Friday, June 25, 2021

05.12 – பொது - தலமாலை

05.12 – பொது - தலமாலை


2014-12-25

பொது - தலமாலை

----------------------------------

(பாட்டிற்கு ஒரு தலம் - கடைசிப்பாடலில் பல தலங்கள்)

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்")


1) --- கருவூர் (கரூர்) ---

ஒருநாளும் மறவாமல் உள்ளத்தில் அன்போடு

திருநாமம் செபித்திருந்த சீலருயிர் கொல்வதற்கு

வருகாலன் மார்பிலுதை மணிகண்டன் வரம்நல்கு

கருவூரன் சீர்கேளார் காதிருந்தும் செவிடர்களே.


2) --- சிராப்பள்ளி (திருச்சிராப்பள்ளி) ---

இராவிலரு நடம்புரியும் எம்பெருமான் எருதேறி

அராவலையும் திருமுடிமேல் அலைமலிந்த தண்புனலும்

குராமலரும் கூவிளமும் கொக்கிறகும் சூடுகின்ற

சிராமலையான் சீர்கேளார் செவியிருந்தும் செவிடர்களே.


இராவில் அருநடம் புரியும் எம்பெருமான் - நள்ளிருளில் அரிய கூத்தை ஆடுகின்ற எம்பெருமான்; (இரா - இரவு);

எருதேறி - இடபவாகனன்;

அரா அலையும் திருமுடிமேல் - பாம்பு உலாவும் சென்னிமேல்; (அரா - பாம்பு );

அலை மலிந்த தண்புனலும் குராமலரும் கூவிளமும் கொக்கிறகும் சூடுகின்ற – அலை மிகுந்த குளிர்ந்த கங்கையையும் குரவமலரையும் வில்வத்தையும் கொக்கின் இறகையும் அணிகின்ற;

சிராமலையான் சீர் கேளார் - திருச்சிராப்பள்ளியில் உறைகின்ற சிவபெருமானது புகழைக் கேளாதவர்கள்; (ஐயடிகள் காடவர்கோன் - சேத்திரத் திருவெண்பா - 11.5.17 - “நெஞ்சே சிராமலையான் பாதமே சேர்.”);


3) --- சிக்கல் ---

முக்கணுடை எம்பெருமான் மூவர்க்கும் முதலானான்

நக்கெயில்கள் மூன்றெரித்த நாதனுமை நங்கையையோர்

பக்கமகிழ் கின்றபரன் பாரொடுவிண் பணிந்தேத்தும்

சிக்கலரன் சீர்கேளார் செவியிருந்தும் செவிடர்களே.


நக்கு எயில்கள் மூன்று எரித்த நாதன் - சிரித்து முப்புரங்களை எரித்த தலைவன்;

சிக்கல் அரன் - திருச்சிக்கலில் உறைகின்ற சிவபெருமான்;


4) --- தெங்கூர் ---

பொங்கார்வம் கொண்டடியைப் போற்றிசெயும் பத்தர்க்கு

மங்காத செல்வமருள் மாதேவன் நள்ளிருளில்

வெங்கானில் நடம்செய்யும் கங்காளன் விரிபொழில்சூழ்

தெங்கூரன் சீர்கேளார் செவியிருந்தும் செவிடர்களே.


வெங்கான் - சுடுகாடு;

கங்காளன் - எலும்பு மாலை அணிந்த சிவபெருமான்;

தெங்கூரன் - திருத்தெங்கூரில் உறையும் சிவபெருமான்;


5) --- கொடுமுடி ---

நெடுமலையை வில்லாக்கி நெருப்பரிகால் சேர்ந்தமைந்த

சுடுகணையால் புரங்களெய்து சுரர்க்கருள்செய் ஈசனன்பர்

கொடுவினையைத் தீர்க்கின்ற கூத்தனவன் உறைகின்ற

கொடுமுடியைக் கூறாதார் வாயிருந்தும் ஊமர்களே.


நெருப்பரிகால் - நெருப்பு அரி கால் - அக்கினி, திருமால், வாயு;

(அப்பர் தேவாரம் - 5.81.5 - "திருக்கொடும்முடி என்றலும் தீவினைக் கருக்கெடும்...");


6) --- கோளிலி (திருக்கோளிலி) - (திருக்குவளை) ---

வாளியென மலரெய்யும் மதனாகம் பொடிசெய்தான்

ஆளிலையென் றருந்தமிழ்சொல் ஆரூரர்க் கருள்புரிந்தான்

தோளிருநான் குடையீசன் தூயனினி துறைகின்ற

கோளிலியைக் கூறாதார் வாயிருந்தும் ஊமர்களே.


வாளி என மலர் எய்யும் மதன் ஆகம் பொடி செய்தான் - மலர்களை அம்பாக ஏவும் மன்மதனுடைய உடலைச் சாம்பலாக்கியவன்; (வாளி - அம்பு ); (ஆகம் - மன்மதன்);

ஆள் இலை என்று அரும் தமிழ் சொல் ஆரூரர்க்கு அருள்புரிந்தான் - நெல்லைத் திருவாரூருக்கு எடுத்துச் செல்ல ஆள்கள் இல்லை என்று பதிகம் பாடிய சுந்தரருக்கு அருள்புரிந்தவன்; (சுந்தரர் தேவாரம் - 7.20.1 - "...கோளிலி எம்பெருமான் குண்டை யூர்ச்சில நெல்லுப் பெற்றேன்

ஆளிலை எம்பெருமான் அவை அட்டித் தரப்பணியே.");

தோள் இருநான்குடை ஈசன் - எட்டுப் புஜங்களை உடைய ஈசன்;

தூயன் இனிது உறைகின்ற கோளிலியைக் கூறாதார் - பரிசுத்தனான சிவபெருமான் உறைகின்ற திருக்கோளிலியைத் துதிசெய்யாதவர்கள்;

வாய் இருந்தும் ஊமர்களே - வாய் இருந்தாலும் அதன் பயன் இல்லாத ஊமைகள்;


7) --- மருகல் (திருமருகல்) ---

பெருகுவிடம் கண்டஞ்சிப் பெருந்தேவர் இறைஞ்சவுண்டு

கருமணிபோல் திகழ்கண்டன் காழியர்கோன் உரைசெய்த

திருமருவு செந்தமிழ்கேட் டொருவணிகற் குயிர்தந்த

மருகலரன் அடிவாழ்த்தார் வாயிருந்தும் ஊமர்களே.


