05.11 – ஞாயிறு (சென்னைக்கு வடமேற்கே உள்ள தலம்)
2014-12-19
ஞாயிறு (சென்னைக்கு வடமேற்கே உள்ள தலம்)
----------------------------------
(அறுசீர் விருத்தம் - 'மா மா மா மா விளம் காய்' என்ற வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.63.1 - "எரியார் மழுவொன் றேந்தி யங்கை யிடுதலை யேகலனா")
(கண்டராதித்தர் - திருவிசைப்பா - 9.20.7 - 'இலையார் கதிர்வேல் இலங்கை வேந்தன் இருபது தோளும்இற')
1)
விரவிப் போற்றும் மெய்யன் பர்க்கு வேண்டு வரங்களெலாம்
கரவில் லாமல் நல்கும் கரனே கங்கை கரந்தவனே
உரையைக் கடந்த உண்மைப் பொருளே உறுவினை தீர்த்தருளாய்
நரைவெள் ளேற்றாய் நறவார் பொழில்சூழ் ஞாயிறு மேயவனே.
விரவிப் போற்றும் மெய்யன்பர்க்கு வேண்டு வரங்களெலாம் கரவு இல்லாமல் நல்கும் கரனே - உன்னை அடைந்து வழிபடும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டும் வர்ங்களையெல்லாம் ஒளித்தல் இன்றி வழங்கும் வரதஹஸ்தனே; (விரவுதல் - அன்புகொள்ளுதல்; அடைதல்); (கரவு - ஒளித்தல்);
உரையைக் கடந்த உண்மைப் பொருளே - சொற்பதம் கடந்த மெய்ப்பொருளே;
நரைவெள்ளேற்றாய் - வெள்ளை இடபவாகனம் உடையவனே;
நறவு ஆர் பொழில் சூழ் ஞாயிறு மேயவனே - மணம் மிக்க சோலை சூழ்ந்த ஞாயிறு என்ற தலத்தில் எழுந்தருளியிருப்பவனே.
2)
நாரி னோடு மாலை தொடுத்த நற்றவள் சங்கிலியைச்
சீரி லங்கு நாவ லூரர் சேர அளித்தவனே
ஏரி லங்கு கண்ட னேஎன் இருவினை தீர்த்தருளாய்
நாரி பங்கா நறவார் பொழில்சூழ் ஞாயிறு மேயவனே.
* சுந்தரர் வேண்டுகோளை ஏற்றுச் சங்கிலியாரைத் திருமணம் செய்வித்தது திருவொற்றியூரில். அதனை இப்பாடல் சுட்டுகின்றது.
நார் - அன்பு ; பூத்தொடுக்கும் நார்;
ஏர் - அழகு;
3)
வஞ்சி போலும் மருங்குல் உடைய மாதொரு கூறுடையாய்
துஞ்சும் போது சுற்றம் எதுவும் துணையிலை நற்றுணையாம்
அஞ்செ ழுத்தை அகத்தில் வைத்தேன் அருவினை தீர்த்தருளாய்
நஞ்சுண் மிடற்றாய் நறவார் பொழில்சூழ் ஞாயிறு மேயவனே.
வஞ்சி - கொடி;
மருங்குல் - இடை;
4)
நாகத் துரிவை போர்த்து கந்தாய் நரைவிடை ஊர்தியினாய்
ஆகத் தினிலோர் அரிவை பாகம் ஆகிய அற்புதனே
சோகத் தினையே தொடர்ந்து நல்கும் தொல்வினை தீர்த்தருளாய்
நாகத் தாராய் நறவார் பொழில்சூழ் ஞாயிறு மேயவனே.
நாகத்து உரிவை போர்த்து உகந்தாய் - யானைத்தோலைப் போர்த்தவனே; (நாகம் - யானை); (உரிவை - தோல்);
நரைவிடை ஊர்தியினாய் - வெள்ளை இடபத்தை வாகனமாக உடையவனே;
ஆகத்தினில் ஓர் அரிவை பாகம் ஆகிய அற்புதனே - திருமேனியில் உமையை பாகமாகக் கொண்ட அற்புதனே; (ஆகம் - மேனி);
சோகத்தினையே தொடர்ந்து நல்கும் தொல்வினை தீர்த்தருளாய் - வருத்தத்தையே தரும் பழவினையைத் தீர்த்து அருள்வாயாக;
நாகத் தாராய் - பாம்பை மாலையாக அணிந்தவனே; (தார் - மாலை);
நறவு ஆர் பொழில் சூழ் ஞாயிறு மேயவனே - மணம் மிக்க சோலை சூழ்ந்த ஞாயிறு என்ற தலத்தில் எழுந்தருளியிருப்பவனே.
