Friday, June 25, 2021

05.12 – பொது - தலமாலை

05.12 – பொது - தலமாலை


2014-12-25

பொது - தலமாலை

----------------------------------

(பாட்டிற்கு ஒரு தலம் - கடைசிப்பாடலில் பல தலங்கள்)

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்")


1) --- கருவூர் (கரூர்) ---

ஒருநாளும் மறவாமல் உள்ளத்தில் அன்போடு

திருநாமம் செபித்திருந்த சீலருயிர் கொல்வதற்கு

வருகாலன் மார்பிலுதை மணிகண்டன் வரம்நல்கு

கருவூரன் சீர்கேளார் காதிருந்தும் செவிடர்களே.


2) --- சிராப்பள்ளி (திருச்சிராப்பள்ளி) ---

இராவிலரு நடம்புரியும் எம்பெருமான் எருதேறி

அராவலையும் திருமுடிமேல் அலைமலிந்த தண்புனலும்

குராமலரும் கூவிளமும் கொக்கிறகும் சூடுகின்ற

சிராமலையான் சீர்கேளார் செவியிருந்தும் செவிடர்களே.


இராவில் அருநடம் புரியும் எம்பெருமான் - நள்ளிருளில் அரிய கூத்தை ஆடுகின்ற எம்பெருமான்; (இரா - இரவு);

எருதேறி - இடபவாகனன்;

அரா அலையும் திருமுடிமேல் - பாம்பு உலாவும் சென்னிமேல்; (அரா - பாம்பு );

அலை மலிந்த தண்புனலும் குராமலரும் கூவிளமும் கொக்கிறகும் சூடுகின்ற – அலை மிகுந்த குளிர்ந்த கங்கையையும் குரவமலரையும் வில்வத்தையும் கொக்கின் இறகையும் அணிகின்ற;

சிராமலையான் சீர் கேளார் - திருச்சிராப்பள்ளியில் உறைகின்ற சிவபெருமானது புகழைக் கேளாதவர்கள்; (ஐயடிகள் காடவர்கோன் - சேத்திரத் திருவெண்பா - 11.5.17 - “நெஞ்சே சிராமலையான் பாதமே சேர்.”);


3) --- சிக்கல் ---

முக்கணுடை எம்பெருமான் மூவர்க்கும் முதலானான்

நக்கெயில்கள் மூன்றெரித்த நாதனுமை நங்கையையோர்

பக்கமகிழ் கின்றபரன் பாரொடுவிண் பணிந்தேத்தும்

சிக்கலரன் சீர்கேளார் செவியிருந்தும் செவிடர்களே.


நக்கு எயில்கள் மூன்று எரித்த நாதன் - சிரித்து முப்புரங்களை எரித்த தலைவன்;

சிக்கல் அரன் - திருச்சிக்கலில் உறைகின்ற சிவபெருமான்;


4) --- தெங்கூர் ---

பொங்கார்வம் கொண்டடியைப் போற்றிசெயும் பத்தர்க்கு

மங்காத செல்வமருள் மாதேவன் நள்ளிருளில்

வெங்கானில் நடம்செய்யும் கங்காளன் விரிபொழில்சூழ்

தெங்கூரன் சீர்கேளார் செவியிருந்தும் செவிடர்களே.


வெங்கான் - சுடுகாடு;

கங்காளன் - எலும்பு மாலை அணிந்த சிவபெருமான்;

தெங்கூரன் - திருத்தெங்கூரில் உறையும் சிவபெருமான்;


5) --- கொடுமுடி ---

நெடுமலையை வில்லாக்கி நெருப்பரிகால் சேர்ந்தமைந்த

சுடுகணையால் புரங்களெய்து சுரர்க்கருள்செய் ஈசனன்பர்

கொடுவினையைத் தீர்க்கின்ற கூத்தனவன் உறைகின்ற

கொடுமுடியைக் கூறாதார் வாயிருந்தும் ஊமர்களே.


நெருப்பரிகால் - நெருப்பு அரி கால் - அக்கினி, திருமால், வாயு;

(அப்பர் தேவாரம் - 5.81.5 - "திருக்கொடும்முடி என்றலும் தீவினைக் கருக்கெடும்...");


6) --- கோளிலி (திருக்கோளிலி) - (திருக்குவளை) ---

வாளியென மலரெய்யும் மதனாகம் பொடிசெய்தான்

ஆளிலையென் றருந்தமிழ்சொல் ஆரூரர்க் கருள்புரிந்தான்

தோளிருநான் குடையீசன் தூயனினி துறைகின்ற

கோளிலியைக் கூறாதார் வாயிருந்தும் ஊமர்களே.