பெருகுவிடம் கண்டு அஞ்சிப் பெருந்தேவர் இறைஞ்ச உண்டு கருமணிபோல் திகழ் கண்டன் - பெருகிய நஞ்சைக்கண்டு அஞ்சிய பெரும் தேவர்களெல்லாம் வழிபட, அவர்களுக்கு இரங்கி அதனை உண்டு கரியமணி விளங்குகின்ற கண்டத்தை உடையவன்;

(அப்பர் தேவாரம் - 5.44.6 - “பித்தனைப் பெருந் தேவர் தொழப்படும் அத்தனை....” - பெரிய தேவர்களால் தொழப்படும் தலைவனை);

காழியர்கோன் - திருஞான சம்பந்தர்;

திரு மருவு செந்தமிழ் கேட்டு ஒரு வணிகற்கு உயிர் தந்த மருகல் அரன் - திருப் பொருந்திய செந்தமிழான சம்பந்தர் தேவாரத்தைக் கேட்டு மகிழ்ந்து, ஒரு வணிகனுக்கு மீண்டும் உயிரைத் தந்த திருமருகல் ஈசனது; (வணிகற்கு - வணிகன் + கு - வணிகனுக்கு);

(சம்பந்தர் தேவாரம் - 2.18.1 - 'சடையாய் எனுமால்' - திருமருகலில் வணிகன் விடம் தீர்த்த பதிகம்);


8) --- வலிவலம் (திருவலிவலம்) ---

வலிமிகுந்த இருபதுதோள் வாளரக்கன் மாமலைக்கீழ்

நலிவுறத்தான் விரலூன்றி நாளொடுவாள் ஈந்தபிரான்

புலியதளை அரைக்கசைத்த புராதனன்பூம் பொழில்சூழ்ந்த

வலிவலத்தான் அடிவாழ்த்தார் வாயிருந்தும் ஊமர்களே.


வலிமிகுந்த இருபதுதோள் வாளரக்கன் - வலிமை மிக்க இருபது புஜங்களையுடைய கொடிய அர்க்கனான இராவணனை;

மாமலைக்கீழ் நலிவுறத்தான் விரல் ஊன்றி - கயிலைமலைக்கீழ் வருந்தும்படி திருப்பாத விரல் ஒன்றை மலைமேல் இட்டு;

நாளொடு வாள் ஈந்த பிரான் - பின் அவன் அழுது தொழக் கேட்டு இரங்கி அவனுக்கு நீண்ட ஆயுளையும் சந்திரஹாஸம் என்ற வாளையும் அருளியவன்;

புலி அதளை அரைக்கு அசைத்த புராதனன் - புலித்தோலை அரையில் கட்டிய தொன்மையானவன்;

பூம் பொழில் சூழ்ந்த வலிவலத்தான் - அழகிய சோலை சூழ்ந்த திருவலிவலத்தில் உறைகின்ற சிவபெருமானது;

அடி வாழ்த்தார் வாய் இருந்தும் ஊமர்களே - திருவடியை வாழ்த்தாதவர்கள் வாய் இருந்தும் ஊமைகளே;


9) --- நன்னிலம் ---

முன்னயனும் திருமாலும் முயன்றுமுடி அடிநேடிச்

சென்னிமிசைக் கைகூப்பத் தீயாகி நின்றபிரான்

வன்னிகொன்றை சடைக்கணிந்த மாதேவன் வயல்சூழ்ந்த

நன்னிலத்தான் நலம்புகழார் நாவிருந்தும் ஊமர்களே.


முன் அயனும் திருமாலும் முயன்று முடி அடி நேடிச் சென்னிமிசைக் கைகூப்பத் தீயாகி நின்ற பிரான் - முன்பு பிரமனும் திருமாலும் அடிமுடி தேடிக் காணாராத் தலைமேல் கைகூப்பி வணங்குமாறு சோதி வடிவில் நின்ற பெருமான்;

வன்னி கொன்றை சடைக்கு அணிந்த மாதேவன் - சடையில் வன்னி, கொன்றைமலர் இவற்றை அணிந்த மகாதேவன்;

வயல் சூழ்ந்த நன்னிலத்தான் நலம் புகழார் நாவிருந்தும் ஊமர்களே - நன்னிலத்தில் எழுந்தருளிய சிவனது புகழைப் பேசாதவர்கள் நாக்கு இருந்தும் ஊமைகளே.

(சம்பந்தர் தேவாரம் - 2.44.7 - "ஆமாத்தூர் அம்மானைக் கூறாத நாவெல்லாம் கூறாத நாக்களே");


10) --- மறைக்காடு (வேதாரண்யம்) ---

அறக்கூற்றா அவம்பேசும் அறிவிலிகள் நிலையென்னே

மறக்கூற்றம் வந்தக்கால் வஞ்சமொழி காத்திடுமோ

பிறைக்காற்றுச் சடையீந்த பிஞ்ஞகனார் உறைகின்ற

மறைக்காட்டை வாழ்த்தாதார் வாயிருந்தும் ஊமர்களே.


அறக்கூற்றா - அறக்கூற்றாக;

மறக் கூற்றம் - வலிய கூற்றுவன்; சினமுடைய யமன்;

வந்தக்கால் - வந்தபொழுது;

பிறைக்கு ஆற்றுச் சடை ஈந்த பிஞ்ஞகனார் - கங்கை உலவும் சடையில் பிறைக்கும் இடம் தந்த பெருமான்;

மறைக்காடு - வேதாரண்யம்;


11) --- பல தலங்கள் ---

சேவூரும் பெருமானைத் திரிசூலப் படையானைத்

தேவூரும் பாம்புரமும் சிறுகுடியும் வாய்மூரும்

காவாரும் கைச்சினமும் கன்றாப்பும் உறைவானை

நாவாரத் துதிப்பாரை நலியாதீ வினைதானே.