5)
வேல்போற் கண்ணி வெருவ அன்று மிகுசினத் தோடெதிர்ந்த
நால்வாய் உரித்தாய் நாறு கொன்றை நாகம் அணிந்தவனே
பால்போல் நீற்றாய் பாதம் பணிந்தேன் பழவினை தீர்த்தருளாய்
நால்வே தத்தாய் நறவார் பொழில்சூழ் ஞாயிறு மேயவனே.
வேல்போற் கண்ணி வெருவ - வேல் போன்ற கண்ணை உடைய உமை அஞ்சுமாறு;
நால்வாய் - யானை;
6)
ஏன மருப்பை ஏந்து மார்ப இருநதி பாய்சடைமேல்
வான மதியை வாழ வைத்த மாகரு ணைக்கடலே
பாந லத்தால் பரவும் என்றன் பழவினை தீர்த்தருளாய்
ஞான மூர்த்தீ நறவார் பொழில்சூழ் ஞாயிறு மேயவனே.
ஏன மருப்பு - பன்றிக்கொம்பு;
இருநதி - பெரிய ஆறு - கங்கை;
வான மதி - வானத்தின்கண் உள்ள மதி - பிறைச்சந்திரன்;
பாநலத்தால்- பாநயத்தோடு - பாமாலைகளால்;
பரவுதல் - துதித்தல்;
7)
மிகவே இடர்செய் காலன் பாசம் வீசிடக் கண்டுனையே
புகலா அடைந்த மாணிக் கருள்செய் புரிசடைப் புண்ணியநின்
புகழார் பாதம் போற்று கின்றேன் பொருவினை தீர்த்தருளாய்
நகர்மூன் றெரித்தாய் நறவார் பொழில்சூழ் ஞாயிறு மேயவனே.
புரிசடை - முறுக்கிய சடை; (புரிதல் - முறுக்குக்கொள்ளுதல்);
புகழ் ஆர் பாதம் - புகழ் பொருந்திய திருவடி;
பொருவினை - தாக்குகின்ற வினைகள்; (பொருதல் - தாக்குதல்); (அப்பர் தேவாரம் - 4.88.4 - “சென்றடைந் தேனுடைய பொருவினை யெல்லாந் துரந்தனைப் ...”);
8)
எதிர்வார் இல்லான் ஊர்தி கீழே இழியவும் மாமலையை
மதியா தோடிப் பேர்த்த மன்னன் மணிமுடி பத்தைவிரல்
நுதியால் நெரித்தாய் நுனையே தொழுதேன் நோய்வினை தீர்த்தருளாய்
நதியார் சடையாய் நறவார் பொழில்சூழ் ஞாயிறு மேயவனே.
எதிர்வார் இல்லான் ஊர்தி கீழே இழியவும் - எதிர்ப்பவர்கள் இல்லாத இராவணனுடைய தேர் பறக்க இயலாமல் தரையில் இறங்கவும்; (சம்பந்தர் தேவாரம் - 3.56.8 - “இமையவர் அஞ்சியோட எதிர்வாரவர் தம்மையின்றி அமைதரு வல்லரக்கன்”);
மாமலையை மதியாது ஓடிப் பேர்த்த மன்னன் மணிமுடி பத்தை - அந்த உயர்ந்த மலையை வணங்க நினையாமல் சினந்து ஓடிச் சென்று பெயர்த்த இலங்கை மன்னனது மணிமுடி அணிந்த தலைகள் பத்தையும்;
விரல் நுதியால் நெரித்தாய் - ஒரு விரலின் நுனியால் நசுக்கியவனே; (நுதி - நுனி);
நுனையே தொழுதேன் நோய்வினை தீர்த்தருளாய் - உன்னையே வழிபட்டேன் என் பிறவிநோய்க்கு ஏதுவாகிய வினையைத் தீர்த்து அருள்வாயாக; (நுனையே - நுன்னையே - உன்னையே); (சுந்தரர் தேவாரம் - 7.21.1 - "நொந்தா வொண்சுடரே நுனை யேநி னைந்திருந்தேன்");
நதி ஆர் சடையாய் - கங்கைச் சடையானே;
நறவு ஆர் பொழில் சூழ் ஞாயிறு மேயவனே - வாசம் மிக்க சோலை சூழ்ந்த ஞாயிறு என்ற தலத்தில் உறைகின்ற பெருமானே;
9)
பங்க யத்தான் பாம்பின் மேலான் பன்றியும் அன்னமுமாய்
எங்கும் நேடி இளைக்க அளவில் எரியென நின்றவனே
செங்கண் ஏற்றாய் தினமும் தொழுதேன் தீவினை தீர்த்தருளாய்
நங்கை பங்கா நறவார் பொழில்சூழ் ஞாயிறு மேயவனே.