வாளி என மலர் எய்யும் மதன் ஆகம் பொடி செய்தான் - மலர்களை அம்பாக ஏவும் மன்மதனுடைய உடலைச் சாம்பலாக்கியவன்; (வாளி - அம்பு ); (ஆகம் - மன்மதன்);

ஆள் இலை என்று அரும் தமிழ் சொல் ஆரூரர்க்கு அருள்புரிந்தான் - நெல்லைத் திருவாரூருக்கு எடுத்துச் செல்ல ஆள்கள் இல்லை என்று பதிகம் பாடிய சுந்தரருக்கு அருள்புரிந்தவன்; (சுந்தரர் தேவாரம் - 7.20.1 - "...கோளிலி எம்பெருமான் குண்டை யூர்ச்சில நெல்லுப் பெற்றேன்

ஆளிலை எம்பெருமான் அவை அட்டித் தரப்பணியே.");

தோள் இருநான்குடை ஈசன் - எட்டுப் புஜங்களை உடைய ஈசன்;

தூயன் இனிது உறைகின்ற கோளிலியைக் கூறாதார் - பரிசுத்தனான சிவபெருமான் உறைகின்ற திருக்கோளிலியைத் துதிசெய்யாதவர்கள்;

வாய் இருந்தும் ஊமர்களே - வாய் இருந்தாலும் அதன் பயன் இல்லாத ஊமைகள்;


7) --- மருகல் (திருமருகல்) ---

பெருகுவிடம் கண்டஞ்சிப் பெருந்தேவர் இறைஞ்சவுண்டு

கருமணிபோல் திகழ்கண்டன் காழியர்கோன் உரைசெய்த

திருமருவு செந்தமிழ்கேட் டொருவணிகற் குயிர்தந்த

மருகலரன் அடிவாழ்த்தார் வாயிருந்தும் ஊமர்களே.


பெருகுவிடம் கண்டு அஞ்சிப் பெருந்தேவர் இறைஞ்ச உண்டு கருமணிபோல் திகழ் கண்டன் - பெருகிய நஞ்சைக்கண்டு அஞ்சிய பெரும் தேவர்களெல்லாம் வழிபட, அவர்களுக்கு இரங்கி அதனை உண்டு கரியமணி விளங்குகின்ற கண்டத்தை உடையவன்;

(அப்பர் தேவாரம் - 5.44.6 - “பித்தனைப் பெருந் தேவர் தொழப்படும் அத்தனை....” - பெரிய தேவர்களால் தொழப்படும் தலைவனை);

காழியர்கோன் - திருஞான சம்பந்தர்;

திரு மருவு செந்தமிழ் கேட்டு ஒரு வணிகற்கு உயிர் தந்த மருகல் அரன் - திருப் பொருந்திய செந்தமிழான சம்பந்தர் தேவாரத்தைக் கேட்டு மகிழ்ந்து, ஒரு வணிகனுக்கு மீண்டும் உயிரைத் தந்த திருமருகல் ஈசனது; (வணிகற்கு - வணிகன் + கு - வணிகனுக்கு);

(சம்பந்தர் தேவாரம் - 2.18.1 - 'சடையாய் எனுமால்' - திருமருகலில் வணிகன் விடம் தீர்த்த பதிகம்);


8) --- வலிவலம் (திருவலிவலம்) ---

வலிமிகுந்த இருபதுதோள் வாளரக்கன் மாமலைக்கீழ்

நலிவுறத்தான் விரலூன்றி நாளொடுவாள் ஈந்தபிரான்

புலியதளை அரைக்கசைத்த புராதனன்பூம் பொழில்சூழ்ந்த

வலிவலத்தான் அடிவாழ்த்தார் வாயிருந்தும் ஊமர்களே.