சே ஊரும் பெருமான் - இடப வாகனம் உடையவன்;

கா ஆரும் - சோலை நிறைந்த;

தேவூர், பாம்புரம், சிறுகுடி, வாய்மூர், கைச்சினம், கன்றாப்பு (கன்றாப்பூர்) - திருத்தலங்களின் பெயர்கள்;


வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்புகள் :

1)

இலக்கணக் குறிப்பு: செவிடர்களே, ஊமர்களே போன்ற சொற்றொடர்களை அலகிடும்போது 'ர்' என்ற ஒற்றை நீக்கி அலகிட்டுக் காய்ச்சீராகக் கொள்ளவேண்டும்.

----------- --------------


05.11 – ஞாயிறு (சென்னைக்கு வடமேற்கே உள்ள தலம்)

05.11 – ஞாயிறு (சென்னைக்கு வடமேற்கே உள்ள தலம்)


2014-12-19

ஞாயிறு (சென்னைக்கு வடமேற்கே உள்ள தலம்)

----------------------------------

(அறுசீர் விருத்தம் - 'மா மா மா மா விளம் காய்' என்ற வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.63.1 - "எரியார் மழுவொன் றேந்தி யங்கை யிடுதலை யேகலனா")

(கண்டராதித்தர் - திருவிசைப்பா - 9.20.7 - 'இலையார் கதிர்வேல் இலங்கை வேந்தன் இருபது தோளும்இற')


1)

விரவிப் போற்றும் மெய்யன் பர்க்கு வேண்டு வரங்களெலாம்

கரவில் லாமல் நல்கும் கரனே கங்கை கரந்தவனே

உரையைக் கடந்த உண்மைப் பொருளே உறுவினை தீர்த்தருளாய்

நரைவெள் ளேற்றாய் நறவார் பொழில்சூழ் ஞாயிறு மேயவனே.


விரவிப் போற்றும் மெய்யன்பர்க்கு வேண்டு வரங்களெலாம் கரவு இல்லாமல் நல்கும் கரனே - உன்னை அடைந்து வழிபடும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டும் வர்ங்களையெல்லாம் ஒளித்தல் இன்றி வழங்கும் வரதஹஸ்தனே; (விரவுதல் - அன்புகொள்ளுதல்; அடைதல்); (கரவு - ஒளித்தல்);

உரையைக் கடந்த உண்மைப் பொருளே - சொற்பதம் கடந்த மெய்ப்பொருளே;

நரைவெள்ளேற்றாய் - வெள்ளை இடபவாகனம் உடையவனே;

நறவு ஆர் பொழில் சூழ் ஞாயிறு மேயவனே - மணம் மிக்க சோலை சூழ்ந்த ஞாயிறு என்ற தலத்தில் எழுந்தருளியிருப்பவனே.


2)

நாரி னோடு மாலை தொடுத்த நற்றவள் சங்கிலியைச்

சீரி லங்கு நாவ லூரர் சேர அளித்தவனே

ஏரி லங்கு கண்ட னேஎன் இருவினை தீர்த்தருளாய்

நாரி பங்கா நறவார் பொழில்சூழ் ஞாயிறு மேயவனே.


* சுந்தரர் வேண்டுகோளை ஏற்றுச் சங்கிலியாரைத் திருமணம் செய்வித்தது திருவொற்றியூரில். அதனை இப்பாடல் சுட்டுகின்றது.


நார் - அன்பு ; பூத்தொடுக்கும் நார்;

ஏர் - அழகு;


3)

வஞ்சி போலும் மருங்குல் உடைய மாதொரு கூறுடையாய்

துஞ்சும் போது சுற்றம் எதுவும் துணையிலை நற்றுணையாம்

அஞ்செ ழுத்தை அகத்தில் வைத்தேன் அருவினை தீர்த்தருளாய்

நஞ்சுண் மிடற்றாய் நறவார் பொழில்சூழ் ஞாயிறு மேயவனே.


வஞ்சி - கொடி;

மருங்குல் - இடை;


4)

நாகத் துரிவை போர்த்து கந்தாய் நரைவிடை ஊர்தியினாய்

ஆகத் தினிலோர் அரிவை பாகம் ஆகிய அற்புதனே

சோகத் தினையே தொடர்ந்து நல்கும் தொல்வினை தீர்த்தருளாய்

நாகத் தாராய் நறவார் பொழில்சூழ் ஞாயிறு மேயவனே.


நாகத்து உரிவை போர்த்து உகந்தாய் - யானைத்தோலைப் போர்த்தவனே; (நாகம் - யானை); (உரிவை - தோல்);

நரைவிடை ஊர்தியினாய் - வெள்ளை இடபத்தை வாகனமாக உடையவனே;

ஆகத்தினில் ஓர் அரிவை பாகம் ஆகிய அற்புதனே - திருமேனியில் உமையை பாகமாகக் கொண்ட அற்புதனே; (ஆகம் - மேனி);

சோகத்தினையே தொடர்ந்து நல்கும் தொல்வினை தீர்த்தருளாய் - வருத்தத்தையே தரும் பழவினையைத் தீர்த்து அருள்வாயாக;

நாகத் தாராய் - பாம்பை மாலையாக அணிந்தவனே; (தார் - மாலை);

நறவு ஆர் பொழில் சூழ் ஞாயிறு மேயவனே - மணம் மிக்க சோலை சூழ்ந்த ஞாயிறு என்ற தலத்தில் எழுந்தருளியிருப்பவனே.


5)

வேல்போற் கண்ணி வெருவ அன்று மிகுசினத் தோடெதிர்ந்த

நால்வாய் உரித்தாய் நாறு கொன்றை நாகம் அணிந்தவனே

பால்போல் நீற்றாய் பாதம் பணிந்தேன் பழவினை தீர்த்தருளாய்

நால்வே தத்தாய் நறவார் பொழில்சூழ் ஞாயிறு மேயவனே.


வேல்போற் கண்ணி வெருவ - வேல் போன்ற கண்ணை உடைய உமை அஞ்சுமாறு;

நால்வாய் - யானை;


6)

ஏன மருப்பை ஏந்து மார்ப இருநதி பாய்சடைமேல்

வான மதியை வாழ வைத்த மாகரு ணைக்கடலே

பாந லத்தால் பரவும் என்றன் பழவினை தீர்த்தருளாய்

ஞான மூர்த்தீ நறவார் பொழில்சூழ் ஞாயிறு மேயவனே.


