன் - வேட்டுவன்; வேடதாரி);
2)
அல்லேந்து கண்டத்தன் அடியிணையை மறவாது
சொல்லேந்து தமிழ்பாடித் துதிப்போர்க்குத் துணையாவான்
மல்லேந்து திரள்தோளன் விசயற்கு வரம்நல்க
வில்லேந்திக் கானிற்செல் வேடனிடம் வேட்களமே.
அல் ஏந்து கண்டத்தன் - இருள் தங்கும் கண்டத்தை உடையவன்; (அல் - இரா; இருள்;)
மல் ஏந்து திரள் தோளன் - வலிமை மிக்க திரண்ட தோள்களை உடையவன்;
3)
செங்கோலன் மனுவுக்குத் திருவருள்செய் ஆரூரன்
கங்காளன் கரிகாடன் கலவமயில் மடமாது
பங்காளன் தவஞ்செய்த பார்த்தனுக்குப் படைநல்க
வெங்கானிற் கேழலெய்த வேடனிடம் வேட்களமே.
செங்கோலன் மனு - நீதி தவறாது ஆட்சி செய்த மனுநீதிச் சோழன்;
கங்காளன் - எலும்பை அணிந்தவன்;
கரிகாடன் - சுடுகாட்டில் இருப்பவன்; (கரிகாடு - சுடுகாடு);
கலவமயில் மடமாது பங்காளன் - ஏழை பங்காளன் - அர்த்தநாரீஸ்வரன்; (கலவமயில் - கலாபமயில் - தோகையுடைய மயில்); (மடமாது - அழகிய பெண்);
பார்த்தனுக்குப் படை நல்க வெங்கானில் கேழல் எய்த - அருச்சுனனுக்குப் பாசுபட்ஹாஸ்திரத்தை அருளக் கொடிய காட்டில் பன்றியை அம்பால் எய்த; (கேழல் - பன்றி);
4)
ஆண்டுபதி னாறாயிற் றென்றடைந்த அடற்கூற்றே
மாண்டுவிட உதைத்தருளி மார்க்கண்டர் உயிர்காத்தான்
பாண்டுமகன் பார்த்தனுக்குப் பரிந்தன்று பன்றியெய்து
வேண்டுபடை தந்தருளும் வேடனிடம் வேட்களமே.
ஆண்டு பதினாறு ஆயிற்று என்று அடைந்த அடல்-கூற்றே மாண்டுவிட உதைத்தருளி - மார்க்கண்டேயருக்குப் பதினாறு வயது ஆயிற்று என்று அவரைக் கொல்ல நெருங்கிய வலிய எமனே மாளும்படி எமனை உதைத்து;
பாண்டுமகன் பார்த்தனுக்குப் பரிந்து - பாண்டுவின் மகனாகிய அருச்சுனனுக்கு இரங்கி;
5)
பண்ணமரும் தமிழ்பாடிப் பரவடியார் தமக்குவினை
நண்ணலிலா நன்னிலையை நல்கியருள் நம்பெருமான்
கண்ணமரும் நெற்றியினான் கானகத்தே கருங்குழலி
வெண்ணகையா ளோடடைந்த வேடனிடம் வேட்களமே.
பண் அமரும் தமிழ் பாடிப் பரவு அடியார் தமக்கு - இசையோடு பாடும் தேவாரம் பாடித் துதிக்கும் பக்தர்களுக்கு;
வினை நண்ணல் இலா நன்னிலை நல்கியருள் நம் பெருமான் - வினைகள் நெருங்காத நற்கதியைக் கொடுக்கும் நம் பெருமான்;
கண் அமரும் நெற்றியினான் - நெற்றிக்கண்ணன்;
கானகத்தே கருங்குழலி வெண்ணகையாளோடு அடைந்த வேடன் இடம் வேட்களமே - கரிய குழலும் வெண்பற்களும் உடைய உமையம்மையுடன் வேடன் கோலத்தில் காட்டில் வந்த பெருமான் உறையும் தலம் திருவேட்களம்;
6)
வஞ்சியவள் வெருவுறவே வந்தெதிர்ந்த மலைபோன்ற
குஞ்சரத்தை உரிசெய்து போர்வையெனக் கொண்டுகந்தான்
அஞ்செழுத்தே நினைந்திருந்த அருச்சுனனுக் கருள்செய்ய
வெஞ்சரத்தாற் கேழலெய்த வேடனிடம் வேட்களமே.