பங்கயத்தான் பாம்பின் மேலான் பன்றியும் அன்னமும் ஆய் - தாமரைமேல் இருக்கும் பிரமனும் பாம்பின்மேல் துயிலும் திருமாலும் அன்னமும் பன்றியும் ஆகி; (எதிர்நிரனிறையாக வந்தது);
அளவு இல் எரி - எல்லை இல்லாத சோதி;
செங்கண் ஏற்றாய் - சினக்கின்ற இடபத்தை வாகனமாக உடையவனே;
10)
பொல்லார் நீறு பூச அஞ்சும் பொய்யரின் புன்னெறிகள்
எல்லாம் அறியா எம்பி ரானே இமையவர் போற்றிசெய்யும்
அல்லார் மிடற்றாய் அடியே தொழுதேன் அருவினை தீர்த்தருளாய்
நல்லார் மனத்தாய் நறவார் பொழில்சூழ் ஞாயிறு மேயவனே.
பொய்யரின் புன்னெறிகள் எல்லாம் அறியா எம்பிரான் - (சம்பந்தர் தேவாரம் - 1.11.5 - "ஆயாதன சமயம்பல அறியாதவன்..." - இறையுண்மையையும் இறையிலக்கணத்தையும், அளவைகளாலும், அநுபவத்தாலும் உள்ளவாறு ஆராயாதனவாகிய பல சமயங்களால் அறியப் பெறாதவன்);
அல் ஆர் மிடற்றாய் - இருள் பொருந்திய கண்டத்தை உடையவனே; (பெரியபுராணம் - 12.21.259 - "அல்லார் கண்டத் தண்டர்பிரான்");
11)
கோட கத்துச் சமணர் குன்றக் குளிர்தமிழ் நீந்தவருள்
ஏட கத்தாய் ஏகம் பத்தாய் இன்தமிழ் பாடியுனை
நாட கத்தார் வினைய றுக்கும் நல்லவ னேஅலகில்
நாட கத்தாய் நறவார் பொழில்சூழ் ஞாயிறு மேயவனே.
கோடு அகத்துச் சமணர் குன்றக் குளிர்தமிழ் நீந்த அருள் ஏடகத்தாய் - வஞ்ச மனத்துச் சமணர்கள் தோல்வியுறச், சம்பந்தர் இட்ட தேவார ஏடு வைகை வெள்ளத்தை எதிர்த்து நீந்த அருள்புரிந்த திருவேடகத்துப் பெருமானே; (கோடுதல் - நெறிதவறுதல்); (குன்றுதல் - அழிதல்; நிலைகெடுதல்);
ஏகம்பத்தாய் - கச்சி ஏகம்பத்துப் பெருமானே;
இன்தமிழ் பாடி உனை நாடு அகத்தார் வினை அறுக்கும் நல்லவனே - இனிய தமிழான தேவாரம் திருவாசகம் பாடி உன்னை நாடுகின்ற மனம் உடையவர்களது வினையை நீக்கும் நல்லவனே;
அலகு இல் நாடகத்தாய் - அளவில்லாத திருக்கூத்து உடையவனே;
நறவு ஆர் பொழில் சூழ் ஞாயிறு மேயவனே - மணம் மிக்க சோலை சூழ்ந்த ஞாயிறு என்ற தலத்தில் எழுந்தருளியிருப்பவனே.
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு :
1) யாப்புக் குறிப்பு :
அறுசீர் விருத்தம் - 'மா மா மா மா விளம் காய்' என்ற வாய்பாடு.
அடி ஈற்றுச்சீர் பெரும்பாலும் கூவிளங்காய்.
5-6 சீர்களிடையே வெண்டளை பயிலும். 5-ஆம் சீர் மாச்சீராக வரின், 6-ஆம் சீர் தனா என்ற சந்தத்தில் தொடங்கும்.
(சம்பந்தர் தேவாரம் - 1.63.1 - "எரியார் மழுவொன் றேந்தி யங்கை யிடுதலை யேகலனா")
( கண்டராதித்தர் அருளிச்செய்த திருவிசைப்பா - 9.20.5 -
களிவான் உலகிற் கங்கை நங்கை காதல னேஅருளென்
றொளிமால் முன்னே வரங்கி டக்க உன்னடி யார்க்கருளும்
தெளிவா ரமுதே தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்துள்
ஒளிவான் சுடரே உன்னை நாயேன் உறுவதும் என்றுகொலோ.);
2) ஞாயிறு - தலக்குறிப்பு :
சென்னைக்கு வடமேற்கே உள்ள தலம் - "ஞாயிறு கிராமம் - புஷ்பரதேஸ்வரர் கோயில்". சங்கிலிநாச்சியார் அவதரித்த தலம்.
- தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=166
----------- --------------
No comments:
Post a Comment