ஏன மருப்பு - பன்றிக்கொம்பு;

இருநதி - பெரிய ஆறு - கங்கை;

வான மதி - வானத்தின்கண் உள்ள மதி - பிறைச்சந்திரன்;

பாநலத்தால்- பாநயத்தோடு - பாமாலைகளால்;

பரவுதல் - துதித்தல்;


7)

மிகவே இடர்செய் காலன் பாசம் வீசிடக் கண்டுனையே

புகலா அடைந்த மாணிக் கருள்செய் புரிசடைப் புண்ணியநின்

புகழார் பாதம் போற்று கின்றேன் பொருவினை தீர்த்தருளாய்

நகர்மூன் றெரித்தாய் நறவார் பொழில்சூழ் ஞாயிறு மேயவனே.


புரிசடை - முறுக்கிய சடை; (புரிதல் - முறுக்குக்கொள்ளுதல்);

புகழ் ஆர் பாதம் - புகழ் பொருந்திய திருவடி;

பொருவினை - தாக்குகின்ற வினைகள்; (பொருதல் - தாக்குதல்); (அப்பர் தேவாரம் - 4.88.4 - “சென்றடைந் தேனுடைய பொருவினை யெல்லாந் துரந்தனைப் ...”);


8)

எதிர்வார் இல்லான் ஊர்தி கீழே இழியவும் மாமலையை

மதியா தோடிப் பேர்த்த மன்னன் மணிமுடி பத்தைவிரல்

நுதியால் நெரித்தாய் நுனையே தொழுதேன் நோய்வினை தீர்த்தருளாய்

நதியார் சடையாய் நறவார் பொழில்சூழ் ஞாயிறு மேயவனே.


எதிர்வார் இல்லான் ஊர்தி கீழே இழியவும் - எதிர்ப்பவர்கள் இல்லாத இராவணனுடைய தேர் பறக்க இயலாமல் தரையில் இறங்கவும்; (சம்பந்தர் தேவாரம் - 3.56.8 - “இமையவர் அஞ்சியோட எதிர்வாரவர் தம்மையின்றி அமைதரு வல்லரக்கன்”);

மாமலையை மதியாது ஓடிப் பேர்த்த மன்னன் மணிமுடி பத்தை - அந்த உயர்ந்த மலையை வணங்க நினையாமல் சினந்து ஓடிச் சென்று பெயர்த்த இலங்கை மன்னனது மணிமுடி அணிந்த தலைகள் பத்தையும்;

விரல் நுதியால் நெரித்தாய் - ஒரு விரலின் நுனியால் நசுக்கியவனே; (நுதி - நுனி);

நுனையே தொழுதேன் நோய்வினை தீர்த்தருளாய் - உன்னையே வழிபட்டேன் என் பிறவிநோய்க்கு ஏதுவாகிய வினையைத் தீர்த்து அருள்வாயாக; (நுனையே - நுன்னையே - உன்னையே); (சுந்தரர் தேவாரம் - 7.21.1 - "நொந்தா வொண்சுடரே நுனை யேநி னைந்திருந்தேன்");

நதி ஆர் சடையாய் - கங்கைச் சடையானே;

நறவு ஆர் பொழில் சூழ் ஞாயிறு மேயவனே - வாசம் மிக்க சோலை சூழ்ந்த ஞாயிறு என்ற தலத்தில் உறைகின்ற பெருமானே;


9)

பங்க யத்தான் பாம்பின் மேலான் பன்றியும் அன்னமுமாய்

எங்கும் நேடி இளைக்க அளவில் எரியென நின்றவனே

செங்கண் ஏற்றாய் தினமும் தொழுதேன் தீவினை தீர்த்தருளாய்

நங்கை பங்கா நறவார் பொழில்சூழ் ஞாயிறு மேயவனே.


பங்கயத்தான் பாம்பின் மேலான் பன்றியும் அன்னமும் ஆய் - தாமரைமேல் இருக்கும் பிரமனும் பாம்பின்மேல் துயிலும் திருமாலும் அன்னமும் பன்றியும் ஆகி; (எதிர்நிரனிறையாக வந்தது);

அளவு இல் எரி - எல்லை இல்லாத சோதி;

செங்கண் ஏற்றாய் - சினக்கின்ற இடபத்தை வாகனமாக உடையவனே;


10)

பொல்லார் நீறு பூச அஞ்சும் பொய்யரின் புன்னெறிகள்

எல்லாம் அறியா எம்பி ரானே இமையவர் போற்றிசெய்யும்

அல்லார் மிடற்றாய் அடியே தொழுதேன் அருவினை தீர்த்தருளாய்

நல்லார் மனத்தாய் நறவார் பொழில்சூழ் ஞாயிறு மேயவனே.


பொய்யரின் புன்னெறிகள் எல்லாம் அறியா எம்பிரான் - (சம்பந்தர் தேவாரம் - 1.11.5 - "ஆயாதன சமயம்பல அறியாதவன்..." - இறையுண்மையையும் இறையிலக்கணத்தையும், அளவைகளாலும், அநுபவத்தாலும் உள்ளவாறு ஆராயாதனவாகிய பல சமயங்களால் அறியப் பெறாதவன்);

அல் ஆர் மிடற்றாய் - இருள் பொருந்திய கண்டத்தை உடையவனே; (பெரியபுராணம் - 12.21.259 - "அல்லார் கண்டத் தண்டர்பிரான்");


11)

கோட கத்துச் சமணர் குன்றக் குளிர்தமிழ் நீந்தவருள்

ஏட கத்தாய் ஏகம் பத்தாய் இன்தமிழ் பாடியுனை

நாட கத்தார் வினைய றுக்கும் நல்லவ னேஅலகில்

நாட கத்தாய் நறவார் பொழில்சூழ் ஞாயிறு மேயவனே.