வஞ்சியவள் வெருவுறவே வந்து எதிர்ந்த மலை போன்ற குஞ்சரத்தை உரிசெய்து போர்வை எனக் கொண்டுகந்தான் - உமை அஞ்ச, வந்து போர்செய்த மலை போன்ற யானையின் தோலை உரித்துப் போர்வையாகப் போர்த்தியவன்; (குஞ்சரம் - யானை);
வெஞ்சரத்தால் கேழல் எய்த - கொடிய அம்பால் பன்றியை எய்த;
7)
வாரத்தால் தொழுவார்தம் வல்வினைகள் எல்லாமே
தீரத்தான் அருள்புரியும் சிவபெருமான் மார்பிலரா
ஆரத்தான் அடர்கானில் அருச்சுனனோ டமர்செய்த
வீரத்தான் ஈரமிகு வேடனிடம் வேட்களமே.
வாரத்தால் தொழுவார்தம் வல்வினைகள் எல்லாமே தீரத்தான் அருள்புரியும் சிவபெருமான் - அன்போடு தொழும் பக்தர்களது வலிய வினையெல்லாம் தீரவே அருளும் சிவபெருமான்; (வாரம் - அன்பு);
மார்பில் அரா ஆரத்தான் - மார்பில் பாம்பு மாலை அணிந்தவன்; (அரா - பாம்பு; ஆரம் - மாலை);
அடர்கானில் அருச்சுனனோடு அமர்செய்த வீரத்தான் - அடர்ந்த காட்டில் அருச்சுனனோடு போரிட்ட விரம் மிக்கவன்; (அமர்செய்தல் - போரிடுதல்); (சுந்தரர் தேவாரம் 7.66.4 - "வீரத் தால்ஒரு வேடுவ னாகி விசைத்தொர் கேழலைத் துரந்துசென் றணைந்து");
ஈரம் மிகு - தயை மிக்க; (கங்காதரன் என்றும் கொள்ளலாம்);
8)
குன்றையசை இலங்கைக்கோன் கோலமுடி பத்துமிற
அன்றுவிரல் ஒன்றூன்றி ஆரருள்கள் செய்தபிரான்
பன்றியதன் பின்சென்று பார்த்தற்குப் பரிந்தபரன்
வென்றிவிடை ஒன்றுடைய வேடனிடம் வேட்களமே.
குன்றை அசை இலங்கைக்கோன் கோலமுடி பத்தும் இற - கயிலையைப் பெயர்த்த இராவணனது அழகிய கிரீடம் அணிந்த பத்துத்தலைகளும் நசுங்கும்படி; (குன்று - கயிலைமலை);
அன்று விரல் ஒன்று ஊன்றி ஆரருள்கள் செய்த பிரான் - முன்பு திருவிரல் ஒன்றை ஊன்றிப் பின் அரிய அருள் செய்த பெருமான்; (ஆரருள்கள் - பேரருள்);
பன்றிஅதன்பின் சென்று பார்த்தற்குப் பரிந்த பரன் - பன்றிப்பின் போய்ப் பார்த்தனுக்கு அருளிய பரமன்;
வென்றி விடை - வெற்றியை உடைய இடபம்;
9)
வளைகோடு திகழ்கேழல் வானிலுயர் அன்னமிவர்
தளர்வாகிக் கழல்போற்றத் தழலாகி நின்றபிரான்
தளையேதும் இலன்முன்னம் தனஞ்சயனோ டமர்செய்து
விளையாடிப் படையருள்செய் வேடனிடம் வேட்களமே.