வலிமிகுந்த இருபதுதோள் வாளரக்கன் - வலிமை மிக்க இருபது புஜங்களையுடைய கொடிய அர்க்கனான இராவணனை;

மாமலைக்கீழ் நலிவுறத்தான் விரல் ஊன்றி - கயிலைமலைக்கீழ் வருந்தும்படி திருப்பாத விரல் ஒன்றை மலைமேல் இட்டு;

நாளொடு வாள் ஈந்த பிரான் - பின் அவன் அழுது தொழக் கேட்டு இரங்கி அவனுக்கு நீண்ட ஆயுளையும் சந்திரஹாஸம் என்ற வாளையும் அருளியவன்;

புலி அதளை அரைக்கு அசைத்த புராதனன் - புலித்தோலை அரையில் கட்டிய தொன்மையானவன்;

பூம் பொழில் சூழ்ந்த வலிவலத்தான் - அழகிய சோலை சூழ்ந்த திருவலிவலத்தில் உறைகின்ற சிவபெருமானது;

அடி வாழ்த்தார் வாய் இருந்தும் ஊமர்களே - திருவடியை வாழ்த்தாதவர்கள் வாய் இருந்தும் ஊமைகளே;


9) --- நன்னிலம் ---

முன்னயனும் திருமாலும் முயன்றுமுடி அடிநேடிச்

சென்னிமிசைக் கைகூப்பத் தீயாகி நின்றபிரான்

வன்னிகொன்றை சடைக்கணிந்த மாதேவன் வயல்சூழ்ந்த

நன்னிலத்தான் நலம்புகழார் நாவிருந்தும் ஊமர்களே.


முன் அயனும் திருமாலும் முயன்று முடி அடி நேடிச் சென்னிமிசைக் கைகூப்பத் தீயாகி நின்ற பிரான் - முன்பு பிரமனும் திருமாலும் அடிமுடி தேடிக் காணாராத் தலைமேல் கைகூப்பி வணங்குமாறு சோதி வடிவில் நின்ற பெருமான்;

வன்னி கொன்றை சடைக்கு அணிந்த மாதேவன் - சடையில் வன்னி, கொன்றைமலர் இவற்றை அணிந்த மகாதேவன்;

வயல் சூழ்ந்த நன்னிலத்தான் நலம் புகழார் நாவிருந்தும் ஊமர்களே - நன்னிலத்தில் எழுந்தருளிய சிவனது புகழைப் பேசாதவர்கள் நாக்கு இருந்தும் ஊமைகளே.

(சம்பந்தர் தேவாரம் - 2.44.7 - "ஆமாத்தூர் அம்மானைக் கூறாத நாவெல்லாம் கூறாத நாக்களே");


10) --- மறைக்காடு (வேதாரண்யம்) ---

அறக்கூற்றா அவம்பேசும் அறிவிலிகள் நிலையென்னே

மறக்கூற்றம் வந்தக்கால் வஞ்சமொழி காத்திடுமோ

பிறைக்காற்றுச் சடையீந்த பிஞ்ஞகனார் உறைகின்ற

மறைக்காட்டை வாழ்த்தாதார் வாயிருந்தும் ஊமர்களே.


அறக்கூற்றா - அறக்கூற்றாக;

மறக் கூற்றம் - வலிய கூற்றுவன்; சினமுடைய யமன்;

வந்தக்கால் - வந்தபொழுது;

பிறைக்கு ஆற்றுச் சடை ஈந்த பிஞ்ஞகனார் - கங்கை உலவும் சடையில் பிறைக்கும் இடம் தந்த பெருமான்;

மறைக்காடு - வேதாரண்யம்;


11) --- பல தலங்கள் ---

சேவூரும் பெருமானைத் திரிசூலப் படையானைத்

தேவூரும் பாம்புரமும் சிறுகுடியும் வாய்மூரும்

காவாரும் கைச்சினமும் கன்றாப்பும் உறைவானை

நாவாரத் துதிப்பாரை நலியாதீ வினைதானே.


சே ஊரும் பெருமான் - இடப வாகனம் உடையவன்;

கா ஆரும் - சோலை நிறைந்த;

தேவூர், பாம்புரம், சிறுகுடி, வாய்மூர், கைச்சினம், கன்றாப்பு (கன்றாப்பூர்) - திருத்தலங்களின் பெயர்கள்;


வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்புகள் :

1)

இலக்கணக் குறிப்பு: செவிடர்களே, ஊமர்களே போன்ற சொற்றொடர்களை அலகிடும்போது 'ர்' என்ற ஒற்றை நீக்கி அலகிட்டுக் காய்ச்சீராகக் கொள்ளவேண்டும்.

----------- --------------


No comments:

Post a Comment