கோடு அகத்துச் சமணர் குன்றக் குளிர்தமிழ் நீந்த அருள் ஏடகத்தாய் - வஞ்ச மனத்துச் சமணர்கள் தோல்வியுறச், சம்பந்தர் இட்ட தேவார ஏடு வைகை வெள்ளத்தை எதிர்த்து நீந்த அருள்புரிந்த திருவேடகத்துப் பெருமானே; (கோடுதல் - நெறிதவறுதல்); (குன்றுதல் - அழிதல்; நிலைகெடுதல்);

ஏகம்பத்தாய் - கச்சி ஏகம்பத்துப் பெருமானே;

இன்தமிழ் பாடி உனை நாடு அகத்தார் வினை அறுக்கும் நல்லவனே - இனிய தமிழான தேவாரம் திருவாசகம் பாடி உன்னை நாடுகின்ற மனம் உடையவர்களது வினையை நீக்கும் நல்லவனே;

அலகு இல் நாடகத்தாய் - அளவில்லாத திருக்கூத்து உடையவனே;

நறவு ஆர் பொழில் சூழ் ஞாயிறு மேயவனே - மணம் மிக்க சோலை சூழ்ந்த ஞாயிறு என்ற தலத்தில் எழுந்தருளியிருப்பவனே.


வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்பு :

1) யாப்புக் குறிப்பு :

அறுசீர் விருத்தம் - 'மா மா மா மா விளம் காய்' என்ற வாய்பாடு.

அடி ஈற்றுச்சீர் பெரும்பாலும் கூவிளங்காய்.

5-6 சீர்களிடையே வெண்டளை பயிலும். 5-ஆம் சீர் மாச்சீராக வரின், 6-ஆம் சீர் தனா என்ற சந்தத்தில் தொடங்கும்.

(சம்பந்தர் தேவாரம் - 1.63.1 - "எரியார் மழுவொன் றேந்தி யங்கை யிடுதலை யேகலனா")

( கண்டராதித்தர் அருளிச்செய்த திருவிசைப்பா - 9.20.5 -

களிவான் உலகிற் கங்கை நங்கை காதல னேஅருளென்

றொளிமால் முன்னே வரங்கி டக்க உன்னடி யார்க்கருளும்

தெளிவா ரமுதே தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்துள்

ஒளிவான் சுடரே உன்னை நாயேன் உறுவதும் என்றுகொலோ.);


2) ஞாயிறு - தலக்குறிப்பு :

சென்னைக்கு வடமேற்கே உள்ள தலம் - "ஞாயிறு கிராமம் - புஷ்பரதேஸ்வரர் கோயில்". சங்கிலிநாச்சியார் அவதரித்த தலம்.

- தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=166

----------- --------------


Monday, June 7, 2021

05.10 – வான்மியூர் - (திருவான்மியூர்)

05.10 – வான்மியூர் - (திருவான்மியூர்)


2014-12-09

வான்மியூர் திருவான்மியூர்)

–----------------------------------

(எழுசீர் விருத்தம் - 'விளம் மா விளம் மா விளம் விளம் மா' என்ற வாய்பாடு.)

(சம்பந்தர் தேவாரம் - 3.120.1 - "மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி");

(சுந்தரர் தேவாரம் - 7.14.1 - "வைத்தனன் தனக்கே தலையும்என் நாவும்");


1)

சாகர விடத்துக் கஞ்சிய தேவர் .. தாள்தொழ அதுதனை உண்டு

மேகநி றத்தை மிடற்றினிற் காட்டும் .. வீரனை வெண்ணகை யாளைப்

பாகம கிழ்ந்த பண்புடை யானைப் .. பாலன நீறணிந் தானை

மாகடல் சூழ்ந்த வான்மியூர் உறையும் .. மருந்தினை மறக்கலும் ஆமே.


* மருந்தீசர் - திருவான்மியூர் ஈசன் திருநாமங்களுள் ஒன்று;

சாகர விடத்துக்கு அஞ்சிய தேவர் தாள்தொழ அதுதனை உண்டு - பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தைக் கண்டு அஞ்சிவந்து தேவர்கள் திருவடியை வணங்கவும், அவர்களுக்கு இரங்கி அந்த நஞ்சை உண்டு; (சாகர விடம் - கடல் நஞ்சு); (அதுதனை - அதனை);

மேகநிறத்தை மிடற்றினிற் காட்டும் வீரனை - கரிய மேகத்தின் நிறத்தைக் கண்டத்தில் காட்டும் வீரனை;

வெண்ணகையாளைப் பாகம் மகிழ்ந்த பண்பு உடையானைப் - வெண்பற்கள் திகழும் உமையை ஒரு பாகமாக விரும்பியவனை;

பால் அன நீறு அணிந்தானை - பால் போன்ற வெண்ணீற்றைப் பூசியவனை;

மா கடல் சூழ்ந்த வான்மியூர் உறையும் மருந்தினை - பெரிய கடலால் சூழப்பெற்ற திருவான்மியூரில் உறைகின்ற அமுதம் போன்ற மருந்தீசனை; (மருந்து - அமுதம்);

மறக்கலும் ஆமே - மறத்தலும் இயலுமோ? (ஆமே என்றதில் "" - வினா ஏகாரம். எதிர்மறைக்கண் வந்தது. ஆகாது என்றும் பொருள்பட நின்றது);

(சுந்தரர் தேவாரம் - 7.59.1 - "பொன்னும் மெய்ப்பொரு ளும்தரு வானை....ஆரூ ரானை மறக்கலு மாமே");


2)

தெண்திரைக் கங்கை திகழ்முடி யானைச் .. செய்தசூள் மீறிய தோழர்

கண்தனை மறைத்துப் பின்தமிழ் கேட்டுக் .. கருணைசெய் கண்ணுத லானை

வெண்திரு நீற்றை விரையெனப் பூசி .. விடையுகந் தேறிய கோனை

வண்திரை எற்று வான்மியூர் உறையும் .. மருந்தினை மறக்கலும் ஆமே.