வளைகோடு திகழ்கேழல் - வளைந்த கொம்பு உடைய பன்றி - பன்றி வடிவில் சென்ற திருமால்; (கோடு - பன்றி, யானை இவற்றின் தந்தம்); (கேழல் - பன்றி);
வானில் உயர் அன்னம் - வானில் பறந்து சென்ற அன்னப்பறவை - அன்னவடிவில் சென்ற பிரமன்;
இவர் தளர்வாகிக் கழல்போற்றத் தழலாகி நின்ற பிரான் - இவ்விருவரும் அடிமுடி காணாமல் தளர்ந்து திருவடியை வணங்குமாறு சோதி வடிவில் ஓங்கிய தலைவன்;
தளை ஏதும் இலன் - மும்மலக்கட்டு இல்லாதவன்; (தளை - பந்தம்);
தனஞ்சயனோடு அமர் செய்து விளையாடி - அருச்சுனனோடு போரிட்டுத் திருவிளையாடல் புரிந்து;
10)
வாட்டமறு மறைநெறியை மருவாத மதியீனர்
காட்டுவழி மதியேன்மின் கண்ணுதலான் கழல்மனத்தில்
நாட்டிவழி படுவார்க்கு நல்லவன்பாண் டவனுக்கு
வேட்டுவனாய்ச் சென்றருள்செய் வேடனிடம் வேட்களமே.
வாட்டம் அறு மறைநெறியை மருவாத - துன்பத்தைத் தீர்க்கின்ற வேதநெறியைப் பின்பற்றாத; (மருவுதல் - தழுவுதல்);
மதியீனர் காட்டுவழி மதியேன்மின் - அறிவற்றோர் காட்டுகின்ற நெறியை நீங்கள் மதிக்கவேண்டா; (காட்டுவழி - நல்வழி இருக்கக், காட்டின் வழியே செல்லும் ஆபத்தான வழி); (மதியேன்மின் - மதியேல்+மின் - எதிர்மறைப் பன்மை ஏவல் - மதியாதீர்கள்);
கண்ணுதலான் கழல்மனத்தில் நாட்டி வழிபடுவார்க்கு நல்லவன் - நெற்றிக்கண்ணன் தன் திருவடியை மனத்தில் வைத்து வழிபடும் பக்தர்களுக்கு நன்மை செய்பவன்;
பாண்டவனுக்கு வேட்டுவனாய்ச் சென்று அருள்செய் வேடன் இடம் வேட்களமே - அருச்சுனனுக்கு வேடனாகச் சென்று அருளிய கோலம் உடையவன் உறையும் தல் திருவேட்களம்; (வேடன் - கோலம் உடையவன்);
11)
கரும்புபிடி மன்மதனைக் கண்ணுதலால் நோக்கியவன்
சுரும்புமுரல் கொன்றையொடு தூமதியும் புனைமுடியன்
பெரும்புகழே பேசியடி பேணுகின்ற அடியார்கள்
விரும்புவரம் தந்தருளும் வேடனிடம் வேட்களமே.
கரும்பு பிடி மன்மதனைக் கண்ணுதலால் நோக்கியவன் - கரும்பை வில்லாகக் கையில் ஏந்துகின்ற காமனை நெற்றிக்கண்ணால் நோக்கி எரித்தவன்; (அப்பர் தேவாரம் - 4.102.5 - "கரும்பு பிடித்தவர் காயப்பட்டார்..." - கரும்பினை வில்லாக ஏந்திய மன்மதன் உன்னால் கோபிக்கப்பட்டுச் சாம்பலானான்); (அப்பர் தேவாரம் - 6.20.2 - "பண்டனங்கற் பார்த்தானைப்" - அனங்கன் - மன்மதன். பார்த்தான் - விழித்து எரித்தான்.);
சுரும்பு முரல் கொன்றையொடு தூமதியும் புனை முடியன் - வண்டுகள் ரீங்காரம் செய்யும் கொன்றைமலரையும் வெண் திங்களையும் முடிமேல் அணிந்தவன்;
பெரும் புகழே பேசி அடி பேணுகின்ற அடியார்கள் விரும்புவரம் தந்தருளும் வேடன் இடம் வேட்களமே - ஈசனது பெரிய புகழையே பேசித் திருவடியைப் போற்றும் பக்தர்கள் விரும்பிய வரங்களைத் தந்தருளும் கோலம் உடையவன் உறையும் தலம் திருவேட்களம்;
வி. சுப்பிரமணியன்
----------- --------------