தெண் திரைக் கங்கை திகழ் முடியானை - தெளிந்த அலைகள் திகழும் கங்கையைத் திருமுடியில் அணிந்தவனை; (திரை - அலை);

செய்த சூள் மீறிய தோழர் கண்தனை மறைத்துப் பின் தமிழ் கேட்டுக் கருணைசெய் கண்ணுதலானை - தாம் செய்த சபதத்தை மீறிய சுந்தரமூர்த்தி நாயனாரைக் குருடாக்கிப் பின்னர் அவர் உருகிப் பாடிய பதிகங்களைக் கேட்டு இரங்கியருளிய நெற்றிக்கண்ணனை; (தோழர் - சுந்தரர்); (கண்ணுதலான் - நெற்றிக்கண்ணன்);

வெண் திருநீற்றை விரை எனப் பூசி விடை உகந்து ஏறிய கோனை - வெண்ணிறத் திருநீற்றை வாசனைப்பொடி போலப் பூசி, இடபவாகனத்தின்மேல் ஏறுகின்ற தலைவனை; (விரை - வாசனைப்பொடி);

வண் திரை எற்று வான்மியூர் உறையும் மருந்தினை மறக்கலும் ஆமே - வளம் மிக்க அலைகள் மோதுகின்ற திருவான்மியூரில் உறைகின்ற அமுதம் போன்ற மருந்தீசனை மறக்க இயலுமா? (எற்றுதல் - மோதுதல்);

இலக்கணக் குறிப்பு : தெண்திரை, கண்தனை, வெண்திரு, வண்திரை - இவையெல்லாம் புணர்ச்சி பிரியாத வடிவத்தில் தெண்டிரை, கண்டனை, வெண்டிரு, வண்டிரை என்று வருவன.


3)

மதியில னாகி மலர்க்கணை எய்த .. மன்மதன் தனைப்பொடி செய்த

பதியினைப் பரனைப் பாய்விடை யானைப் .. பாவையோர் பங்கனை முடிமேல்

மதியிள நாகம் மத்தம ணிந்த .. மைந்தனைக் கலிமலி வீதி

மதில்புடை சூழ்ந்த வான்மியூர் உறையும் .. மருந்தினை மறக்கலும் ஆமே.


மதியிலனாகி மலர்க்கணை எய்த மன்மதன்தனைப் பொடி செய்த பதியினைப் - அறிவற்றவன் ஆகி மலர் அம்பினை எய்த காமனைச் சாம்பலாக்கிய தலைவனை;

பரனைப் - மேலானவனை;

பாய் விடையானைப் - பாய்ந்து செல்லும் இடபத்தை வாகனமாக உடையவனை;

பாவை ஓர் பங்கனை - உமை பங்கனை;

முடிமேல் மதி இள நாகம் மத்தம் அணிந்த மைந்தனைக் - திருமுடிமேல் சந்திரன், இளம் பாம்பு, ஊமத்த மலர் இவற்றையெல்லாம் அணிந்த வீரனை/அழகனை; (மத்தம் - ஊமத்த மலர்); (மைந்தன் - இளைஞன்; வீரன்);

கலி மலி வீதி மதில் புடை சூழ்ந்த வான்மியூர் உறையும் மருந்தினை மறக்கலும் ஆமே - ஆரவாரம் மிக்க வீதிகளும் மதிலும் சூழ்ந்த திருவான்மியூரில் உறைகின்ற அமுதம் போன்ற மருந்தீசனை மறக்க இயலுமா? (கலி - ஒலி);


4)

அணிமலர் தூவி அருந்தமிழ் பாடி .. அனுதினம் அடியிணை போற்றிப்

பணியடி யார்தம் பழவினை தீர்த்துப் .. பரமசு கந்தரு வானை

வெணிலவு திகழும் விரிசடை யானை .. விண்ணவர் வேண்டநஞ் சுண்ட

மணிமிடற் றானை வான்மியூர் உறையும் .. மருந்தினை மறக்கலும் ஆமே.


அணி - அழகு;

அணிமலர் தூவி அரும் தமிழ் பாடி அனுதினம் அடியிணை போற்றிப் பணி அடியார்தம் பழவினை தீர்த்துப் பரமசுகம் தருவானை - அழகிய பூக்களத் தூவி, தேவாரம் முதலிய பாமாலைகளைப் பாடித் தினமும் இரு திருவடிகளை வணங்கும் பக்தர்களது பழைய வினையைத் தீர்த்து மேலான இன்பத்தைத் தருபவனை;

வெணிலவு திகழும் விரிசடையானை - வெண்திங்கள் விளங்கும் விரிந்த சடையினனை; (வெணிலவு - வெண்ணிலவு - இடைக்குறை);

விண்ணவர் வேண்ட நஞ்சு உண்ட மணிமிடற்றானை - தேவர்கள் இறைஞ்ச, அவர்களுக்கு இரங்கி ஆலகாலத்தை உண்ட நீலகண்டனை;

வான்மியூர் உறையும் மருந்தினை மறக்கலும் ஆமே - திருவான்மியூரில் உறைகின்ற அமுதம் போன்ற மருந்தீசனை மறக்க இயலுமா?


5)

தலைமலி மாலை தலைக்கணி கின்ற .. தலைவனை அன்பொடு தூவும்

இலைமலர் எதுவும் ஏற்றருள் வானை .. இமையவர் தம்பெரு மானைச்

சிலையென மேருச் சிலையினை வளைத்துத் .. திரிபுரம் மூன்றெரித் தானை

மலைமகள் கோனை வான்மியூர் உறையும் .. மருந்தினை மறக்கலும் ஆமே.


தலைமலி மாலை தலைக்கு அணிகின்ற தலைவனை - தலைக்கு மண்டையோட்டுமாலையை அணிந்தவனை;

அன்பொடு தூவும் இலை மலர் எதுவும் ஏற்றருள்வானை - பக்தர்கள் அன்போடு தூவும் எந்த மலரையும் இலையையும் ஏற்று அருள்பவனை; (சுந்தரர் தேவாரம் - 7.94.9 - “இலையால் அன்பால் ஏத்தும் அவர்க்கு நிலையா வாழ்வை நீத்தார் இடமாம்”); (அப்பர் தேவாரம் - 4.92.10 - “பாங்கறியா என்போலிகள் பறித்து இட்ட இலையும் முகையுமெல்லாம் அம்போது எனக் கொள்ளும் ஐயன் ஐயாறன் அடித்தலமே”);

இமையவர்தம் பெருமானைச் - தேவர்கள் தலைவனை;

சிலையென மேருச் சிலையினை வளைத்துத் திரிபுரம் மூன்று எரித்தானை - மேருமலையை வில்லாக வளைத்துத், திரிந்த முப்புரங்களை எய்து எரித்தவனை; (சிலை - 1. வில்; 2. மலை); (திரிபுரம் மூன்று - திரிந்த முப்புரங்கள் - வினைத்தொகை);

மலைமகள் கோனை - உமாபதியை;

வான்மியூர் உறையும் மருந்தினை மறக்கலும் ஆமே - திருவான்மியூரில் உறைகின்ற அமுதம் போன்ற மருந்தீசனை மறக்க ஒண்ணுமா?


6)

நறைமலர் தூவி நற்றமிழ் பாடி .. நாள்தொறும் போற்றிடு வார்க்குக்

குறைவற இன்பம் கொடுத்தருள் வானைக் .. கூவிளம் கொன்றையி னோடு

பிறையணிந் தானைப் பெருவிடம் உண்ட .. பித்தனை ஆலதன் கீழே

மறைவிரித் தானை வான்மியூர் உறையும் .. மருந்தினை மறக்கலும் ஆமே.


நறைமலர் தூவி நற்றமிழ் பாடி நாள்தொறும் போற்றிடுவார்க்குக் குறைவு அற இன்பம் கொடுத்து அருள்வானைக் - வாசமலர்களைத் தூவித் தேவாரம் திருவாசகம் பாடித் தினமும் வழிபடும் பக்தர்களுக்கு மிகுந்த இன்பத்தை அருள்பவனை; (நறை - தேன்; வாசனை);

கூவிளம் கொன்றையினோடு பிறை அணிந்தானைப் - வில்வம், கொன்றைமலர், பிறைச்சந்திரன் இவற்றை அணிந்தவனை; (கூவிளம் - வில்வம்);

பெருவிடம் உண்ட பித்தனை - ஆலாகல விடத்தை உண்ட பேரருளாளனை; (பித்தன் - பேரருள் உடையவன்);

ஆலதன் கீழே மறை விரித்தானை - கல்லால மரத்தின்கீழ் வேதப்பொருளை விளக்கியவனை;

வான்மியூர் உறையும் மருந்தினை மறக்கலும் ஆமே - திருவான்மியூரில் உறைகின்ற அமுதம் போன்ற மருந்தீசனை மறக்க இயலுமா?


7)

பேர்பல உடைய பெருமையி னானைப் .. பிறப்பிறப் பில்லியைப் பெற்றம்

ஊர்பவன் தன்னை ஓதநஞ் சுண்ட .. ஒருவனை ஊர்தொறும் ஐயம்

தேர்பவன் தன்னைச் செந்தழல் மேனிச் .. செல்வனை ஆமையின் ஓட்டை

மார்பணிந் தானை வான்மியூர் உறையும் .. மருந்தினை மறக்கலும் ஆமே.


பேர் பல உடைய பெருமையினானைப் - பல திருநாமங்கள் உடைய பெருமை மிக்கவனை;

பிறப்பு இறப்பு இல்லியைப் - பிறத்தலும் சாதலும் இல்லாதவனை;

பெற்றம் ஊர்பவன் தன்னை - இடபவாகனனை; (பெற்றம் - இடபம்);

ஓதநஞ்சு உண்ட ஒருவனை - கடல்விடத்தை உண்ட ஒப்பற்றவனை; (ஓதம் - கடல்); (ஒரு - ஒப்பற்ற);

ஊர்தொறும் ஐயம் தேர்பவன் தன்னைச் - பல ஊர்களில் பிச்சை ஏற்பவனை; (ஐயம் - பிச்சை);

செந்தழல் மேனிச் செல்வனை - செந்தீப் போல் செம்மேனி உடைய செல்வனை;

ஆமையின் ஓட்டை மார்பு அணிந்தானை - மார்பில் ஆமையோட்டை அணிந்தவனை;

வான்மியூர் உறையும் மருந்தினை மறக்கலும் ஆமே - திருவான்மியூரில் உறைகின்ற அமுதம் போன்ற மருந்தீசனை மறக்க இயலுமா?


8)

தேரினைச் செலுத்தச் சினந்துவெற் பிடந்த .. தெளிவிலா அரக்கனை நசுக்கி

ஆரிடர் உற்ற அவனழு திசையால் .. அடிதொழக் கேட்டும கிழ்ந்து

பேரினைத் தந்து பேரருள் செய்த .. பித்தனைப் பிறையணிந் தானை

வாரியொ லிக்கும் வான்மியூர் உறையும் .. மருந்தினை மறக்கலும் ஆமே.


தேரினைச் செலுத்தச் சினந்து வெற்பு இடந்த தெளிவு இலா அரக்கனை நசுக்கி - தரையில் இறங்கிய தனது தேரைச் செலுத்த எண்ணிக் கோபத்தோடு கயிலைமலையைப் பெயர்த்த மதிமயக்கமுடைய இராவணனை (ஒரு பாதவிரலை ஊன்றி) நசுக்கி; (வெற்பு - மலை); (இடத்தல் - பெயர்த்தல்);

ஆரிடர் உற்ற அவன் அழுது இசையால் அடிதொழக் கேட்டு மகிழ்ந்து - பெருந்துன்பம் அடைந்த அவன் அழுது இசைபாடி திருவடியை வழிபாடு செய்வதைக் கேட்டு அவனுக்கு இரங்கி;

பேரினைத் தந்து பேரருள் செய்த பித்தனைப் - இராவணன் (அழுதவன்) என்ற பெயரைத் தந்து, (நீண்ட ஆயுள், சந்திரஹாசம் என்ற வாள் இவற்றையும் தந்து) பேரருள் செய்தவனை;

பிறை அணிந்தானை - சந்திரனைச் சூடியவனை;

வாரி ஒலிக்கும் வான்மியூர் உறையும் மருந்தினை மறக்கலும் ஆமே - கடல் ஒலிக்கின்ற திருவான்மியூரில் உறைகின்ற அமுதம் போன்ற மருந்தீசனை மறக்க இயலுமா? (வாரி - கடல்);


9)

ஆர்பரம் என்று முரணிய அயன்மால் .. அடிமுடி தேடியி ளைக்க

ஓர்வரை யற்ற ஒள்ளெரி ஆன .. ஒருவனை அடியவர்க் கரணாம்

போர்விடை யானைப் போழ்மதி யோடு .. புற்றர வம்புனை கின்ற

வார்சடை யானை வான்மியூர் உறையும் .. மருந்தினை மறக்கலும் ஆமே.


ஆர் பரம் என்று முரணிய அயன் மால் அடிமுடி தேடி இளைக்க ஓர் வரை அற்ற ஒள் எரி ஆன ஒருவனை - தம்மில் யார் உயர்ந்தவர் என்று மாறுபட்டு வாதிட்ட பிரமன் திருமால் இவர் இருவரும் அடிமுடியைத் தேடி வருந்துமாறு ஓர் எல்லையில்லாத ஒளி மிக்க சோதி ஆன ஒப்பற்றவனை; (முரணுதல் - மாறுபடுதல்); (ஒருவன் - ஒப்பற்றவன்);

அடியவர்க்கு அரண் ஆம் போர்விடையானைப் - பக்தர்களுக்குக் காவல் ஆன, போர் செய்யவல்ல விடையை வாகனமாக உடையவனை;

போழ்மதியோடு புற்றரவம் புனைகின்ற வார்சடையானை - பிறைச்சந்திரனையும் புற்றில் வாழும் இயல்புடைய பாம்பையும் அணிந்த நீள்சடையனை; (போழ்தல் - பிளவுபடுதல்); (வார்தல் - நீள்தல்);

வான்மியூர் உறையும் மருந்தினை மறக்கலும் ஆமே - திருவான்மியூரில் உறைகின்ற அமுதம் போன்ற மருந்தீசனை மறக்க இயலுமா?


10)

குறியறி யாது கிறிமொழி பேசிக் .. கும்பலைச் சேர்த்திட எண்ணும்

அறிவிலி வீணர் அவருரை நெறிகள் .. அல்லலிற் சேர்ப்பன விடுமின்

மறியமர் கையன் மலரடி வாழ்த்தில் .. வானிடை வாழ்வருள் வானை

மறிகடல் சூழ்ந்த வான்மியூர் உறையும் .. மருந்தினை மறக்கலும் ஆமே.


குறி அறியாது கிறிமொழி பேசிக் கும்பலைச் சேர்த்திட எண்ணும் - குறியை அறியாமல் வஞ்சம் பேசிக் கூட்டம் சேர்க்க எண்ணுகின்ற; (குறி - இலக்கு; அடையாளம் (symbol)); (கிறி - பொய்; வஞ்சம்); (திருப்புகழ் - திருத்தணி - “கிறிமொழிக் கிருதரைப் பொறிவழிச் செறிஞரைக்...”);

அறிவிலி வீணர் அவர் உரை நெறிகள் அல்லலில் சேர்ப்பன விடுமின் - அறிவிலிகளான அந்தப் பயனற்றவர்கள் சொல்லும் மார்க்கங்கள் துன்பத்தில் ஆழ்த்தும்; அவற்றை மதியாமல் நீங்குங்கள்;

மறி அமர் கையன் மலரடி வாழ்த்தில் வானிடை வாழ்வு அருள்வானை - கையில் மான்கன்றை ஏந்தியவனது மலர்த்திருவடியை வாழ்த்தினால் சிவலோக வாழ்வை அருள்பவனை; (மறி - மான்கன்று); (சம்பந்தர் தேவாரம் - 3.118.11 - “வானிடை வாழ்வர் மண்மிசைப் பிறவார் மற்றிதற் காணையும் நமதே.”);

மறிகடல் சூழ்ந்த வான்மியூர் உறையும் மருந்தினை மறக்கலும் ஆமே - அலைகள் மறிகின்ற கடல் சூழ்ந்த திருவான்மியூரில் உறைகின்ற அமுதம் போன்ற மருந்தீசனை மறக்க இயலுமா? (மறிதல் - கிளர்தல்);


11)

சூழ்வினை தீர்க்கும் திருப்பெயர் ஓது .. தூமனத் தொண்டருக் காக

ஆழ்கடல் மேற்கல் அரும்புணை ஆக்கி .. அருளிய அண்ணலை நம்பித்

தாழ்சிரத் தோடு தாள்தொழு வார்க்குத் .. தாயினும் நல்லனை இந்து

வாழ்சடை யானை வான்மியூர் உறையும் .. மருந்தினை மறக்கலும் ஆமே.


* முதல் ஈரடிகள் திருநாவுக்கரசர் வரலாற்றைச் சுட்டின.


சூழ்வினை தீர்க்கும் திருப்பெயர் ஓது தூ மனத் தொண்டருக்காக ஆழ்கடல்மேற் கல் அரும் புணை ஆக்கி அருளிய அண்ணலை - சூழும் வினையைத் தீர்க்கின்ற திருநாமத்தை (நமச்சிவாய என்ற திருவைந்தெழுத்தை) ஓதும் தூய மனத்தை உடைய தொண்டரான திருநாவுக்கரசருக்காக, அவர் உய்யும்படி ஆழம் மிக்க கடலின்மேல் அந்தக் கல்லையே ஓர் அரிய தெப்பம் ஆக்கி அருளிய பெருமானை; (புணை - தெப்பம்; படகு);

நம்பித் தாழ்சிரத்தோடு தாள் தொழுவார்க்குத் தாயினும் நல்லனை - விரும்பித், தலையைத் தாழ்த்தித், திருவடியை வணங்கும் பக்தர்களுக்குத் தாயைவிட நன்மை செய்பவனை; (நம்புதல் - விரும்புதல்; நம்பிக்கை வைத்தல்);

இந்து வாழ் சடையானை - சந்திரன் அழியாமல் வாழ்கின்ற சடையை உடையவனை; (இந்து - சந்திரன்);

வான்மியூர் உறையும் மருந்தினை மறக்கலும் ஆமே - திருவான்மியூரில் உறைகின்ற அமுதம் போன்ற மருந்தீசனை மறக்க இயலுமா?


வி. சுப்பிரமணியன்

-------------------